மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/நஞ்சுண்டகண்டன் கதை
பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன
நஞ்சுண்டகண்டன் கதை"விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன பன்னிரண்டாவது கதையாவது:
‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! நகரத்துக்குப் புதியவர்கள் யாராவது வந்து, 'எந்தத் தெரு எங்கே இருக்கிறது?’ என்று வழி கேட்டால்கூடத் தெரிந்தாலும் தெரியாதென்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டுப் போகும் எத்தனையோ புண்ணியவான்கள் இந்த நாட்டிலே இல்லையா? அந்தப் புண்ணியவான்களிலே ஒருவனாகத்தான் நம்பியும் முதன் முதலில் இருந்து வந்தான். அப்படி இருந்து வந்தவன், திடீரென்று ஒரு நாள், 'நானும் சேவை செய்யப் போகிறேன்!' என்று கிளம்ப, 'எதற்கு, யாருக்கு?’ என்று அவன் நண்பன் நஞ்சுண்டகண்டன் திடுக்கிட்டுக் கேட்க, 'தமிழுக்கு, தமிழனுக்கு!' என்பதாகத் தானே அவன் மார் தட்டிச் சொல்ல, 'செய்யப்பா, செய்! அதுதான் இப்போது எல்லாத் தொழிலையும்விட லாபகரமான தொழிலாயிருக்கிறது!' என்பதாகத்தானே இவன் அவனை ‘ஊக்கு, ஊக்கு' என்ற ஊக்குவிக்க, 'தொழில் என்று சொல்லாதே; தொண்டு என்று சொல்!' என்று அவன், தான் புதிதாகக் கற்றத் தூய தமிழில் சொல்லிக் குறுக்கிட, 'அந்தத் தொழில் ரகசியமெல்லாம் எனக்குத் தெரியாதப்பா!’ என்று இவன் ஒரு கைக்கு இரு கைகளாக விரித்து வைப்பானாயினன்.
‘கிடக்கிறான்!’ என அத்துடன் அவனை விட்டுவிட்டு, நம்பியாகப்பட்டவன் எங்கேயோ அவசர அவசரமாகச் செல்ல, 'எங்கே போகிறாய்?' என நஞ்சுண்டகண்டன் கேட்க, 'தமிழனைத் தட்டி எழுப்பும் தமிழ்ப் பித்தனின் பேச்சைக் கேட்கப் போகிறேன்!' என அவன் சொல்ல, 'துங்கும் தமிழனல்லவா அந்தப் பேச்சைக் கேட்டு எழுந்திருக்க வேண்டும்? தூங்காத தமிழன் அதைக் கேட்டு என்ன செய்யப் போகிறான்?' என இவன் ஒரு வினா எழுப்ப, 'ஓ, நான் துங்கவில்லையா? அது இப்போதுதான் என் ஞாபகத்துக்கு வருகிறது!’ என அவன் இவனுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்வானாயினன்.
அதுதான் சமயமென்று, 'அப்பா, நம்பி! சேவை என்றால் இந்தக் காலத்தில் பிறர் பேசுவதைக் கேட்கப்போவது சேவையல்ல; நீயே பேசுவதுதான் சேவை. அதிலும் சும்மா பேசுவது சேவையாகாது; ஊரில் பெரிய மனிதர்கள் என்று பெயரெடுப்பதற்காக அவ்வப்போது கூட்டம் போடும் சிலரிடம் ஐம்பதோ, நூறோ முன் பணமாக வாங்கிக் கொண்டு பேசுவதுதான் சேவையாகும்!' என்று நஞ்சுண்ட கண்டன் சற்றே சேவையைப் பற்றி விளக்க, 'அதைக் கற்றுக்கொள்ளும் வரையிலாவது நான் கூட்டங்களுக்குப் போகவேண்டாமா?' என்று நம்பி கேட்க, ‘அவசியம் போகத்தான் வேண்டும்; அதுவரை வேண்டுமானால் போய் வா!’ என்று இவன் அவனை வாழ்த்தி, வழி கூட்டி அனுப்பி வைப்பானாயினன்.
இப்படியாகத்தானே பல கூட்டங்களுக்குப் போய் வந்ததன் காரணமாகத்தானோ என்னவோ, நம்பியாகப்பட்டவன் எதற்கெடுத்தாலும் எப்போது பார்த்தாலும், ‘என் மொழி தமிழ் என்பேன்; என் இனம் தமிழ் இனம் என்பேன்; என் அகம் தமிழ் அகம் என்பேன்!' என வீராவேசத்துடன் மார்பை முன்னால் தள்ளிக்கொண்டு முழங்க, ‘இதென்னடா, வம்பாய்ப் போச்சு!' என நினைத்த நஞ்சுண்டகண்டன், ‘யார் அப்பா இல்லை என்று சொன்னது? உன் மொழி தமிழ்தான்; உன் இனம் தமிழ் இனம்தான்; உன் அகம் தமிழ் அகம்தான்!' எனச் சந்தேகத்துக்கு இடமின்றிச் சொல்ல, 'ஓ, என் மொழி தமிழ்தானா? என் இனம் தமிழ் இனம்தானா? என் அகம் தமிழ் அகம்தானா?' என நம்பியாகப்பட்டவன் அவற்றை நினைவுகூர்ந்து அக்கணமே அமைதியுறுவானாயினன்.
ஆனால் அந்த அமைதியாகப்பட்டது அப்படியே நீடித்ததா என்றால், அதுதான் இல்லை. ஒரு நாள் நம்பியாகப் பட்டவன் வழக்கம்போல் தூங்காமல் அப்படியும் இப்படியுமாகத் தன் அறையிலேயே பின்னால் கையைக் கட்டியபடி ஏறு நடை போட்டுக் கொண்டிருக்க, அவன் மனைவி சுடர்க்கொடி யாகப்பட்டவள், ‘ஏன் இன்னும் தூங்காமல் இருக்கிறீர்கள்?’ என்று ஒன்றும் புரியாமல் அவனைக் கேட்க, ‘நான் தூங்கினால் இந்தி அரக்கி வந்து தமிழை அழித்துவிடுவாள்; அதனால்தான் தூங்காமல் இருக்கிறேன்!’ என்று அவன் சொல்ல, அவள் சந்தேகக் கண் கொண்டு அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘உங்களுக்கென்ன, பைத்தியமா பிடித்திருக்கிறது? இந்தி அரக்கியாவது, வந்து தமிழை அழிப்பதாவது? ஆங்கில அரக்கன் வந்து அத்தனை வருஷங்கள் இருந்தானே, அவனால் தமிழ் அழிந்தா விட்டது? பேசுவதற்கு விஷயம் வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள் அவ்வப்போது ஏதாவது ஒரு 'சீசன் பிரச்னை'யைக் கிளப்பி விட்டுக் கொண்டே இருப்பார்கள். அது அவர்கள் தொழில். அந்த இழவெல்லாம் குடும்பம், குழந்தை என்று இருக்கும் உங்களுக்கு ஏன்? பேசாமல் தூங்குங்கள்!' என்று சொல்ல, ‘உனக்குத் தெரியாது, சுடர்க்கொடி! இந்தி அரக்கி இப்போது நம் வாசலில் வந்து நின்று கொண்டிருக்கிறாள்; அவளை விரட்டும் வரை நான் தூங்கேன், தூங்கேன், தூங்கேன்!' என்று அவன் மீண்டும் ஒரு முறைக்கு மும்முறையாக முழங்க, ‘இதென்ன சோதனை? இவர் எதைப் பார்த்துவிட்டு இப்படிச் சொல்கிறாரோ, என்னவோ? எதற்கும் வாசலையாவது போய்ப் பார்த்துவிட்டு வருவோம்!’ என்று அவள் வாசலுக்கு ஓட, அந்த நேரத்தில் ஏதோ காரியமாக அந்த வழியே வந்த நஞ்சுண்டகண்டன் அவளைப் பார்த்துவிட்டு, ‘என்ன சங்கதி?’ என்று வினவுவானாயினன்.
‘என்னத்தைச் சொல்வேன், நான்? இந்தி அரக்கி வந்து வாசலில் நிற்கிறாளாம்; அவளை விரட்டும்வரை அவர் துரங்கப் போவதில்லையாம்!' என அவள் கலங்கிய கண்களுடன் சொல்ல, 'அடப் பாவி! தூங்கிக்கொண்டே முழங்க வேண்டிய முழக்கமல்லவா அது? என சொல்லிக் கொண்டே அவன் அவளைத் தொடர்ந்து வந்து, 'என்ன நம்பி, என்ன?' எனக் கேட்க, 'கொண்டு வா, இந்தி அரக்கியை!’ என அவன் கைதேர்ந்த அரசியல்வாதியைப் போலவே கையையும் காலையும் ஆட்டிக் கூச்சல் போடுவானாயினன்.
அந்தக் கூச்சலைக் கேட்டுத் தூங்கிக் கொண்டிருந்த அவன் குழந்தைகள் இரண்டும் அலறி எழுந்து அழ, ‘விஷயம் விபரீதமாகப் போய்விட்டதே!' என்று ஒரு கணம் யோசித்த நஞ்சுண்டகண்டனாகப்பட்டவன், மறுகணம் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாய், மேஜையின்மேல் இருந்த ஒரு காகிதத்தைச் சட்டென்று எடுத்து, அதில் அவசர அவசரமாக இந்தி அரக்கியைப்போல் ஒரு படம் வரைந்து, ‘இதோ கொண்டு வந்துவிட்டேன், இந்தி அரக்கியை!' என்று நம்பியாகப்பட்டவனிடம் நீட்ட, ‘ஹஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!’ என்று சிரித்துக் கொண்டே அவன் அதை வாங்கி தீக்கு இரையாக்கிவிட்டு, 'ஒழிந்தாள் இந்தி அரக்கி! எங்கே எனக்கு வெற்றி விழா?' என்று எக்காளத்தோடு கேட்க, ‘கொண்டாடப்படும்!' என்றான் நஞ்சுண்டகண்டன்.
'வீர வழிபாடு?‘
'நடத்தப்படும்!'
‘பொன்னாடை?'
'போர்த்தப்படும்!'
‘சிலை?'
‘வைக்கப்படும்!’
‘எல்லாவற்றுக்கும் 'படும், படும், படும்தானா!' என நம்பி நம்பிக்கையிழந்து கேட்க, 'ஆமாம்; படும், படும், படும்!' என நஞ்சுண்டகண்டன் அவனைத் தட்டிப் படுக்க வைத்துவிட்டு, 'அவரவர்கள் சொந்தச் செலவில் தேடிக் கொள்ளும் கெளரவங்களை யெல்லாம் ஊரார் செலவில் தேடிக்கொள்ள வேண்டும் என இந்த எல். டி. சி. நினைத்தால் முடியுமா?’ என வெளியே நடக்க, குழந்தைகளைத் தட்டித் தூங்க வைத்துக்கொண்டிருந்த சுடர்க்கொடியாகப் பட்டவள், 'இவருக்கு என்ன அண்ணா? எனக்குப் பயமாயிருக்கிறதே!' என அழுது புலம்ப, 'வேறென்ன, பைத்தியம்தான்!' என அவன் மனம் வெதும்பிச் சொல்வானாயினன்.
இந்த விதமாகத்தானே அரசியல்வாதிகளின் வெறித்தனமான பேச்சுக்கு இரையாகி நொடித்துப்போன எத்தனையோ குடும்பங்களில் ஒன்றாக நம்பியின் குடும் பமும் ஆக, அதைக் கண்டு மனம் பொறாத நஞ்சுண்ட கண்டன், அந்தக் குடும்பத்தையும் தானே மேற்கொண்டு நடத்துவானாயினன்.
‘இப்படி எத்தனை நாட்கள் அண்ணா, உங்களால் எங்களைக் கட்டிக் காக்க முடியும்?’ என்று ஒரு நாள் சுடர்க் கொடியாகப்பட்டவள் கேட்க, ‘எனக்கென்ன, பெண்டாட்டியா பிள்ளையா? இருப்பது ஒரே பெட்டி, ஒரே படுக்கை; அவற்றையும் இங்கே கொண்டு வந்து போட்டு விட்டால் இப்போது நான் இருக்கும் அறையின் வாடகையும் மிச்சம்!' என்று அவன் தன் பெட்டியையும் படுக்கையையும் கொண்டு வந்து அங்கே போட்டுவிட்டு, 'உன்னுடைய குழந்தைகள் தலையெடுக்கும் வரை, என்னால் முடிந்த வரை உனக்கு நான் உதவுகிறேன்; நீயும் தையல் மெஷினைக் கொஞ்ச நாட்களுக்குக் கட்டிக்கொண்டு அழு. அதற்குப் பின் உன் பாடு, குழந்தைகள் பாடு!' என்று சொல்ல, பிறந்தகம் என்று ஒன்று இல்லாத சுடர்க்கொடியும் 'சரி' என்று அதற்குச் சம்மதிப்பாளாயினள்.
இந்த விதமாகத்தானே நம்பியாகப்பட்டவனை மனநோய் மருத்துவ விடுதியில் சேர்த்துவிட்டு, அந்தக் குடும்பத்தை நஞ்சுண்டகண்டனாகப்பட்டவன் நடத்திவருங்காலையில், பிறர் வாழ்ந்தாலும் பொறுக்காத, கெட்டாலும் தாங்காத ஈனப் பிறவிகள் சில ஒரு நாள் குழாயடியில் ஒன்று கூடி, சுடர்க்கொடியின் வீட்டைச் சுட்டிச் சுட்டிக் காட்டி ஏதோ பேச, 'அது என்ன பேச்சு?' என்பதற்காகத்தானே அவளும் அவனும் கவனிப்பாராயினர்.
‘தெரியுமா, சேதி?' என்றது அந்த ஈனப் பிறவிகளில் ஒன்று.
‘தெரியுமே! அந்த நஞ்சுண்டகண்டனுக்கும் சுடர்க் கொடிக்கும் ரொம்ப நாளாகவே உறவாம்; அவர்கள் இருவரும் சேர்ந்துதான் அந்த நம்பிக்கு ஏதோ மருந்து வாங்கிக் கொடுத்து அவனைப் பைத்தியமாக்கி விட்டார்களாம்!' என்றது இன்னொன்று.
'அதுதானே பார்த்தேன், சோழியன் குடுமி சும்மா ஆடுமா?’ என்றது மற்றொன்று.
‘அது எப்படி ஆடும்?’ என்றது மற்றும் ஒன்று.
அதற்குப் பின் எல்லாருமாகச் சேர்ந்து 'கலகல'வெனச் சிரித்த அந்தச் சிரிப்பு, சுடர்க்கொடியின் நெஞ்சிலே நெருப்பை வாரிக் கொட்டியதுபோல் இருக்கவே, ‘என்னால் தானே அந்த உத்தமருக்கு இந்த அபவாதம்?’ என அவள் நினைப்பாளாயினள்; 'என்னால்தானே அந்த உத்தமிக்கு இந்த அபவாதம்!’ என அவன் நினைப்பானாயினன். இப்படியாகத்தானே இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்து வருந்திக் கொண்டிருக்குங்காலையில், ஒரு நாள் சுடர்க்கொடியாகப் பட்டவள் ஊராரின் அபவாதத்துக்கு அஞ்சித் தன் உயிரைத்தானே மாய்த்துக் கொள்ளத் துணிந்து அரளிக் கொட்டையை அரைத்துத் தண்ணிரில் கலக்கிக் குடிக்கப் போக, அதுகாலை அவள் குழந்தைகளில் ஒன்று, ‘அம்மா!’ என்று அவளை அழைத்துக் கொண்டே வந்து அவளுடைய கால்களைக் கட்டிப் பிடிக்க, அவள் தன் கையிலிருந்த குவளையைக் கீழே வைத்துவிட்டு, ‘என் கண்ணே! என்று அதைத் தூக்கி அணைத்துக்கொள்ள, உள்ளமுருகும் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே வந்த நஞ்சுண்டகண்டன் விஷயத்தை ஒருவாறு புரிந்துகொண்டு, அவள் கீழே வைத்த அரளிக் கொட்டைத் திரவத்தை எடுத்துச் சட்டென்று குடித்துவிட்டு, 'பழிக்கு அஞ்சிச் சாக வேண்டியவள் நீ அல்ல; நான்தான். ஏனெனில், எனக்குப் பின்னால் எனக்காக அழ இந்த உலகத்தில் யாரும் கிடையாது; உனக்காக அழ உன்னுடைய குழந்தைகள் இருக்கின்றன. அவற்றைக் காப்பாற்று; உன் கடைசி மூச்சு உள்ளவரை காப்பாற்று!' என்று சொல்லிக் கொண்டே மயங்கிக் கீழே விழுந்து கண்ணை மூட, 'ஐயோ, அண்ணா! உங்களுக்காக நான் அழுவேன்; என் காலமெல்லாம் அழுவேன்!’ என்று அவன்மேல் விழுந்து அவள் புரண்டு புரண்டு அழுவாளாயினள்.'
பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘பழிக்கு அஞ்சி சாக வேண்டியது அவளா, அவனா?' என விக்கிரமாதித்தரைக் கேட்க, 'இருவரும் அல்ல; ஒரு பாவமும் அறியாத அவர்களைப் பழிக்கு உள்ளாக்கிய சமூகம்தான்!' என விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது காண்க... காண்க... காண்க...