முடியரசன் தமிழ் வழிபாடு/029-049

விக்கிமூலம் இலிருந்து

29. ஏங்குதல் நீதியோ ?


தாயுன தின்னருள் பாடவைத்தாய் - துன்பந்
தாக்கிட ஏனுளம் வாடவைத்தாய்?
ஆயும் புலமையை நாடவைத்தாய் - அம்மா
அப்புறம் ஏன்பொருள் தேடவைத்தாய்?

கைப்பொருள் என்னிடம் தங்கவிட்டால் - நெஞ்சிற்
காயங்கள் யாவையும் மங்கிவிட்டால்
மெய்ப்பொருளின்மனம் பொங்கவிட்டே பார்ப்பேன்
மேனியில் பாமலர்த் தொங்கலிட்டே

வின்ணுல கொன்றனை நான்படைப்பேன் - அங்கே
விந்தைகள் ஆயிரம் மேலமைப்பேன்
மண்ணுல குய்ந்திடத் தேன்கொடுப்பேன் - இந்த
மைந்தனைத் துன்புற ஏன்விடுத்தாய்?

மாமயில் போலொரு மங்கையினாள் - நல்ல
மாலைச் சுடர்நிகர் செங்கையினாள்
காமுறு வேளையில் அங்கவளை - ஏனோ
கட்டுற வைத்தனை சங்கிலியால்?

கற்பனை வான்மிசை நான்பறப்பேன் - அங்கே
காதல் மகள்தரும் தேன்சுவைப்பேன்
பொற்புடை யாளவள் தானழைத்தாள் - வானில்
போய்வரு மென்சிற கேனறுத்தாய்?

இன்ப மெனுங்கடல் பாய்ந்திருப்பேன் - அங்கே
          எத்தனை எத்தனை ஆய்ந்திருப்பேன்
மன்பதை உய்ந்திட ஈந்திருப்பேன் - நீயேன்
          வந்தரு ளாமலே ஓய்ந்திருந்தாய்?

உன்னை விடுத்தொரு சுற்றமில்லை - நெஞ்சில்
          ஒட்டிய வேறொரு பற்றுமில்லை
என்னைப் புரப்பதில் குற்றமில்லை - அம்மா
          ஏங்குதல் நீதியோ பெற்றபிள்ளை ?

[பாடுங்குயில்]