உள்ளடக்கத்துக்குச் செல்

முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்/6. இல்லைப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
6. இல்லைப் பத்து


1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
   மக்கள் பேற்றின் பெரும்பேறு இல்லை.

2. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை.

3. வாய்ப்புடை வழக்கின் நல்வழக்கு இல்லை.

4. வாயா வழக்கின் தீவழக்கு இல்லை.

5. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை.

6. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை.

7. நசையின் பெரியதோர் நல்குரவு இல்லை.

8. இசையின் பெரியதோர் எச்சம் இல்லை.

9. இரத்தலி னூஉங்கு இளிவரவு இல்லை.

10. இரப்போர்க்கு ஈதலின் எய்தும்சிறப்பு இல்லை.

6. இல்லை - இல்லை எனக் கூறும் பத்து மொழிகள்
  1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்கு எல்லாம், பிள்ளைப் பேற்றை விட பெரிய பேறு வேறு இல்லை.
  2. உலக நடைமுறை அறிந்து ஒருவர்க்கு ஒருவர் உதவி வாழ்வதைக் காட்டிலும் தக்க செயல் - தக்க வரவு இல்லை.
  3. நல்ல வாய்ப்பு - வசதி தரும் பழக்க வழக்கத்தைக் காட்டிலும், சிறந்த பழக்க வழக்கம் இருக்க முடியாது.
  4. நல்ல வாய்ப்பு - வசதி தராத பழக்க வழக்கத்தைக் காட்டிலும் வீண் செயல் வேறு இன்று.
  5. தன்னால் செய்ய முடிந்த நல்ல செயலையோ - கொடையையோ மறைத்தலினும் கொடுமை வேறொன்றும் இல்லை.
  6. நல்லறிவும் நல்லுணர்ச்சியும் இல்லாத மரக்கட்டையாய் வாழ்தலை விட வேறு சாவு இல்லை. இந்த வாழ்வே சாவுக்குச் சமம்.
  7. பேராசையைக் காட்டிலும், பெரிய வறுமைத்தனம் வேறு இருக்க முடியாது.
  8. நமக்குப் பின் விட்டுப் போகக் கூடிய எச்சப்பொருள் புகழினும் வேறேதும் இன்று.
  9. ஒருவரிடம் சென்று கெஞ்சிக் கேட்டு இரத்தலைக் காட்டிலும், இழிவு வேறு யாதும் இலது.
  10. தம்மிடம் வந்து ஒன்று கேட்டு இரப்பவர்க்குக் கொடுப்பதை விட, உயர்ந்த சிறப்பு வேறு இருத்தற்கு இல்லை.