மாய வினோதப் பரதேசி 1/இலக்கிய சாதனையாளர்
முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் கல்கி என்கிற எழுத்தாளர் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்ததுபோல இருபதுகளில் தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் என்று ஜே.ஆர். ரங்கராஜா என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும்.
இந்த விஷயத்தைக் கல்கி தெரிந்து செய்தார் என்றும், முன்னிருவரும் தாங்களும் அறியாமலே வாசகர் பெருக்கத்துக்குக் காரணமாக இருந்தார்கள் என்றும் சொல்ல வேண்டும்.
ஜே.ஆர். ரங்கராஜூவின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரையில் வெளிவந்தன. பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதிகளையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு 10 பதிப்புகள் வரை தன் நாவல்களை வெளியிட்டார். ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும்போது மிகவும் பரபரப்பாக வாசகர்கள் வாங்கிப் படித்தனர். வரதராஜன் என்று இரண்டு பாகங்கள் வெளிவரும் வரையில் ஒன்றும் தடங்கல் இல்லை. வரதராஜனின் பல பகுதிகள் இலக்கியத் திருட்டு என்று கேஸ் போட்டு, மேலே எதுவும் எழுதிப் பிரசுரிக்கக் கூடாது என்றும், ஆறு மாதம் ஜெயில் வாசம் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் கோர்ட் அவருக்குத் தண்டனை விதித்தது என்று எண்ணுகிறேன். ஜெயிலில் இருந்து விட்டு எழுதுவதை நிறுத்தி விட்டார் ரங்கராஜு. இவரை எழுத்தாளர் சங்கம் ஒன்று 40களின் ஆரம்பத்தில் கல்கி தலைமையில் ஏற்பட்ட போது முதல் கூட்டத்துக்கு வரவழைத்து நான் சந்தித்திருக்கிறேன். தாடி வளர்த்துக் கொண்டு நாமம் போட்டுக் கொண்டு (வைஷ்ணவ நாயுடு அவர் என்று எண்ணுகிறேன்) பார்ப்பதற்குக் கம்பீரமாக இருந்தார்.
ரங்கராஜூவுக்கு அடுத்து வாசகர்களின் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தவர் என்று வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரைச் சொல்ல வேண்டும். 1923, 24 முதல் 27 வரையில் தஞ்சையில் கல்யாண சுந்தரம் ஹை ஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது பச்சை, மஞ்சள், சிவப்பு அட்டையில் டெமி சைஸில் அவர்கள் நாவல்கள் ஒவ்வொன்றாக அப்பாவுக்குத் தெரியாமல் ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிப் படித்த நினைவிருக்கிறது. படித்துவிட்டு வீட்டுக்கு எடுத்துப் போனால் அப்பா சண்டை பிடிப்பாரென்று அப்போது மேல வீதியில் தெற்குக் கோடியில் இருந்த ஒரு லைப்ரரிக்கு இனாமாகப் புஸ்தகத்தைக் கொடுத்து விடுவேன். இப்படிப் படித்த நாவல்கள் என்று கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும், வஸந்த கோகிலம், பூரண சந்திரோதயம், விலாஸ்வதி, திகம்பர சாமியார், மேனகா இவை நினைவுக்கு வருகின்றன. ஒரு நாவல் கலைப் பிரக்ஞையுடன், சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன், விரலமான விஷயங்களையும்கூட அதிக விரஸம் தட்டாமல் எழுதுவதில் சிரத்தையுடன் எழுதிய வடுவூரார் உண்மையிலேயே இலக்கியப் பிரக்ஞை உடையவர் என்பதில் சந்தேகத்துக்கிடமேயில்லை.
ரெயினால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதினார் பெரும்பாலும் என்றாலும் அவர் விக்டர் ஹ்யூகோவின் Les Miserables என்கிற நாவலை அற்புதமாகத் தமிழில் தழுவி எழுதியிருக்கிறார். முதநூலைப் போலவே கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும் என்கிற நாவல் அமைந்திருப்பதாகச் சொன்னால் அதில் தவறவில்லை.
அதே போல கிரேக்க புராணக் கதையான Eros and Psyche கதையை வஸந்த கோகிலம் என்கிற நாவலாகக் செய்திருக்கிறார்.
இன்று தமிழில் சரித்திர நாவல்கள் ஏராளமாக எழுதப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் முன்னோடியாகக் கல்கியைக் கருதுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், இதே அளவில் இன்று எழுதப்படுகிற சரித்திர நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாக 1924-ல் வெளி வந்த வடுவூராரின் விலாஸவதி என்பதைத்தான் சொல்ல முடியும். அது வெளிவந்த சமயத்தில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டதுடன் படிக்கவும் பட்டது. மூன்று ஆண்டுகளில் ஐந்து பதிப்புகள் வந்ததாக ஒரு தகவல் படித்திருக்கிறேன்.
வடுவூராரின் ஆரம்பக் காலத்திய நாவல்கள் எல்லாம் மாதாந்திரப் பத்திரிகையாக வெளிவந்த மனோரஞ்சிதம் (அல்லது மனோரஞ்சனியா?) என்கிற பத்திரிகையில் வெளிவந்ததாகச் சொல்வார்கள். இந்தப் பத்திரிகையைப் பார்த்திருப்பதாக எனக்கு நினைவில்லை. அந்தப் பத்திரிகையை முன்மாதிரியாகக் கொண்டுதான் வை.மு. கோதைநாயகி அம்மாள் தனது ஜகன்மோகினி நாவல் பத்திரிகையைத் தொடங்கியதாகவும் சொல்வார்கள்.
இன்னொரு விஷயமும் அப்போது பரவலாகப் பேசபட்ட விஷயம் நினைவுக்கு வருகிறது. வை.மு. கோதைநாயகியின் முதல் நாவலான வைதேகியின் முதல் பாதியை வடுவூரார் எழுதி, முன்மாதிரியாகத் தந்ததாகவும் அதைப் பின்பற்றி முடித்து விட்டு வெற்றிகரமாக வை.மு.கோ. துப்பறியும் நாவல்களிலிருந்து அவர் தனி பிராண்டான சமூக நாவல்களுக்கு நகர்ந்தார் என்றும் சொல்லுவார்கள்.
1930-ல் என்று எண்ணுகிறேன். பைகிராப்ட்ஸ் ரோடு கோடியில் மரினா பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே வேங்கடரங்கம் பிள்ளை தெரு பைகிராப்ட்ஸ் ரோடைச் சந்திக்கிற இடத்தில் இருந்த வீட்டை வாங்கி வடுவூரார் புதுப்பித்து வடுவூர் ஹவுஸ் என்று பெயரிட்டு கிரஹப் பிரவேசம் நடத்தியபோது, மாலையில் பாண்ட் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் சென்னையில் இருந்தேன். வீட்டைப் பார்த்து வைத்துக் கொண்டு ஒரு வாரம் கழித்து, அவரைப் பார்க்கப் போனேன். அந்த ஒரு தடவை மட்டுமே அவரை நான் சந்தித்திருக்கிறேன்.
என்ன பேசினோம் என்று நினைவில்லை. ஆனால், பேச்சு பூராவும் தன் பக்கத்தில் அவர் நாவல்களைப் பற்றியும், அவருடைய தழுவல் முறைகளைப் பற்றியும் அவர் நடையைப் பற்றிய வரையிலும்தான் என்று நான் நினைவு கூர்கிறேன். தன் நாவல்களில் பெரும் பகுதி தழுவல்கள்தான் என்று அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், மேனகாவும் திலோத்தமை என்று ஒரு ஐந்து அங்க நாடகமும் தன் சொந்த எழுத்து என்று சொல்லி எனக்கு திலோத்தமா ஒரு பிரதி அன்பளிப்பாக அளித்தார். அதை வெகுநாள் நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.
அதைத் தவிர அவர் பேசிய விஷயங்களிலே முக்கியமானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப்தில் தலைமுறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்கிற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித்தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். இந்தச் சரித்திர உண்மையில் இருந்த அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக ஆங்கிலத்தில் Long Missing Links என்று ஒரு 900 பக்க நூல் எழுதி அதைத் தன் சொந்தச் செல்விலேயே அச்சிட்டு விற்க முயன்றார். புஸ்தகம் விற்கவில்லை. அச்சுக்கும், பேப்பருக்கும் ஆன கடனை புதுசாக வாங்கிய வீட்டை விற்று அடைத்து விட்டு, பேசாமல் கிராமத்துக்குப் போய்விட்டார் என்று எண்ணுகிறேன். இந்தப் புஸ்தகமும் என்னிடம் வெகு நாள் இருந்தது.
‘காங்கிரஸ் கமலம்' அல்லது 'ஆணென்று அணைய அகப்பட்ட பெண் புதையல்' என்கிற நாவலை சுதேசமித்திரனில் தொடராக எழுதி வெளியிட்டார். இதுதான் பழைய வடுவூர் பாணியில் அவர் கடைசி முயற்சி என்று எண்ணுகிறேன். அதற்குப் பிறகு அவர் முப்பதுகளில் பழைய வேகத்தையோ சாதனையையோ எட்டவில்லை. மாசத்துக்கு ஒரு நாவல் என்று எழுதி, நாவலுக்கு நூறு ரூபாய் என்று கூலி வாங்கிக் கொண்டு ஏழெட்டு ஆண்டுகள் இருந்து பிறகு இறந்து விட்டார் என்று எண்ணுகிறேன்.
சேலம் பட்டுக் கரை வேஷ்டியும், காதில் டால் வீசும் வைரக் கடுக்கனும், நெற்றியில் ஒரு சிவப்பு ஸ்ரீசூர்ணக் கோடுமாகவும் நான் பார்த்த வடுவூர் துரைசாமி ஐயங்காரை என்னால் இன்றுகூட நினைவுகூர முடிகிறது. தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை; புரிந்து கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
— நன்றி - இலக்கியச் சாதனையாளர்கள் - க.நா.சு.