மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/பண்டாரம் சொன்ன பங்காரு கதை
பங்காரு கதை
‘தங்கவிட்டான் பட்டி, தங்கவிட்டான் பட்டி என்று ஒரு பட்டி உண்டு. அந்தப் பட்டியிலே, 'பங்காரு, பங்காரு’ என்று சொல்லா நின்ற ஒருத்தி, 'பெரியண்ணன், பெரியண்ணன்' என்று சொல்லா நின்ற தன் கணவனுடன் பெருமை பொங்க வாழ்ந்து வந்தாள். அப்படி வாழ்ந்து வருங்காலையில் ஒரு நாள் இரவு யாரோ ஒருத்தி வந்து அவள் வீட்டுக் கதவைத் தட்ட, ‘யார் அது?’ என்று கேட்டுக் கொண்டே வந்து அவள் கதவைத் திறக்க, ‘அம்மா, நான் வழி தவறி வந்துவிட்டேன். இன்றிரவு இங்கே தங்க எனக்குக் கொஞ்சம் இடம் கொடுங்கள்; பொழுது விடிந்ததும் போய் விடுகிறேன்!' என்று கதவைத் தட்டியவள் சொல்வாளாயினள்.
பங்காரு அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘வழி தவறி வந்துவிட்டேன் என்றால் என்ன அர்த்தம்? வாழ்க்கையில் வழி தவறிவிட்டாயா? இல்லை. பிரயாணத்தில் வழி தவறிவிட்டாயா?' என்று கேட்க, 'பிரயாணத்தில் தான் வழி தவறிவிட்டேன், அம்மா!’ என்று அவள் சொல்ல, 'அப்படி யென்றால் பரவாயில்லை! இன்றிரவு நீ இங்கே தங்கலாம். ஆனால் ஒரு நிபந்தனை!’ என்று பங்காரு சொல்லி நிறுத்த, ‘என்ன நிபந்தனை?' என்று வந்தவள் கேட்பாளாயினள்.
‘என் கணவர் ஒரு மாதிரி! நீயோ என்னைவிட அழகாயிருக்கிறாய். சந்தைக்குப் போயிருக்கும் அவர் வந்து பார்த்தால் நிச்சயம் என்னை மறந்துவிடுவார்! ஒன்று வேண்டுமானால் செய்; நீ ஆண் வேடம் போட்டுக்கொள். இன்றிரவு இங்கேயே தங்கலாம்; பொழுது விடிந்ததும் போய்விடலாம்' என்று பங்காரு சொல்ல, 'சரி!’ என்று அவளும் ஆண் வேடம் போட்டுக்கொண்டு அங்கே தங்குவாளாயினள்.
சந்தைக்குப் போயிருந்த பெரியண்ணன் வந்தான்; நடையில் ஆண் வேடம் தரித்துப் படுத்துக் கொண்டிருந்த வழி தவறி வந்தவளைப் பார்த்தான். ‘யார் இவன்? எதற்காக இவனை அவள் இங்கே படுக்க வைத்திருக்கிறாள்?’ என்று நினைத்த அவன் ஆண் வேடக்காரியைத் தட்டி எழுப்பி, ‘யாரப்பா நீ, எங்கே வந்தாய்? இங்கே ஏன் படுத்திருக்கிறாய்?' என்று கேட்க, ‘நான் ஒரு வழிப்போக்கன். இருட்டி விட்டதால் இன்றிரவு இங்கே தங்கக் கொஞ்சம் இடம் கொடுக்கும்படி அம்மாவைக் கேட்டேன். கொடுத்தார்கள்; படுத்துக்கொண்டிருக்கிறேன்!' என்று அவளாகப்பட்ட அவன் சொல்ல, பெரியண்ணன் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘இன்றிரவு மட்டுந்தானே இங்கே தங்கப் போகிறாய்? பரவாயில்லை; தங்கு. ஆனால் ஒரு நிபந்தனை!' என்று அவனும் தன் மனைவியைப் போலவே சொல்லி நிறுத்த, 'என்ன நிபந்தனை?' என்று வந்தவள் வியப்பின் மிகுதியால் வாயைப் பிளப்பாளாயினள்.
‘என் மனைவி ஒரு மாதிரி! நீயோ என்னைவிட அழகாயிருக்கிறாய். நடு இரவில் அவள் என்னை மறந்து உன்னைத் தேடி வந்தாலும் வந்துவிடக்கூடும். ஒன்று வேண்டுமானால் செய்; நீ பெண் வேடம் போட்டுக்கொள். உனக்கும் வம்பில்லை; எனக்கும் வம்பில்லை. 'நான் பார்க்கும்போது ஆணாயிருந்தவன் இப்போது எப்படி பெண்ணானாள்?' என்று என் மனைவி நினைப்பாளே என்று நீ கவலைப்பட வேண்டாம், உன்னை எழுப்பி வெளியே அனுப்பி விட்டதாகவும், உனக்குப் பின்னால் வந்த வேறு யாரோ ஒரு பெண்ணுக்குப் போனாற் போகிறதென்று கொஞ்சம் இடம் கொடுத்ததாகவும் நான் அவளிடம் சொல்லிவிடுகிறேன்!' என்று பெரியண்ணன் சொல்ல, 'நல்ல மனைவி, நல்ல கணவன்!’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டே வந்தவள் ‘ம்’ என்று தலையை ஆட்டி விட்டு, ‘விதியே!' என்று அவனுக்காகப் பெண் வேடம் தாங்குவதுபோல் தாங்கி, ‘இத்துடனாவது இவர்கள் இருவரும் ஆளை விடவேண்டுமே?’ என்ற கவலையுடன் அங்கே மீண்டும் படுப்பாளாயினள்.
பொழுது விடிந்தது; படுக்கையை விட்டு எழுந்து வந்தாள் பங்காரு. தான் ஆணாக்கிவிட்டுப்போன பெண் மறுபடியும் பெண்ணாகியிருப்பதைக் கண்டாள்; திடுக்கிட்டாள். அடுத்த கணமே ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்துவிட்டது அவளுக்கு. 'அடி, கள்ளி! நான் போட்ட ஆண் வேடத்தை ஏன் கலைத்தாய்? என் புருஷனை மயக்கவா?' என்று 'ஓ'வென்று இரைந்தாள்.
'ஐயையோ! நான் கலைக்கவில்லை, அம்மா! அவர்தான் வந்து, ‘என் மனைவி ஒரு மாதிரி!' என்று சொல்லி, இந்தப் பெண் வேடத்தைப் போட்டுக்கொள்ளச் சொன்னார்!' என்று அவள் கையைப் பிசைந்தாள்.
'அப்படியா சமாசாரம்?’ என்று அவள் திரும்ப, ‘என்ன சமாசாரம்?' என்று கேட்டுக்கொண்டே பெரியண்ணன் படுக்கையறையை விட்டு வெளியே வர, ‘என்னை நம்பாத உங்களுடன் இனி நான் ஒரு கணம்கூட வாழமாட்டேன்!’ என்று சொல்லிக்கொண்டே அவள் 'திடுதிடு'வென்று புழக்கடைக்கு ஓடி, அங்கிருந்த கிணற்றில் 'தொபுகடீர்' என்று குதித்து, மூன்று வாய் தண்ணீரை 'மொடக், மொடக்' கென்று குடித்து மூச்சு விடுவதை அக்கணமே மறப்பாளாயினள்!' என்பதாகத்தானே பண்டாரம் தன் கதையைச் சொல்லி முடிக்க, 'அந்த பங்காருக்கும் இந்த ரத்தினத்துக்கும் என்ன சம்பந்தம்?' என்பதாகத்தானே விக்கிரமாதித்தர் கேட்க, 'அங்கேதான் இருக்கிறது அதிசயத்திலும் அதிசயம்! அந்த பங்காருதான் இந்த ரத்தினமாம். முன் பிறவியில் பங்காருவாயிருந்த அவள், இந்தப் பிறவியில் ரத்தினமாகப் பிறந்திருக்கிறாளாம்!' என்று பண்டாரம் சொல்ல, 'அதற்கு ஏதாவது அடையாளம் காட்டினாளா?' என்று விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, 'காட்டினாள், ஏதோ ஒர் இடிந்துபோன வீட்டையும், அதற்குப் பின்னாலிருக்கும் ஒரு பாழுங்கிணற்றையும் ‘இதுதான் நான் வாழ்ந்த வீடு; இதுதான் நான் விழுந்த கிணறு' என்று!' என்பதாகத் தானே பண்டாரம் சொல்ல, 'அங்கே அவளுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் யாராவது இருந்தார்களா?' என்பதாகத்தானே விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, 'இருந்தது ஒரு கழுதையும், அதன் குட்டியும். ஆனால் அவற்றுக்கு அவளைத் தெரியவில்லை; அவளுக்கும் அவற்றைத் தெரியவில்லை!' என்று பண்டாரமாகப்பட்டவன் சொல்ல, விக்கிரமாதித்தராகப் பட்டவர் சிரித்துக்கொண்டே அவன் தோளில் ஒரு தட்டுத் தட்டி, 'அந்த ரத்தினம் இந்தக் கோயிலைத் தவிர வேறு எங்கேயாவது போவதுண்டா?' என்று கேட்க, 'போவதுண்டு, பாலருவிக்குத் தினம் குளிக்க!' என்று பண்டாரம் சொல்ல, 'எங்கே இருக்கிறது அந்தப் பாலருவி?, என்று விக்கிரமாதித்தர் கேட்க, 'இங்கிருந்து தெற்கே இரண்டு கல் தொலைவில் இருக்கிறது!' என்று அவன் சொல்ல, 'நன்றி' என்று விக்கிரமாதித்தர் சொல்லி விட்டு, அந்தப் பைத்தியத்தைத் தேடி வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்ப்பாராயினர்.
‘யாரைப் பார்க்கிறீர்கள்?’ என்று அங்கிருந்த ஒருவன் அவரைக் கேட்க, ‘இங்கே ஒரு பைத்தியக்காரன் இருந்தானே, அவனைப் பார்த்தீர்களா?' என்று அவர் அவனைக் கேட்க, 'அதோ, அவன் அந்தக் குதிரை வண்டிக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறான்!' என்று அவன் அந்தப் பைத்தியம் சென்ற திசையை அவருக்குச் சுட்டிக் காட்டுவானாயினன்.
‘அவனைப் பிடிக்க என்ன வழி?’ என்று ஒரு வழியும் தோன்றாமல் விக்கிரமாதித்தர் அப்படியே நிற்க, அந்தச் சமயத்தில் பாதாளசாமி காருடன் அவருக்குப் பின்னால் வந்து நின்று, அவர் ஏறுவதற்காகக் காரின் கதவைத் திறந்து விட, ‘நல்ல சமயத்தில் வந்தாய்!' என்று அவர் அதில் ஏறிக்கொண்டு, 'அதோ போகிறது பார், ஒரு குதிரை வண்டி! அதற்குப் பின்னால் ஒருவன் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறான் அல்லவா? அவனைப் பிடி!’ என்று சொல்ல, பாதாளசாமி ஒரே தூக்கில் வண்டியைக் கொண்டு போய் அவனுக்கு அருகே நிறுத்த, அதைக் கண்டதும், ‘ஐயா, ஐயா! என்னைக் கொஞ்சம் ஏற்றிக்கொண்டு போய் என் அத்தை மகளிடம் விட்டுவிடுகிறீர்களா, ஐயா?' என்று அவனாகவே அவர்களைக் கேட்க, 'அதற்கென்ன, ஏறிக் கொள்!' என்று அவனை வண்டியில் ஏற்றிக்கொண்டு, அவர்கள் அந்தக் குதிரை வண்டியைத் தொடர்ந்து செல்வாராயினர்.
வழியில், 'அத்தை மகள்தான் ஆண் வாடையே கூடாது என்கிறாளே, அவளிடம் நீ ஏன் போகவேண்டும் என்கிறாய்?' என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘போனால் கழுத்தைப் பிடித்தாவது வெளியே தள்ள மாட்டாளா, அதனாலாவது பட்டுப் போன்ற அவள் கை என்மேல் படாதா? என்ற ஆசையால்தான்!' என்று அவன் ஏக்கத்தோடு சொல்ல, ‘அதெல்லாம் வேண்டாம். நான் சொல்கிறபடி செய்; அவள் உன்னைக் கலியாணம் செய்துகொண்டு விடுவாள்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, 'நிஜமாகவா, நிஜமாகவா?' என்று அவன் குதிக்க, 'நிஜமாகத்தான், நிஜமாகத்தான்!' என்று அவரும் குதித்துக்கொண்டே சொல்லி அவனை உட்கார வைத்து, ‘அத்தை மகள் சொல்லும் முற்பிறப்புக் கதையை நீ கேட்டிருக்கிறாயா?' என்று கேட்க, 'கேட்டிருக்கிறேன்! கேட்டிருக்கிறேன்!' என்று அவன் சொல்ல, 'அந்தக் கதையைத் தொடர்ந்து நீயும் ஒரு கதை சொல்ல வேண்டும்!' என்று அவர் சொல்ல, 'என்ன கதை!' என்று அவன் கேட்க, 'அவள் சொல்லும் அதே கதையைத்தான் நீயும் சொல்ல வேண்டும். ஆனால் 'பங்காரு கிணற்றில் விழுந்து மூச்சு விட மறந்தாள்!' என்பதோடு நீ கதையை முடித்துவிடக் கூடாது; 'பார்த்தான் பெரியண்ணன்; அன்றிரவு வீட்டுக்கு வந்த அகதி உண்மையில் ஆண் அல்ல வென்பதையும், பெண்ணாயிருந்த அவளுக்கு அந்த வேடத்தைப் போட்டு விட்டவள் தன் மனைவிதான் என்பதையும், அதற்குக் காரணம் அவள் தன்மேல் கொண்டிருந்த சந்தேகந்தான் என்பதையும் அவன் அறிந்தான். அறிந்த பின், 'இனி ஏழு ஜன்மத்துக்கும் இந்தப் பெண்களைத் திரும்பிப் பார்க்க மாட்டேன்!’ என்று அவனும் கிணற்றில் குதித்தான், மூச்ச விட மறந்தான்!' என்று முடிக்க வேண்டும். அந்தப் பெரியண்ணனே நீ என்றும் பெண் வாடையே எனக்குக் கூடாதென்றும் நீ சொல்ல வேண்டும். என்ன சொல்கிறாயா?' என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘சொல்கிறேன், சொல்கிறேன்?' என்று அவன் சொல்ல, ‘இப்போது சொல்லாதே; நான் சொல்?’ என்று சொல்லும் போது ‘சொல்!' என்று அவர் சொல்ல, 'ஆகட்டும்; அப்படியே ஆகட்டும்!’ என்று அவன் தலையைப் பலமாக ஆட்டி வைப்பானாயினன்.
மறு நாள் காலை; பாதாளசாமியைக் காருடன் ஒரு மலையடிவாரத்தில் நிற்க வைத்துவிட்டு விக்கிரமாதித்தர் பைத்தியத்தை அழைத்துக்கொண்டு பாலருவிக்குச் செல்ல, அதுகாலை ரத்தினம் குளித்துவிட்டுத் தன் தோழிமாருடன் ராஜகுமாரிபோல் நடந்து அவர்களுக்கு எதிர்த்தாற்போல் வர, விக்கிரமாதித்தர் சட்டென்று கையோடு கொண்டு வந்திருந்த திரையைப் பைத்தியத்துக்கு முன்னால் விரித்துப் பிடித்து, ‘எட்டிப் போங்கள், எட்டிப் போங்கள்!' என்று அவர்களை நோக்கிச் சொல்ல, 'ஏன்?’ என்று அவர்கள் கேட்க, 'பெண் வாடை வேண்டாதா பெரியண்ணன் அம்மா, இவர்! எட்டிப் போங்கள், தயவு செய்து எட்டிப் போங்கள்!’ என்று அவர் பின்னும் சொல்ல, ‘இது என்ன அதிசயம்? ஏட்டிக்குப் போட்டியாக இருக்கிறதே! பெண் வாடை ஏன் பிடிக்காதாம் இவருக்கு?' என்று ரத்தினம் மூக்கின்மேல் விரலை வைக்க மறந்து வாயின்மேல் விரலை வைத்துக் கேட்க, ‘சொல்லப்பா கதையை, திரைக்குப் பின்னாலிருந்தே சொல்?' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பைத்தியம் அவர் சொன்ன கதையை அப்படியே திருப்பிச் சொல்வானாயினன்.
அதைக் கேட்ட ரத்தினம், ‘ஆ! இப்பொழுதல்லவா எனக்கு உண்மை புரிகிறது! அவர்மேல் சந்தேகம் கொண்டு நான் அந்த அகதிக்கு ஆண் வேடம் போடலாம்; அவர் என் மேல் சந்தேகம் கொண்டு பெண் வேடம் போடக் கூடாதா? தாராளமாகப் போடலாம். இதெல்லாம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் வந்த வினை; போகட்டும். போன ஜன்மத்தில்தான் நாங்கள் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ளாமல் செத்தோம்; இந்த ஜன்மத்திலாவது ஒருவரை யொருவர் புரிந்துகொண்டு வாழ்கிறோம்!' என்று சொல்ல, விக்கிரமாதித்தர் திரையை விலக்கி, 'என்னப்பா, இப்போது பெண் வாடை படலாமா?’ என்று 'முன்னாள் பெரியண்ண'னைக் கேட்க, ‘படலாம், படலாம்!' என்று அவன் பரவசத்துடன் சொல்ல, அதற்குள் அவனை இனம் கண்டு கொண்ட ரத்தினத்தின் தோழிகளில் ஒருத்தி, 'இவர் வேறு யாரும் இல்லையடி, உன்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த உன் மாமன் மகன்தான்!' என்று சொல்ல, ‘யாராயிருந்தால் என்ன? போன ஜன்மத்தில் கிடைத்த புண்ணியவானே இந்த ஜன்மத்திலும் கிடைத்தாரே, அதைச் சொல்!' என்று ரத்தினமாகப்பட்டவள் தன் மாமன் மகனையே கலியாணம் செய்துகொண்டு, தன்னால் அவனுக்குப் பிடித்த பைத்தியத்தையும் தெளிய வைப்பாளாயினள்."
நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான கல்யாணி இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; ஐந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோன்மணி சொல்லும் கதையைக் கேளுங்கள்!' என்று சொல்ல, போஜனும் நீதிதேவனும் "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு...