முஸ்லீம்களும் தமிழகமும்/கிழக்கும் மேற்கும்
1
கிழக்கும் மேற்கும்
ஈராயிரத்து ஐநூறு ஆண்டுகட்கு முன்னரே, தமிழகத்திற்கும் கிரேக்க, உரோம, பாபிலோனிய, பாரசீக, அரபு நாடுகளுக்குமிடையே நல்ல வணிகத் தொடர்புகள் இருந்ததை வரலாற்றுக் குறிப்புகள் விளம்புகின்றன. நமது நாட்டின் தள்ளாவிளையுளை பண்டமாற்றிலே பெற்றுக் கொண்ட மேனாட்டு வணிகர்கள், அவைகளுக்குப் பகரமாக தங்கள் நாட்டின் புதுமைப் பொருட்களை தமிழ்நாட்டிற்கு வழங்கினர். தமிழகத்தின் அகிலும் துகிலும், பருத்தியணியும் பவளமணியும், முத்தும் மிளகும், மேனாடுகளில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன.[1] கிரேக்க நாட்டு மதுரசங்கள், கண்ணாடிக் கலசங்கள், ஈயம் தகரம், ஆகியவைகளும் தங்க, வெள்ளிக் காசுகளும் தமிழர்களைக் கவர்ந்தன. எகிப்து நாட்டுக் கடற்பட்டினமான அலக்ஸாந்திரியாவை மையமாகக் கொண்டு அரபு நாடுகள் வழியாக, கீழ்நாடுகளுக்கும், பாலத்தினம் வழியாக கிரேக்க நாட்டிற்கும், வணிகச் சாத்து வழிகள் சென்றன.[2]
இவை வரலாற்றின் கால வரம்பிற்குட்படாத காலந்தொட்டு இருந்து வந்ததை விவிலியம் (பைபிள்) சான்று பகர்கின்றது. கி.மு. 1000-ல் ஸிரியா நாட்டில் மதி மன்னனாக விளங்கிய ஸாலமன், ஜெருஸேலம் நகரில் அமைத்து இருந்த பிரம்மாண்டமான, தேவாலயத்தைக் காண்பதற்குச் சென்ற ஏமன் நாட்டு ஷேபா அரசியார், அந்த மன்னனுக்கு தென்னாட்டில் சிறந்த வாசனைப் பொருட்களையும் அகிலையும் துகிலையும் பொன்னுடன் அன்பளிப்பாக அளித்ததை “புதிய ஏற்பாடு” விவரித்துள்ளது.[3] கிரேக்க நூலாசிரியரான ஹெக்டரியஸ் மிலேட்டஸ் கி மு 549-486 இந்திய நாட்டின் பல பட்டணங்களை சிறப்பாக மேற்கு கிழக்கு கடல் துறைகளை குறிப்பிட்டு இருப்பதால், அந்தக் கால கட்டத்தில் இந்தியாவிற்கும் கிரேக்கத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே நிகழ்ந்த விரிவான வணிகத்தின் தன்மையை ஊகிக்க உதவுகிறது. இதனைப் போன்று, ரோம் உள்ளிட்ட மத்யதரைக்கடல் நாடுகளுடன் தமிழகம் தொடர்பு கொண்டு இருந்ததை, கரூர், கோவை, மதுரை, அழகன்குளம் ஆகிய ஊர் அகழ்வுகளில் கிடைத்த ரோம நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன. அங்ஙனமே, நமது நாட்டுப் பொருட்களும் மேற்கு நாடுகளின் ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்பட்டதை கீழேகண்ட வரலாற்று நிகழ்ச்சிகள் விளக்குகின்றன.
கி.மு. 210-ல் ரோமாபுரியில் இயற்கை எய்திய சைலா என்ற மன்னனது சிதையிலும் நீரோ மன்னனது (கி.மு, 68-54) உறவினரான பாப்போயியின் ஈமச்சடங்கின் பொழுதும், கீழ் நாடுகளில் இருந்து ரோமாபுரிக்கு வரவழைக்கப்பட்ட வாசனைப்பொருட்கள் அனைத்தும் கொட்டப்பட்டு எரியூட்டப்பட்டது.[4] இந்த வாசனைப் பொருட்களுக்கு அடுத்தபடியாக ரோம நாட்டில், தமிழ்நாட்டு முத்துக்கள் இடம் பிடித்திருந்தன. பேரரசர் ஜூலியஸ் ஸீஸர் (கி.மு. 39-14) தனது நண்பரான புருட்டஸின் தாயாருக்கு, 48, 457 பவுன் பெறுமானமுள்ள நன்முத்துக்களை அன்பளிப்பாக வழங்கிய செய்தியும் உள்ளது.[5] பேரழகி கிளியோ பாத்ராவின் காதணிகளில் 1,51,457 பவுன் பெறுமான முத்துக்கள் இடம் பெற்றிருந்தனவாம்.[6] இந்த முத்துக்கள் அன்றைய தமிழகத்தில் சிறப்புற்றிருந்த பட்டினங்களில் இருந்து பெறப்பட்டவை என்பது தெளிவு. அப்பொழுது சேரநாட்டில், கொடுமணம், பந்தர் என்ற கடற்றுறைகள் முத்துக்களுக்கு பெயர் பெற்றிருந்தமை,
“கொடுமனம் பட்ட வினைமா னெடுங்கலம்
பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்” ... ... ... என்ற
அரசில் கிழாரது எட்டாம் பத்து, இயம்புகிறது. இன்னும், அதே நூலின் ஏழாம்பத்திலும், ஒன்பதாம் பத்திலும் இந்த ஊர்களைப் பற்றிய புகழுரைகள் பொதிந்து உள்ளன.[7]
கி.மு. ஐந்தாவது நூற்றாண்டில், பாபிலோனில் பாரசீக, மன்னன் தாரீயஸது ஆட்சியின் பொழுது, வாணிகச் சாத்தாகச் சென்ற தமிழர்கள் அங்கேயே குடியிருப்பு அமைத்து நிலைபெற்று இருந்தனர். எகிப்து நாட்டில், அம்மோன்ரா என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில், தமது கடற்பயணத்தை வெற்றிகரமாக முடித்த தென்னாட்டார் ஒருவர் மேற்கொண்ட வழிபாட்டு நிகழ்ச்சி அந்த நாட்டுக் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது. அலெக்ஸாந்திரியாவிலும் தென்னாட்டார் குடியிருப்பு இருந்ததை அறிய இந்த கல்வெட்டு உதவுகிறது.[8]
கிறிஸ்து சகாப்தம் துவங்கிய பின்னரும், கிழக்கு மேற்கு தொடர்புகள் நீடித்தன. அலக்ஸாந்திரியாவிலும், ஏடனிலும் செல்வம் கொழித்தது. அங்கே அராபியக் குடியேற்றங்கள் பல எழுந்தன. தமிழகத்தில் இருந்து ரோமப் பேரரசு கிளாடியஸ் சீஸர் அவைக்கு அரசியல் தூதுக்குழு வந்ததை கி.பி. 41ல் பிளினி குறித்துள்ளார்.[9]
பருவக்காற்றுகளின் தன்மைகளை விரிவாக ஆராய்ந்து அறிந்த எகிப்திய மாலுமியான உறிப்பாலஸ் கி பி. 45-ல் அரபிய கடல் பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.[10] அதுவரை, ரோம, அராபியக் கப்பல்கள், செங்கடல், பாரசீகக்குடாக்கடல், அராபியக் கடல் வழியாக கடற்கரைப் பகுதிகளில் கரையை ஒட்டியவாறு இந்தியாவுக்கு சென்றன. இவ்விதம் செல்வதில் கப்பல்கள் பாறைகளில் மோதுதல், கடற்கொள்ளைக்கு இலக்காகுதல் போன்ற ஆபத்துக்கள் மலிந்து இருந்தன. ஆனால் உறிப்பாலளின் புதிய வழி, ஆழ்கடலைப் பருவ காலங்களில் நேராகக் கடந்து செல்லு முறையாகும். அராபிய தீபகற்ப முனையான ஸியாகரஸ் என்ற இடத்திலிருந்து தமிழகத்தின் மேற்குக் கரையை அடைய அப்பொழுது நாற்பது நாட்களே ஆயின. பயணம் செய்ய வேண்டிய மொத்த துாரம் 1355 மைல்களாகக் குறைந்தது. காலமும் தொலைவும் குறைந்ததுடன், வாணிபக் குழுவினருக்கு கரையோரப் பகுதிகளில் உள்ள கடற்கொள்ளையரினின்றும் விடுதலையும் கிட்டியது. முன்னர், இந்தியாவின் மேற்கு கரைக்கு ஆண்டு ஒன்றிற்கு, அரேபியாவில் இருந்து இருபது கப்பல்களே சென்று வந்தன. ஆனால் இப்பொழுது அராபிய தீபகற்பத்திலிருந்து நாளொன்றிற்கு ஒரு கப்பல் வீதம் கிழக்கு நோக்கி பயணம் தொடங்கியது.[11] ஜூன் ஜூலை மாதம் மேற்கு நோக்கித் தொடங்கும் கடற்பயணம், தென்கிழக்கு பருவக் காற்று எழுகின்ற டிசம்பர் - ஜனவரி மாதங்களில், முடிவு பெற்று கப்பல்கள் தாயகம் திரும்பின.
கி.பி. முதல் நூற்றாண்டில், கீழ்த்திசையில் பயணம் செய்த “பெரிபுலூஸ்” நூலின் ஆசிரியரது குறிப்புகளும், கி பி. இரண்டாம் நூற்றாண்டில் பயணம் செய்த தாலமியின் பயணக் குறிப்புகளும் இந்த விவரங்களைத் தருகின்றன. உரோமர்களது தமிழ் நாட்டுடனான வாணிபம், அப்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அவர்கள் இங்கு கொணர்ந்து விற்ற சாமான்களைவிட, இங்கிருந்து வாங்கிச் சென்ற சாமான்களின் பெறுமானம், பண்டமாற்று மதிப்பில் கூடுதலாக இருந்தது. அதற்கு ஈடாக, அவர்கள் நாட்டுப் பொற்காசுகளைக் கொடுத்தனர் இங்ஙனம் கீழ்நாட்டுப் புதுமைப் பொருட்களை மிகுதியாக வாங்கிக் கொண்டு சென்றதன் காரணமாக ரோமநாட்டு கருவூலம் வற்றி வறண்டுவிட்டதாக பெட்ரோனியஸ் என்ற ரோம நாட்டு ஆசிரியர் குறித்துள்ளார்.[12] தமிழகத்தை உரோமர்கள் தாமிரிகா என வழங்கினர். தமிழகத்தின் முக்கிய கடற்துறைகளான முசிறி, குமரி, கொற்கை, தொண்டி, புகார், புதுகை, ஆகிய பட்டினங்களையும் கோவை, உறையூர், மதுரை, அழகன் குளம் ஆகிய பட்டணங்களையும் அவர் நன்கு அறிந்து இருந்தனர். இந்தப் பெருநகர்களில் அவர்களது குடியிருப்புகளும் நிறுவப்பட்டு இருந்தன. இந்த நகரங்களில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான உரோம நாணயங்களும், அண்மையில் அரிக்காமேட்டில் அகழ்ந்து எடுக்கப்பட்ட அரிய பண்டங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
நமது பழந்தமிழ் நூற்களான சங்க இலக்கியங்கள் உரோமர்களை யவனர், எனக்குறிப்பிடுகின்றன. அவர்களது நாடும் யவனம் என்ற பொதுச்சொல்லினால் வழங்கப்பட்டது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம்-வாழ்த்துக் காதை “வன்சொல் யவனர் வளநாடு” எனக் குறிப்பிடுகிறது.[13] தமிழ், வழங்கும் பதினேழு நிலங்களில், யவனமும் ஒன்று என அன்று கருதப்பட்டு வந்தது. விஷ்ணுபுராணம், மாளவி காக்கினி மித்திரம் ஆகிய ஸ்மஸ்கிருத இலக்கியங்கள், யவனம், இந்திய நாட்டின் மேற்கு எல்லையில் அமர்ந்திருந்ததாகவும், யவனர்கள் அந்தப் பிராந்தியத்தில் இருந்த பூர்வகுடிகள் எனவும் குறிப்பிட்டுள்ளன. ஏனைய வடமொழி இலக்கியங்களும், யவனர்களை, ஆரியரல்லாத இனத்தினராக, இந்து சமயத்தினின்றும் மாறுபட்டவர்களாக, அந்நியர்களாக, பாரசீகர்களாக, சகரர்களாக, கிரேக்கர்களாக, வர்ணித்துள்ளன. உறிப்ரூ சொல்லான “யோனா” “யோன்” ஆகியவைகளின் ஒன்றின் அடிப்படையில் இருந்து யவன என்ற சொல் தமிழ் வழக்கிற்கு வந்துள்ளது.[14] மேலும், பிராகிருதச் சொல்லான லவன (உப்பு என்ற பொருள்) என்ற மூலத்தினின்றும் மாறுபட்டு இந்தச் சொல் உருவாகி இருக்கலாம் என்பது சில மொழி வல்லுநர் முடிவு.
கி.மு.250-240ஐச் சேர்ந்த அசோகனது புத்த போதனைகளைத் தாங்கிய தூண்களில் “யோனா” என்ற பாலிமொழிச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாவீரன் அலக்ஸாந்தரது சிந்து நதி படையெடுப்பிற்குப் பிறகு, இந்தச் சொல் இந்திய வரலாற்று நூல்களில் கிரேக்கர்களை மட்டும் குறிப்துடன், அவர்களது குடியிருப்புகள் யமுனை ஆற்றிற்கு மேற்கேயும் குஜராத் மாநிலத்திற்கு தெற்கேயும் நிலைத்து இருந்தன என்பதையும் சுட்டுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள “ஜூனாகாத்” என வழங்கப்படும் கடற்கரைப் பட்டினம், யவனர்களது இருப்பிடம் என்ற பொருளில் வழங்கப்பட்ட “யோனாகர்” என்ற சொல்லின் திரிபு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. காரணம் அசோகனது ஆட்சியில் துஸஸ்பா என்ற யவனர். இந்தப் பகுதியில் ஆளுநராகப் பணியாற்றி இருந்ததும் யவனர்கள் இங்கு மிகுந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வந்ததும் ஆகும். இங்கனம், இந்திய நாட்டில நிலைத்துவிட்ட யவனர்கள் 'நம் யவன” என அப்பொழுது வழங்கப்பட்டதாக கர்லா கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.[15]
இதே காலத்திய கடைச்சங்க இலக்கியங்களில், தமிழகம் போன்ற யவனர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. “வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்” என முல்லைப்பாட்டும்,[16] அவர்களது “நன்கலம் தந்த தண்கமழ் தேரலை” புறப்பாட்டும்,[17] அவர்களது “பாவை விளக்கு”[18] “ஒதிம விளக்கு”[19] “மகர வினை” ஆகியவைகளை பெருங்கதையும், “பொன்னொடு வந்து கறியொடு பெயர்ந்த” அவர்களது “வினைமான் நன்கலத்தை” அகப்பாட்டு (எண். 140)ம் குறிப்பிடுகின்றன. மேலும், அவர்கள் “கடிமதில் வாயிற் காவலிற் சிறந்து “இருந்ததை” சிலப்பதிகாரமும் “தண்டமிழ் வினைஞர் தம்முடன் கூடிப்பணிபுரிந்த “யவனத் தச்சரை” “மணிமேகலையும்” சுட்டுகின்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அலக்ஸாந்திரியா பட்டினத்தில் நிகழ்ந்த படுகொலையொன்றின் காரணமாக, அங்கு கிழக்கு மேற்கு நாடுகளின் வணிக மக்கள் நடமாட்டம் குறைந்தது. அத்துடன், ஆடம்பரத்தின் அதீத எல்லையில் இயங்கிக் கொண்டிருந்த ரோமப் பேரரசு கி.பி. 217 ல் வீழ்ச்சி பெறத் தொடங்கியது. அதுவரை கிரேக்க, ரோமர்களுக்கு உதவியாளர்களாக இருந்த அரபிகள், கீழை நாட்டு வணிகத்தை தாங்களே மேற்கொண்டு சிறப்பாக நடத்தி வந்தனர். காரணம் அரபிகளுக்கு வாசனைப் பொருட்களின் மீது இயல்பான ஈடுபாடு இருந்து வந்தது ஆகும். ஆதலால் அவர்களது வாணிகத்தில், புனுகு போன்ற இந்திய நாட்டு வாசனைப் பொருட்களும் இந்திய நாட்டு எஃகினால் தயாரிக்கப்பட்ட போர்வாள்களும் பெரும் இடம் பெற்று இருந்தன.[20] ஆதலால் இஸ்லாம் தோன்றிய ஏழாவது நூற்றாண்டு முதல் யவனர், என்ற தமிழ்ச் சொல் தமிழக இஸ்லாமியரைக் குறிக்க தமிழில் எழுந்த ஒரே சொல் என உறுதியாகிவிட்டது.
இயற்கையாக அமைந்துள்ள உடல்வாகு, ஊட்டம் தரும் உணவுப் பழக்கங்கள், உறுதியான உள்ளம், ஆகிய நல்லியல்புகள் காரணமாக அரபிகள், கடல் தொழிலைச் சிறப்பாக மேற்கொண்டு இருந்தனர். அவர்கள் தொகுத்து வைத்திருந்த புவியியல் செய்திகளும், பல்வேறு நாடுகளின் கடல் வரைபடங்களும், தொன்மையான நூற்களும், அவர்களது திரைகடல் ஓடும் திறமைக்கு தக்க வழிகாட்டிகளாக அமைந்தன. குறிப்பாக, இந்தியாவிற்கு கடல் வழி காணப்புறப்பட்டு, அமெரிக்க நிலப்பரப்பை கண்டுபிடித்த போர்ச்சுக்கல் மாலுமியான கொலம்பஸின் ஆர்வத்திற்கு, முன்னோடியாக இருந்தவை, அரபிகளது புவிஇயல் கொள்கைகளும், கடல் வழி சம்பந்தமான வரைபடங்களுமாகும். அதே ஆர்வத்தினால் உந்தப்பட்டு, ஆப்பிரிக்க பெருங்கண்டத்தை சுற்றி கி.பி. 1498-ல் இந்தியாவின் மேற்குக் கரையை அடைந்த போர்ச்சுக்கீஸிய நாட்டு வாஸ்கோடகாமாவிற்கு கடல்வழி காட்டி வந்தவர் அஹமது இப்னுமஜீது என்ற அரபியர் இவர் கிழக்கு ஆப்பிரிக்காவின் மலிந்தி நாட்டவர்.[21] அவரிடம் கடல்வழி, காட்டும் வரைபடங்களும், கடற் பயணத்திற்கான சிறந்த கருவிகளும் இருந்தன.
ஆதலால், பெருங்கடல்களைக் கடந்து செல்லும் பெற்றியில் தங்களுக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி பதினைந்தாம் நூற்றாண்டு வரை சிறப்பாக விளங்கியவர்கள் இந்த யவனர்களே (அரபிகள்) அவர்கள் இயக்கிய மரக்கலங்கள் உறுதியானவையாகவும் காற்று, நீர், வெய்யில், மழை ஆகியவைகளைச் சமாளித்துச் செல்லும் திறனுடையனவாகவும் இருந்தன. பெரும்பாலும் சிறு மரக்கலங்கள், ஒரே மரத்தினின்றும் குடைந்து உருவாக்கப்பட்டன. பெரிய கலங்கன் பல்வேறு மரத்துணுக்குகளைக் கொண்டு இணைத்து அமைக்கப்பட்டன. இரும்பு ஆணிகளைக் கொண்டு அவைகளை இணைப்பதற்குப் பதிலாக, மரப் பலகைகளை ஒன்றோடொன்று இணைத்து, அவை செயற்கையாக இணைக்கப்பட்டவையென்று சொல்ல முடியாதபடி ஒரே சீராகச் செய்யப்பட்டன. தேவையான பகுதிகளில் துளைகளை அமைத்து மரத்திலான ஆணிகளைப் பொருத்தி உறுதிபட அழுதினர். கீழ்க்கண்ட வகையினதாக[22] இத்தகைய மரக்கலங்கள் அவர்களால் பயன்படுத்தப்பட்டன.
அரபிப் பெயர் | தமிழில் | விபரம் |
---|
1.அல்மாதியா | அலைமோதி | ஒரேமரத்தாலானது |
2. அத்தலாயா | வத்தை | கரையோர உபயோகத்திற்கு |
3. பர் காட்டிம் | படகு | கரையோர உபயோகத்திற்கு |
4. கெப்பல் | கப்பல் | நெடுங்கடல் பயணத்திற்கு |
5. சத்ரி | கப்பல் | சாதாரண கடல்பயணத்திற்கு |
6. சம்பானே | சாம்பான் | சிறு படகு |
7. பூஸ்கா | — | நெடுங்கடல் பயணத்திற்கு |
8. ஜாவா | — | நெடுங்கடல் பயணத்திற்கு |
9. கியாட்டு | பரிச்சல் | நாழிபோன்ற வடிவமைப்பு |
|- | 11. பணி || கட்டைமரம் || மீன்பிடித்தலுக்கு |- | 12. கங்யல் || வள்ளம் || மீன்பிடித்தலுக்கு |- | 13. டெராதா || ... || கரையோர உபயோகம் |- | 14. ஜம்புகுவா || ... || பெருங்கடல் நாவாய் |}
இவைகளைத் தவிர, சீனநாட்டினரது மரக்கல வகைகளான ஜங்க், ஜாவ், காகாம் போன்ற பெருங்கப்பல்களும் அவர்களால் பயன்படுத்தப்பட்டன. அவையனைத்தும் ஆழ்கடலில், பெருங்காற்றினுாடே செல்லத்தக்கன. ஆயிரத்திற்கு அதிகமான மாலுமிகளும், பயணிகளும் பயணம் செய்யும் வகையில் இவைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கலங்களின் உதவியால் அரபிய நாட்டின் தென்முனை ஸியாகரஸிலிருந்து நாற்பது நாட்களில் மலையாளக் கரையில் உள்ள கொல்லத்தையும், அங்கிருந்து ஏழு நாட்களில் தமிழகத்தின் கிழக்குக் கரைப் பட்டினங்களையும் வந்தடையலாம். மேலும், முப்பது நாட்களில் கடாரத்தையும் (மலேஷியா) அங்கிருந்து நாற்பது நாட்களில் சீனத்தின் கான்டன் நகரையும் அடைய முடியும். கி.பி. நான்காம் நூற்றாண்டிலேயே அராபியர்களது குடியிருப்பு கான்டனில் இருந்தது.[23] அராபிய நூலாசிரியர் சுலைமான், எட்டாம் நூற்றாண்டில் கான்டன் நகருக்குச் சென்று, அங்கு ஏராளமாக குடியேறி வாழ்ந்த இஸ்லாமியர் வாழ்க்கை நிலை, அவர்கள் நிறை வேற்றிய ஐந்து நேரத் தொழுகை, வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை - ஆகியவைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்கு சட்டத்தை அமுலாக்கவும், நிர்வாகத்தை இயக்கவும், இஸ்லாமியர்களை சீனர்கள் நியமனம் செய்து இருந்ததையும் அவர் குறித்துள்ளார்.
இங்ஙனம், உலகின் கீழ்க்கோடியான சீனத்துடன் தொடர்பு கொண்டிருந்த அராபியர், தென்னகத்திலிருந்து சீனம் செல்லும் வழியில் கடாரம், ஜாவா, சுமத்திரா, அன்னாம் ஆகிய வலிமை மிக்க நாடுகளின் கடல் பட்டினங்களைத் தொட்டுச் சென்றனர். அத்துடன் அந்தந்த நாடுகளின் செல்வங்களான வெள்ளி, ஈயம், தகரம், பட்டு, மட்பாண்டங்கள், நறுமணப் பொருட்கள், ஆனைத்தந்தம், காண்டாமிருக கொம்பு, ஆமை ஓடுகள், பவளம், அம்பர், இரும்புத் தாதுக்கள், பாறைப் படிவங்கள், கைத்தறி ஆடைகள், கருங்காலி, சூடன் மரங்கள் ஆகியவைகளையும் எடுத்துச்சென்றனர்.[24] இந்தக் கொள்முதல் பொருட்களுக்கு, பண்டமாற்றில் தங்களது சொந்தநாட்டு நெசவுத்துணிகளையும், அணிகலன்களையும், உலோகத்தகட்டினாலான கண்ணாடிகள், சிரியநாட்டு கண்ணாடிப் பொருட்கள், கிண்ணங்கள், குப்பிகள் ஆகியவைகளை பெற்றுக் கொண்டனர். மேலும் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு அவைகளுக்கு பகரமாக பொன் வழங்கவும் கான்டன் நகரில் கி.பி. 971–ல் கப்பல் நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டது இருந்தது.[25]
நாளடைவில் இத்தகைய கப்பல் பயணங்கள் மிகுந்ததன் காரணமாக, பதினொன்றாம் நூற்றாண்டிலேயே கீழை நாடுகள் அனைத்திலும், இந்திய நாட்டின் பல மாநிலத்தவர்களும் குறிப்பாக குஜராத்தியர், தமிழர்கள் – மலேயா நாட்டினரும் குடியேறியதுடன், சீனத்துடனும், நெருக்கமாகவணிகத் தொடர்புகளை கொண்டிருந்தனர். எனினும் பன்னாட்டைச் சேர்ந்த இந்த வாணிகச் சாத்துக்களில், பலதரப்பட்ட பொருட்களின் செறிவிலும் சிறப்பிலும் அராபியர்களை மிஞ்சக்கூடியவர்கள் எவரும் இலர் என பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த செள–கு–பெ என்ற சீன நாட்டு ஆசிரியர் தமது பயணக் குறிப்புகளில் வரைந்துள்ளார்.[26] அந்தப் பண்டங்கள் அனைத்தும் சிறு மரங்கலங்களில் மூலம் கொல்லம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு இருந்து பெருங்கப்பல்களில் நிறைத்து அனுப்பப்பட்டன. ஆதலால், அன்றைய வாணிப உலகின் சிறந்த மையமாக கொல்லம் கருதப்பட்டது.
எழுவானின் இளங்கதிர்களை எட்டிப் பிடிக்கும் வகையில் கிழக்கு கோடியின் பசிபிக் பெருங்கடலின் எல்லையைத் தொட்டுவிட்ட அரபியரது அந்தக் கலங்கள், இந்திய சமுத்திரத்தின் மேற்கு கரையில் அமைந்திருந்த ஆப்பிரிக்க நாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கும் சென்றன. ஒன்பது பத்தாவது நூற்றாண்டுகளில் பாக்தாதில் இயங்கி வந்த இஸ்லாமியப் பேரரசின் வளர்ச்சியும் விரிவும் இத்தகைய உலகம் அளாவிய வணிக எழுச்சிக்கு உறுதிமிக்க பீடமாக விளங்கியது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாக விளங்கிய அலக்ஸாந்திரியாவைப் போன்று உலக வாணிபத்தின் உயிர்நாடியாக அப்பொழுது பாக்தாது விளங்கியது. அராபிய வர்த்தகர்கள் கிழக்கையும், மேற்கையும் அல்லாமல் மத்திய கடல் பகுதியையும் தங்கள் வணிக வழியில் இணைத்தனர். ஸ்பெயின், சிசிலி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் வணிக வழிகள் சென்றன.[27] இதன்காரணமாக ஐரோப்பிய நாடுகள், சீன, இந்திய, ஆப்பிரிக்க, நாடுகளது கிராம்பு, ஏலக்காய், அம்பர், கஸ்தூரி, கருவாய்ப்பட்டை, மிளகு, கற்பூரம், முத்து, மஸ்லின், பட்டு, சந்தனகட்டை ஆகிய பொருட்களைப் பெற்றதுடன் இஸ்லாமிய நாடுகளது ஆரஞ்சு, லெமன், அப்ரி காட், ஆகிய பழங்களும், பினாஷ், ஆட்டிகோஸ், போன்ற காய்கறிகள், இரத்தினக் கற்கள், இசைக் கருவிகள், காகிதம், பட்டாடைகள், ஆகிய பொருட்களையும் பெற்றன. அண்மைக் காலங்களில் ருஷ்யாவின் பல பகுதிகளிலும், பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஏராளமான இஸ்லாமியர்களது நாணயங்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் பதினேழாவது நூற்றாண்டு வரையிலான அராபியரது சிறப்புமிக்க வாணிபச் செழுமையைப் பறை சாற்றுவதாக உள்ளன.[28] மேலும், ஐரோப்பிய நாடுகளில் அராபியரது வணிக மரபுகளும், வாணிபச் சொற்களும் அந்தந்த நாடுகளின் சமூக, மொழி இயல்களில் ஊடுருவி, இன்றுவரை அவை நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக காசோலையைக் குறிக்கின்ற அராபியச் சொல்லான “ஷீக்” ஆங்கிலத்தில் “செக்” என மாற்றம் பெற்றுள்ளது. இதனைப் போன்று ஜெர்மனியிலும், ஹாலந்திலும், காசோலையைக் குறிக்க அரபு சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. “வெச்சல்” (ஜெர்மன்) “விஸ்ஸன்” (ஹாலந்து) என்ற சொற்கள், அரபுச் சொற்களின் ஆக்கம் தான். இவை தவிர ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்ற வாணிபம் சம்பந்தப்பட்ட சொற்களான, ஸ்டர்லிங், டிராபிக், கேபின், ஆவரேஜ், பார்ஜஸ்மன்சூன், பார்க், ஷல்லாப் ஆகிய சொற்கள் அனைத்தும் அராபியச் சொற்களின் மறு உருக்கள்.
மற்றும், வணிக ஒப்பந்தம், வணிகப் பிரதிநிதிகளை அயல் நாடுகளில் நியமனம் செய்தல், கடல் எல்லை நிர்ணயம், பண்டமாற்று முறைகள், துறைமுக நடைமுறைகள் ஆகிய துறைகளில் இன்று முன்னேறியுள்ள ஐரோப்பிய வர்த்தக சமூகத்திற்கு முன்னோடியாக, இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தக்க வரம்புகளையும் வழிகாட்டு நெறிகளையும் உருவாக்கியவர்கள் அராபிய இஸ்லாமியர்கள். அலைகடல் ஆழியைத் துரும்பாக மதித்து அவனியை அளவிடப் புறப்பட்ட அராபியர்களது மன உறுதியையும் ஆர்வத்தையும் யாரும் வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. பிற்காலங்களில் புவியியல், வானியல், வணிக இயல், கணித இயல், வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலக மக்களுக்கு முன்னோடியாக விளங்கி, விஞ்ஞான கண்டுபிடிப்பு பலவற்றிற்கு வழிகோலியவர்களும் அவர்களேயாவர். தென்னகத்தில் சோழ பாண்டியர்கள் முடியாட்சி மறைந்து விஜயநகர பேரரசு தொடங்கிய காலம் வரை வாணிபத்தில் சிறப்புற்றிருந்த அமைதியான அராபியர்கள், போர்ச்சுக்கீசிய பரங்கிகளின் அக்கிரமமான, மனிதாபிமானமற்ற மிருக பலத்திற்கு எதிரே சக்தியற்றவர்களாக கடல்வழியை அந்தக் கொள்ளையரிடம் விட்டுவிட்டு ஆங்காங்கே உள்நாட்டு வாணிபத்தில் ஈடுபட்டனர்.
இங்ஙனம், கிழக்கையும் மேற்கையும், தங்களது கடல் வாணிபத்தால் இணைத்து இந்தியா, இலங்கை, ஶ்ரீவிஜயா, அன்னாம், சீனம், ஆகிய கீழை நாடுகளில், புதிய நாகரீகத்தையும் புதிய ஆன்மீக ஒளியையும் புகுத்தியவர்கள் அந்த அராபிய முஸ்லீம்கள் தான். ஆதலால், தமிழகத்தின் சிறப்பான வரலாற்றுக்காலப் பகுதியில் அரபியரது பங்கும் பிரதானமாக இடம் பெற்று இருந்தது வியப்புக்கு உரியது அன்று. என்றாலும், வாணிப நோக்குடன் தமிழகத்துக்கு வந்து சென்ற பல்வேறு, இன, நாட்டு மக்களைப் போல் அல்லாமல் குறிப்பாக கிரேக்கர், உரோமர், சீனர், பாரசீகத்தினரைப் போல் அல்லாமல், கொண்டு வந்த பொருட்களை விற்றுவிட்டு, தங்கள் தேவைக்கு ஏற்ற இந்த நாட்டுப் பொருட்களை வாங்கிச் செல்வதுடன் அமையாமல் — இந்த நாட்டின் அரசியல், சமுதாய வாழ்வில் ஊடுருவி, தமிழ்நாட்டின், இணையற்ற பாரம்பரியத்திற்குரிய தமிழ் மக்களாகவே மாறியவர்கள், அரபியர்களைத் தவிர வேறு எந்த மேற்கு நாட்டினரும் அல்ல என்பதே வரலாறு வழங்கும் தெளிவான செய்தியாகும்.
ஆதலால், அந்த அரபியர்களை–தமிழக இஸ்லாமியராகிய அவர்களது தொன்மையை, தமிழக இலக்கியங்கள், தமிழக கல்வெட்டுக்கள், செப்பேடுகள் வெளிநாட்டுப் பயணிகளது பயணக் குறிப்புகள் ஆகிய வரலாற்றுத் தடயங்களின் வாயிலாகத் தொகுத்து அறிதல் அவசியமாகிறது.
- ↑ William Robestson - An Historical Disquisition (1791) page 8
- ↑ Stabout J.W.H.-islam (1881) page 2
- ↑ New Testament-II chromics 7.9:1
- ↑ William Robertson - An Historical Disqusition (Edinburgh) (1791) p. 5.
- ↑ Ibid page 58
- ↑ Ibid page 69
- ↑ பதிற்றுப்பத்து: பதிப்பாசிரியர் ஒளவை சு. துரைச்சாமி (1963)
- ↑ Oakshott. W.F. - Commerce and Society (1936) P. 19.
- ↑ Nilakanta Sastri. K. A. - Foreign Notices of South India (Madras 1972) P.50
- ↑ Ibid P.58
- ↑ Oakeshott W.F. - Commerce and Society (1936) P.32.
- ↑ Pilini - Book = Chap 26.
- ↑ சிலப்பதிகாரம் - வாழ்த்துக்காதை - பாடல் எண் 26
- ↑ Hunter. W.W. – History of Orissa P. 72.)
- ↑ Gopalachari. K - Early History of Andhra Country (1941) P. 25 - 29
- ↑ “மெய்ப்பை புக்க வெரு உவரும் - தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்”... முல்லைப்பாட்டு 60, 61.
- ↑ “இரவர்க்கு அருங்கலம் அருகாது ஈயா யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்”... ... புறநானூறு 56 : 18
- ↑ “யவனர் இயற்றிய வினைமான் பாவை கையேந்தி ஐயகல் நிறைநெய் சொரிந்து” ... ... நெடுநல்வாட்டை102, 103
- ↑ வேள்வித் துணைத் தளச்சி யவனர் ஒதிம விளக்கின் உயர்மிசை கொண்ட ... ... பெரும்பானாற்றுப்படை 16 ... ... ... ... ... ... யவகை கைவினை
- ↑ Joseph Hell – The Arab Civilization — (Lahore) Page. 78–79
- ↑ பிறையன்பன் - கலையும் பண்பாடும் (இலங்கை-1963)பக்கம் :1
- ↑ Appadorai - Dr.A. – Economic Bisditions of TamilNadu (From 1000 AD to 1600 AD) voI. II p.8.
- ↑ Nilakanta Sastri - K.A. – Foreign Notices of South India(Madras 1952) p. 20.
- ↑ Nilakanta Sastri K. A, - History of Srivijaya (1936) p. 37.
- ↑ Appadorai. Dr. A. Economic Conditions of TamilNadu(1940)
- ↑ Hirth and Rodwill – Chan Ju–Kua p.24.
- ↑ பிறையன்பன் - கலையும் பண்பாடும் (இலங்கை 1962) பக் : 87 - 88
- ↑ பிறையன்பன் - கலையும் பண்பாடும் (1962) பக் : 93