உள்ளடக்கத்துக்குச் செல்

மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/பயமும் பீதியும் கொண்டு செத்தனர்

விக்கிமூலம் இலிருந்து

42
பயமும் பீதியும் கொண்டு செத்தனர்

ஒரு மலை உச்சியில், முனிவர் ஒருவர் தியானத்தில் ஆழ்ந்து இருந்தார்.

அப்பொழுது, அந்த வழியாக ஒரு நோய் போய்க் கொண்டிருந்தது. அதை அறிந்த முனிவர், “நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார்.

“சிறிது தொலைவில், ஒரு கோயில் உள்ளது. அங்கே பெரிய திருவிழா நடைபெறும், அங்கே சென்றால், காலரா நோயினால் ஆயிரக் கணக்கான பேரைச் சாகடிக்கலாம்” என்று போய்க் கொண்டிருக்கிறேன்” என்று கூறியது அந்த காலரா நோய்.

“அவ்வாறு சாகடிப்பது பெரும்பாவம் அல்லவா?” என்றார் முனிவர்.

“அது பாவம் என்றால், காலரா நோயாக கடவுள் என்னை ஏன் படைக்க வேண்டும்?” என்ற வாதாடியது.

முனிவரால் அது கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்க இயலவில்லை. ஒருவாறு சமாதானத்துக்கு வந்தார். அதாவது, ஒரு நூறு உயிர்களை மட்டும் காலரா நோயினால் சாகச் செய். மேற்கொண்டு செய்தால், என் சாபத்திற்கு ஆளாவாய்” என்றார். முனிவர் கூறியதை ஏற்று, காலரா நோய் திருவிழாக் கூட்டத்திற்குச் சென்றது, அங்கே இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காலரா நோயினால் இறந்து போனார்கள்.

இச்செய்தி முனிவருக்கு எட்டியது மிகுந்த கோபத்துடன் இருந்தார்.

காலரா நோய் திரும்பி வந்தது. “என்னிடம் நீ வாக்களித்தபடி, நடந்து கொள்ளவில்லை, நூறு உயிர்களுக்கு மேல் சாகடிப்பது இல்லை என்று வாக்குறுதி கொடுத்தாய், ஆனால், இரண்டாயிரம் உயிர்களுக்கு மேல் பலி கொண்டிருக்கிறாயே?” என்று கடிந்து கொண்டார் முனிவர்.

“முனிவரே! நான் சொல்வதை சிறிது பொறுமையாகக் கேளுங்கள்; நான் நூறு பேர்களைத்தான் பலி கொண்டேன், ஆனால், பயத்தினாலும், பீதியினாலும் செத்தவர்கள் இரண்டாயிரத்துக்குமேல் இருக்கும் நான் என்ன செய்ய முடியும்?” என்றது காலரா நோய்.

மக்களின் அறியாமையைக் கண்டு முனிவர் நொந்து கொண்டார்.