முல்லைக்காடு/நமது நாடகம், சினிமா

விக்கிமூலம் இலிருந்து

நமது நாடகம், சினிமா

சீரியநற் கொள்கையினை எடுத்துக் காட்டச்
சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும்.
கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால்
கொடுமை இதைவிட வேறே என்ன வேண்டும்?
பாராத காட்சியெலாம் பார்ப்ப தற்கும்,
பழமையினை நீக்கி நலம் சேர்ப்ப தற்கும்
ஆராய்ந்து மேனாட்டார் நாடகங்கள்
அமைக்கின்றார் முன்னேற்றம் அடைகின் றார்கள்.
ஒருநாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி
உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்ப தற்கும்,
பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்
பிடித்த பிடியில் முடித்துத் தீர்ப்ப தற்கும்,
பெருநோக்கம் பெருவாழ்வு கூட்டு தற்கும்,
பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்! என்றன்
திருகாட்டில் பயனற்ற நாடகங்கள்
சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்!
தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பா திப்போர்
தமிழ்ப்பாஷையின் பகைவர்; கொள்கை யற்றோர்;
இமயமலை யவ்வளவு சுயந லத்தார்;
இதம் அகிதம்சிறிதேனும் அறியா மக்கள்!

“தமைக்காக்க! பிறர்நலமும் காக்க” என்னும்
சகஜகுண மேனுமுண்டா? இல்லை. இந்த
அமானிகள்பால் சினிமாக்கள் நாட கங்கள்
அடிமையுற்றுக் கிடக்குமட்டும் நன்மை யில்லை.
முன்னேற்றம் கோருகின்ற இற்றை நாளில்
“மூளிசெயல் தாங்காத நல்லதங்கை
தன்னேழு பிள்ளைகளைக் கிணற்றில் போட்ட”
சரிதத்தைக் காட்டுகின்றார் சினிமாக் காரர்!
இந்நிலையில் நாடகத்தின் தமிழோ, “காதை
இருகையால் மூடிக்கொள்” என்று சொல்லும்.
தென்னாட்டின் நிலைநினைத்தால் வருந்தும் உள்ளம்!
செந்தமிழின் நிலைநினைத்தால் உளம்வெடிக்கும்!