மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/தண்டனையில் பங்கு உண்டா?
காட்டில் பதுங்கியிருந்து, அவ் வழியாகப் போவோர் வருவோரைக் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
அதை அறிந்த பெரியவர் ஒருவர், கையில் பணப்பையோடு காட்டு வழியாகச் சென்றார்.
அவரை மறித்து நிறுத்தினான் கொள்ளைக்காரன்.
அவனைப் பார்த்து பெரியவர், “அப்பா, பணப்பையை உனக்கே தந்து விடுகிறேன். எனக்கு ஒரு சந்தேகம். அதைத் தெரிவித்து விட்டுப் பணப்பையை எடுத்துக்கொள். அதுவரை நான் இங்கேயே இருப்பேன்” என்றார்.
“உமக்கு என்ன சந்தேகம்?” என்றான் திருடன். “நீ கொள்ளையடித்து உன் குடும்பத்தினரைக் காப்பாற்றுகிறாயே! உனக்குக் கிடைக்கும் தண்டனையில் (பாவத்தில்) அவர்கள் பங்கு கொள்வார்களா? அதைத் தெரிந்து வந்து சொல்” என்றார் பெரியவர்.
கொள்ளைக்காரன் குடும்பத்தாரிடம் சென்று, “நான் கொள்ளையடித்துக் கொண்டு வந்து தருகிறேன். நீங்கள் உண்டு சுகமாக இருக்கிறீர்கள், எனக்கு ஏற்படக் கூடிய பாவத்தில் (தண்டனை) உங்களுக்குப் பங்கு உண்டா? ஏற்பீர்களா?” என்று கேட்டான்.
“அது எப்படி முடியும்? உன் தண்டனை உன்னோடுதான்! நீ கொண்டு வந்து தருகிறாய் நாங்கள் அதை அனுபவிக்கிறோம்” என்று கூறினர்.
அப்பொழுதே, கொள்ளைக்காரனுக்கு அறிவு வேலை செய்யத் தொடங்கி விட்டது.
பெரியவரிடம் வந்து வணங்கி, “உங்களுடனே நான் வருகிறேன்!” என்று கூறி, பெரியவரைப் பின் தொடர்ந்தான் கொள்ளைக்காரன்.