மின்வெளியின் விடுதலை அறிவிக்கை

விக்கிமூலம் இலிருந்து

மின்வெளியின் விடுதலை அறிவிக்கை[தொகு]

உலக அரசாங்கங்களே, சதையினாலும் இரும்பினாலும் ஆன தளர்ந்த அசுரர்களே, நான் மனத்தின் புதிய இல்லமான மின்வெளியினிலிருந்து வருகிறேன். கடந்த காலங்களின் பிரதிநிதிகளே, எதிர்காலத்தின் சார்பாகக் கூறுகிறேன், எங்கள் வழியில் குறுக்கிடாதீர்கள். எங்கள் உலகத்தில் உங்களுக்கு இடமில்லை. நாங்கள் கூடுமிடங்களில் உங்கள் அதிகாரம் செல்லுபடியாகாது.

எங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கிடையாது. அவ்வாறு ஒன்றை நாங்கள் ஏற்படுத்தப் போவதும் இல்லை. எனவே, விடுதலை தரும் அதீத சக்தியின் பெயரால் நான் உங்களிடம் பேசுகிறேன். நாங்கள் உருவாக்கும் இவ்வுலக சமுதாயம், நீங்கள் சுமத்தும் கட்டுப்பாடுகளுக்குப் பணியாது என இதன் மூலம் அறிவிக்கிறேன். எங்களை ஆள உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை; நாங்கள் விரும்பாத கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் வலிவும் உங்களுக்கு இல்லை.

அரசுகள் தாங்கள் ஆளும் குடிகளின் அனுமதியுடனே ஆட்சி உரிமையை பெறுகின்றன. அவ்வாறான எந்த அனுமதியும் நீங்கள் எங்களை கேட்கவில்லை; நாங்கள் அளிக்கவும் இல்லை. எங்களை ஆள நாங்கள் உங்களை அழைக்கவில்லை; எங்களை நீங்கள் அறியமாட்டீர்கள்; எங்கள் உலக வழமைகளும் உங்களுக்குத் தெரியாது. மின்னுலகம் உங்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. ஏதோ கட்டுமானப்பணி என்றெண்ணி அதனை உருவாக்கி விடலாம் என்று நினைக்காதீர்; அது உங்களால் முடியாது. இது இயற்கையின் பரிமாணம்; எங்களின் கூட்டு செயல்பாடுகளினாலேயே இது வளர்கிறது.

எங்கள் சீரிய நடவடிக்கைகளிலும், கலந்துரையாடல்களிலும், நீங்கள் ஈடுபட்டதில்லை; எங்கள் சந்தைகளின் வளங்களையும் நீங்கள் உருவாக்கவில்லை. எங்கள் கலாச்சாரத்தையோ, ஒழுங்குகளையோ, எழுதா விதிகளையோ நீங்கள் அறிய மாட்டீர்கள். உங்கள் சட்டங்களை விட சிறப்பாகவே இவை எங்கள் சமுதாயத்தின் நடவடிக்கைகளை சீர்ப்படுத்துகின்றன.

எங்கள் சமுதாயத்தில் உள்ள சிக்கல்களை தீர்க்க உங்கள் தலையீடு அவசியம் என்று கூறுகின்றீர்கள். இதன் அடிப்படையில் எங்கள் சுற்றுப்புறங்களை ஆக்கிரமிக்க முயலுகின்றீர்கள். இவற்றில் பலவும் சிக்கல்களே அல்ல. இருக்கும் சில பிரச்சினைகளிலும், எங்கெங்கு தவறுகள் உள்ளனவோ அவற்றை கண்டறிந்து, எங்கள் வழிமுறைகளினாலேயே அவற்றை தீர்த்துக் கொள்வோம். இத்தகைய ஆளுமை எங்கள் உலகத்தின் முறைமைகளின்படியே நடைபெறும்; உங்கள் உலக நடைமுறைகளின்படி அல்ல. எங்கள் உலகம் வேறுபட்டது.

மின்னுலகமானது பரிமாற்றங்கள், உறவுகள், மற்றும் எண்ணங்களினாலாகிய தகவல் தொடர்புவலையின் நிலையான அலையினாலாகியது. இவ்வுலகம் எங்கும் வியாபித்திருக்கிறது; எனினும் எந்த குறிப்பிட்ட இடத்திலும் இதனைக் காண முடியாது. து எங்கள் பருவுடல் வசிக்கும் இடங்களிலே இருப்பதில்லை.

யாரும் எங்களில் உலகினுள் நுழையலாம். இங்கு இனமோ பொருளாதார சக்தியோ, படை பலமோ, பிறந்த இடமோ எந்தவித கூடுதல் உரிமையையும் வழங்காது; தடையும் செய்யாது.

நாங்கள் உருவாக்கும் உலகத்தில், எங்கும் எவரும் தங்கள் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் தடையின்றி வெளியிடலாம். அக்கருத்துக்கள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதபடி தனிமையானவையாக இருப்பினும் அவை மட்டுப்படுத்தப்படும் என்று அஞ்ச வேண்டியதில்லை.

உடமை, வெளிப்பாடு, அடையாளம், மற்றும் பெயர்ச்சி முதலான உங்களின் சட்டத் தத்துவங்கள் எங்களுக்குப் பொருந்தாது. அவை உருப்பொருளை அடிப்படையாக கொண்டவை; இங்கு அத்தகு உருப்பொருள் ஏதும் இல்லை.

எங்களுக்கு உடல்சார்ந்த அடையாளங்கள் கிடையாது; எனவே உங்களைப் போல கட்டளைகளை பருவுடல்சார் கட்டாயங்களினால் செயல்படுத்த எங்களால் இயலாது. பொது ஒழுங்குகள், தன்னார்வப் பணிகள், பொதுநலம் ஆகியவற்றிலிருந்தே எங்கள் ஆளுமை உருப்பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். எம் அடையாளங்கள் உங்களின் பல்வேறு ஆட்சிப்புலங்களின் கீழும் வரலாம்; எனினும் எங்கள் பல்வேறு சமூகங்களும் ஒரே பொன்விதியை அடிப்படையாகக் கொண்டவை. இவ்வடிப்படையிலேயே எல்லாத் தீர்வுகளையும் நிர்மாணிக்க இயலும் என்பதே எங்கள் நம்பிக்கை. எனினும் நீங்கள் எங்கள் மீது திணிக்க விரும்பும் தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

அமெரிக்க நாட்டில் இன்று நீங்கள் தொலைதொடர்பு சீரமைப்புச் சட்டத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். இது உங்கள் அரசியலமைப்புச் சட்டத்தையே மறுதலிப்பதாக உள்ளது. ஜெ·பர்சன், வாஷிங்டன், மில், மேடிசன், டெடோவில், மற்றும் பிரேடிஸ் போன்ற உயர்ந்த மனிதர்களின் கனவுகளை அவமதிப்பதாக இது உள்ளது. இக்கனவுகள் எங்களில் புதிதாக உருப்பெற்றுக் கொண்டுள்ளன.

உங்கள் குழந்தைகளைக் கண்டே நீங்கள் அஞ்சுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் புலம்பெயர்ந்து குடியேறிய இடங்களில் அவர்கள் அவ்வூர்க் குடிமக்களாக உள்ளனர். இதனால் நீங்கள் எதிர்கொள்ளத் தயங்கும் பெற்றவர்களுக்கான கடமைகளை உங்களை ஆளுவோரிடம் ஒப்படைத்து விடுகிறீர்கள். தெய்வீகமானதாயினும், கீழ்த்தரமாயினும் எங்கள் கருத்துக்களும் தத்துவங்களும் நம்பிக்கைகளும் எண்ண வெளிப்பாடுகளும் பிரித்தறிய இயலாத முழுமையான தகவல் துளிகளின் பரிமாற்றத்தின் பகுதிகளேயாம். உறையவைக்கும் பனிக்காற்றிலிருந்து சிறகடிக்கும் தென்றலை எங்களால் பிரிக்க இயலாது.

சீனா, செருமனி, ·பிரான்சு, ரஷ்யா, சிங்கப்பூர், இத்தாலி மற்றும் அமெரிக்க நாடுகளில், பரவிவரும் சுதந்திரக் கிருமியை, மின்னுலகின் வாயிலில் தடுப்புச் சுவரெழுப்பித் துரத்திவிட முயன்று வருகிறீர்கள். இம்முயற்சிகள் குறுகிய காலங்களுக்குப் பயனளிக்கக் கூடும். எனினும் தகவல் துளிகளாலாகிய புதிய ஊடகம் இவ்வுலகெங்கிலும் பெருகி நீக்கமறப் பரவும்போது இ·தெதுவும் உதவாது.

அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும், நாளுக்குநாள் பின்தங்கி வரும் உங்கள் தகவல் தொழிற்கூடங்கள் தங்களுக்கு புத்துயிர் ஊட்ட உலகெங்கிலும் பேச்சினையே சொந்தம் கொண்டாடும் புதிய விதிகளை தோற்றுவிக்கும். இவ்விதிகள், இரும்பை விடவும் மகத்துவம் பொருந்திய புதிய பண்டத்திற்கான அடிப்படைகளை உருவாக்கும். எங்கள் உலகில் மனித மனம் உருவாக்கும் எதுவும் எந்த செலவுமின்றி எண்ணற்ற முறைகள் விநியோகிக்கப் படும். எண்ண வெளிப்பாடுகளை உலகெங்கும் தெரிவிக்க இன்று உங்களின் தொழிற்சாலைகள் தேவையில்லை.

இவ்வாறு தொடரும் உங்களின் அடிமைப்படுத்தும் எதிர்ப்பு நடவடிக்கைகள், எங்களை முன்னாளில் உண்மை நிலையறியாது தொலைவிலிருந்து ஆட்சி செலுத்திய சக்திகளை ஒதுக்கிய விடுதலை விரும்பிகளையும் சுயமரியாதை நாடிய தலைவர்களையும் பின்பற்ற வைக்கின்றன. எங்களின் பருவுடல்கள் தொடர்ந்து உங்கள் ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்தாலும், எங்கள் மெய்யுயிர் உங்கள் முடிகளுக்கு கட்டுப்படாது என அறிவிக்கின்றோம். எங்கள் எண்ணங்களை எவரும் கட்டுப்படுத்தாதபடி நாங்கள் இவ்வுலகெங்கிலும் பரவுவோம்.

புதியதொரு மனத்தின் நாகரிகத்தை நாங்கள் மின்வெளியில் உருவாக்குவோம். இது உங்கள் அரசாங்கங்கள் முன்னெப்போதும் உருவாக்கிய உலகைவிட நேர்மையும் மனிதநேயமும் பொருந்தியதாக விளங்குமாக!