உள்ளடக்கத்துக்குச் செல்

முத்தம்/அத்தியாயம் 9

விக்கிமூலம் இலிருந்து

9

வாழ்க்கை சாரமற்றது; வரண்ட பாலை அது என்று எண்ணி வாழ்ந்த ரகுராமனுக்கு, வாழ்வு பசுமையானதாக முடியும் ; தென்றல் தவழும் சோலையாகவும், குளிர் பூம்புனல் சுனையாகவும் மாற முடியும் என நிரூபித்து வந்தது, பத்மாவின் நட்பும், அவள் காட்டி வந்த அன்பும்.

முதலில் சாதாரண அறிமுகம் என நினைத்தான். பிறகு இனிய நட்பு என எண்ணினான். பின் ஒத்த மனமுடைய, உயர்ந்த நோக்குடைய, இருவரின் ஆத்மீக அன்பு என்று நம்பினான். என்றாலும், காலப் போக்கிலே அறிவையும், ஆத்மீக நினைவையும் பின்னுக்கு நிறுத்தி, உணர்வு வெற்றிகரமாக முன்னேறுகிறது என்பதை அவன் புரிந்து கொண்டான்.

அவளும் அவனும் எதிர் எதிராக இருந்து பேசிச் சிரித்து மகிழும்போது ஆத்ம இன்பத்தை விட புலன்கள்தான் அதிக இன்பம் பெறுகின்றன; இன்னும் அதிகமான இன்பம் பெறவேண்டும் என்ற பசி வளர்கிறது என்பதை அவன் புரியத் தொடங்கினான். பத்மாவின் சுழலும் கண்கள், எடுப்பான நாசி, அழகுக் கன்னங்கள், அமுத ஊற்றுப்போன்ற உதடுகள், அவள் சிரிப்பு, அவள் பேச்சு, அவள் கழுத்து, அவள் தேகத்தின் - பெண்மையின் இளமையும் வளமும் மினுமினுப்பும் நிறைந்த-அங்கங்கள் ஒவ்வொன்றும் அவனுக்குக் கிரக்கம் ஏற்படுத்தின. அவனைப்பித்தேற்றிப்படாத பாடு படவைத்தன. இவை உணர்வின் பிசகு என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். எனினும், முற்றி விட்டது!. இனி ஒடுக்கமுடியாது என உணர்ந்தான்.

பத்மா தன்னைப் பற்றி என்ன நினைப்பாள்; எப்படி அவள் முகத்தில் விழிப்பது தானும் மற்றவர்களைப்போல வெறித்தனம் மிக்கவனே; களங்க நினைவுக்கு இடமே தராத புனிதனல்ல; ஆத்மீகக் காதலுக்கு உகந்த உத்தமன் அல்ல என்றறிந்ததும் 'சீ' இவ்வளவுதானா!' என்று இகழமாட்டாளா" என நினைத்தான்.

அவனுக்கு ஐயம் பிறந்தது. எனக்கே இப்படி என்றால், பல வருஷங்களாக ஒதுங்கி வாழ்ந்து ஓரளவு கட்டுப்பாடுகளை நிர்ப்பந்தமாக அனுஷ்டித்தே தீரவேண்டிய நிலையிலிருந்த எனக்கே இக் கதியென்றால், பத்மாவுக்கு? அவளோ செல்வத்தில் வளம் எதுவும் குறையாமல் வாழ்ந்துவரும் மங்கை. இளம் பருவம். அவள் உண்மையிலேயே உணர்ச்சிகளை வென்றுவிட்டாளா? அது எப்படி சாத்தியம்?—இந்த எண்ணம் எழவும், அவளை, அவள் செயல்களை நன்றாக கவனித்தான்.

பத்மாவின் பேச்சுக்கும், போக்குக்கும் பல மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன; உணர்ச்சியின் லீலைகள்தான் அவை என்பதை அவன் புரிந்து கொண்டான். அவள் தோல்வி—அவனுடைய தோல்வியும்தான்… அவனுக்கு சந்தோஷமே தந்தது. ‘சரி நடக்கிறபடி நடக்கட்டும்!’ என்று விட்டு விட்டான். ஆகவே, அவனும் இயல்பான ரீதியிலே, விளைய வேண்டிய முடிவை எதிர் நோக்கியிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=முத்தம்/அத்தியாயம்_9&oldid=1663361" இலிருந்து மீள்விக்கப்பட்டது