முஸ்லீம்களும் தமிழகமும்/சமுதாயமும் விழாக்களும்

விக்கிமூலம் இலிருந்து


21

சமயமும், விழாக்களும்


தமிழ்ச்சமுதாயத்தை இணைத்தும் பிணைத்தும் பற்றி பிடித்துக் கொண்டுள்ள இஸ்லாம், ஏகத்துவ நெறியை அடிப்படையாகக் கொண்டது. உருவமற்ற ஒரே பரம்பொருளை உள்ளத்தில் இருத்தி வைத்து வழிபடுவது என்பது ஒவ்வொரு இஸ்லாமியரது தவிர்க்க முடியாத ஐந்து கடமைகளில் ஒன்றாகும். தலைமுறை தலைமுறையாக, தமிழகத்தை தாயகமாப் பெற்ற இஸ்லாமியர் தங்கள் சமயத்தின் ஐந்து ஆதார நெறியினைப் பற்றி, பேணி வருகின்றனர். ஆனால் அவர்கள் வாழ்ந்து வருகிற தமிழ் மண்ணில் பல தெய்வ வழிபாடு பல நூற்றாண்டுகளாக பெரும் பாலான மக்களது சமய உணர்வாக நிலைத்து வந்துள்ளது. அதனைப் பிரதிபலிக்கும் பல விழாக்களும் ஆண்டு தவறாமல், பல ஊர்களில், பலவிதமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருத்தணியில் திருப்படிவிழா, காஞ்சியில் கருடவிழா, திருவண்ணாமலையில் கார்த்திகைதீபம், கும்பகோணத்தில் குட முழுக்கு, பழனியில் தைப்பூசம், மதுரையில் சித்திரைப் பெருவிழா, இராமநாதபுரத்தில் நவராத்திரி, இராமேசுவரத்தில் மகா சிவராத்திரி, இவை போன்ற ஏராளமான பெரும் விழாக்களையும் சிறு விழாக்களையும், பார்த்து கிளர்ச்சி பெறும் பொழுது தமிழக இஸ்லாமியர்களது உள்ளத்தில் இறை நம்பிக்கை, வழிபாடு ஆகிய நிலைகளில் மாறுபாடோ குறைபாடோ ஏற்படுவது இல்லை. என்றாலும் இந்த விழாக்களின் சில அம்சங்கள் இஸ்லாமியரது விழாக்களிலும் புகுந்து இருப்பது வெளிப்படையான தொன்றாகும்.

குறிப்பாக, நபிகள்நாயகம் அவர்களது பெண் வழிப் பேரர்களான ஹுஸைன் அவர்களும் அவரது சுற்றத்தினரும் ஒரு சேர, 10.10.668ல் அழிக்கப்பட்ட “கர்பலா”[1] படுகொலையை நினைவூட்டும் முஹர்ரம் மாத நினைவு நாட்கள் பல ஊர்களில் பெருவிழாவாக கொண்டாடப்பட்டன. அண்மைக்காலம் வரை இந்த விழாவில் முதல் பத்து நாட்களின் இறுதி நாளன்று திமிதித்தல், நிகழ்ச்சிக்கு பிறகு, அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரை, ஒட்டகம் ஆகியவற்றின் மீது மறைந்த நபி பேரர்களது நினைவுச் சின்னங்களுடனும் அலங்கார ரதத்துடன் (தாஜியா) ஊர்வலமாகக் செல்லும். இந்த ஊர்வலத்தில் இஸ்லாமியர் தங்கள் உடல் வலிமையையும் திறமையையும் எடுத்துக்காட்டும் வகையில் பல களரிகளில் ஈடுபடுவார்கள். வாள் சண்டை, மற்போர், சிலம்பம், தீப்பந்த விளையாட்டுகளுடன் மாறுவேடம் புனைந்து மகிழ்ச்சி ஊட்டுதலும் உண்டு. ஊரின் கோடியில் உள்ள குளத்தில் அந்த நினைவுச் சின்னங்களை நீரில் நனைத்து நீத்தார் விழாவை முடித்து திரும்புவது வழக்கம்.

மிக்க மனத்துயரத்துடன் அனுஷ்டிக்க வேண்டிய இந்த நினைவு நாளை, ஆரவாரத்துடன் கலகலப்பாக கொண்டாடுவதற்கு காரணம் தமிழக கோயில் விழாக்களின் பின்னணி தான் எனக் குறிப்பிட வேண்டியதில்லை. இங்ஙனம் முகரம் விழா கடந்த சில நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இன்றும், இராமநாதபுரம், இராமேஸ்வரம், காரைக்குடி, புதுக் கோட்டை ஆகிய ஊர்களில் "மகர் நோம்பு (முகர்ரம் நோன்பு) பொட்டல்" இருந்து வருவது இந்த விழாவிற்கான ஒதுக்கிடமாக அமைந்திருந்ததை நினைவூட்டுகிறது. இந்த முகர்ரம் நோன்பு பல நூற்றாண்டுகளாக தமிழில் மானோம்பு என வழங்கி வருகிறது. அதனையொட்டியே "மானோம்புச் சாவடி" (தஞ்சாவூர்) "மானோம்புக் கிடாய்வரி" (இராமநாதபுரம்) ஆகிய புதிய சொற்கள் தமிழ் வழக்கில் வந்துள்ளன.[2] விழிப்புணர்வு காரணமாக, இந்த விழா பெரும்பாலான இஸ்லாமிய மக்களால் அண்மைக் காலங்களில் புறக்கணிக்கப்பட்டு விட்டன. சில ஊர்களில் மட்டும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவைப் போன்று, சில கந்தூரி விழாக்களும் தமிழகத்து இந்து சகோதரர்களின் திருவிழாக்களின் சாயலில் நடைபெற்று வருகின்றன நாகூரில் சாகுல்ஹமீது ஆண்டகை அவர்கள் கந்தூரி, ஏறுபதியில் சுல்தான் சையது இபுராகீம் ஷஹீது (வலி) அவர்கள் கந்தூரி, மதுரையில் முகையதீன் ஆண்டவர்கள் கந்தூரி ஆகியவைகள் பெரிய கப்பல், தேர் போன்ற அலங்காரங்கள் (தாஜியா) ஆரவாரத்துடனும் வான வேடிக்கைகளுடனும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. பாமர மக்களின் ஈடுபாட்டைக் குறிக்கும் இந்த விழாக்கள், இஸ்லாமிய சமய உணர்வுகளையே அல்லது நெறிமுறைகளையோ, சுட்டிக் காட்டுவதில்லை. என்றாலும், இந்த விழாக்களில் இந்து சகோதரர்களும் ஆர்வத்துடனும், ஆழ்ந்த பற்றுடனும் பங்கு கொண்டு விழாக்களில் புனிதத்தை பெரிதுபடுத்துவது குறிப்பிடத்தக்கது. சென்னைப் பெருநகரில் உள்ள இந்துக்களில் ஒருபிரிவினர் இஸ்லா மியரது முகரம் நாட்களை “அல்லா பண்டிகை” என ஆரவாரத்துடன் கொண்டாடி வருவதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

இதனை விட இன்னும் விசேடமான செய்தி என்னவென்றால் தமிழகத்து திருக்கோயில் விழாக்களில் இஸ்லாமியர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அமைத்து அனுஸ்டித்து வருவதாகும். உதாரணமாக, மதுரையில் ஆண்டுதோறும் நடை பெறும் சித்திரைப் பெருவிழாவை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. இந்த விழாவில் பிரதான நிகழ்ச்சி. அழகர்மலைக் கோவிலில் இருந்து அழகர் பெருமாள், குதிரை வாகனத்தில் மதுரை மாநகருக்கு ஆரோகணித்து வருவதாகும். தனது தங்கையான மதுரை இறைவி மீனாட்சியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக. ஆனால், மதுரையின் வட பகுதியை-வையை ஆற்றங்கரையை-அவர் அடைந்தவுடன், ஏற்கனவே, அவர் தங்கையின் திருமணம் நிறைவேறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஏமாற்றத்தினால் அவர் மதுரை நகருக்குள் நுழையாமல் மதுரைக்கு கிழக்கே வையைக்கரையில் உள்ள வண்டியூருக்கு சென்றுவிடுகிறார். அங்கு தமது அன்புக் கிழத்தியான “துலுக்கச்சி நாச்சியார்” இல்லத்தில் தங்கிவிட்டு அடுத்த நாள், மீண்டும் அழகர்மலை திரும்புவதான நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெளர்ணமியில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியை சற்று ஆழமாகச் சிந்தித்தால் சில உண்மைகள் தெளிவாகும். மதுரை மீனாட்சியின் திருமணம் என்பது ஹலாஸ்ய புராணத்தில் விவரிக்கப்படும் நிகழ்ச்சியாகும். புராண நிகழ்ச்சிகளுக்கு வரலாற்று வரம்பு எதுவும் இடையாது. கி.பி 1623 க்கு முன்னர் அழகர் மலைக்கோவிலில் இருந்து அழகர் பெருமாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் புறப்பட்டு தேனூர் சென்று வரும் தீர்த்தவாரி வழக்கம் இருந்தது. இந்த நிகழ்ச்சியை மதுரைச் சித்திரைத் திருவிழாவாக மாற்றியமைத்தவர் மன்னர் திருமலை நாயக்கர் ஆவார். மதுரை வட்டாரத்தில் பெரும்பாலான மக்கள் ஆடிமாதத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் விழாவிற்கான மாதமாக வசந்தகால சித்திரையையும், விழா நடக்கும் ஊரான தேனூருக்குப் பதில் தமது கோநகரான மதுரையையும் அவர் தேர்வு செய்து மாற்றியமைத்தார். இத்தகைய அண்மைக்கால நிகழ்ச்சியில், "துலுக்கச்சி நாச்சியார்" என்ற பாத்திரத்தை புராணக் கடவுளான அழகர் பெருமாளுடன் இணைத்து இருப்பது தமிழகத்து சமுதாய நிலையில் சமூக ஒற்றுமையைப் பேன வேண்டும் என்ற முன்னவர்களது உயரிய நோக்கம் போலும்! இதனைப் போன்ற இன்னொரு நிகழ்ச்சி, திருவரங்கம் திருக்கோயில் சம்பந்தப்பட்ட தொன்றதாகும். அத்துடன் சித்திரைத் திருவிழாச் சம்பந்தப்பட்ட துலுக்கச்சி நாச்சியார் கதைக்கு உரிய கருவும்கூட. இந்தக் கோவிலின் மூலவர் ரங்கமன்னாரது (அழகிய மனவாளர்) பொன்னாலான திருமேனி கி. பி. 1311 ல் நிகழ்ந்த மாலிக்கபூர் படையெடுப்பின் பொழுது ஏனைய அணி மணிகளுடன் கொள்ளைப் பொருளாக தில்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அந்தக் கோயிலின் ஒழுகுச் செய்தி அறிவிக்கிறது.[3] ரங்க மன்னாரது திருமேனியை நாள்தோறும் தரிசித்து மகிழ்ந்த சேவிகை ஒருத்தி திருவரங்கம் அண்மையில் உத்தமர் கோயிலில் வாழ்ந்து வந்தாள். ரங்க மன்னார் திருமேனி எடுத்துச் செல்லப்பட்டதை அறிந்து, அதனை மீட்டுவதற்காக தக்க துணையாக அறுபது பேர்களை திரட்டி தில்லி சென்றாள். அங்கே தில்லி பாதுஷாவை தமது ஆடல் பாடல்களாலும், "ஐக்கினி" என்ற களியாட்டத்தினாலும் அகமகிழச் செய்து தங்க மன்னார் திருமேனியை பரிசுப் பொருளாக பெற்றுத் திரும்பினாள்.[4] இந்த சேவிகை “பின் சென்ற வல்லி” என வழங்கப்படுகிறார். இந்த வரலாற்றின் இன்னொரு பகுதி சுவை மிகுந்ததாக இருக்கிறது.

ரங்க மன்னாரது திருமேனி தில்லியில் இருந்த பொழுது அதனைத் தனது விளைாட்டுப் பொருளாகக் கொண்டிருந்த பாதுஷாவின் மகள் நாளடைவில் அந்த திருமேனியின் அழகில் மயங்கி மானசீகக் காதல் வயப்பட்டு இருந்தாள். தனக்கு தெரியாமல், தனது தந்தையார் அந்த திருவுருவச் சிலையை ஜக்கினி ஆட்டக் குழுவினருக்கு பரிசுப் பொருளாக வழங்கி விட்டதை அறிந்து ஆறாத் துயரடைந்தாள். அதே அவல நிலையில் அவளது உயிர் பிரிந்து விடுமோ என அச்சமுற்ற டில்லி பாதுஷா அதனை மீண்டும் தேடிப் பெறுவதற்கு தில்லியிலிருந்து தெற்கே ஒரு படையணியை இளவரசியின் பொறுப்பில் அனுப்பி வைத்தார். தங்களை இளவரசி தொடர்ந்து வருவதை அறிந்த பின் சென்று வல்லியினது சகாக்கள் ரங்கமன்னாரை திருவரங்கத்திற்கு கொண்டு செல்லாமல் வழியில் திருப்பதி மலையில் மறைத்து வைத்துவிட்டனர். ஆனால் நேரடியாக திருவரங்கம் சென்ற தனது முயற்சியில் தோல்வியுற்ற இளவரசி, திருவரங்கத்தில் காத்து இருந்து மரணமடைந்ததாக அந்தக் கோயில் ஒழுகு கூறுகிறது.[5] இந்த புதிய "ராதையின்" திருவுருவை திருவரங்ககோயிலில் கருவறைக்கு வெளியே உள்ள மைய மண்டபத்தின் வடகிழக்குப்பகுதியில் ஒவியமாக அமைத்து நாள் தோறும் உரிய வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த "தில்லி நாச்சியாருக்கு" கோதுமை ரொட்டியும், இனிப்பு சுண்டலும் பருப்பு பாயாசமும், சிறப்பாக படைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வழிபாடு திருப்பதி திருக்கோயிலிலும் நடைபெற்று வருகிறது. இவள் “சாந்து நாச்சியார்” “பீவி நாச்சியார்” “துலுக்க நாச்சியார்” என வைணவர்களால் பேதமில்லாமல் பெருமிதத்துடன் வழங்கப்பட்டு வருகிறார். ரங்க மன்னார் திருமேனி திருவரங்கத்தைவிட்டு அந்நியர் படையெடுப்பின் பொழுது மூன்று முறை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதிலும், அதனை மீண்டும் கோவிலில் பிரதிஷ்டை செய்ததிலும் முரண்பாடுகளான செய்திகள் இருந்தாலும் இந்த “துலுக்க நாச்சியார்” பற்றிய செய்திகளில் வேறுபாடு எதுவும் இல்லை, என்பதை திருவரங்ககோயில் ஒழுகு உறுதிபடுத்துகிறது.[6]

இத்தகைய புராணமும் வரலாறும் கலந்த இன்னொரு நிகழ்ச்சி புதுக்கோட்டை மானுவலில் இடம் பெற்றுள்ளது.[7] புதுக்கோட்டைக்கு அண்மையில் கோவில் பட்டி என்று ஒரு கிராமம் உள்ளது. இதனை யொட்டிய திருவாப்பூரில் உள்ள கன்னி ஒருத்திக்கும் திருச்சிராப்பள்ளியில் இருந்த மலுக்கனுக்கும் (இஸ்லாமிய இளைஞன்)க்கும் இடையில் மாறாத காதல் மலர்ந்தது அந்த இளைஞன் ஒவ்வொரு நாள் இரவிலும் திருச்சியிலிருந்து குதிரைச்சவாரி செய்து வந்து தனது காதலியைச் சந்தித்துச் செல்வது வழக்கம். இந்த இளம் உள்ளங்களது காதல் அங்கு காவல் தெய்வமாக விளங்கிய "மலைக்கறுப்பருக்குப்" பிடிக்க வில்லையாம். தமது எல்லையில் களவொழுக்கத்தில் திளைத்து வந்த மலுக்கனை ஒருநாள் இரவு மலைக்கறுப்பர் கொன்றுவிட்டார். மீளாத் துயரில் ஆழ்ந்த அந்தக் கன்னி தனது இதயக்கோவிலின் தெய்வமாக விளங்கிய அந்த இசுலாமிய இளைஞனுக்கு அவன் கொலையுண்ட இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைத்தாள். அது நாளடைவில் கோவிலாக மாறி இன்று மலுக்கன் கோவில் என வழங்கப்படுகிறது.

மதுரை மாநகரில் நடைபெறும் இன்னொரு திருவிழா, சொக்கநாதக் கடவுள் திருவாதவூரடிகளுக்காக நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல். ஆண்டுதோறும் ஆவணித் திங்கள் மூல நட்சத்திர நாளன்று, இந்தத் திருவிழா மதுரை மீனாட்சி சுந்தரர் கோயிலில் நடைபெறுகிறது. மாணிக்க வாசகருக்காக கிழக்கு கடற்கரையில் இருந்து குதிரைகள் கொண்டு வந்த அரபு வணிகருக்குப் பதிலாக இசுலாமியர் ஒருவரைக் குதிரை கொண்டு வரச் செய்து விழா நடத்தும் பழக்கம் அண்மைக்காலம் வரை அந்தக் கோயிலில் இருந்து வந்தது. அதைப்போல இராமநாத புரம் அரண்மனையில் உள்ள சேதுபதி மன்னர்களது குடும்பக் கோயிலான ராஜராஜேஸ்வரி ஆலயத்தின் நடைபெறும் நவராத்திரி பூசையின்பொழுது, பிரசாதத்தை முதன்முதலில் பெறக் கூடிய தகுதி கன்னிராசபுரம் நாட்டாண்மை அப்துல்கனி சேர் வைக்கு இருந்து வந்தது. சேதுபதி மன்னருக்கு எதிரான போர் ஒன்றில் அப்துல் கனி சேர்வைக்காரர் ஆற்றிய அருந்தொண்டினைக் சிறப்பிக்கும் வகையில் அத்தகைய தனிச் சிறப்பினை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி மன்னர் வழங்கி இருந்தார்.[8] இப்பொழுது சேதுபதி மன்னரும் இல்லை. இந்த மரபும் கைவிடப்பட்டுவிட்டது.

இன்னொரு செய்தி இராமநாதபுரம் சீமையில் உள்ள குணங்குடி சையது முகம்மது புகாரி(வலி) அவர்களது தர்காவின் பராமரித்து வரும் உரிமை, அந்த ஊருக்கு அண்மையில் உள்ள துடுப்பூர் அம்பலக்காரர் என்ற இந்துக் குடும்பத்தினருக்கு இருந்து வருவது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அறங்காவலர் முறையாகும். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கும் இதர சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழி வழியாக வந்துள்ள பிணைப்பிற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு வேறு என்ன வேண்டும். இந்தப்புனித அடக்கவிடத்தின் பராமரிப்பிற்கு உடலாக என்றென்றும் உதவுவதற்கு இராமநாதபுரம் மன்னர்கள் திருமலை ரகுநாத சேதுபதியும், ரகுநாத கிழவன் சேதுபதியும் பல நிலமான்யங்களை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

  1. Philips Hitti – History of the ARABS (1970) p. 190
  2. Rajaram Rao T – Manual of Ramnad Samasthanam (1898) р. 22
  3. Hari Rao, V. – KOIL OLUGU (1961 ) p. 25
  4. Krishnasamy Ayyangar Dr. S. - History of South India and Mohammedan Invaders (1928) p. 114.
  5. Hari Rao V. – Koil Olugu (1961) p. 27
  6. Ibid p. 28
  7. Vktarama lyer K.R. - Manual of Pudukottai State (1938) Vol. I
  8. இந்தச் செய்தியை அன்புடன் தெரிவித்தவர் சேதுபதி மன்னர் வழியினரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதபுரம் திரு. ஆர். காசிநாத துரை அவர்கள்.