முடியரசன் தமிழ் வழிபாடு/048-049

விக்கிமூலம் இலிருந்து

48. சொற்றமிழ் பாடுக!

...................................................................
‘அகத்தும் பிறமொழி வெறுத்திடல் அறிகிலம்
பகுத்தறிவு வுடையோம் பண்பும் உடையோம்
வேண்டும் மொழிகளை வேண்டுவோர் பயின்றிங்
கீண்டி யுறையுநர்
[1] எண்ணிலர்[2] அறிக!
குறுமன மென்றும் விரிமன மென்றும்
சிறுமன முடையோர் செப்புவ[3] கொள்ளேல்!
தனியொரு மாந்தன்[4] தன்னலம் பேணின்
முனியத்[5] தகுமது குறுமன மாகும்:
தன்னல மறுப்பது விரிமன மாகும்,
முன்னவர் பேணிய மொழியும் நாடும்
மன்பதை முழுமைக் குரியன வன்றோ !
அன்புளங் கொண்டோர் அவற்றைப் பேணின்
தென்படும் குறைஎன்? தெளியா மாந்தர்
குறுகிய மனமெனக் குளறுவர் நம்பேல்!
பெறுபுகழ்த் தாய்மொழி பேணாஅ ரா[6]கி
வருமொழி வாழ்த்தி வரவுரை கூறுநர்
அறமன முடையரென் றறிவுளோர் பகரர்;

பிறமொழி தீதெனப் பேசலும் அறிகிலம்
உரியநம் மொழியே உயர்வுறல் வேண்டி
இரவும் பகலும் இடரிலும் முயல்வேம்:
யாதும் ஊரெனில் எம்முடை ஊரகம்
தீதுறல் வேண்டுமோ? சீருறல் தீமையோ?
யாவரும் கேளெனில் யாயு[7]டன் தந்தையும்
மேவருங்[8] கேடுகள் மேவுதல் வேண்டுமோ?
அன்னவர் நலம்பெற ஆர்வம் பூணுதல்
புன்மையோ?[9] பகையும் பூத்திடல் என்னையோ?[10]
உலகப் புகழ்பெறு தலைவரும் கவிஞரும்
பலகற் றடங்கிய பண்புயர் மாந்தரும்
தாய்மொழி வேட்கை தணிந்திலர்[11] துறந்திலர்:
ஆய்புலப் பாங்கினர் அறிகுவர் இதனை:
தமிழின் பகைவர் சாற்றும் மொழியினை
உமிழ்க! மெய்ம்மை உணர்க எழுக’
.....................................................

கூவும் குயில்தன் குரலாற் பாடும்;
காகம் தன்குரல் கொண்டே கரையும்
இரவற் குரலைப் பெறுவது காணேம்;
பறவையின் இயல்பைப் பகுத்தறி வுளநாம்
அறிவதும் இல்லேம்; தெளிவதும் இல்லேம்;
நமக்குள மொழியை நாடுதல் தவிர்த்துப்
பிறர்க்குள மொழியாற் பிதற்றுதல் உடையேம்;
உருகும் இசையால் உள்ளம் என்றீர்!
பொருளும் உணரப் புரியும் மொழியால்
மருவிய பாடல் வழங்கும் இனிமையை
ஒருமுறை எண்ணுக! ஊனும் உயிரும்
நெஞ்சுடன் கலந்து நெக்குநெக் குருகி[12]
விஞ்சுபே ரின்ப விளைவினில் திளைக்கும்
குழல்தரு மிசையில் மொழியிலை என்றீர்!
அழகிது நும்மொழி;அவ்விசை சாலுமேல்[13]
மிடற்றிசை வேண்டுமோ? வெறொரு மொழியில்
தொடுத்திடும் பாடலும் தொகையுடன் பாடுவோர்
கூட்டமும் வேண்டுமோ? குழல்முத லாகக்
காட்டும் அவ்விசைக் கருவிகள் சாலுமே!

தமிழ்விழை யாரும் தம்வயிற் றுணவே
அமிழ்தெனத் தேடி அலைந்துழல் வாரும்,
உரிமை வாழ்வினைக் கருதகில் லாரும்
அடிமை வாழ்வினி லமைதி கொள்வாரும்
தமிழறி வில்லாத் தமிழருந் தாமே
அயன்மொழி யிசையே அரங்கினிற் பாடுவர்
மயலுணர் வுடையீர்! மற்றொன் றறைகுவல்
எம்மொழி யாயினும் இசையினி லேற்போர்
நம்மொழி ஒதுக்குதல் நன்றுடைச் செயலோ?
ஏற்போர் ஏற்க இசையுணர் பெரியீர்!
காற்கூ ற[14]றிவாற் கழறுதல் தவிர்க!
இசைவளந் தமிழில் இலைஎனப் பிதற்றல்
வசையுமக் காகும்; வாய்மதம்[15] ஒழிக!
முத்தமிழ் என்றொரு முறைவைப் புளதை
மெத்தவும் மறந்தீர்! மெய்ம்மையை இகழ்ந்தீர்!
நெஞ்சறி பொய்யை நிகழ்த்துதி ராயின்
பஞ்சென அதுதான் பறப்பதிங் கொருதலை;
...................................................

பழியுரை நாணாப் பண்புள பெரியீர்!
மொழிவெறி எனவொரு மொழியினை மொழிந்தீர்
உரிமை விழைவது வெறியெனக் கூறும்
பெருமை நும்பால் உறைவது கண்டேன்;
நரிமனம் இஃதென நவின்றிட நாணுவல்;
வெறியுணர் வுளதேல் விளைவன வேறு!
முறையொடும் அறிவொடும் முறையிடு கின்றோம்;
நெறியறிந் தொழுகும் நேர்மையை வியந்திலீர்!
புரைபடும் நும்முளம் புலப்படச் செய்தீர்!
செந்தமிழ் மொழியொடு செற்றம் என்கொலோ?
வந்துடன் தாய்மொழி வளர்த்திடக் கூடுக!
முந்துநம் தமிழிசை மொய்ம்புறப் பாடுக!
...........................................
தமிழக வரைப்பில் தாய்மொழி ஆட்சி
திகழுதல் வேண்டும்; தேவுறு கோவில்
விலக்குடைத் தன்று; மயக்குறல் என்கொல்?
கலைக்கோர் உறைவிடம் கட்டியோர் தமிழர்

உள்ளுறை கடவுளும் உரியவர் நமக்கே
அள்ளுற[16] வணங்குவோர் அயலவர் அல்லர்
இறைவினை புரிவோர் ஏதிலர் அல்லர்
முறைஎது? வழிபடு மொழி எது? புகல்வீர்!
முன்னோர் நெறியினில் முரண்பா டென்றீர்!
முன்னோர் யாரென முடிந்த முடிபாச்
சொன்னோர் யாரே? முன்னோர் அவரினும்
முற்பட வாழ்ந்தவர் எப்பெய ருடையார்?
அப்பெரு முன்னோர் ஆண்டவன் மாட்டுச்
செப்பிய மொழி எது? செந்தமி ழன்றோ ?
திருவாய் மொழியெனத் திருவா சகமென
இறைவா! இறைவா! என்றவர் ஒதிய
திருவாய் மொழி எது? தீந்தமி ழன்றோ ?
அவரெலாம் முன்னோ ரல்லரோ? இறைவன்
செவிதனில் அம்மொழி சேர்ந்ததும் இலையோ?
அரவணி இறைவனை ஆரூர் நம்பி[17]
இரவிடைப் பரவை[18]பால் ஏவிய தெம்மொழி?
இடங்க[19] ருண்ட இளஞ்சிறு மகனை
உடம்பொடும் உயிரொடும் உய்வித்த தெம்மொழி?

ஒடுங்கிய எலும்பினை உருவெழில் குறைவிலா
மடந்தையின் வடிவா மாற்றிய தெம்மொழி?
அருமறை வினைஞரால் அடைபடு கதவம்
திருமறைக் காட்டில் திறந்ததும் எம்மொழி?
கணிகணன் முன்செல மணிவணன் அடியிணை
பணிதிரு மழிசையர் பதறினர் பின்செலப்
படப்பாய் அணைமேல் பாற்கடல் மிசையே
கிடப்போன் தன்மனைக் கிழத்தியும் உடன்வர
அரவ[20]ணைச் சுருட்டோ[21] டாங்கவர் தொடர்ந்து
பரிவுடன் ஓடப் பண்ணிய தெம்மொழி?
அம்மொழி நம்மொழி அத்துணைப் பெருமையும்
செம்மையின் எமக்கெலாம் செப்பியோர் நீவிர்
இன்றிவை மறந்தீர்! எதிர்ப்புரை கிளந்தீர்
கன்றிய மனத்தாற் கரவுரை[22] புகன்றீர்
மந்திர வலிமை செந்தமிழ்க் கிலையெனில்
இந்தநல் லருஞ்செயல் எவ்வணம் இயலும்?
கடகரி[23] உரியன் கடும்புலி யதளன்[24]
சடையினை மறைத்து மணிமுடி தரித்து
விடைக்கொடி[25] விடுத்துக் கயற்கொடி எடுத்து
விடவர வொழித்து வேம்பலர்[26] முடித்துத்

தொடுகழல் மாறன்[27] வடிவொடு வந்ததூஉம்,
மடவரல்[28] மனையாள் மலைமகள் உமையாள்
தடாதகைப் பெயரினைத் தாங்கி வந்ததூஉம்,
மயில்மே லமர்வோன் அயில்வே லுடையோன்
எழில்சூழ் மதுரை எழில்நக ரதனுள்
உக்கிர குமர னுருவொடு வந்ததூஉம்,
தெக்கண மொழியாம் தீந்தமிழ்ச் சுவையைக்
கூட்டுண வெழுந்த வேட்கையால் என்றே
பாட்டினில் குருபரர்[29] பாடி வைத்தனர்;
வடக்கினில் நின்றோன் வரன்முறை யாகக்
கடுக்கவின்[30] கண்டன்[31] தென்றிசை நோக்கி
அடுக்க வந்துவந் தாடுதல் ஏனெனின்
தொடுக்கும் பழந்தமிழ்ச் சுவையினை மாந்தவே.
அறைந்தனர் இவ்வணம் அருட்பரஞ் சோதி[32];
கண்ணுதற் கடவுள் கழக[33]மோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்து பசுந்தமிழ் ஆய்ந்தனன்;
வாத வூரன்[34] ஓதிய வாசகம்
தீதுறா வண்ணம் தென்னா டுடையவன்
ஏட்டில் எழுதி நாட்டிற் களித்தனன்:

அர்ச்சனை பாட்டே ஆதலின் நம்மைச்
சொற்றமிழ் பாடெனச் சுந்தரன் றன்பால்
பற்றுடன் சென்று பைந்தமிழ் வேண்டினன்;
வழிபடு தமிழை விழைகுவர் இறைவரென்
றெழிலுற உணர்த்திட இவையிவை சான்றாம்:
முன்னோர் சொன்ன முடிபினைக் கொள்க!
பின்னோர் நம்மைப் பேணுதல் வேண்டும்'
........................................................
‘துறைதொறும் துறைதொறும் தூயநற் றமிழே
ஆட்சி புரியும் மாட்சிமை வேண்டும்'
‘ஆட்சியின் பெயரால் அயன்மொழி புகுதலைச்
சான்றோர் வெறுப்பர் தமிழகம் மறுக்கும்
ஆன்றமைந் தடங்கிய அறவோர் கொதிப்பர்
ஆதலின் அரசியல் ஆயத் துள்ளீர்
மேதகு பெரியீர் ஆவன புரிக'
...................................................

[பூங்கொடி]


(‘பூங்கொடி’ காப்பியத்தில், ‘சொற்போர் நிகழ்த்திய காதை' எனும் பகுதியிலிருந்து எடுக்கப் பெற்ற சிலவரிகள் மட்டும் இங்கு தரப்பெற்றுள்ளன.)

  1. உறையுநர் - வாழ்பவர்
  2. எண்ணிலர்-கணக்கிலாதவர்
  3. செப்புவ - சொல்பவை
  4. மாந்தன் - மனிதன்
  5. முனிய - வெறுக்க
  6. பேணார் -பேணாதவர்.
  7. யாய்-தாய்
  8. மேவரும்-விரும்பத்தகாத
  9. புன்மையோ?-இழிவோ
  10. என்னயோ?-ஏனோ?
  11. தணிந்திலர் -அடங்கினாரிலர்
  12. நெக்குநெக்குருகி-மிக இளகி
  13. சாலுமேல் - போதுமெனில்
  14. காற்கூறு - கால்பங்கு
  15. வாய்மதம் - வாய்ச்செருக்கு
  16. அள்ளுற - வாயுற
  17. ஆரூர் நம்பி - சுந்தரர்
  18. பரவை - பரவைநாச்சியார்
  19. இடங்கர் - முதலை
  20. கதவம்-கதவு
  21. சுருட்டு - (படுக்கைச்) சுருள்
  22. கரவுரை - வஞ்சனை மொழி
  23. கடகரி - மதயானை, உரியன்
  24. அதளன் - தோலாடையன்
  25. விடைக்கொடி -எருக்கொடி
  26. வேம்பலர் - வேப்பம்பூ
  27. மாறன்-பாண்டியன்
  28. மடவரல்-இளமைமிகும்
  29. குருபரர்-குமரகுருபரர்
  30. கடுக்கவின்-நஞ்சின் அழகு
  31. கண்டன்-கழுத்தினன்
  32. பரஞ்சோதி-திருவிளையாடற் புராண ஆசிரியர்
  33. கழகம்-தமிழ்ச்சங்கம்
  34. வாதவூரன்-மாணிக்கவாசகர்.