உள்ளடக்கத்துக்குச் செல்

முதற் குலோத்துங்க சோழன்/குணச்சிறப்பு

விக்கிமூலம் இலிருந்து

ஒன்பதாம் அதிகாரம்
குலோத்துங்கனது குணச்சிறப்பு


ம் குலோத்துங்கன் ஒரு செங்கோல் வேந்தனுக்குரிய எல்லா நற்குணங்களையும் ஒருங்கே படைத்தவன். இவன்பாற் காணப்படும் உயர்குணம் பலவுள் முதலாவதாக வைத்துப் பாராட்டத்தக்கது இவனது கடவுள் பத்தியேயாகும். சிறப்பாகச் சிவபெருமானிடத்து இவன் ஒப்பற்ற பத்தியுடையவனாய் ஒழுகிவந்தவன் என்பது முன்னர் விளக்கப்பட்டது. அன்றியும், தன் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தினின்று புறப்பட்டுக் காஞ்சிமா நகரை நோக்கிச் செல்பவன், தில்லையம்பதிக்குப் போய்ப் பொன்னம்பலத்திலே நடம்புரியும் முக்கட்பெருமானை வணங்கி, அவரது இன்னருள் கொண்டு வடதிசை ஏகினான் என்று கலிங்கத்துப்பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார் கூறியிருப்பது இவனது சிவ பத்தியின் மாண்பை இனிது விளக்குகின்றது.'[1]


இனி, அடுத்துப் புகழ்தற்குரியதாய் இவனிடத்து அமைந்திருந்த சிறந்த குணம் இவனது வீரத்தன்மையேயாம். இவன் இத்தமிழகம் முழுமையும் இதற்கப்பாலுள்ள கங்கம், கலிங்கம், கொண்கானம், சிங்களம், கடாரம் முதலான பிற நாடுகளையும் தன்னடிப்படுத்திப் புகழுடன் ஆண்டுவந்த பெருவீரன் என்பதை முன்னரே கூறியுள்ளோம். ஆகவே, இவனை இப்பரதகண்டத்தின் பெரும்பாகத்திலும் இதனைச் சூழ்ந்துள்ள பிறவிடங்களிலும் தன் வெற்றிப் புகழைப் பரப்பிய வீரர் தலைமணி என்றுரைத்தல் சிறிதும் மிகைப்படக் கூறியதாகாது. இவனது படைத்தலைவர்களும் அமைச்சர்களும் இவனைப் போலவே வீரத்தன்மை வாய்ந்தவர்களாய் இவனுக்கு உசாத்துணையாய் அமர்ந்து இவனது வென்றிமேம்பாடு யாண்டும் பரவுதற்குக் காரணமாயிருந்தனர் என்பது ஈண்டு அறியத்தக்கது. அன்னோருள் சிலரது வரலாற்றை மற்றோர் அதிகாரத்திற் காணலாம்.

இவன் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த வேந்தன் ஆவன் ; சங்கத்துச் சான்றோர் நூல்களையும் பின்னுள்ளோர் செய்த சிந்தாமணி முதலாய நூல்களையும் நன்கு பயின்றிருந்தான். ஆசிரியர் சயங்கொண்டாரும் இவனைப் பண்டித சோழன் என்று கலிங்கத்துப் பரணியில் ஓரிடத்தில் குறித்துள்ளார்.[2]இவன் புலவர்களது கல்வித் திறத்தை அளந்து கண்டறிதற்குரிய பேரறிவு படைத்தவனாயிருந்தமையின் அன்னாரிடத்துப் பெருமதிப்பும் அன்பும் வைத்திருந்தான். அன்றியும், அவர்கட்கு வேண்டியன அளித்துப் போற்றியும் வந்தான். எனவே, இம்மன்னன் புலவர்களைப் புரந்துவந்த பெருங்கொடை வள்ளல் ஆவன். இவன் ' கலையினொடுங் கவிவாணர் கவியினொடும் இசையினொடும் '[3]

பொழுது போக்கி வந்தனன் என்பர் கவிச்சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டார். இவன், செந்தமிழ்ப் புலமையுடையவனாயிருந்தமையோடு வடமொழிப் பயிற்சியும் பெற்றிருந்தான். அன்றியும், இவன் வேங்கி நாட்டில் ஆட்சிபுரிந்தபோது அந்நாட்டு மொழியாகிய தெலுங்கே அரசாங்கமொழியாக அமைந்திருந்தது. வேங்கி நாட்டிலுள்ள இவனது கல்வெட்டுக்களும் தெலுங்கு மொழியில் காணப்படுகின்றன. எனவே, இவன் தெலுங்கு மொழியையும் கற்றவனாதல் வேண்டும். ஆகவே, தமிழ், ஆரியம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இவ்வேந்தன் நல்ல பயிற்சி யுடையவனாயிருந்தனன் என்பது நன்கு புலப்படுகின்றது.

அன்றியும் இவ்வேந்தன் இசைத் தமிழ்நூல் ஒன்று இயற்றியுள்ளனன் எனவும் அந்நாளில் இசைவாணர்களாகிய பாணர்கள் இவ்வேந்தனது இசை நாலைப் பயின்று நன்குபாடி வந்தனரெனவும் இவன் தேவிமார்களுள் ஒருத்தியாகிய ஏழிசைவல்லபி என்பாள் தன் கணவன் இயற்றிய இசைநூலைப் பயின்று நன்கு பாடி வந்தனள் எனவும் கலிங்கத்துப்பரணி ஆசிரியர் கூறியுள்ளார்.

நம் வளவர் பெருமான் நூலறிவு எய்தியிருந்ததோடு இயற்கையில் நுண்ணறிவும் அமையப்பெற்றிருந்தான் ; நல்லறிஞர்களோடு அளவளாவி அறியவேண்டியவற்றை நன்கறிந்து பேரறிஞனாய் விளங்கினான். ஆசிரியர் சயங் கொண்டார் இவனை ' அறிஞர் தம்பிரான் அபயன் '! என்று கலிங்கத்துப்பரணியில் கூறியிருத்தலும் இச்செய்தியை இனிது வலியுறுத்தும்.

இனி, இவ்வேந்தனது செங்கோற் பெருமையும்: பெரிதும் மதிக்கத்தக்கதாகும். இவன் ' குடியுயரக்கோல் உயரும்' என்பதை நன்குணர்ந்தவனாதலின் தன் நாட்டி லுள்ள குடிகள் எல்லோரும் வளம் பெறுதற்கேற்ற செயல்களைச் செய்து அவர்களது பேரன்பிற்குரியவன் ஆயினன். இவன், தன் குடிமக்கள் பண்டைக்கால முதல் அரசர்க்குச் செலுத்திவந்த சுங்கத்தைத் தவிர்த்து, அவர்களது வாழ்த்திற்கும் புகழுரைக்கும் உரிமைபூண்டு விளங்கிய செய்தி முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இவனது செங்கோற் சிறப்பை அபயன் ' இமயத்தினைத் திரித்தகோலில் வளைவுண்டு - நீதிபுனை செய்ய கோலில் வளைவில்லையே'[4] என்று பாராட்டிக் கூறியுள்ளனர் புலவர் பெருமானாகிய சயங்கொண்டாரும்.

அன்றியும், இவன் அஞ்சாமை, ஈகை, ஊக்கம், சுற்றந்தழுவுதல், காலமறிந்து கருமமுடிக்கும் ஆற்றல் முதலான அருங்குணங்கள் படைத்த பெருந்திறல் வேந்தனாய் அந்நாளில் நிலவினான். சுருங்கவுரைக்குமிடத்து, இம்மன்னர் பெருமான், தன்னடி வந்து பொருந்தினோர் எவரேயாயினும் தண்ணளி சுரந்து அவர்களை வாழ்விக்கும் வண்மையும், எதிர்த்தோர் கூற்று வெகுண்டன்ன ஆற்றலுடையவராயினும் அன்னோரைப் போரிற் புறங் காணும் வீரமும் உடையவனாய் விளங்கிய பெருந்தகை யாவன் என்று கூறி இவ்வதிகாரத்தை ஒருவாற்றான் முடிக்கலாம்.



  1. 1. க. பரணி -- தா. 236.
  2. 2. க. பரணி - தா. 519.
  3. 3. ஷ 264.
  4. 5. க. பரணி- தா. 260.