மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/கடல் எவ்வளவு பெரிது?

விக்கிமூலம் இலிருந்து

40
கடல் எவ்வளவு பெரியது?

கடலில் வசித்து வந்த தவளை ஒரு நாள் கரைக்கு வந்தது. அருகில் இருந்த கிணற்றில் வசித்த தவளையும் வெளியே வந்தது.

இரண்டு தவளைகளும் சந்தித்துக் கொண்டன. ஒன்றை ஒன்று அறிமுகம் செய்து கொண்டது.

அப்போது, “கடல் எவ்வளவு பெரிது?” என்று கேட்டது கிணற்றுத் தவளை. ஏனென்றால் அதற்கு கடலைப் பற்றி தெரியாது.

"கடல் மிகப் பெரிது!” என்றது கடல் தவளை. “இவ்வளவு பெரிது என்று ஒரு அளவு சொல்லு” என்று கேட்டது கிணற்றுத்தவளை.

“அதாவது கடலுக்கு அளவே கிடையாது. எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது” என்ற அளவே இல்லை என்றது கடல் தவளை.

“எதற்குமே ஒரு அளவு உண்டு என்பார்களே. அப்படி ஒரு அளவைக் கூறு!” என்று வற்புறுத்தியது கிணற்றுத் தவளை.

“என்னால் அப்படிக் கூறவே முடியாது, பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும்,” என்று கூறியது கடல் தவளை.

கடல் தவளை கூறியதைக் கேட்டுப் பொறுமை இழந்த கிணற்றுத் தவளை, “இந்தக் கிணற்று அளவாவது இருக்குமா நீ வசிக்கும் கடல்?” என்று கேட்டது கிணற்றுத் தவளை.

கடல் தவளை பலமாகச் சிரித்துக் கொண்டே, என்ன சொல்லியும் உனக்குப் புரியவில்லையே! கடுகு எங்கே? மலை எங்கே? என்பது புரியாத உனக்கு எப்படி புரிய வைக்கமுடியும்?" என்று சலித்துக் கொண்டது கடல் தவளை.

உடனே கிணற்றுத் தவளைக்குக் கோபம் அதிகரித்து, “நீ ஒரு பொய்யன் கிணற்றை விட கடல் பெரிதாகவே இருக்க முடியாது” என்று கூறிவிட்டுச் சென்றது.

‘உலக நடப்புத் தெரியாதவனை கிணற்றுத் தவளை’ என்று கூறுவது வழக்கம்