மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/4. நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்

விக்கிமூலம் இலிருந்து
4

நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கல்யாணி சொன்ன

ஆண் வாடை வேண்டாத

அத்தை மகள் கதை

"கேளாய், போஜனே! உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்தை ஆண்ட சாட்சாத் விக்கிரமாதித்த மகாராஜன் காடாறு மாதம், நாடாறு மாதம் வாழ்ந்தானல்லவா? அதே மாதிரி மிஸ்டர் விக்கிரமாதித்தரும் ஊட்டியில் ஆறு மாதமும், சென்னையில் ஆறு மாதமுமாக இருப்பதுண்டு. அங்ஙனம் இருந்து வருங்காலையில் அவர் ஒரு சமயம் சிட்டியைச் சென்னையிலேயே விட்டுவிட்டுப் பாதாள சாமியுடன் காரில் ஊட்டிக்குப் புறப்பட, வழியில் அந்தக் கார் பழுதாகி நின்றுவிட, 'என்னடா, பாதாளசாமி! இப்படி வந்து அகப்பட்டுக் கொண்டோமே? மேலே எப்படிப் பிரயாணத்தைத் தொடருவதென்று தெரியவில்லையே? பக்கத்தில் ரயில்வே ஸ்டேஷனோ, பஸ் ஸ்டாண்டோகூட இருப்பதாகத் தெரியவில்லை. இரவு எங்கேயாவது தங்கிப் பொழுது விடிந்ததும் போகலாம் என்றாலும் அதற்ககேற்ற ஊரோ, ஓட்டலோ அருகில் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்யலாம்? எப்படி இந்த நிலைமையைச் சமாளிக்கலாம்?’ என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் கேட்க, அதோ இருக்கிறது பாருங்கள் ஒரு கோயில், அந்தக் கோயில் மண்டபத்துக்குப் போய், அங்கே தங்கியிருங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் காரைச் சரி பார்த்துக் கொண்டு அங்கே வந்துவிடுகிறேன்!' என்று பாதாளசாமியாகப்பட்டவன் சொல்ல, 'அதுதான் சரி!' என்று விக்கிரமாதித்தரும் அந்தக் கோயிலை நோக்கி நடப்பாராயினர்.

அங்கே இருந்த மணல் தரையில் தாடியும் மீசையுமாக யாரோ ஒருவன் உட்கார்ந்து, 'ரத்தினம், ரத்தினம்’ என்று எழுதுவதும், எழுதிய பின் அதை அழிப்பதுமாக இருக்க, அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டே விக்கிரமாதித்தர் நிற்க, அவன் அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, 'போ, போ! அவள் பெயருக்குக்கூட ஆண் வாடை படக்கூடாது; போ, போ!' என்று விரட்ட, 'நீயும் ஆண் பிள்ளைதானே, உன் வாடை மட்டும் படலாமா?' என்று விக்கிரமாதித்தர் சிரித்துக் கொண்டே அவனைக் கேட்க, ‘படலாம் படலாம்; அவள் என் அத்தை மகள் ரத்தினம். என் காற்று மட்டும் அவள்மேல் படலாம், படலாம்!' என்று அவனும் சிரிக்க, 'சரியான பைத்தியமாயிருக்கும்போல் இருக்கிறதே?' என்று விக்கிரமாதித்தர் அத்துடன் அவனை விட்டுவிட்டுச் சுற்று முற்றும் பார்ப்பாராயினர்.

அதுகாலை, 'இங்குள்ள ஆண்கள் அனைவரும் தயவு செய்து கொஞ்ச நேரம் வெளியே போய் இருங்கள்; இங்குள்ள ஆண்கள் அனைவரும் தயவு செய்து கொஞ்ச நேரம் வெளியே போய் இருங்கள்!' என்று கோயில் பண்டாரமாகப்பட்டவன் வினயத்துடன் சொல்லிக் கொண்டே வர, 'எங்களை ஏன் அப்பா, வெளியே போகச் சொல்கிறாய்?' என்று விக்கிரமாதித்தர் ஒன்றும் புரியாமல் கேட்க, 'நீங்கள் ஊருக்குப் புதுசுபோல் இருக்கிறது; அதனால்தான் அப்படிக் கேட்கிறீர்கள். கொஞ்ச நேரம் வெளியே போய் இருங்கள்; சொல்கிறேன்!' என்பதாகத் தானே அவன் சொல்லி அவரை வெளியே அனுப்பிவிட்டு, 'இங்குள்ள ஆண்கள் அனைவரும் தயவு செய்து கொஞ்ச நேரம் வெளியே போய் இருங்கள்; இங்குள்ள ஆண்கள் அனைவரும் தயவு செய்து கொஞ்ச நேரம் வெளியே போய் இருங்கள்!" என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே போவானாயினன்.

அவன் சொன்னபடியே அங்கிருந்த ஆண்கள் அனைவரும் வெளியே வந்துவிட, அந்தப் பைத்தியம் மட்டும் ‘நான் ஆண்பிள்ளையில்லை; பெண்பிள்ளை! ஹிஹி!’ என்று இளித்துக் கொண்டே மேல் துண்டை எடுத்துத் தாவணி போல் மேலே போட்டுக்கொண்டு அங்கேயே அடம் பிடித்து நிற்க, 'அங்கே போங்கய்யா, உங்கள் அத்தை மகள் உங்களைக் கூப்பிடுகிறாள்!’ என்று பண்டாரம் சொல்ல, 'நிஜமாகவா, என்னைக் கூப்பிடுகிறாளா? ஹிஹி!’ என்று மறுபடியும் சிரித்துக் கொண்டே அவனும் வெளியே வந்து விடுவானாயினன்.

அவனுடைய நிலையைக் கண்டு 'ஐயோ, பாவம்!’ என்று நினைத்த விக்கிரமாதித்தர் அவனை அனுதாபத்துடன் பார்க்க, அவனோ அவரைப் பார்க்காமல் சற்றுத் தூரத்தில் வாயு வேக மனோ வேகமாக வந்துகொண்டிருந்த குதிரை வண்டியொன்றை நோக்கி, 'அதோ வந்துவிட்டாள் என் அத்தை மகள், அதோ வந்துவிட்டாள் என் ‘அத்தை மகள்!' என்று ஆனந்தக் கூத்தாட, ‘இந்த அர்ஜுனனை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்ட அந்த அல்லி யாராயிருக்கும்?' என்று விக்கிரமாதித்தரும் அவளை ஆவலோடு எதிர்பார்ப்பாராயினர்.

வண்டி வந்து நின்றது. அதில் கட்டப்பட்டிருந்த குதிரை மட்டுமல்ல; அதை ஒட்டிக் கொண்டு வந்தவளும் ஒரு பெண்ணாகயிருந்தாள்! அவள் முன் பக்கமாக இறங்கிப் பின் பக்கத்தில் இருந்த கொக்கியைக் கழற்றி விட, ரத்தினமாகப் பட்டவள் தன் தோழிகள் இருவருடன் ராஜகுமாரிபோல் இறங்கி, ராஜகுமாரிபோல் நடந்து, ராஜகுமாரிபோல் கோயிலுக்குச் சென்று, ராஜகுமாரிபோல் தன் வழிபாட்டை முடித்துக்கொண்டு திரும்ப, 'இப்போது வரலாம்; ஆண் பிள்ளைகளும் உள்ளே வரலாம்!' என்று பண்டாரம் குரல் கொடுப்பானாயினன்.

அதுதான் சமயமென்று விக்கிரமாதித்தர் அவனை மெல்ல நெருங்கி, 'யாரப்பா அவள்? என்ன சங்கதி?' எனறு விசாரிக்க, 'இந்தக் கோயில் தருமகர்த்தாவின் ஒரே மகள் அவள். வயது இருபதுக்கு மேல் ஆகிறது; இதுவரை அவள் தன்மேல் ஆண் வாடையே படக் கூடாது என்று இருக்கிறாள். அவளுடைய மாமன் மகன்தான் சிறிது நேரத்துக்கு முன்னால் நீங்கள் இங்கே பார்த்த அந்தப் பைத்தியம். அவனை யாரும் கவனிப்பதில்லை; அவன் யாரென்றுகூட அவர்கள் தெரிந்து கொள்வது கிடையாது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுவாமியை வழிபடுவதற்காக அவள் இங்கே வருவாள்! அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவளைப் பார்க்க அவனும் இங்கே வருவான். அவள் வரும்போது அர்ச்சகர் உள்பட ஆண் பிள்ளைகள் யாரும் இங்கே இருக்கக் கூடாது என்பது தருமகர்த்தாவின் உத்தரவு?’ என்று அவன் சொல்ல, 'அவள் ஏன் தன்மேல் ஆண் வாடையே படக் கூடாது என்கிறாள்?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, 'அது அதிசயத்திலும் அதிசயமான கதை!’ என்று சொல்லிவிட்டு, அவன் சொன்னதாவது: