உள்ளடக்கத்துக்குச் செல்

மருதநில மங்கை/வருக எம் பாகமகன்

விக்கிமூலம் இலிருந்து

15


வருக எம் பாக மகன்

வழத்தால் பண்ணி, விளிம்பில் முத்தை அரும்பாக அழுத்தி ஆக்கிய வட்டப் பலகை மீது, செதுக்கி வைத்த சின்னஞ்சிறு மர யானையை வைத்து ஆடிக் கொண்டிருந்தான் மகன். அவன் ஆட்டத்தையும், பஞ்சுபோல் மெத்தென்ற தலையில் மூன்று மணிவடங்கள் விளங்கும் அழகிய கோலத்தையும் கண்டு களித்திருந்தாள் அவன் தாய். அவள் கணவன், அவளையும் அழகிய மகனையும் மறந்து, ஒரு பரத்தைபால் காதல் கொண்டு, அவள் வீட்டில் வாழ்ந்திருந்தான். கணவன் பிரிவால் கலங்கினாள் அவள். “மகனை ஈன்று தாயாம் நிலைபெற்ற என்பால் அவர் அன்பு குறைந்தமை கண்டு நான் வருந்தேன். ஆனால், பகைவரும் விரும்பும் பேரழகு வாய்ந்த தன் மகன்மீது கொண்ட அன்பையும் மறந்து விட்டாரே!” என எண்ணி வருந்தி வாழ்ந்தாள்.

ஒரு நாள், மகன் யானையை வைத்து ஆடிக் கொண்டிருந்தான். மணி மணியாக முறுக்கிய மெல்லிய கயிற்றால் கட்டி, காலில் அணிந்த கெச்சை கலீர் கலீர் என ஒலிக்க, மெல்ல மெல்ல ஈர்த்து மகிழ்ந்திருந்தான். அவன் ஆடலைக் காணும் இன்பத்தில் காதலன் பிரிவால் நேர்ந்த கடுந் துயரையும் மறந்திருந்தாள் அவள். அந்நிலையில், ஆங்கு வந்து நின்றான் அவள் கணவன். கணவன் வருகையை அவள் அறிந்தாள். ஆனால், அவள் அவன்பால்கொண்ட வெறுப்புள்ளம், அவனை வரவேற்க மறுத்தது. வரவேற்க மறுத்ததோடு, அவன் பிரிவால் தான் உற்ற துயரையும், அத்துயர் போக்க, அவள் மேற்கொண்ட வழியையும் விளங்கக் கூறி, அவனுக்கு வாயில் அடைக்க விரும்பினாள். அதனால், அவன் வருகையை அறிந்தும் அறியாதவள்போல், மகனை நோக்கி, “மகனே! உன் உருவ அழகைக் கண்டு, உன் ஆடல் அழகை அறிந்து, அன்பு காட்ட மறுத்து, உன்னை மறந்து வாழ்வார் வாழ்க! உன்பால் மாறா அன்புகொண்ட யான், என் கண்ணாரக் கண்டு மகிழுமாறு உன் யானைத் தேர் ஈர்த்து என்பால் வருக!” என அழைத்தித் தன் மடிமீது அமர்த்தி அணைத்துக் கொண்டாள்.

அனைத்தவாறே, “அன்புடை மகனே! உன் காலில் கட்டிய கிண்கிணி கலீர் கலீர் என ஆரவாரிப்பத், தத்தித் தத்தித் தளர் நடையிட்டு வரும் உன் நடை அழகைக் கண்டு, களித்துக் கவலை மறந்து மகிழ்கிறேன். ஆனால், “நாங்கள் ஈருடலும் ஓருயிருமென உள்ளம் ஒன்றி வாழ்கிறோம்!” எனக் கூறி, உன் தந்தையோடு உறவு கொண்டு மகிழ்ந்த மகளிர், பின்னர் அவன் கைவிட்டுப் போனானாகக், கவலையுற்றுக் கைவளை சோர மெலிந்து, கண்ணீர் விட்டுக் கலங்கும் அக்காட்சியைக் காண நேரின், கலங்குகிறது என் உள்ளம். ஐய! என் ஆருயிர் மகனே! கான இனிக்கும் கண்ணழகு வாய்ந்த நீ, ‘அத்தா! அத்தா!’ என்று வழங்கும் உன் இனிய மழலை மொழியைக் கேட்கக் கேட்க இனிக்கிறது. ஆனால், ஊரில் தப்பிப் பிழைத்தவர் ஒருவரும் இலர் என்று கூறுமாறு, உன் தந்தையால் நலன் இழந்து வருந்தும் மகளிரின், மனத் துயரைக் காணத் துன்புறுகிறது என் உள்ளம். உன் முகம் கண்டு, உன் மொழியைக் கேட்டு மகிழும் நான், அம்மகளிர் துன்ப நிலை கண்டு, துயர் உறுகிறேன். ‘வானத்தில் உலாவரும் வெண்திங்காள்! என் மகனுடன் ஆடவருக! இதோ என் மகன்!’ எனக் கூறி, உன்னை அம்புலிக்குக் காட்டி மகிழ இனிக்கிறது என் உள்ளம். ஆனால் உன் தந்தை விரும்பி நலன் நுகர்ந்த பின்னர் வெறுத்துக் கைவிடப் பெற்ற மகளிரின் பசந்த மேனியைப் பார்த்துப் பார்த்துப் பெருந்துயர் கொள்கிறது என் உள்ளம்!” என்று கூறி, மகனைப் பாராட்டுவாள் போல், கணவன் கொடுமைகளை அவன் கேட்குமாறு கூறிக் கண்டித்தாள்.

பின்னர், “மகன் வளர்ந்துவிட்டான். ஆகவே, அவன் அறியப் பிழை செய்தல் கூடாது. செய்யின் அவன் சிறுவான்!” என்பதைக் கணவனுக்கும், “குற்றம் புரிவார் பெற்ற தந்தையே யாயினும் அவரைத் தண்டித்தல் உன் கடன்!” என்பதை மகனுக்கும் கூற விரும்பினாள். உடனே மடியில் அமர்ந்திருந்த மகனை முன்னெடுத்து நிறுத்தினாள். பின்னர் அவனை நோக்கி, “மகனே! நீ என் காதில் அணிந்திருக்கும் குழையைக் கழற்றிச் செல்லுந்தோறும், உன்னை அன்பால் பற்றி, உன் தந்தை பிரிந்த துயரால் வாரி முடித்து மலர் சூட்டப் பெறாமல் வறிதே கிடக்கும் என் கூந்தல் கிடைந்தலையும் என் தோளில் உன்னை அமர்த்தி மகிழ்வேனே, அது ஏன் தெரியுமா? தோளில் அமர்ந்து, என் கூந்தலைப் பற்றி ஈர்த்து என்னைத் துன்புறுத்துவது போல், பரத்தை வீடு சென்று பழியோடு வரும் உன் தந்தை, உன்னை எடுத்து வாரி முத்தங் கொள்ளுங்கால், பரத்தையர் கண்டு மகிழ்க என அவன் மார்பில் அணிந்த மாலையைப் பற்றி ஈர்த்துப் பாழாக்க உன்னைப் பழக்குவதற்கே. அஃது அறிந்து அவ்வாறே நடப்பாயாக!” என்று கூறினாள். என்னே அவள் அறிவும் நெஞ்சத் துணிவும்!

“நயம்தலை மாறுவார் மாறுக, மாறாக்
கயம்தலை மின்னும் கதிர்விடு முக்காழ்ப்
பயந்தஎம் கண்ஆர யாம்கான நல்கித்
திகழ்ஒளி முத்துஅங்கு அரும்பாகத் தைஇப்,

பவழம் புனைந்த பருதி சுமப்பக் 5
கவழம் அறியாநின் கைபுனை வேழம்
புரிபுனை பூங்கயிற்றில் பைபய வாங்கி
அரிபுனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே,
வருக! எம்பாக மகன்!

கிளர்மணி ஆர்ப்பஆர்ப்பச் சாஅய்ச்சாஅய்ச்செல்லும் 10
தளர்நடை காண்டல் இனிது; மற்று இன்னாதே,
உளம்என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார்
வளைநெகிழ்பு யாம்காணுங் கால்.

ஐய! காமரு நோக்கினை, அத்தாஅத்தா என்னும்நின்
தேமொழி கேட்டல் இனிது, மற்று இன்னாதே, 15

உய்வின்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச்சா அய்மார்
எவ்வநோய் யாம்காணுங் கால்.

ஐய! திங்கட் குழவி! வருக! என யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது, மற்று இன்னாதே,
நல்காது, நுந்தை புறமாறப் பட்டவர் 20
அல்குல்வரி யாம்காணுங் கால்.

ஐய! எம்காதில் கணங்குழை வாங்கிப் பெயர்தொறும்,
போதுஇல் வறுங்கூந்தல் கொள்வதை, நின்னையான்,
ஏதிலார் கண்சாய நுந்தை வியன்மார்பில்
தாதுதேர் வண்டின் கிளைபாடத் தைஇய 25
கோதை பரிபுஆடக் காண்கும்.”

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் சிறைப்புறத் தானாகத் தலைவி மகனுக்கு உரைப்பாள்போல், தலைவன் கொடுமை கூறி வாயில் மறுத்தது இது.

1. நயம்–அன்பு, தலைமாறுவார்–கைவிடுவார்; 2. கயம்–மென்மை; முக்காழ்–மூன்றுவடம்; 4. தைஇ–அழுத்தி; 5. பருதி–வட்டமாகப் பண்ணிய பலகை; 6. கவழம் அறியா– உணவு உண்ண மாட்டாத; கைபுனை வேழம்–யானைப் பொம்மை; 7. புரிபுனை–முறுக்கிப் பண்ணிய, பூங்கயிறு–மெல்லிய கயிறு; வாங்கி–இழுத்து, 8. அரி–சிலம்பினுள் இடும் சிறுசிறு கற்கள்; புட்டில்–கெச்சை; 9. பாகமகன்–பாகனாகிய மகன்; 10. கிளர்–ஒளிவீசும், சாஅய்–சாய்ந்து; 12. உளம்என்னா–எங்கள் உள்ளம் என்று, கூறி, எவ்வம் உழப்பார்–துன்பம் அடைவார்; 13. வளைநெகிழ்பு–வளைகள் நெகிழ்தலை; 14. காமரு–அழகு நிறைந்த; 16. சாஅய்ச் சாஅய்மார்–நொந்து தளர்வார்; 19. அம்புலி–திங்கள்; 20. புறம்மாற–வெறுக்க; 23. போதுஇல்–மலர் சூட்டப்படாத, கொள்வதை–கொள்வது; 25. தைஇய–கட்டிய, 36. பரிபு–அறுத்து, ஆட–விளையாட.