முஸ்லீம்களும் தமிழகமும்/சமுதாயப் பிரதிபலிப்புகள்

விக்கிமூலம் இலிருந்து

19

சமுதாயப் பிரதிபலிப்புகள்


தமிழகத்தின் வாணிபச் சிறப்பிற்கு உதவிய அராபிய இஸ்லாமியர்களது செல்வாக்கு, தமிழகத்தின் அரசியல் சமுதாய நிலைகளில் பிரகாசித்தன. நல்லவிதமான வாணிபத்திற்கு நாணயத்துடன் நாணயமும் தேவை. கடைச் சங்க இலக்கியங்களில், நாணயங்களைப் பற்றிய குறிப்புகள் இல்லை. பண்ட மாற்று முறை அப்பொழுது இருந்ததை "பகர் விரவு நெல்லின் பலவரி யன்ன ... ..." என்ற மலைபடுகடாம் தொடர் சான்று பகருகிறது. அன்றைய பாணர்களுக்கு, வேந்தர்களும் வள்ளல்களும் அன்பளிப்பாக பூவுடன் பொன்னும் பொற்றாமரையும் வழங்கி மகிழ்ந்த செய்திகளை பதிற்றுப் பத்தும் புறநானூறும் பொலிவுடன் முழங்குகின்றன. காலப் போக்கில் யவனர்களது தொடர்பு ஏற்பட்டவுடன், பண்டமாற்றுப் பொருளாக அவர்கள் வழங்கிய பொன், வெள்ளி, நாணயங்கள் தமிழ்நாட்டில் செலாவணியாக பயன்படுத்தப்பட்டன. கிரேக்க, லத்தீன் மொழிகளில் தங்க நாணயம் "தினேரியஸ்" எனவும், வெள்ளி நாணயம் “திரம்மா” எனவும் பெயர் பெறும். இந்த நாணயங்களில் தங்க நாணயம் நான்கு கிராம் எடையுடைது பத்து திரம்மா, ஒரு தினேரியஸ்-க்கு சமமானது. அதனைப் போன்று திரஹம் பிரஞ்சு நாட்டு ஒரு பிராங் அல்லது அமெரிக்க நாட்டு பத்தொன்பது "சென்டி"ற்கு சமமான மதிப்பு டையதாக இருந்தது. தமிழகத்து நாணயச் செலாவணிக்கு பயன்படுத்தப்பட்ட முதல் நாணயங்கள் அவைகளே கிறித்துவிற்குப் பின்னர் மூன்றாவது நூற்றாண்டுவரை அவைகள் தமிழக நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டன என்பதும் அதுவரை தமிழகத்தில் நாணயங்கள் அச்சிடப்படவில்லை அல்லது உலோக வார்ப்புகளாக உருப்பெறவில்லை என்பதும், தெளிவு. பிற்காலத்தில்தான் பல்லவர்களும் பாண்டியர்களும், சோழர்களும் தங்களது ஆட்சிக் காலங்களில் பலவிதமான நாணயங்களை வெளியிட்டனர்.

அவையனைத்தும் காசு என்றே வரிசைப்படுத்தப்பட்டன. பொன்னாலான காசு, மாடை, பணம், கட்டி என வழங்கப்பட்டது. "வாசி, தீரவே காசு தாரீர்” என்பது ஏழாம் நூற்றாண்டு சம்பந்தரது தேவாரம். அவைகளை அடுத்து வெளியிடப் பட்ட செப்பு பணமும் காசு என்றே வழங்கப்பட்டது. இந்தச் சொல் பிற்காலத்தில் கயிக்சா (caisa) என போர்த்துகேசிய மொழியிலும் காசு (cashit) இணைத்துக் கொண்டதும் ஆகும்.

கி.பி. பதினான்காம் நூற்றாண்டு தொடக்கம் வரை, தமிழ்நாட்டுச் செலாவணியாக அரபிகளது தங்க நாணயமான தினாரு வெள்ளி நாணயமான திர்கமும், தமிழ் மக்கள் கைகளில் தவழ்ந்ததை பல கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகிறது. மதுரை, தஞ்சை, திருப்பத்துார், அருப்புக்கோட்டை திருத்துறைப் பூண்டி குடுமியான்மலை. திருப்பராய்த்துறை, திருவடந்தை ஆகிய ஊர்க்கோயில் கல்வெட்டுக்களில் தினார், தினாரா எனவும், திர்கம் திரம்ம எனவும், பொறிக்கப்பட்டுள்ளன. இங்ங்னம் ராஜராஜன் விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் ஆட்சியிலும், பராந்தகன் நெடுஞ்சடையன் ஸ்ரீவல்லபன், வீரபாண்டியன், மாறவர்மன் சடையவர்மன், சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலங்களிலும் அரபிகள் தமிழ் முஸ்லீம்களாக இருந்தது போன்று அவர்களது நாணயங்களான தினரும் திர்கமும், தமிழக நாணயங்களாக செலாவணியில் இருந்து வந்துள்ளன.

திருரா என்பது பொற்காசு, எழுபத்து ஒன்றரை பார்லி தானிய மணிகளுக்குரிய நிறை உடையதென்றும், கோதுமை தானிய மணிகள் அறுபத்து எட்டுக்குச் சமமானது என்றும், மித்கல் என்றும் அரபி மொழி நிறுத்தல் அளவையாக குறிக்கப்பெற்றுள்ளது. ஏழாம் நூற்றாண்டில், கிரேக்க நாட்டில் இந்த நிறைக்கு அறுபது மணிகள் சமமாகக் கொள்ளப்பட்டது. திரம்மா என்பது வெள்ளிக்காசு, அதற்கான நிறை பலவிதமாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இமாம் உமறு (அலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் இந்த நாணயம் பதினான்கு காராட் நிறையுடையதாக அமைக்கப்பட்டது. இந்த இரண்டு நாணயங்களும் திருக்குர் ஆனில் சூரா 12:20ல் சொல்லப்பட்டுள்ளது. பின்னர் காஷ் (CASH) என ஆங்கிலத்திலும் பிற்காலத்தில் உருப்பெற்றுள்ளன.[1] தமிழகத்திற்கு அரபிகளது வாணிபத் தொடர்பு ஏற்பட்டவுடன் அந்த நாட்டு தீனார், திர்ஹம், நாணயங்கள் தமிழ்நாட்டில் தமிழக நாணயங்களாக பதினான்காவது நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அரபு நாடுகளுடன் வாணிபம் செய்த அரபிகளுடன் தமிழக மக்கள் கொண்டிருந்த நெருக்கமான நட்புச் சூழ்நிலையும் இத்தகைய பொருளாதார நாணயப் புழக்கத்திற்கு ஏற்ற காரணமாதல் வேண்டும்.

இந்த நாணயங்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கொங்கணத்திலிருந்து ஆந்திர கடற்கரை வரை வியாபித்திருந்த மேலைச் சாளுக்கிய அரசின் செலாவணியில் இருந்தன. அந்த காலக்கட்டத்தில், அங்கு அராபியர்கள் மிகுந்த அன்புடனும், மதிப்புடனும், நடத்தப்பட்டதை அப்பொழுது அங்கு பயணம் மேற்கொண்டிருந்த சுலைமான் போன்ற வரலாற்று ஆசிரியர்களது குறிப்புகள் சான்று வழங்குகின்றன.[2] தமிழகத்தின் வடக்கு எல்லையில் சாளுக்கிய அரசு அமைந்து இருந்ததின் காரணமாக அந்த நாட்டு அரசியல் செயல்பாடுகளின் செல்வாக்கினை பிரதிபலிப்பாக அரபு நாட்டு நாணயங்கள் தமிழ்நாட்டு செலாவணியில் ஈடுபடுத்தபட்டிருக்க வேண்டும். இந்த இரு காசுகளும் முந்தைய தமிழகத்தின் பழங்காசுடன் செலாவணியில் ஒருசேர வழங்கப்பட்ட செய்திகளும் உண்டு. ஒரு சில கல்வெட்டுகளில் இருந்து அரபு நாட்டு திரமத் (திர்கம்) திற்கு தமிழகத்தின் பழங்காசிற்கும் உள்ள மதிப்பினைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. "பழங்காசு முக்காலே மாகாணிக்கு, திரமம் ஒன்றே காலாகவும், அரைப்பழங்காசுக்கு திரமம் முக்காலும்” என ஒரு கால கட்டத்திலும், பழங்காக அரைக்கு திரமம் ஒன்றரையாக ஒரு சமயம் இருந்ததாகவும் செய்யாறு, கும்பகோணம், கல்வெட்டுகளில் காணப்படுகின்றன ஆனால் தினரா (தினார்) வுக்கு என்ன மதிப்பு இருந்தது என்பதை சுட்டுகின்ற ஆவணங்கள் கிடைக்கவில்லை. எட்டாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டுவரை தமிழகச் செலாவணியில் இருந்த இந்த நாணயங்களது பெயர்களுக்கான மூலம் கிரேக்க மொழியில் உள்ளது. தினேரியஸ் என்ற சொல் “தினார்” எனவும், திரக்மா என்ற சொல்’ "திர்கம்" எனவும் அரபு மொழியில் உருப்பெற்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பே கிரேக்க நாட்டிற்கும், அரபு மக்களுக்கும் இடையில், சமூக, கலாச்சார தொடர்புகள் இருந்தன. உமையாக்கள் ஆட்சியின் பொழுது அவை பல நிலைகளிலும் முன்னேற்றம் கண்டன. ஆதலால், அரபிகள் தங்களது பொன், வெள்ளி நாணயங்களை கிரேக்க பாணியிலும் பெயரிலும் தயாரித்து வெளியிட்டனர். இந்த நாணயங்களில் அரபு நாட்டிற்கொப்ப வடிவமைப்பில் மாற்றங்களை கலீபா உமர் அவர்கள் ஏற்படுத்தினார். குறிப்பாக செவ்வக வடிவில் இருந்த திர்கம் நாணயத்தை, வட்ட வடிவில் அமைத்து அதில் "அல்லாஹ்" "பரக்கத்" என்ற சொற்களைப் பொறிக்குமாறு செய்தார்.[3] அவரைத் தொடர்ந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களான உமையாக்கள், அப்பாளியாக்கள் ஆட்சியின் பொழுது இந்த நாணயங்களின் அச்சிலும் நிறையிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டதை வரலாறு கூறுகிறது. என்றாலும் அபத்அல் மாலிக் என்ற உமையா கலிபாதான் முதன் முதலாக அரபிய தினாரை தமாஸ்கஸ் நகரில் இருந்து கி.பி. 695 வெளியிட்டார். இராக்கில் இருந்த அவரது ஆளுநர் அல்ஹஜ்ஜாஸ் வெள்ளியிலான முதல் அரபி திர்கம் நாணயத்தை கூபா நகரில் கி.பி. 696ல் தயாரித்து வெளியிட்டார்.[4]

திர்கம் என்பது மற்றொரு வகையான வெள்ளி நாணய மாகும். இதனுடைய நிறை, 5, 6, 9, 10 மிஷ்கள் என ஒரு சிலரும் 10, 12, 20 காரட் என்று வேறு சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.[5] தமிழகத்தின் இந்த நாணயம் "திரம்மா" என வழங்கப்பட்டது.

இந்த வகையான அரபு நாட்டு நாணயங்கள், தமிழகத்தில் செலாவணியில் இருந்ததை சான்று பகரும் பழமையான கல்வெட்டுக்கள் பல உள்ளன. இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர் திருத்தளியாண்ட நாயனார் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டில் பாண்டிய மன்னர் மாறன் சடையனது (கி.பி.792-835) பத்தாவது ஆட்சியாண்டில், ஆந்தனப் பெண்மணியொருத்தி அந்தக் கோயிலில் விளக்கெரிக்க பத்து “தினார்களை” வழங்கிய செய்தி உள்ளது.[6] இதனைப் போன்று திர்கமும், "திரம்மா" என சோழர்களது பழங்காசுடன் இணைத்து வழங்கப்பட்டது. கி. பி. 985ம் ஆண்டு உத்தம சோழனது ஆட்சியில் திருக்கொம்பியூர் கல்வெட்டில் "அஞ்சு வண்ணத்தால் வந்த ஈழக்காசு" என்ற தொடர் காணப்படுகிறது "பொலியூட்டாகக் கொண்ட பழங் காசு முக்காலே மாகாணியால் பொலியும் திரமம் நன்னே காணும். "... ... ... ... ... ... ... .... கடனுக்கு திங்கள் காசு திரமம் பலிசை பொலிவதாக ... ... .... ...." "இரவு சந்தி விளக்கெரிய வைக்க திரமம் நாலும் ... ... ..." என்பன ராஜராஜ தேவனது தஞ்சைப்பெருவுடையார் கோவில் கல்வெட்டுக்களில் காணப்படுபவையாகும்.[7] திருவிடந்தை, திருப்பராய்த்துறை ஆகிய ஊர்களில் படியெடுக்கப்பட்ட விக்கிரம சோழ தேவரது கல்வெட்டுக்கள் கி.பி. 1122, 1131 ல் சோழ நாட்டில் திர்கம் (திரம்மம்) புழக்கத்தில் இருந்ததை நினைவூட்டுகின்றன. கி.பி. 1246ம் ஆண்டைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி கல்வெட்டும் இந்த உண்மையைத் தெரிவிக்கின்றன.[8] குலோத்துங்க சோழ தேவரது 36வது ஆட்சியாண்டு குடுமியாமலைக் கல்வெட்டு, ".... .... அடைக்காய முதிற்கு இலையமுது, இட, திருமெய்ப்பூச்சிற்கு 48வது முதல் திங்கள் அஞ்சு திரமமாக ஆட்டறுபது திரமமும் இறுக்கக்கட வார்களாகவும்" என முடிகிறது. இன்னும், பாண்டிய நாட்டில் திர்கம் நாணயம் செலாவணி பற்றி பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அவர்கள், தமது ஆங்கில நூலான "பாண்டியப் பேரரசில்" வரைந்துள்ளார்.[9] மற்றும் பாண்டிய மன்னர்கள் சடையவர்மன், வல்லப தேவர், வீரபாண்டிய தேவர், சுந்தரபாண்டிய தேவர், மாறவர்மன் சுந்தர பாண்டிய தேவர், சடையவர்மன் குலசேகரன் ஆகியவர்களது கல்வெட்டுக்களும் இந்த உண்மையை உணர்த்துகின்றன.[10] இன்னும், தென் பாண்டிச் சீமையைச் சேர்ந்த அருப்புக்கோட்டை, சுத்தமல்லி, ஆகிய ஊர்களில் உள்ள பதின் மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டுக்கள் திர்கத்தைக் குறிப்பிடுகின்றன. அருப்புக்கோட்டை ஆலயமொன்றின் அறங்காவலர்கள் நிலக்கிரையத்தை நெல்லாகவும் திரமமாகவும் பெற்றதாகச் செய்தி உள்ளது.[11] சுத்தமல்லி என்ற ஊருக்கு அண்மையில் உள்ள குலசேகரப் பேரேரியை ஆழப்படுத்தி செம்மை செய்ய கி பி. 1204ல் பாண்டியன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் 100 திரம்மாக்கள் வழங்கியதை அந்த ஊர் கல்வெட்டு சுட்டுகிறது.[12] மேலும், மாறவர்மன் விக்கிரம பாண்டியன், திருபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன், ஆகியோர் ஆட்சியின் அரசிறையாக செலுத்த வேண்டிய தொகை இவ்வளவு திரமம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பதினாறு மாநிலத்தில் விளைவிக்கப்பட்டுள்ள வரகு, தினை, ஆகிய பயிர்களுக்கு ஒரு திரம்மமும் இதர புஞ்சை பயிர்களுக்கு அரை திரம்மமும் வரியாகச் செலுத்தப்படவேண்டும். என நிகுதி செய்யப் பட்டிருந்தது.[13] மற்றும், மாறவர்மன் சுந்தரபாண்டியனது ஆட்சிக்காலத்தில் "எள், வரகு, தினை, புளிங்கு விளைந்த நிலத்தின்" மாத்தால் திரமம் ஒன்றேகால் இறுப்பதாக அந்தராயம் வசூலிக்கும் ஆணையை மேலக்கொடுமலூர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.[14] அந்த அரசரது ஆட்சியின் (கி.பி. 1215ல்) அஞ்சு மேனி திரம்மம் என்ற பிறிதொரு அரபு நாணயமும் தமிழ் மக்களிடையில் செலாவணியில் இருந்தது தெரியவருகிறது.[15] பாண்டிய நாட்டில் அரபிகளது குடியேற்றமான அஞ்சுவண்ணத்தார் வழங்கிய நாணயம் தான் வழக்கில் அஞ்சுமேனி திரமம் ஆகிவிட்டது. இந்த அரபுகளது திரமம் அப்பொழுது தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த பழங்காசுகளுடன் ஒரு சேர" செல்லும் நாணயமாக விளங்கியது. ஒன்பதாவது நூற்றாண்டில் மூன்று திரமம் இரண்டு பழங்காசுகளுக்குச் சமமாக மதிப்பிடப்பட்டது. பதினொன்றாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் ஆறு திரமம் ஒரு பழங்காசிற்கும் இராமநாதபுரத்தில் ஏழு திரமம் ஒரு பழங்காசிற்கும் சமமாக கருதப் பெற்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டில், ஏழு திரமம் ஆங்கில நாட்டு அஞ்சு ஷில்லிங் எட்டே கால் பென்ஸ் அளவிற்கு சமமாக இருந்ததாக கல்வெட்டு ஒன்று சொல்கிறது.[16] இத்தகைய நாணயப் புழக்கம் மிகுதி காரணமாக, அவைகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்க அரபிகளால் தமிழ்நாட்டில் நாணய தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. கொற்கையிலும், தொண்டியிலும் அத்தகைய நாணய முத்திரை சாலைகள் இருந்தன. அந்த இடங்கள் கொற்கை மாறமங்கலத்தில் "அஃக சாலைத் தெரு" என்றும் தொண்டியில் "அன்ன சாலைத் தெரு" என்றும், இன்றும் குறிப்பிடப்படுவதிலிருந்து அந்த முத்திரை சாலைகள் அமைக்கப்பட்டிருந்த பகுதிகளை அறிய முடிகிறது. அரபுகளது இந்த நாணயச் செலாவணி ஆந்திர நாட்டில் பதினாறாவது நூற்றாண்டு வரை நீடித்தாலும், பாண்டிய நாட்டில் பதினான்காவது நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. மதுரையில் சுல்தான்கள் ஆட்சி ஏற்பட்டதும், அவர்கள் தில்லி சுல்தானைப் பின்பற்றி, வெளியிட்ட வெள்ளி, செம்பு நாணயங்கள் மக்களிடையே செலாவணிக்கு வந்தபிறகு, அரபிகளது தினாரும், திர்கமும், செலாவணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. என்றாலும் விஜய நகர மன்னர்கள் ஆட்சியில் அவைகள் மக்களிடையே புழக்கத்தில் தொடர்ந்து இருந்ததை கொண்டவீடு கல்வெட்டு குறிப்பிடுகிறது.[17] இந்த நவீன காலத்திலும், அரபுநாடுகள் சிலவற்றில் தினாரும் திர்கமும் செலாவணியில் இருந்து வருகின்றன. குவைத், பஹ்ரைன் நாடுகளில் தினாரும், செளதி அரேபியாவில் திர்கமும் சர்வதேச செலாவணியுடைய நாணயங்களாக இருந்து வருகின்றன. இவைகளுக்கு எல்லாம் மேலாக ஐரோப்பிய நாடான யூகோஸ்லாவியாவில் நாணயச் செலாவணியும் தினாரில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பல நூற்றாண்டுகளாக தமிழ்ச் சமுதாயத்தின் புறக்கணிக்க முடியாத குடிமக்களாகிய தமிழக இஸ்லாமியரைப் பற்றிய ஆழமான சிந்தனையும் அக்கரையும் கொள்ளாத வரலாற்று ஆசிரியர்கள், முஸ்லீம்களது வரலாற்றினை மறைத்தது போல அவர்கள் தமிழக நாணயச் செலாவணிக்கு வழங்கிய இஸ்லாமிய நாணயங்கள் பற்றியும் வரலாற்றில் எவ்வித விவரங்களும் அளிக்க வில்லை. இதற்கு, அவர்களுக்கு அரபி மொழியில் உள்ள இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களில் பயிற்சி இல்லாதது அடிப்படை காரணமாக இருக்கலாம்.

 1. Appadorai Dr. A. Economic Condituions of S. India (130(AD - 1500AD) v.I.
 2. Md: Hussain Nainar-Arab Geographers Knowledge of S. indi,(1944)p.p. 162, 163
 3. Tabari — vol. 2. p. 939
 4. Philip K. Hitty History—of the Arabs
 5. Thomas Patrick Hujhes - Dictionary of Islam (1929) p.84
 6. A. R. 136/1908 - திருப்புத்துார்.
 7. நாகசாமி ஆர். தஞ்சைப்பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் (1968)
 8. தமிழ்நாடு தொல்பொருள் துறைகல்வெட்டுஎண் 1976/105-78
 9. Nilakanta Sastri K.A - Pandia kingdom (1929) p. p. 98, 193, 196, 118, 123, 143, 217
 10. Pudukottai state inscriptions No. 260, 262. 292. 265, 269, 305, 306, 307, 308, 328,
 11. AR 412/1914 - Aruppukottai
 12. AR 459/1914 - Aruppukottai
 13. AR 399/1907 - Suddhamalli
 14. AR 399/1907 - Melakodumaloor
 15. Appadurai Dr. A– Econamic Contions of S. India (From 1000 HD – 1500 AD) vol II.
 16. ARE 284 / 1923
 17. AR 242 / 1892 கொண்ட வீடு