மருத்துவ களஞ்சியப் பேரகராதி/நுழைவாயில்
நுழைவாயில்
எனது கால் நூற்றாண்டுக் கனவுகளிலொன்று இன்று நனவாக நூலுருவில் உங்கள் கரங்களில் தவழ்வது எனக்கு எல்லையில்லா மகிழ்வூட்டுவதாயுள்ளது. நான் இலக்கியத்தையும் மொழியியலையும் முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்தவன் என்றாலும் எனக்கு எப்போதும் அறிவியல், தொழில்நுட்பப் பாடங்களில் குறிப்பாக மருத்துவத்துறை நூல்களைப் படிப்பதிலும் அவற்றைப் பற்றித் தமிழிலே சிந்திப்பதிலும் எனக்கு எப்போதுமே விருப்பம் அதிகம். மருத்துவத்தைத் தமிழில் சொல்ல வேண்டும் என்ற எனது விருப்பத்தை என் இளைய மகன் செம்மல் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்பியதன் விளைவே, அவன் மருத்துவ மாணவன் ஆகியது. மருத்துவக் கல்லூரியில் அவன் காலடி எடுத்து வைக்கும்முன் அவனிடம் என் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தினேன்.
உன் எதிர்கால நல்வாழ்வுக்காக மட்டும் உன்னை நான் மருத்துவம் பயில அனுப்பவில்லை. என்னுள் பல ஆண்டுகளாகக் கனன்று கொண்டிருக்கும் பேராசையொன்றை உன்மூலம் நிறைவேற்றி, உன் வாழ்வோடு என் வாழ்வையும் வெற்றியுடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற பேரவா எனக்குண்டு. நீ மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்தபின் உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மருத்துவ நூல்களைத் தமிழில் தர வேண்டும். இவ்வெண்ணத்தை மருத்துவக் கல்லூரியில் கால்வைக்கும் போதே உறுதிமிக்க முடிவாக உன் உள்ளத்தின் அடித்தளத்தில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். மருத்துவத்தை ஆங்கில மொழிமூலம் படித்தாலும் அதைத் தமிழில் சொல்வது எப்படி என்ற சிந்தனை எப்போதும் உனக்கு இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி நீ தமிழில் சொல்ல விழையும் அறிவியல், மருத்துவச் செய்திகளை இலக்கிய நயத்தோடும் கற்பனைத் திறனோடும் புனைகதை வடிவில் இயன்றவரை கூற முற்பட வேண்டும். அப்போதுதான் சாதாரணமானவர்கள் புரிந்து கொள்ளக் கடினமாக உள்ள மருத்துவச் செய்திகளும் எளிமையாக அமைந்து, சாதாரண படிப்பறிவுள்ளவர்களுக்கும் எளிதாகப் புரியவும் விரைவாக அவர்களைப் போய்ச் சேரவும் வழியேற்படும். அதுவே, மகன் என்ற முறையில் தந்தையாகிய எனக்கு நீ செய்யும் உண்மையான கைம்மாறாக இருக்கும். இதைத் தவிர வேறு எதையும் நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை. இதைச் செய்வதாக எனக்கு நீ உறுதிமொழி தர வேண்டும்
என்று நான் கூறியபோது,
உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதையே என் வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுவேன்
என உறுதியளித்தான். என் மகனோடு இணைந்து நானும் கடந்த பல ஆண்டுக்காலமாக மருத்துவப் பாடநூல்களைப் படித்து வரலானேன். என் ஐயப்பாடுகளையெல்லாம் நான் தமிழில் கேட்பதும் அவற்றிற்கான விளக்கங்களை அவன் எனக்குத் தமிழில் விளக்குவதும் வழக்கமாகியது. இதன்மூலம் எங்கள் இருவரிடையேயும் மருத்துவக் கருத்துக்களைத் தமிழில் பரிமாறிக்கொள்வது எளிதானதாக மட்டுமல்லாமல் இனிமையானதாகவும் அமைந்ததெனலாம். அப்போதெல்லாம் வெளிப்படும் கருத்துக்களைக் குறித்து வைத்துக்கொள்வதையும் நான் வாடிக்கையாக்கிக் கொண்டேன். கடந்த பதினாறு ஆண்டு காலமாக என் மகன் டாக்டர் செம்மலின் உறுதுணையோடும் என் அருமை நண்பர்கள் திரு. இரா. நடராசன், இலக்கிய மருத்துவர் ந. கிருஷ்ணமூர்த்தி, மருத்துவ எழுத்தாளர் கு. கணேசன் ஆகியோர்களின் ஒத்துழைப்போடும் மருத்துவக் களஞ்சியப் பேரகராதி எனும் பெயரில் இந்நூல் வெளிவந்துள்ளது.
எனினும், இதற்கான அடித்தளம் நாற்பத்தைந்தாண்டுகட்கு முன்பே என் உள்ளத்தில் அழுத்தமாகப் போடப் பட்டிருந்ததை இந்நேரத்தில் நினைவு கூராமல் இருக்க முடியவில்லை.
இன்றைக்குச் சரியாக நாற்பத்தைந்து ஆண்டுகட்கு முன்பு, 'Wonder Drugs’ எனும் ஆங்கில மருத்துவ நூலை தென்மொழிகள் புத்தக நிறுவனத்துக்காகத் தமிழில் பதிப்பிக்கும் பணியை நான் மேற்கொண்டபோதுதான், தமிழைப் பொறுத்தவரை இம்முயற்சியில் நாம் எங்கே நிற்க வேண்டியுள்ளது என்பது எனக்குத் தெளிவாகப் புலப்பட்டது. அந்நூலை வெளியிட்டதனால் நான் பெற்ற பட்டறிவு மிகவும் பயனுள்ளதாயமைந்தது. உயிரியல் என்ற நூலையும் யுனெஸ்கோ கூரியர் திங்களிதழில் தொடர்ந்து 1970இல் புற்றுநோய் பற்றியும் அடுத்து 1972இல் இதய நோய் பற்றியும் சிறப்பிதழ்களை தமிழில் வெளியிடும்போது மருத்துவத்தைத் தமிழில் சொல்லும்போது எதிர்ப்படும் இடர்ப்பாடுகள் என்னென்ன என்பது புலனாகியது.
மருத்துவ நூல்கள் தமிழில் நிறைய வெளிவரவேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறோம். ஆனால், பிற மொழிகளில் வெளிவரும் அளவுக்கு அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவ நூல்கள் தமிழில் வெளிவருவதில்லை. இதற்கு என்ன காரணம்?
நம்மிடையே அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவத் துறைகளில் பொருளறிவும் தமிழறிவும் எழுத்துத் திறனும் மிக்கவர்கட்குப் பஞ்சமில்லை. இத்துறைகளைப் பற்றித் தமிழில் தெளிவாகவும் திட்பமாகவும் விளக்கிக்கூற முடியும் என்ற ஆர்வத் துடிப்பினர் பலருண்டு. அவர்கள் எழுதவும் முனைகிறார்கள். அப்போது அவர்கள் முயற்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக வந்தமைவது கலைச்சொற்கள் (Technical terms) ஆகும். ஆங்கிலக் கலைச்சொற்களுக்கேற்ற நேர்த் தமிழ் கலைச்சொற்களை, எழுத முனையும் எல்லோராலும் உரிய முறையில் கலைச் சொற்களை உருவாக்க இயலுவதில்லை. அதற்கேற்ற மொழியறிவும் இலக்கணப் புலமையும் வேர்ச்சொல் அறிவும் போதிய அளவு இல்லாததால் ஆங்கிலக் கலைச்சொற்களை மொழி பெயர்ப்புச் செய்தும் சில சமயங்களில் ஒலிபெயர்ப்புச்செய்தும் பயன்படுத்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உண்டாகிறது. இதனால் கலைச்சொல் மொழிபெயர்ப்பு நீளமாகவும் பொருட் பிறழ்வுடையதாகவும் அமைய நேர்கிறது. பெயர்ப்பால் போதிய பொருள்விளக்கம் பெற முடிவதில்லை. இதனால் சொற்செட்டும் பொருட் செறிவுமுடைய சுருங்கிய வடிவிலான கலைச்சொற்கள் உருவாக இயலாமல் போகிறது. இதன் விளைவாக ஆர்வத்தோடு எழுத முனைந்த நூலாசிரியர் ஒரு சில பக்கங்களிலேயே மனச்சோர்வடைந்து தன் முயற்சியை தொடராது விட்டுவிட நேர்கிறது. இதனை, இம் முயற்சி யாளர்கள் மூலம் கேட்கும்போதெல்லாம் கலைச்சொல் இடர்ப்பாட்டை நீக்கினால் பொருளறிவுமிக்க, ஒரளவு தமிழறிவும் எழுத்தாற்றலுமுள்ள இவர்கள் நூல் எழுத ஏதுவாக இருக்குமே என்ற எண்ணம் என்னுள் அழுத்தம் பெறும். அதன் விளைவாக அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவத்துறைக் கலைச்சொல்லாக்க முயற்சியில் முழு ஈடுபாடு கொள்ளலானேன்.
நூல் எழுதுவோருக்கும் கற்பிக்கும் ஆசிரியர்கட்கும் படிப்பார்வலர்கட்கும் மட்டும் பயன்படுவதோடு அமையாது சாதாரண வாசகர்கட்கும் பயன்பட வேண்டும். ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொல்லும், அக்கலைச்சொல்லுக்கு விளக்கமாக ஒரு அறிவியல் செய்தியும் படிப்போர்க்குக் கிடைக்க வேண்டும் என்று விழைந்தேன். அதையும் பட விளக்கத்தோடு தந்துதவ வேண்டும் என விரும்பினேன். விளைவு களஞ்சியப் போக்கில் ஒரு புதுவகை கலைச்சொல் அகராதியை வடிவமைத்தேன்.
இப்புதுவகை 'கலைச்சொல் களஞ்சியம்' முதல் தொகுதி 'அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்' என்ற பெயரில் 1990இல் வெளிவந்தது. இதே பெயரில் இரண்டாவது தொகுதி 1993இல் வெளிவந்தது. இவற்றில் 36 அறிவியல் தொழில்நுட்பப் பிரிவுகட்கான கலைச்சொற்களும் விளக்கங்களும் இடம்பெற்றன. மூன்றாவது தொகுதி 1995இல் மருத்துவ, அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி என்ற பெயரில் வெளிவந்தது. 68 அறிவியல் தொழில்நுட்ப, மருத்துவப் பிரிவுகட்கான கலைச் சொற்களையும் விளக்கங்களையும் கொண்டதாக அஃது அமைந்தது. இந்நூல் அரசு, மக்களின் பேராதரவையும் பெற்றது. அறிவியல் தமிழ் ஆர்வலர்களும், இதழ்களும், நூலாசிரியர்களும் என் முயற்சியைப் பாராட்டி ஊக்குவித்தனர். ‘அனந்தாச்சாரி ஃபெளண்டேஷன் ஆஃப் இந்தியா', முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை போன்ற அமைப்புகள் பரிசும் பாராட்டும் வழங்கிச் சிறப்பித்தனர்.
நான்காவது களஞ்சிய அகராதியாக ‘மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்'எனும் நூலை வெளியிட்டேன். பின்னர் ஐந்தாவது தொகுதியாக கணினிக் கலைச் சொற்களுக்கான “கணிணிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி” எனும் பெயரில் வெளியிட்டேன். ஆறாவது தொகுதியாக “கணினி களஞ்சிய அகராதி" நூலை 2001இல் வெளியிட்டேன். ஏழாவது தொகுதியாக “கணினிக் களஞ்சியப் பேரகராதி" யை 2002இல் 1600 பக்கங்களில் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் பேரகராதியாக வெளிவந்தது. எட்டாவது தொகுதி “மருத்துவக் களஞ்சியப் பேரகராதி" நூலை இதேபோக்கில் மருத்துவவியலின் பதினைந்து பிரிவுகட்குரிய ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு நேர்த் தமிழ்க் கலைச்சொற்களும் அவற்றிற்கான பொருள் விளக்கமும் படங்களோடு தயாரிக்கத் தொடங்கினேன். ஆங்கிலக் கலைச் சொற்களை இனங்கண்டு தேர்வு செய்வதில் என் மகன் டாக்டர் செம்மலின் பங்கு கணிசமானது. தமிழ்க் கலைச்சொல் உருவாக்கத்திலும் தமிழில் பொருள் விளக்கம் வரைவதிலும் நண்பர் திரு. இரா. நடராசன், இலக்கிய மருத்துவர் ந. கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர் கு. கணேசன் ஆகியோரின் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கதாகும். நாங்கள் எவ்வளவுதான் திறம்படச் செயல்பட்டாலும் மருத்துவவியல் வல்லுநர் என்ற முறையில் 'ஸ்ரீ ராமச்சந்திரா' நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் நீண்டகாலமாக என் அறிவியல் தமிழ் வளர்ச்சி முயற்சிகளுக்குப் பின் துணையாக இருப்பதில் பெருமகிழ்வு கொண்டவருமான பேராசிரியர், மறைந்த மருத்துவர் லலிதா காமேஸ்வரன் அவர்கள் தனக்குள்ள பெரும்பணிகளுக்கிடையேயும் வரிவரியாகப் படித்து குறை நிறைகளைச் சுட்டிக்காட்டியும் தேவையான மாற்றதிருத்தங்களைச் செய்து நூலின் ஒரு பகுதியைச் செப்பனிட்டு தந்தார்கள்.
'அலோபதி' என்றழைக்கப்படும் ஆங்கில மருத்துவத்தைத் தமிழில் தரும் முயற்சி 1852-லேயே ஃபிஷ்கிரீன் எனும் அமெரிக்க மருத்துவப் பேராசிரியரால் இலங்கை யாழ்ப்பாணத்தில் முதன் முதல் தொடங்கி வைக்கப்பட்டது. டாக்டர் கட்டர் ஆங்கிலத்தில் எழுதிய 'Anatomy Physiology and Hygiene' எனும் நூலை மொழிபெயர்த்தார். தமிழ் நூல் என மகுடம் தாங்கி வெளிவந்த போதிலும் அதில் இடம் பெற்ற பெரும்பாலான சொற்கள், குறிப்பாகக் கலைச் சொற்கள் தமிழ் எழுத்தோடு கூடிய சம்ஸ்கிருதச் சொற்களேயாகும். தமிழோடு கலந்து அதிகப் புழக்கத்திலிருந்ததால் சம்ஸ்கிருத மொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாகவே ஃபிஷ்கிரீன் கருதியதே இதற்குக் காரணம்
தமிழில் கலைக் களஞ்சியங்கள் வெளிவரத் தொடங்கிய பின்னர் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை எழுதிய மருத்துவத்துறை வல்லுநர்கள், கூடியவரை மருத்துவக் கலைச்சொற்களைத் தமிழில் தருவதில் பேரார்வம் காட்டினர். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் சொற்களஞ்சியம் உருவானபோது அதில் மருத்துவம் தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழிலேயே சொல்விளக்கம் கொடுக்கப் பட்டது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் கல்லூரிப் பாட நூல்களாக சில மருத்துவ நூல்களை மருத்துவர்களைக் கொண்டு எழுதச் செய்தது. அந்நூல்கள் விரும்பும் வகையில் அமைய இயலாமற்போயினும் அதில் இடம்பெற்ற மருத்துவக் கலைச்சொற்கள் தமிழிலேயே பெரும்பாலும் அமைந்திருந்தன. இதற்குக் காரணம் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமே மருத்துவக் கலைச் சொற்களைத் தொகுத்து நூலாசிரியர்கட்கு வழங்கியதாகும்.
தமிழ்ப் பல்கலைக்கழகம் 'அறிவியல் களஞ்சியம்' தொகுதிகளை வெளியிட முனைந்தபோது நல்ல தமிழில் மருத்துவக் கட்டுரைகளை எழுதச் செய்து பெறுவதில் பெருங்கவனம் செலுத்தியது. மருத்துவப் புலமையோடு தமிழறிவுமிக்க டாக்டர் சாமி சண்முகம் போன்றவர்கள் அறிவியல் களஞ்சியப் பதிப்பாசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்ததால் மருத்துவக் கலைச்சொற்கள் அழகான தமிழ்ச் சொல்வடிவங்களாக இடம்பெற்றன. அப்போதைய துணைவேந்தர் டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப 'அறிவியல் களஞ்சியம்' முதல் தொகுதியை மேற்பார்வையிட்டு வடிவமைத்து அச்சுப்பதிவம் தயாரிக்கும் பணியை நிறைவேற்றும் வாய்ப்பை நான் மேற்கொண்டு, நிறைவேற்றினேன். அவற்றுள் இடம்பெற்ற மருத்துவக் கலைச் சொற்கள் பல அழகு தமிழில் பொருட்செறிவோடு அமைந்தவைகளாகும்.
தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் 'கலைக் கதிர்' திங்களிதழில் இடம்பெற்ற அறிவியல் கலைச்சொற்களை யெல்லாம் பேராசிரியர் ஜி.ஆர். தாமோதரன் அவர்கள் தொகுத்து அடிப்படை அறிவியல், 'பயனுற அறிவியல்' என்ற பெயர்களில் நூலுருவில் வெளியிட்டார். இவை பொருளறிவைக் காட்டிலும் மொழித் திறத்துக்கு முதன்மை தருபவைகளாக அமைந்துவிட்டதெனலாம். 'யுனெஸ்கோ கூரியர்' பன்னாட்டுத் திங்களிதழில் பன்னூறு மருத்துவக் கட்டுரைகள் கடந்த முப்பத்தியைந்து ஆண்டுக் காலமாக வெளிவந்துள்ளன. அவற்றைத் தமிழில் வெளியிடும்போது மொழிபெயர்ப்பாளர்களின் உதவியோடும் மருத்துவ வல்லுநர்களின் உறுதுணையோடும் பல நூறு மருத்துவக் கலைச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தும் இனிய வாய்ப்பு எனக்கேற்பட்டது.
மருத்துவக் கலைச்சொற்களைப் பொறுத்தவரை கடந்த கால முயற்சிகளைக் கருத்திற் கொண்டு 'மருத்துவக் களஞ்சியப் பேரகராதி' நூலை உருவாக்கியுள்ளேன். மருத்துவத்துறைத் தொடர்பான பொருளறிவைப் புகட்டுவதற்கான துணைக்கருவியாகத்தான் மொழியைக் கையாண்டுள்ளேன். இயல்பிலேயே தமிழ் ஒர் அறிவியல் மொழியாக - அறிவியலை நுண்மாண் நுழைபுலத்தோடு உணர்த்தவல்ல ஆற்றல்மிகு மொழியாக - அமைந்திருப்பதால் கடினமானதாகப் பலரும் கருதும் கலைச்சொல்லாக்க முயற்சி எளிதானதாக அமைவதாயிற்று. தமிழைப் போற்றத் தெரிந்த அளவுக்கு அதன் அளப்பரிய ஆற்றலை அறிந்து கொள்ளவோ உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவோ முனையா மலிருக்கிறோம் என்பதுதான் உண்மை. அறிவியலைப் பொறுத்த வரை தமிழின் தனித்திறத்தை செயல்வடிவாக உலகுமுன் எண்பிக்கும் வகையிலே என் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுள்ளேன்.
இந்நூலுக்கு மிகச் சிறப்பான அணிந்துரையொன்றை வழங்கியுள்ளார் மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவரும் மலேசியப் பொதுப்பணித்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்கள். கடந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மலேசியவாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது உலகத் தமிழர் நலன் காக்கும் காவலராகவும் திகழ்ந்து வருபவர் டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள்.
தமிழ், தமிழர் நலனை இரு கண்களாகக் கருதி செயல்படும் அன்னார், தமிழ் வளர்ச்சியில் பேரார்வமுடையவர் என்பதைக் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக கண்டு வருகிறேன். மலேசிய மண்ணில் இரு பெரும் உலகத் தமிழ் மாநாடுகளை சீரும், சிறப்புமாக நடத்திய பெருமைக் குரிய பெருந்தகை. பன்னாட்டுத் தமிழ் இணையதள மாநாட்டை கோலாலம்பூரில் சிறப்பாக நடத்தி பன்னாட்டுத் தமிழ் இணையதள முயற்சியில் உலகளவில் தமிழுக்கு தனித்துவ நிலை கிடைக்க வழிவகுத்தவர்.
'யார்?' என்று பாராது 'என்ன?' என்பதில் கருத்துன்றிச் செயல்படும் இயல்பினரான இப்பெருந்தகை, தமிழ் வளர்ச்சிக்கு, தமிழர் நலனுக்கு உழைப்பவர்கட்கு துணை நிற்பதில் பெருமகிழ்வும், மனநிறைவும் கொள்பவர். இவரது அன்பாலும் உதவி ஒத்துழைப்பாலும் எனது 'கணிணி களஞ்சிய அகராதி' இரண்டாம் தொகுதி வெளிவந்தது போன்றே, இம் 'மருத்துவக் களஞ்சியப் பேரகராதியும்' வெளிவருகிறது. இவரது உதவியும், ஒத்துழைப்பும் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான மாபெரும் உந்துவிசை என்பது வரலாற்றுப் பதிவாகும். இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால் கம்பனுக்கு சடையப்ப வள்ளல் வாய்த்தது போல் என் அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணிக்கு ஆதரவு தரும் பெருந்தகையாக வாய்த்தவர் டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள் எனக் கூறுவதில் பெருமையடைகிறேன்.
எனது கலைச்சொல் களஞ்சிய அகராதி வெளியீட்டுப் பணிக்கு மாபெரும் உந்துவிசையாக இருந்து வருபவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதே போன்று எனது அறிவியல் தமிழ்ப் பணிக்குத் தோன்றாத் துணையாக இருந்து வருபவர் இனமான பேராசிரியர் க. அன்பழகனார் அவர்கள். அவர்கள் மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் நூலுக்கு வழங்கியிருந்த சிறப்புரையை, அந்நூலின் விரிவாக வெளிவரும் 'மருத்துவக் களஞ்சியப் பேரகராதிக்கும்' பொருந்துவதால் இந்நூலிலும் அதனை இடம்பெறச் செய்துள்ளது பொருத்தமெனக் கருதுகிறேன். மேலும், பேராசிரியர் டாக்டர் லலிதா காமேசுவரன் அவர்கள் 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்' நூலுக்கு வழங்கியிருந்த 'ஆய்வுரை'யையும் அந்நூலின் விரிவாக உருவாகியுள்ள இந்நூலிலும் இடம்பெறச் செய்துள்ளேன். இவர்கட்கெல்லாம் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளேன்.
இந்நூல் உருவாக்கத்துக்கு என் ஆருயிர் நண்பர் மறைந்த இரா. நடராசனார் அவர்கட்கும், 'மருத்துவ மலர்' சிறப்பாசிரியர் இலக்கிய மருத்துவர் ந. கிருஷ்ணமூர்த்தி அவர்கட்கும் இதழ்கள் வாயிலாகவும் தம் நூல்கள் மூலமும் மருத்துவ அறிவைப் பரப்பிவரும் மருத்துவர் கு. கணேசன் அவர்கட்கும் நான் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
இந்நூல் உருவாக்கத்தில் எல்லா வகையிலும் எனக்குத் தோன்றாத் துணையாக இருந்துவரும் என் துணைவியார் திருமதி சித்தை செளதா அவர்கட்கும், என் மகன் மருத்துவர் மு. செம்மல் அவர்கட்கும், மிகுந்த பொறுமையோடு சிறப்பாக கணிணியில் ஒளிஅச்சுப் பதிவம் உருவாக்கித் தந்த ஸ்ரீ பிரிண்ட் ஹவுஸ் திரு. கோபிநாத் அவர்கட்கும், திருமதி ந. லட்சுமி அவர்கட்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். அவ்வாறே மிக அழகிய வடிவில் அட்டைப் படம் வடித்துத் தந்த சுவாதி சாஃப்ட் சொலுஷன் நிறுவனர் திரு. எஸ். மகேந்திரகுமார் அவர்கட்கும் அழகிய முறையில் அச்சிட்ட காரிஸ் அச்சகத்தாருக்கும் என் நன்றி உரித்தாகும்.
எனது முந்தைய படைப்புகளைப் போன்றே இந்த அகராதி நூலையும் தமிழுலகம் ஏற்று ஊக்குவிக்கும் என்பதில் எனக்கு எப்போதும் முழு நம்பிக்கை உண்டு.
மணவை முஸ்தபா
நூலாசிரியர்