மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/மணவாளன் சொன்ன மர்மக் கதை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மணவாளன் சொன்ன
மர்மக் கதை

‘கலியாணத்துக்குப் பிறகு கோபாலனையும் கோகிலத்தையும் இவள் பிரித்து வைத்தது எனக்கு அவ்வளவு உசிதமாகப் படவில்லை. ஆயினும், ‘படிப்பை உத்தேசித்துத் தானே பிரித்து வைக்கிறாள்?’ என்று நானும் ஒன்றும் சொல்லவில்லை; பையனும் ஒன்றும் சொல்லவில்லை.

இங்ஙனம் இருக்குங்காலையில், ஒரு நாள் உடனே தன் வீட்டுக்குப் புறப்பட்டு வருமாறு கோகிலத்தின் சித்தியிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வர, 'என்னவோ, ஏதோ' என்று நானும் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடினேன்.

அங்கே கோகிலம் தலைவிரி கோலமாக ஊஞ்சல் பலகையின்மேல் உட்கார்ந்திருந்தாள். அவள் வயிறு கொஞ்சம் எடுப்பாயிருந்தது. 'அன்றையச் சாப்பாடு கொஞ்சம் ருசியாயிருந்து, ஒரு பிடி அதிகமாகச் சாப்பிட்டிருப்பாளோ, என்னவோ?’ என்று நினைத்த நான், 'அதை எப்படி அவ்வளவு வெளிப்படையாகக் கேட்பது?’ என்று எண்ணி, ‘என்ன உடம்புக்கு?’ என்றேன்.

அவ்வளவுதான்; விடுவிடுவென்று அங்கே வந்த அவள் சித்தி, 'அவளுடைய உடம்புக்கு என்ன கேடு? மூன்று மாதங்களாக அவள் முழுகாமல் இருக்கிறாளாக்கும்!' என்று என் தலையில் திடீரென்று ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டாள்.

‘அச்சச்சோ!’ என்ற நான், ‘உன்னை இந்த அநியாயத்துக்கு உள்ளாக்கிவிட்ட அந்த மாபாவி யார் அம்மா?’ என்று அவளை மெல்லக் கேட்டேன்.

'ஆமாம்; இவளைத்தான் அவன் அநியாயத்துக்குள்ளாக்கி விட்டானாக்கும்? அவனை இவள் அநியாயத்துக் குள்ளாக்கிவிடவில்லையா? உங்களுக்கு ஏன்தான் இந்த ஓரவஞ்சனையோ தெரியவில்லை. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைந்து விடுமாக்கும்?’ என்று அவள் சித்தி பொரிந்தாள்.

‘நூலுக்கு ஊசி இடம் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் ஊசியின் கையிலா இருக்கிறது? அதை வைத்துக் கொண்டிருப்பவர்களின் கையிலல்லவா இருக்கிறது?' என்றேன் நான், அந்த நிலையிலும் அவளைக் கொஞ்சம் சிரிக்க வைத்து அவள் வாயை அடக்க.

அவளா சிரிப்பாள்? 'இந்த வக்கணையில் ஒன்றும் குறைச்சல் இல்லை! நான் அப்போதே சொன்னேன், 'அவள் எஸ். எஸ். எல். ஸி வரை படித்தது போதும், போதும்’ என்று. கேட்டீர்களா? அங்கே அழைத்துக்கொண்டு போய் அவளைக் காலேஜில் வேறு சேர்த்துத் தொலைத்தீர்கள்! அப்படித்தான் சேர்த்துத் தொலைத்தீர்களே! அவளுக்குக் கலியாணத்தையாவது பண்ணாமல் இருந்தீர்களா? அதையும் பண்ணித் தொலைத்தீர்கள்! அப்புறம் கேட்பானேன்? ‘லைசென்ஸ் கட்டிய நாய்' போல் அவள் எங்கு வேண்டுமானாலும் திரிய ஆரம்பித்துவிட்டாள்! அதன் பலன் இப்போது அவள் வயிற்றில் மட்டுமா வந்து விடிந்திருக்கிறது? நம் எல்லோருடைய தலையிலும்தான் வந்து விடிந்திருக்கிறது!’ என்று நான் எதிர்பார்த்ததற்கு நேர் விரோதமாக அவள் வாய் நீண்டது.

‘ஸ், ஏன் இப்படி இரைகிறாய்? இரையக்கூடிய விஷயமா இது?’ என்றேன் நான்.

‘மூன்று மாதங்களாக மூடி மறைத்தது போதாதா? இன்னுமா மூடி மறைக்கவேண்டும் என்கிறீர்கள்? இனி ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஒன்று அவள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகவேண்டும்; இல்லை, அவளுக்குப் பதிலாக நாமாவது நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாக வேண்டும். இதைத் தவிர வேறு வழியே கிடையாது!’

‘அதற்கு என்ன அவசரம் இப்போது? எதற்கும் 'யார், என்ன?’ என்று விசாரித்துத்தான் பார்ப்போமே?'

‘எல்லாம் விசாரித்துப் பார்த்தாச்சு! அவள் எங்கே வாயைத் திறக்கிறாள்? செய்ததையும் செய்துவிட்டு ஊமைக் கோட்டான் மாதிரி வாயைத் திறக்காமல் இருக்கிறாள்!' என்று சொல்லிக்கொண்டே அவள் கோகிலத்தின் கன்னத்தில் ஓர் இடி இடிக்கப் போனாள்.

நான் அவளைத் தடுத்து, ‘கொஞ்சம் பொறு, நானே விசாரிக்கிறேன்!' என்று சொல்லிவிட்டு, ‘சொல், அம்மா! யார் அவன்?' என்றேன்.

‘அம்மா, அம்மா என்றால் சொல்வாளா? ‘கண்ணே, கண்ணே!' என்று வேண்டுமானால் கொஞ்சிப் பாருங்கள்; சொல்வாள்!' என்றாள் அவள் கேலியாக.

பொறுமையிழந்த நான், 'கொஞ்ச நேரம் நீ பேசாமல் இருக்கமாட்டாயா? உன்னால் உள்ளதைச் சொல்பவள்கூடச் சொல்லமாட்டாள் போல் இருக்கிறதே?' என்று அவள்மேல் எரிந்து விழுந்தேன்.

‘என்னால்தானா சொல்லவில்லை? அவள் அருமை அப்பா நேற்று முழுவதும் தன்னால் ஆன மட்டும் அவளைக் கேட்டுப் பார்த்துவிட்டுக் கடைசியில் என்ன செய்தார் தெரியுமா, உங்களுக்கு.'

‘என்ன செய்தார்?'

'வேறு என்ன செய்ய முடியும்? 'இனி உன் முகத்தில்கூட விழிக்கமாட்டேன்’ என்று அவர் தலையில் முக்காட்டைப் போட்டுக்கொண்டு வெளியே போய்விட்டார்!’

‘அடப் பாவமே! எப்பொழுது திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார்?'

‘அவர் என்னிடம் ஒன்றும் சொல்லிவிட்டுப் போக வில்லை; நான்தான் அவர் போனதிலிருந்து இரண்டு குழந்தைகளைக் கையில் வைத்துக்கொண்டு அனாதைபோல் அழுது கொண்டிருக்கிறேன்!’ என்று அவள் நிஜமாகவே அழ ஆரம்பிக்க, நான் அவளைச் சமாதானம் செய்துவிட்டு, ‘சொல், கோகிலம்? இந்த விஷயம் கோபாலனுக்குத் தெரிந்தால் அவன் உன் அப்பாவைப்போல் முக்காட்டைப் போட்டுக் கொண்டு வெளியே போகமாட்டான்; உன்னையும் கொன்று விட்டுத் தன்னையும் கொன்றுக் கொண்டு விடுவான்!' என்று அவளை மிரட்டினேன்.

அவளோ அதற்கும் அசைந்து கொடுக்காமல் ‘ஊஹும்!' என்று தலையை ஆட்டினாள். எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்துவிட்டது; ‘சொல்லப் போகிறாயா, இல்லையா?' என்று அவளைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கினேன்.

‘மாட்டேன், மாட்டேன், சொல்லவே மாட்டேன்!’ என்றாள் அவள், அதற்கும் அஞ்சாமல். அதற்கு மேல் அவளை என்ன செய்வதென்று என்று ஒன்றும் தோன்றாமற் போகவே, நானும் அவள் அப்பாவைப்போலவே தலையில் முக்காட்டைப் போட்டுக்கொண்டு வெளியே வந்து விட்டேன். இதுதான் அந்தக் கோகிலத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த கதை!' என்று அவளைப் பற்றிய மர்மத்தைத் துலக்காமலே மணவாளன் தம்முடைய 'மர்மக் கதை'யைச் சொல்லி முடிக்க, ‘அந்த வீட்டில் வேலைக்காரர்கள் யாராவது உண்டா?' என்று விக்கிரமாதித்தர் அன்னாரை விசாரிப்பாராயினர்.

'வேலைக்காரர்கள் என்று அங்கே யாரும் இல்லை; வேலைக்காரி என்று ஒரே ஒருத்தி மட்டும் உண்டு. அவளும் இப்போது அங்கே வேலை செய்வதாகத் தெரியவில்லை!' என்று மணவாளனாகப்பட்டவர் சொல்ல, 'அவள் வீட்டைத் தெரியுமா, உங்களுக்கு?' என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் கேட்க, ‘தெரியும்; அவள் இப்போது எங்கள் வீட்டுக்குப் பின்னால்தான் இருக்கிறாள்!’ என்று அவர் சொல்ல, 'கூப்பிடுங்கள், அவளை!' என்று விக்கிரமாதித்தர் அவரை விரட்டுவாராயினர்.

சிறிது நேரத்துக்கெல்லாம் வேலைக்காரி வந்து விக்கிரமாதித்தருக்கு முன்னால் நிற்க, 'கோகிலம் வீட்டில் வேலை செய்வதை நீ ஏன் விட்டுவிட்டாய்?’ என்று விக்கிரமாதித்தர் அவளைக் கேட்க, ‘என்னவோ பிடிக்கவில்லை, விட்டு விட்டேன்!' என்று அவள் விக்கிரமாதித்தரைப் பார்க்காமல் வேறு எங்கேயோ பார்ப்பாளாயினள்.

‘அங்கே பார்க்காதே, இங்கே பார்! ஏன் பிடிக்கவில்லை?' என்று விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, 'அதைக் கேட்காதீர்கள், சுவாமி! சொன்னால் இங்கே உள்ளவர்களுக்குப் பிடிக்காது; வருத்தம் வரும்!’ என்று அவள் பின்னும் முகத்தைத் திருப்ப, 'வராது, சொல்?’ என்று அவராகப்பட்டவர் அவளை வற்புறுத்த, ‘நானும் பிள்ளை குட்டி பெற்றவள், சுவாமி! என்னதான் தப்புத் தண்டா செய்யட்டும்; வாயும் வயிறுமாக இருந்த ஒரு பெண்ணை அவள் சித்தி அப்படி அடித்து விரட்டலாமா? அதைப் பார்த்ததிலிருந்து தான் எனக்கு அங்கே வேலை செய்யவே பிடிக்கவில்லை!’ என்று அதற்குள் கலங்க ஆரம்பித்து விட்ட தன் கண்களை அவளாகப்பட்டவள் தன்னுடைய முந்தானையால் துடைக்க, 'அழாதே! அதற்குப் பின் அந்தப் பெண் என்ன ஆனாள் என்று உனக்குத் தெரியுமா?’ என்று விக்கிரமாதித்தர் அவளை மெல்லக் கேட்க, ‘அந்த வேதனைக் கதையை ஏன் கேட்கிறீர்கள், சுவாமி?’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே அவள் சொன்னதாவது: