முடியரசன் தமிழ் வழிபாடு/040-049
Appearance
தமிழே வா செந் தமிழே வா
தவித்திடும் என்முன் தனிநடை காட்டித் - தமிழே
அமிழ்தோ பாகோ அடைதரு தேனோ
அரும்பிய வாய்மொழி கரும்பின் சாறோ - தமிழே
காலின் சிலம்பொலி காதினில் இனிக்கக்
கைவளை ஒலியும் கலந்தினி திசைக்க
நாலடி பாலொடு நடந்துநீ வருவாய்
நாலா யிரம்பா நான்தரப் பெறுவாய் - தமிழே
அணியும் பொருளும் அளவில் கொண்டாய்
ஆயினும் நான்சில அளித்ததும் கண்டாய்
வணிகன் வழங்கிய மேகலை ஆடிட
வருவாய் வருவாய் வந்தெனைக் கூடிடத் - தமிழே
நீதருங் கலி[1]யால் நெகிழ்ந்ததென் நெஞ்சம்
நினையே நினைந்து நினைந்துளம் கெஞ்சும்
பாதருங் காவியப் பாவையே நீயே
பரிவுடன் கடைக்கண் பார்த்தருள் வாயே - தமிழே
புறத்தொழில் காணலும் சிலிர்த்ததென் உளமே
அகத்தெழில் காணவும் துடித்ததென் மனமே
புறப்படும் இன்பம் தொகைதொகை யாகப்
புதுச்சுவை காண்பேன் துயரங்கள் ஏகத் - தமிழே
[நெஞ்சிற் பூத்தவை]
- ↑ கலி-துயரம், கலித்தொகை