மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/நாய் வளர்த்த திருடன் கதை

விக்கிமூலம் இலிருந்து

19

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

நாய் வளர்த்த திருடன் கதை

"மறுபடியும் விக்கிரமாதித்தர் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன பத்தொன்பதாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'தாலியறுத்தான் பட்டி, தாலியறுத்தான் பட்டி’ என்று ஒரு பட்டி உண்டு. அந்தப் பட்டியிலே 'கன்னக்கோல் கந்தப்பன், கன்னக்கோல் கந்தப்பன்’ என்று ஒரு திருடன் உண்டு. அந்தத் திருடனாகப்பட்டவன் ‘கறுப்பன், கறுப்பன்’ என்று ஒரு நாயை வளர்த்து வந்தான். அது அவனை விட்டு ஒரு கணம்கூடப் பிரியாது; அதே மாதிரி அவனும் அதை விட்டு ஒரு கணம் கூடப் பிரியமாட்டான். ஆனால், திருடப்போகும்போது மட்டும் அவன் அதைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போவதில்லை; தன்னைத் தொடர்ந்து வந்தாலும் அதை விரட்டிக் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டுத்தான் போவான்.

இப்படியாகத்தானே கந்தப்பனும், கறுப்பனும் இருந்து வருங்காலையில், ஒரு நாள் இரவு அவன் வழக்கம்போல் திருடப் போக, நாயும் வழக்கம்போல் அவனைத் தொடர்ந்து போக, 'போடா கறுப்பா, போ!’ என்று அவனும் அதை வழக்கம்போல் விரட்டிக்கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டுப் போவானாயினன்.

போன இடத்தில் அவன் தன் வேலையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு வீடு திரும்ப, அது காலை போலீசார் இருவர் அவனைப் பார்த்து விட, அவர்களைக் கண்டதும் அவன் பாய்ந்து ஓட, அவனைத் தொடர்ந்து அவர்களும் பாய்ந்து ஓடுவாராயினர்.

சந்து பொந்து, மூலை முடுக்கெல்லாம் புகுந்து புகுந்து ஓடிய கந்தப்பன், கடைசியாக ஒரு புதருக்குப் பின்னால் பதுங்கிக் கொள்ள, போலீசார் அவனைக் காணாமல் நின்று சுற்றுமுற்றும் பார்க்க, அதுகாலை கந்தப்பனைத் தேடிக் கொண்டு வந்த கறுப்பனாகப்பட்டது அவன் பதுங்கிக் கொண்டிருந்த புதரை எப்படியோ கண்டுபிடித்து, வாலை ‘ஆட்டு, ஆட்டு’ என்று ஆட்டிக்கொண்டே அதைச் சுற்றிச் சுற்றி வர, அதைப் பார்த்த போலீஸ்காரர்களில் ஒருவன், ‘அந்த நாய் கந்தப்பனின் நாய்போல இல்லையா?' என்று தன்னுடன் வந்திருந்த இன்னொரு போலீஸ்காரனைக் கேட்க, 'ஆமாம், அவனுடைய நாயேதான்!' என்று அவன் சொல்ல, 'அப்படியானால் சந்தேகமேயில்லை; அவன் அங்கேதான் இருக்கிறான்!' என்று இருவரும் அந்தப் புதரை நோக்கிப் பாய்ந்து செல்ல, ‘என் சோற்றைத் தின்று வளர்ந்த நாய், கடைசியில் என்னையே காட்டிக் கொடுத்துவிட்டதே!’ என்று கந்தப்பன் பொருமிக் கொண்டே மீண்டும் அங்கிருந்து ஓட எத்தனிக்க, அதற்குள் போலீசார் அவனை வளைத்துப் பிடித்து ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்வாராயினர்.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘நாய் வளர்த்தது யார் குற்றம்? திருடனின் குற்றமா, நாயின் குற்றமா?' என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'திருடனின் குற்றந்தான்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின் மேல் ஏறிக்கொண்டு விட்டது என்றவாறு... என்றவாறு... என்றவாறு...