முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்/8. எளிய பத்து
Appearance
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
புகழ் வெய்யோர்க்குப் புத்தேள்நாடு எளிது.
2. உறழ் வெய்யோருக்கு உறுசெரு எளிது.
3. ஈரம் வெய்யோர்க்கு நன்கொடை எளிது.
4. குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது.
5. துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது.
6. இன்பம் வெய்யோர்க்குத் துன்பம் எளிது.
7. உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது.
8. பெண்டிர் வெய்யோர்க்குப் படுபழி எளிது.
9. பாரம் வெய்யோர்க்குப் பாத்துண் எளிது.
10. சார்பு இலோருக்கு உறுகொலை எளிது.
- கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்களுள், புகழான செயல்களை விரும்பிச் செய்பவர்க்குத் தேவர் வாழும் இன்ப உலகம் எளிதில் கிடைக்கும்.
- போரை ஏற்று உண்மையாய்ப் போரிடுபவருக்குப் பெரிய போரில் வெற்றி கிடைத்தல் எளிது.
- குளிர்ந்த உள்ளன்பு உடையவர்கட்கு, பிறர் விரும்பும் பொருளைக் கொடுத்தல் எளிது.
- பிறர் மேல் கோள் சொல்லுதலை விரும்புபவர், எந்த மறை பொருளையும் (இரகசியத்தையும்) எளிதில் வெளியிட்டு விடுவர்.
- உழைப்பினால் உண்டாகும் துன்பத்தைப் (சிரமத்தைப்) பொருட்படுத்தாது உழைப்பவர்க்கு இன்பம் கிடைப்பது எளிது.
- உழைக்காமல் இன்பத்தை மட்டுமே விரும்புபவர்கள், எளிதில் துன்பம் எய்துவர்.
- பெருந் தீனியை விரும்பி உட்கொள்பவர்க்கு, மிகுந்த பெரிய நோய்கள் எளிதில் உண்டாகும்.
- தன் மனைவியில்லாத மற்ற பெண்களை விரும்புபவர்க்குப் பெரும் பழி நேர்தல் எளிது.
- பிறர் பாரத்தைத் (பிறர் சுமையைத்) தாங்கிக் காக்க வேண்டும் என்னும் அருள் உடையவர்கள், மற்றவர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுதல் எளிய செயலே; முடியாததன்று.
- எந்தப் பொறுப்பும் கவலையும் இல்லாதவர்க்கு, பிறரைப் படுகொலை செய்தல் எளிது.