உள்ளடக்கத்துக்குச் செல்

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/தம்பிக்குப் பெண் பார்த்த அண்ணன் கதை

விக்கிமூலம் இலிருந்து
420041மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் — தம்பிக்குப் பெண் பார்த்த அண்ணன் கதைவிந்தன்

20

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

தம்பிக்குப் பெண் பார்த்த அண்ணன் கதை

"விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன இருபதாவது கதையாவது:

'கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ஏறக்குறைய இரண்டு கிராமங்களுக்கு அதிபதிகளாயிருந்த இரு சகோதரர்கள் இளையான்குடியிலே இருந்தார்கள். அவர்களின் ஒருவன் பெயர் ராமன்; இன்னொருவன் பெயர் லட்சுமணன். இருவரும் இரட்டை யராகப் பிறந்தவர்களாதலால் அவர்களுடைய பெற்றோர் அவர்களுக்கு அந்தப் பெயர்களைச் சூட்டியிருந்தார்கள். இதைத் தவிர, அந்த ராமனுக்கும் இந்த ராமனுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது; அதே மாதிரி அந்த லட்சுமணனுக்கும் இந்த லட்சுமணனுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.

இப்படியாகத்தானே பிறந்து வளர்ந்த ராமலட்சுமணர்கள் இருவரும் ஏடிடி-27 நெற்பயிர்போல் வளர்ந்து வருங் காலையில், தகப்பனார் மண்டையைப் போட, அவரைத் தொடர்ந்து தாயாரும் மண்டையைப் போட, 'இனி உனக்கு நானே துணை; எனக்கு நீயே துணை!’ என்று அண்ணன் தம்பிகள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வருவாராயினர்.

ஏதும் இல்லாதவர்களையே 'ஆண் பிள்ளை’ என்ற ஒரே காரணத்துக்காகச் சுற்றிச் சுற்றி வரும் ‘பெண்ணைப் பெற்ற பாவ'த்தைச் செய்தவர்கள், இரண்டு கிராமங்களுக்கு அதிபதிகளாயிருந்த இவர்களைச் சுற்றிச் சுற்றி வராமல் இருப்பார்களா? வந்தார்கள். அதன் காரணமாக ஜானகி என்ற கன்னிகைக்கும், ராமன் என்ற காளைக்கும் வெகு சீக்கிரத்திலேயே வில்லை முறிக்காமல், விசுவாமித்திரரைத் தேடாமல் கலியாணமாயிற்று. அன்றிருந்தே 'தம்பி லட்சுமணனுக்கும் கலியாணம் பண்ணிவிடு!’ என்று அந்த ஊராரில் சிலரும், 'பண்ணாதே, சொத்தில் பங்கு கேட்க வந்துவிடுவான்!’ என்று இன்னும் சிலரும் ராமனுக்குத் தூபம் போட்டு வருவாராயினர்.

‘லட்சுமணனுக்கு இல்லாத கவலை அவர்களுக்கு ஏன்?' என்று நீங்கள் கேட்பீர்கள். அவர்களில் சிலருக்கு, 'பொழுது போக வேண்டுமே!’ என்ற கவலை; இன்னும் சிலருக்கு, ‘அதன் காரணமாகவாவது அந்த அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வராதா? அதை நாம் கண் குளிரப் பார்க்க மாட்டோமா?’ என்ற ஆசை!

ஊரார் இங்ஙனமிருக்க, தம்பி லட்சுமணனோ தன் கலியாணத்தைப் பற்றித் தன்னுடைய அண்ணன் தன்னிடம் சொல்லும்போதெல்லாம், 'ஆயிரம் ஆண்கள் சேர்ந்து ஒரே இடத்தில் இருந்தாலும் இருக்கலாம்; இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு நாளும் இருக்கமுடியாது. எனக்கு ஏன் இப்போது கலியாணம்?’ என்று சொல்லித் தட்டிக் கழித்து வருவானாயினன்.

அண்ணனும் அதற்குமேல் அவனை வற்புறுத்தவில்லை; வற்புறுத்த அவன் மனைவியும் அவனை விடவில்லை. ‘அதுவே கலியாணம் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லும் போது நீங்கள் ஏன் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்? பேசாமல் இருங்கள்!' என்று அவள் அவனை அடக்கி வைப்பாளாயினள்.

அதற்கும் காரணம் இல்லாமற் போகவில்லை. தம்பிக்குக் கலியாணம் என்று ஒன்று ஆனால், எப்படியும் பாகப் பிரிவினை என்று ஒன்று நடக்கும். அப்புறம் அவனுக்கு ஒரு கிராமம் இவனுக்கு ஒரு கிராமம் என்று பிரியும். அதற்கு மேல் தன்னை 'இரண்டு கிராமங்களுக்குச் சொந்தக்காரனின் மனைவி' என்று சொல்லி அவள் தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் பெருமையடித்துக் கொள்ள முடியுமா? ஒரே ஒரு கிராமத்துக்குச் சொந்தக்காரனின் மனைவி என்றுதானே சொல்லிக் கொள்ள முடியும்?-அந்தக் கவலை அவளுக்கு!

   வீட்டுக்காரிக்கு அந்தக் கவலை என்றால் ஊராருக்கோ தாங்கள் என்ன சொல்லியும் அந்தக் குடும்பம் இன்னும் தாங்கள் சிரிக்க இடம் கொடுக்காமல் இருக்கிறதே என்று ஓயாக் கவலை! அந்தக் கவலையைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர்கள் லட்சுமணனைச் சந்திக்கும்போதெல்லாம் 'அது என்னடாப்பா, அது? அண்ணன் என்ன சொல்லியும் நீ எனக்குக் கலியாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயாமே? அவன் மட்டும் கலியாணத்தைப் பண்ணிக் கொண்டு 'ஜாம், ஜாம்’ என்று வாழவேண்டும்; நீ வெந்ததைத் தின்றுவிட்டு வெறும் பாயில் கிடந்து உருள வேண்டுமா? நன்றாயிருக்கிறதே நியாயம்! இரண்டு பெண்கள் சேர்ந்து இருக்க முடியாது என்பதற்காக நீ இன்னும் எத்தனை நாட்கள் இப்படி இருந்து கொண்டிருக்க முடியும்? இருக்கவே இருக்கிறது, ஒன்றுக்கு இரண்டு கிராமங்கள்; நீயும் அவனைப் போல் ஒரு கலியாணத்தைப் பண்ணிக்கொண்டு, உனக்கென்று ஒரு கிராமத்தைப் பிரித்து எடுத்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் போச்சு!' என்று சொல்லி வந்தார்கள். அவனோ அதைக் கேட்டுக்கொண்டு சும்மா வருவதில்லை; 'ஏன், எங்கள் வீடு ஒரே வீடாயிருப்பது உங்களுக்குப் பிடிக்க வில்லையா? இரண்டு வீடுகளானால்தான் பிடிக்குமா?' என்று அவர்களையே திருப்பிக் கேட்டுவிட்டு வருவானாயினன். 

இவன் இப்படிக் கேட்டுவிட்டு வந்தால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? 'அப்படியா சமாசாரம்?’ என்று அடுத்தாற் போல் அவன் அண்ணனை அவர்கள் ஆத்திரத்தோடும் ஆவலோடும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவன் வந்ததும், ‘டேய், ஜாக்கிரதை! 'பங்காளியையும் பனங்காயையும் பதம் பார்த்து வெட்டு’ என்பார்கள்; நீ உன் தம்பியை அந்த மாதிரி பதம் பார்த்து வெட்டாவிட்டாலும் அவனுக்குக் கலியாணத்தையாவது பண்ணாமல் இரு. பண்ணினாயோ, பின்னால் உனக்குத்தான் கஷ்டம்!' என்பார்கள். அவனோ அவர்களுக்கு ஏற்றாற்போல், ‘பெரியவர்கள் சம்பாதித்து வைத்துவிட்டுப் போயிருக்கும் சொத்து; எத்தனையோ தலைமுறைகளாக அப்படியே இருந்துகொண்டிருக்கிறது. இவன் கலியாணத்தால் அது பிரிவானேன் என்றுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!' என்று சொல்லி விட்டு வருவானாயினன்.

அவன் அப்படி; இவன் இப்படி. 'இதற்குமேல் அந்த வீட்டை இரண்டாக்க என்ன செய்யலாம்?' என்று ஊரார் அல்லும் பகலும் அனவரதமும் யோசித்தார்கள், யோசித்தார்கள், அப்படி யோசித்தார்கள். கடைசியில் ஒரு பேஷான யோசனை அவர்களுக்குத் தோன்றிற்று. அதற்காக அவர்கள் ராமனையும் எதிர்பார்க்கவில்லை; லட்சுமண னையும் எதிர்பார்க்கவில்லை. தங்களுக்குத் தாங்களே பேசிக் கொண்டார்கள். என்னவென்று?.....

‘உனக்குச் சங்கதி தெரியுமோ?' என்றாள் ஒருத்தி.

‘தெரியாதே!’ என்றாள் இன்னொருத்தி.

‘ஜானகி இருவருக்கும் தேவி, இரவில் மட்டும் பத்தினியாயிருக்கிறாளாமே?' என்றாள் மற்றொருத்தி.

‘இது என்னடியம்மா, புதுக் கதையாயிருக்கிறது! ‘ஐவருக்கும் தேவி, அழியாத பத்தினி' என்று திரெளபதியைச் சொல்லத்தான் நான் கேட்டிருக்கிறேன். ஜானகியை அப்படி யாரும் சொல்லமாட்டார்களே? அவளுக்கு ராமன் என்றால் ராமன்தானாமே?’ என்றாள் மற்றும் ஒருத்தி.

‘அது அந்த ஜானகிக்கு! இந்த ஜானகிக்கு ராமன் இல்லாவிட்டால் லட்சுமணனாம்; லட்சுமணன் இல்லா விட்டால் ராமனாம்!’ என்றாள் அவள்.

‘சரிதான், அதனாலேதான் அந்தப் பயல் எனக்குக் கலியாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான் போலிருக்கிறது!' என்றாள் இவள்.

இன்ன இடம், இன்ன நேரம் என்று இல்லாமல் ஊர் முழுவதும் எதிரொலித்த இந்த ஊர் வம்பைக் கேட்டதுதான் தாமதம், 'இனி பொறுப்பதில்லை தம்பி, எரிதழல் கொண்டு வா!’ என்று துரியோதனன் சபையில் துள்ளி எழுந்த பீமன் போல் லட்சுமணன் துள்ளி எழுந்தான். அதுதான் சமயமென்று அவனைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்த ஒரு 'பெண்ணைப் பெற்ற பாவ'த்தைச் செய்தவர் அவனிடம் தம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்தார். அப்போதிருந்த ஆத்திரத்தில், ‘என்னிடம் இதை ஏன் கொடுக்கிறீர்கள்? என் அண்ணனிடம் கொண்டு போய்க் கொடுங்கள்!' என்று மரியாதைக்காக ஒரு வார்த்தை சொல்லக்கூட அவனுக்குத் தோன்றவில்லை; தானே அதை அவசர அவசரமாக வாங்கிக் கொண்டு அண்ணனைத் தேடி 'ஓடு, ஓடு’ என்று ஓடினான்.

‘என்ன?’ என்றான் ராமன்; 'ஜாதகம்’ என்றான் லட்சுமணன்.

“எதற்கு?' என்றான் அவன்; ‘என் கலியாணத்துக்கு!’ என்றான் இவன்.

‘பண்ணிக்கொள்வதென்று முடிவு செய்துவிட்டாயா?' என்றான் ராமன்; ‘ஆமாம், முடிவு செய்துவிட்டேன்!’ என்றான் லட்சுமணன்.

‘ஏன்?' என்றான் அவன்; 'என்னால் அண்ணிக்கு மாசு கற்பிக்கப்படுவதை நான் விரும்பவில்லை!' என்றான் இவன்.

'அந்தக் கவலை எனக்கும் அவளுக்கும் இல்லாதபோது உனக்கு மட்டும் ஏன்?' என்றான் ராமன்; 'என்னால் அதைத் தாங்க முடியவில்லை!' என்றான் லட்சுமணன்.

அதற்கு மேல் அவனுடைய கலியாணத்தைத் தள்ளிப் போடுவது முடியாத காரியம் என்பதை உணர்ந்த ராமன் அவன் கொடுத்த ஜாதகத்தைக் கொண்டு போய் ஊர் ஜோதிடர் ஒருவரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு, 'படு பாதகமான ஜாதகம் இது; இந்தப் பெண்ணை எந்த ஜாதகன் கலியாணம் செய்து கொண்டாலும் கலியாணம் செய்து கொண்ட அன்றைக்கே கண்ணை மூடி விடுவான்!' என்று சொல்ல, 'அப்படியா சமாசாரம்? இந்தாருங்கள், பத்து ரூபாய்க்கு இருபது ரூபாயாக வைத்துக் கொள்ளுங்கள்!' என்பதாகத்தானே ராமன் பரம சந்தோஷத்துடன் அவரிடம் இருபது ரூபாயைக் கொடுத்துவிட்டு வருவானாயினன்.

வீட்டுக்கு வந்ததும், 'ஜாதகம் எப்படி?’ என்று ஜானகி கேட்க, 'படு பிரமாதம்!’ என்று ஜோதிடர் சொன்னதை அவன் அப்படியே அவளிடம் சொல்ல, ‘அந்தப் பெண்ணையே உங்கள் தம்பிக்குக் கலியாணம் செய்து வைத்துவிடுங்கள். அது கண்ணை மூடியதும் அவளுக்கு ஏதாவது கொடுத்து அவளை அவள் தாய் வீட்டுக்கே அனுப்பி வைத்துவிடலாம். சொந்தம் பிரிந்தாலும் சொத்து பிரியாது!’ என்பதாகத்தானே அவள் சொல்ல, ‘அதுதான் சரியான யோசனை, அதுதான் சரியான யோசனை!' என்று அன்றே அவன் தம்பியின் கலியாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை யெல்லாம் விழுந்து விழுந்து செய்வானாயினன்.

ஆயிற்று; கலியாணமும் ஆயிற்று. பந்தி போஜனம் முடிந்ததும் பெண் வீட்டார் பிள்ளையை அழைத்துக் கொண்டு தங்கள் ஊருக்குப் புறப்படுவாராயினர். அவர்களை வழி கூட்டி அனுப்பி வைத்துவிட்டு, 'தம்பி இறந்தான் என்ற சந்தோஷச் செய்தி அங்கிருந்து எப்போது வரும், எப்போது வரும்?’ என்று ராமன் வாசலிலேயே காத்துக் கொண்டிருக்க, அவன் இல்லத்தரசி ஜானகியோ அந்தச் செய்தி வந்ததும் வாய் இனிக்க, மனம் இனிக்கக் குடிப்பதற்காக உள்ளே பால் பாயசம் காய்ச்சுவாளாயினள்.

இந்த விதமாகத்தானே எல்லாம் தயாராகிக் கொண்டிருக்க, வாசலைப் பார்த்துக்கொண்டிருந்த ராமன் திடீரென்று, 'ஜானகி! அடி, ஜானகி!’ என்று கத்த, ‘என்னங்க, அங்கிருந்து ஆள் வந்தாச்சா?’ என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டே ஜானகி ஓடி வர, அதற்குள் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்ட அவன், ‘மார்பை அடைக்குதடி, கொஞ்சம் தண்ணிர் கொண்டு வாடி?’ என்று ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டே கீழே விழுவானாயினன்.

‘கடவுளே! இது என்ன சோதனை?' என்று அதுவரை நினைக்காத கடவுளை அவசர அவசரமாக நினைத்துக் கொண்டு அவள் உள்ளே ஓடித் தண்ணீர் கொண்டு வர, அதை வாங்கி ஒரு வாய் குடித்த ராமன், 'தம்பி லட்சுமணா! நீ கண்ணை மூடுவாய் என்று நினைத்த நானே கண்ணை மூடுகிறேண்டா!' என்று முனகிக் கொண்டே தன் கண்ணை மூடித் தன்னுடைய மனைவியைத் தன் மேல் விழுந்து 'கதறு, கதறு’ என்று கதற வைத்துவிட்டுப் போவானாயினன்.

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘மனிதன் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று ஏன் நினைக்கிறது?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'தான் மனிதல்ல, தெய்வம் என்பதைக் காட்டிக்கொள்ளத்தான்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின் மேல் ஏறிக்கொண்டு விட்டது காண்க... காண்க... காண்க.......