மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/48. பெருமானார் அவர்கள் கூறிய அறிவுரை
முன்பு முஸ்லிம் மதப் பிரச்சாரகர்களுக்கு அரேபிக் கூட்டத்தார் இடையூறு உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். இஸ்லாத்தைப் பற்றி போதனை செய்யச் சென்ற பல பிரச்சாரகர்கள் அரேபியர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மக்காவை வெற்றி கொண்டபின், அந்தப் பயமானது அறவே நீங்கிவிட்டது. அதன்பின், பெருமானார் அவர்கள் அரேபியாவின் பல பகுதிகளுக்கும் இஸ்லாமியப் பிரச்சாரகர்களை அனுப்பினார்கள். அவ்வாறு அனுப்பப்படுபவர்களைப் பெருமானார் அவர்கள் சோதித்துத் தேர்வு செய்த பிறகே அனுப்புவார்கள்.
திருக்குர்ஆனை நன்கு மனப்பாடம் செய்தவர்களையே பிரச்சாரகர் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும்படி செய்வார்கள்.
பெருமானார் அவர்கள் ஒரு சமயம் பிரச்சாரகர்களை அனுப்ப எண்ணியபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துத் அனுப்பி வைத்தார்கள்.
அவர்களை அனுப்புமுன் அவர்கள் கைக்கொள்ள வேண்டிய முறைகளை பெருமானார் அவர்கள் போதித்தார்கள்.
பெருமானார் அவர்கள் கூறியவை:
பெருமானார் அவர்கள், அவர்களுக்குச் செய்த போதனையானது, இஸ்லாமியப் பிரச்சாரத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும்.
"நீங்கள் காந்தமாகப் பணி செய்ய வேண்டும். பலாத்காரம் செய்யக் கூடாது. மக்களுக்குச் சிறந்த கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும்: அவர்களுக்கு வெறுப்பு உண்டாகுமாறு நடக்கக் கூடாது. நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்யவேண்டும். வேறு மதத்தவர்களையும் நீங்கள் அங்கே சந்திக்கக்கூடும். அவர்களைக் காண்பீர்களானால், முதலாவதாக, ஆண்டவன் ஒருவன் என்பதையும் நான் அவனுடைய தூதன் என்பதையும், நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். அவர்கள் அவற்றை ஒப்புக்கொண்டால், "இரவிலும் பகலிலும் ஐந்து நேரத் தொழுகையை ஆண்டவன் உங்கள்மீது கடமையாக்கி இருக்கிறான்" என்று கூறுங்கள். அவர்கள் அதை அங்கீகரித்த பின், "தருமம் செய்ய வேண்டியது உங்கள் மீது கடமையாயிருக்கும். உங்களில் செல்வர்களிடமிருந்து நிதி வசூலித்து, ஏழைகளுக்குக் கொடுக்கப்படும்" என்று சொல்லுங்கள். எவரையும் கொடுமைப்படுத்தாதீர்கள். ஏனெனில் கொடுமைப்படுத்தப்பட்டோர் பிரார்த்தனைக்கும் ஆண்டவனுக்கும் மத்தியில் திரை ஒன்றும் இல்லை."