முதற் குலோத்துங்க சோழன்/அவைக்களப்புலவர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பன்னிரண்டாம் அதிகாரம்

குலோத்துங்கனுடைய அவைக்களப்புலவர்


னி, குலோத்துங்கன் காலத்துச் சிறந்து விளங்கிய புலவர் பெருமான் கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார் ஆவர். இவரது வரலாற்றை அடியிற் சுருக்கி வரைவாம்.

இப்புலவர் பெருந்தகையார் சோழமண்டலத்திலே கொரடாச்சேரி புகைவண்டி நிலையத்துக்கு அண்மையிலுள்ள தீபங்குடி என்னும் ஊரின்கண் பிறந்த நல்லிசைப் புலவராவர். இவரது குலமும் சமயமும் நன்கு புலப்படவில்லை. இவர் பெரும் புலமை படைத்தவராய் நம் குலோத்துங்க சோழனைக் காணவேண்டி அவனது அவைக்களத்தை அடைந்தபோது அவ்வரசன் 'நமது. ஊர் யாது?' என்று வினவ,

செய்யும் வினையும் இருளுண் பதுவும்
தேனும் நறவும் ஊனும் களவும்
பொய்யும் கொலையும் மறமுந் தவிரப்
பொய்தீர் அற நூல் செய்தார் தமதூர்
கையும் முகமும் இதழும் விழியும்
காலும் நிறமும் போலுங் கமலம்
கொய்யும் மடவார் கனிவா யதரங்
கோபங் கமழும் தீபங் குடியே.

என்று தம்புலமைக்கேற்பப் பாடலால் விடைகூறினர். இச்செய்தி, தமிழ் நாவலர் சரிதையால் அறியப்படுகின்றது. அரசன் இவரது புலமைக்கு வியந்து தன் அவைக்களப்புலவராக இவரை இருக்கச் செய்தனன் என்று தெரிகிறது.

இவர் அரசனுக்கு விடைகூறிய பாடலில், பொய் கொலை முதலியன நீக்குதலையும், சமணர்க்குச் சிறந்த இரவுண்டல் தவிர்தலையும், தமதூர் சைனக்கடவுளின் தலமாயிருக்கும் சிறப்பையும் எடுத்துரைத்துப் புகழ்ந் திருத்தலால் இவர் சைனமதப் பற்றுடையவராயிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலப்படுகின்றது. இவர் தாம் பாடியுள்ள கலிங்கத்துப்பரணியில் கடவுள் வாழ்த்து என்ற பகுதியில் சிவபெருமான், திருமால், நான் முகன், சூரியன், கணபதி, முருகவேள், நாமகள், துர்க்கை , சத்த மாதர்கள் என்ற இன்னோர்க்கு வணக்கங்கூறியிருத்த லாலும் இவர்களுள் சிவபெருமானுக்கே முதலில் வணக்கங்கூறியிருத்தலாலும் இவர் பரணிபாடியகாலத்தில் சைவமதப் பற்றுடையவராக மாறி இருத்தல் வேண்டுமென்பது நன்கு விளங்குகின்றது. ஆகவே, இவர் முதலில் சைன மதப் பற்றுடையவராயிருந்து சைவமதத் தினனாகிய குலோத்துங்கசோழனையடைந்து அவனது அவைக்களப் புலவராயமர்ந்த பின்னர், சைவமதப் பற்றுடையவராயினார் போலும்.

இனி, இப்புலவர் தம்முடன் வாதம்புரிவான் போந்த தென்னாட்டுப்புலவர் சிலரை வென்ற காரணம் பற்றி, 'சயங்கொண்டார்' என்றழைக்கப் பெற்றனர் என்பர். ஆயின் இவரது இயற்பெயர் யாதென்பது இப்போது தெளியக்கூடவில்லை.

'கலிங்கரைத் தொலைத்து வாகைமிலைந்த குலோத்துங்கன் இப்புலவரை நோக்கி, ' புலவீர்! யானும் சயங் கொண்டானாயினேன்' என்றனன். உடனே புலவர், ' அங்ஙனமாயின், சயங்கொண்டானைச் சயங்கொண்டான் பாடுதல் மிகப் பொருத்தமுடைத்தன்றோ!' என உரைத்துப்போய், சின்னாட்களில் ' கலிங்கத்துப்பரணி' என்ற ஓர் அரிய நூலை இயற்றிவந்து அரசனது அவைக்களத்தே அரங்கேற்றினர். அப்போது அப்பரணி நூற் பாடல்களைப் பரிவுடன் கேட்டுக்கொண்டு வீற்றிருந்த வேந்தர்பெருமான் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும். பரிசிலாகப் பொற்றேங்காய்களை ஒவ்வொன்றாக உருட்டித்தந்து இவரையும் இவரியற்றிய நூலையும் பெரிதும் சிறப்பித்தனன்.

இக்கதை எவ்வாறாயினும், இப்புலவர், தாம் அரசன் பாற்கொண்ட பேரன்பின் பெருக்கத்தால் அவனது கலிங்கவெற்றியைச் சிறப்பிக்கக் கருதி, ' கலிங்கத்துப் பரணி' என்ற நூல் பாடினரெனக் கோடலில் இழுக் கொன்றுமில்லை. பரணி நூல்கேட்ட வளவர்பெருமானும் புலவர்க்குத் தக்கவாறு பரிசில் அளித்துப் பாராட்டியிருத்தலும் கூடும்.

இனி, இவரியற்றிய பரணி சொற்பொருள் நயங்கள் நன்கமையப்பெற்று நிலவுதலால், இவரைப் 'பரணிக் கோர் சயங்கொண்டான் ' என்று முற்காலத்திய அறிஞர் புகழ்ந்துரைப்பாராயினர். சிலப்பதிகார உரையாசிரிய ராகிய அடியார்க்கு நல்லாரும் இப்பரணியிலுள்ள சில பாடல்களைத் தம் உரையில் மேற்கோளாக எடுத்து ஆண்டிருத்தலோடு இதன் ஆசிரியராகிய சயங்கொண்டாரைக் 'கவிச்சக்கரவர்த்தி' என்றும் புகழ்ந்துள்ளார். புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன் மகனும் தம்பால் தமிழ் நூல்களைக் கற்றுத் தெளிந்த வனுமாகிய இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது தாம் பாடிய பிள்ளைத்தமிழில் ' பாடற் பெரும்பரணி தேடற் கருங்கவி கவிச்சக்கரவர்த்தி பரவச் செஞ்சேவகஞ்செய்த சோழன் திருப்பெயர செங்கீரையாடியருளே' என்று கூறி நம் கலிங்கத்துப்பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டாரைக் கவிச்சக்கரவர்த்தி என்று மனமுவந்து பாராட்டியிருத்தல் ஈண்டு அறியத்தக்கதொன்றாம். விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசசோழன் ஆகிய மூன்று மன்னர் களாலும் பெரிதும் பாராட்டப்பெற்றுக் கவிக்சக்கரவர்த்தி என்ற பட்டமும் எய்தி மிக உயரிய நிலையில் வீற்றிருந்த நல்லிசைப் புலவராகிய ஒட்டக்கூத்தர் ஆசிரியர் சயங்கொண்டாரிடத்து எத்துணை மதிப்பும் அன்பும் உடையவராயிருந்தனரென்பது மேற்கூறிய வற்றால் இனிது விளங்கா நிற்கும்.

இனி, இப்பரணியில் பண்டைச் சோழவேந்தர் களின் வரலாறுகள் கூறப்பட்டிருத்தலால் சோழரைப் பற்றி ஆராய்வார்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்பது திண்ணம். அன்றியும், பண்டைக்கால வழக்க ஒழுக்கங்களுள் பலவற்றை இந்நூலிற் காணலாம்.

நமது சயங்கொண்டார் வணிகர்மீது ' இசையாயிரம்' என்ற நூலொன்று பாடியுள்ளனரென்று தமிழ் நாவலர் சரிதை உணர்த்துகின்றது. அந்நூல் இது போது கிடைக்கப் பெறாமையின் இறந்ததுபோலும். அன்றியும் ' விழுப்பரையர் ' என்ற ஒரு தலைவர்மீது ' உலாமடல்' என்னும் நூலொன்று பாடியுள்ளனர் என்று தெரிகிறது. சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் நமது சயங்கொண்டாரேயாவர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

இனி, கவிகுமுதசந்திர பண்டிதராகிய திருநாராயண பட்டரென்பார் கி. பி. 1097-ல் குலோத்துங்க சோழ சரிதை என்ற நூலொன்று இவ்வேந்தன் மீது இயற்றி, புதுச்சேரியைச் சார்ந்த திரிபுவனியென்ற ஊரில் இறையிலிநிலம் பரிசிலாகப் பெற்றிருப்பது ஈண்டு அறியத்தக்கதாகும்.[1]  1. 1. Ins. 198 of 1919.