மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/எளியோரை அழிப்பது எளிது?
வழி தவறிய ஆட்டுக்குட்டி, தன் தாயைத் தேடி அலைந்தது. தாயைக் காணவில்லை. களைப்பு மிகுந்தது ஆட்டுக்குட்டிக்கு. அருகில் இருந்த ஓடையில் தண்ணீர் பருகத் தொடங்கியது.
அப்போது, சிறிது தொலைவில் நின்று கொண்டிருந்த ஓநாய், “ஆட்டுக் குட்டியே!” என்று உறுமியது.
ஆட்டுக்குட்டி பயந்து, நடுநடுங்கியது. தண்ணீர் குடிக்கவில்லை.
“தண்ணிரை ஏன் கலக்குகிறாய்?” என்று கேட்டது ஓநாய். “நான் கலக்கவில்லையே, ஒரமாய் நின்று தான் பருகுகிறேன்” என்று நடுங்கிக் கொண்டே கூறியது ஆட்டுக்குட்டி “அது சரி! போன வருடம் என்னை ஏன் திட்டிப் பேசினாய்?” என்று அதட்டியது ஓநாய்.
“ஐயோ நான் பிறந்தே ஏழு மாதங்கள் தானே ஆகின்றன!" என்றது ஆட்டுக்குட்டி.
“நீ திட்டவில்லை என்றால், உன் தாய் திட்டியிருக்கலாம் அல்லது உன் தந்தை திட்டியிருக்கலாம்?” என்றது ஓநாய்.
என் பெற்றோர் யாருக்குமே தீங்கு செய்யமாட்டார்கள் என்று பணிவோடு கூறியது ஆட்டுக்குட்டி
“இல்லை என்றால், உன் இனத்தார் எவரேனும் திட்டியிருக்கலாம், அது உனக்கு எப்படி தெரியும்? அதற்கு இப்போது நீ தான் பலி!” என்று கூறி ஆட்டுக்குட்டி மீது பாய்ந்து கொன்று தின்றது அந்த ஓநாய்
- ஆட்டுக்குட்டிக்குப் பரிந்து பேச எவரும் இல்லை
- எளியோரை வலியோர் அழிப்பது இயல்பே!