முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்/4. துவ்வாப் பத்து
Appearance
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது.
2. கழி தறுகண்மை பேடியின் துவ்வாது.
3. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
4. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது.
5. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது.
6. பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது.
7. கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது.
8. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது.
9. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது.
10. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.
- கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுள் பழியுடையவரிடம் உள்ள செல்வம், வறுமையைப் போலவே துய்க்கப் படாது (நுகரப்படாது).
- அளவுக்கு மீறிய மறம் (வீரம்) காட்டுதல், பேடித் தன்மையைப் போலவே நல்ல பயன் தராது.
- மானத்தோடு பசித்திருப்பதை விட, நாணம்-மானம் இன்றி, மற்றொருவரிடம் வாங்கி உண்பது உண்மையான உணவாகாது.
- உண்மையான விருப்பம் இன்றிக் கடமைக்கு ஈவது, ஈயாத கஞ்சத்தனத்தைப் போலவே பெறத் தகுதியற்றது.
- செய்யக் கூடாத செயல்களை மேற்கொண்டு செய்வது, மடத்தனமாய்க் கருதப்பட்டு, நல்ல பயனை நல்காது.
- பொய்யான உள்ளத்துடன் நடித்துச் செய்யும் உதவி, கீழ்மையினும் கீழ்மையானது.
- ஒருவருடன் நட்பு கொண்டு, அவருக்குத் துன்பம் வந்தபோது நழுவி விடுதல் கொடுமையினும் கொடுமையாகும்.
- அறிவில்லாத மூடனுடைய துணை, தனிமையினும் தாழ்ந்தது - பயனில்லாதது.
- மிகவும் தளர்ந்து, தாழ்ந்து, இழிந்த நிலையில் உள்ள முதுமை, சினம் எந்த நற்பயனையும் அடையச் செய்யாதது போல், தக்க பயனை எய்தச் செய்யாது.
- ஒருவர் தம் செல்வத்தைத் தாம் மட்டும் துய்த்து மகிழ்தல், ஒன்று மற்ற ஏழைமையைப் போல் துய்க்காததாகவே கருதப்படும்.