மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/மெல்லியலாள்கள் கதை
பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன
மெல்லியலாள்கள் கதை"மறுபடியும் விக்கிரமாதித்தர் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன பதினோராவது கதையாவது:
‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! பொதுவாகப் பெண்கள் எல்லோருமே மெல்லியலாள்கள்தான் என்றாலும், அதிலும் ஒரு தனித்தன்மை பெற்றிருந்த மூன்று மெல்லியலாள்கள் எங்கள் ஊரிலே உண்டு. அவர்களில் ஒருத்தியின் பெயர் மல்லிகை; இன்னொருத்தியின் பெயர் மகிழம்பூ; மற்றொருத்தியின் பெயர் மருக்கொழுந்து. இவர்கள் மூவரும் தாங்கள் மெல்லியலாள்கள் என்பதை ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு செயலிலும் காட்டி வந்தார்கள். அதற்காக எதைப் பேசினாலும் மெதுவாகப் பேசிக்கொண்டு, என்னத்தைச் செய்தாலும் மெதுவாக நடந்துகொண்டு இருந்தார்களா என்றால், அதுதான் கிடையாது. அவர்கள் கிணற்றடியில் பேசினால் வீட்டுக்குக் கேட்கும்; ஆற்றங்கரையில் துணி துவைத்தால் அதன் ஒலி ஆகாயத்தில் எதிரொலிக்கும்; தெருவில் நடந்தால் 'கோயில் யானைகள் வராப்போல இருக்குடோய்!' என்று வீட்டுக்குள் இருக்கும் சிறுவர்கள் எல்லாம் வீதிக்கு ஓடி வந்துவிடுவார்கள்.
இந்த விதமாகத்தானே தங்கள் மெல்லியலாள் தன்மையை இவர்கள் நிலைநாட்டிக்கொண்டு வருங்காலையில், ஒரு நாள் மல்லிகையாகப்பட்டவள், 'நேற்றிரவு பெளர்ணமியாச்சே என்று நான் கொஞ்ச நேரம் எங்கள் வீட்டு மொட்டை மாடிக்குப் போய் நின்றேன்; நிலவொளிபட்டு என் முகமெல்லாம் கொப்புளித்துவிட்டது!’ என்று சொல்ல, 'அப்படியா சமாசாரம்?’ என்று, ‘நேற்று நான் ஒரு கலியாணத்துக்குப் போயிருந்தேன். அங்கே வந்திருந்த என் தோழிகளில் ஒருத்தி சந்தனத்தை எடுத்து விளையாட்டாக என் கன்னத்தில் தடவிவிட்டாள். இதோ பார்த்தாயா, அந்த இடம் அப்படியே கன்றிப்போய்விட்டது!’ என்று மகிழம் பூவாகப்பட்டவள் தன் கன்னத்தைத் திருப்பிக் காட்ட, ‘உங்களுக்கு நான் என்ன தோற்றவளா!’ என்று, 'இதைப் போய்ச் சொல்கிறீர்களே? எங்கள் பக்கத்து வீட்டுக்காரி நேற்று மிளகாய்ப் பொடி இடித்தாளாம். அந்த உலக்கைச் சத்தத்தைக் கேட்ட பாவம், என் உடம்பெல்லாம் வீங்கி விட்டது!’ என்று மருக்கொழுந்துவாகப்பட்டவள் தன் உடம்பைத் திருப்பித் திருப்பிக் காட்ட, மற்ற மெல்லியலாள்கள் இருவரும் அதற்குமேல் என்னத்தைச் சொல்லித் தங்கள் மென்மையை நிலைநாட்டுவது என்று தெரியாமல் அப்படியே வாய் அடைத்துப்போய் நின்று விட்டார்கள் என்றாவறு... என்றவாறு... என்றவாறு.....’
பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இந்த மூன்று மெல்லியலாள்களில் மற்ற இருவரைத் தூக்கியடித்த மெல்லியலாள் யார்?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘சந்தேகமென்ன, அடுத்த வீட்டுக்காரி மிளகாய்ப் பொடி இடிக்க, அந்தச் சத்தத்தைக் கேட்டுத் தன் உடம்பெல்லாம் வீங்கிவிட்டது என்றாளே, அவள்தான் மற்ற இருவரையும் தூக்கியடித்த மெல்லியலாள் ஆவாள்! என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது காண்க... காண்க... காண்க...