மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/மூத்தவனுக்கு ஏற்பட்ட மதிப்பு

விக்கிமூலம் இலிருந்து

58. மூத்தவனுக்கு ஏற்பட்ட மதிப்பு

ஒரு ஊரில் ஐந்து சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தகப்பன் இல்லை. தாய் மட்டுமே இருந்தாள்.

மூத்தவன் வீட்டில் இருந்து குடும்பத்தைக் கவனித்தான். ஊர் விவகாரங்களையும் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தான்.

மற்ற நால்வரும் சொந்த நிலத்தை உழுது பயிர் செய்து வந்தனர். எல்லோரும் ஒற்றுமையாக இருந்தார்கள்.

மூத்தவனிடம் ஊர்க்காரர்கள் வந்து மரியாதையாக யோசனைக் கேட்டுப் போவதால், தாய்க்கு அவனிடம் பிரியம். அவனுக்கு அரிசிச் சோறும், மற்றவர்களுக்கு கம்மஞ் சோறும் போடுவாள்.

ஒரு நாள் சகோதரர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் முற்றியது.

மூத்தவனிடம், “நாங்கள் உழவு வேலை பார்ப்பதும், நீ வீட்டில் இருப்பதும் என்ன நியாயம்? நீயும் எங்களுடன் வந்து உழவு வேலையைக் கவனி” என்று சொன்னார்கள்.

மறுநாள், அவர்களோடு மூத்தவனும் புறப்பட்டாள்.

தாய்க்கு மூத்தவனைப் பற்றிக் கவலை, உழவு வேலைக்கு போகாதவன் வெயிலில், கலப்பை பூட்டி எப்படி உழுவானோ என்று வருத்தப்பட்டாள்.

நால்வருக்கும் கம்மஞ்சோறு கட்டி, மூத்தவனுக்கு மட்டும் அரிசிச் சோறும், பதார்த்தமும் வைத்துக்கட்டி, எல்லாவற்றையும் ஒரே பொட்டலமாகக் கொடுத்து அனுப்பினாள் தாய்.

அடுத்த ஊரிலிருந்து மூத்தவனைத் தேடி ஒரு விவகாரம் வீட்டுக்கு வந்தது. விசாரித்து விஷயம் தெரிந்து கொண்டு நிலத்துக்குச் சென்றனர்.

விவகாரம் சொல்ல வந்தவர்களில் ஒருவன் மூத்தவனிடம், “ஐயா, இந்த விவகாரத்தை தீர்த்து வையுங்கள். உங்களுக்குப் பதிலாக நான் உழுகிறேன்” என்று சொல்லி, கலப்பையைக் கட்டி உழத் தொடங்கினான்.

வேப்ப மரத்து நிழலில் பஞ்சாயத்து நடந்து கொண்டு இருந்தது.

கலப்பையைக் கட்டி உழத் தெரியாமல் அண்ணன் முழிப்பான். அதன் பின், ஏர்பூட்டி வெயிலில் உழும்போது, இப்பொழுது தெரிகிறதா? உழுவதில் உள்ள கஷ்டம்? என்று அவனிடம் கேட்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த தம்பிகளுக்கு ஏமாற்றம் ஆகிவிட்டது. விவகாரத்துக்கு வந்தவன் அவனுக்காகவே உழுகிறானே அண்ணன் மரத்து நிழலில் கால் மேல் கால் போட்டு, விவகாரம் தீர்த்துக் கொண்டிருப்பான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

விவகாரம் தீர்ந்தது வந்தவர்கள் போய் விட்டார்கள்.

பகல் உணவுக்காக, சகோதரர்கள் உழவை நிறுத்திவிட்டு மரத்து அடியில் வந்து உட்கார்ந்தார்கள். ஆளுக்கு ஒரு பொட்டலத்தை பெரிதாகப்பார்த்து எடுத்துக்கொண்டனர். சிறிதாக இருந்ததைத் தொடவில்லை.

அண்ணன் வந்து, மீதி இருந்த ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரித்தான். சகோதரர்கள் அதைப்பார்த்ததும் வியப்படைந்தனர். “நிலத்துக்கு வந்தும்கூட, அண்ணனுக்கு அரிசிச் சோறு கிடைத்திருக்கிறதே. அது நம் கண்ணில் படவில்லையே” என்று பேசிக்கொண்டனர்.

பொட்டலத்திலிருந்த பதார்த்தத்தை எடுத்து சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் பிரியத்தோடு வற்புறுத்தி, கொஞ்ச கொஞ்சம் கொடுத்து தானும் உண்டான்.

சகோதரர்கள் மூத்தவனிடம், “நாளை முதல் நீ உழுவதற்கு வரவேண்டாம். முன் போலவே, வீட்டிலேயே இருந்து வழக்கம்போல் காரியங்களை பார்த்துக்கொள். எங்களுக்குப் பொறாமை இல்லை, அவரவர்களுக்கு உள்ளதுதான் கிடைக்கும்” என்று கூறினார்கள்.