முஸ்லீம்களும் தமிழகமும்/மரக்காயர்

விக்கிமூலம் இலிருந்து

6

மரக்காயர்


தமிழக இஸ்லாமியர்களில் இன்னொரு பிரிவினர் மரக்கலராயர் என்ற மரைக்காயர்கள். பதினைந்தாம் நூற்றாண்டில், போர்ச்சுகல் நாட்டு பரங்கிகளது கடல் வலிமையினால் அரபிக் கடல் வழி பாதிக்கப்பட்டு கொள்ளையர் வழியாக மாறியது. அரபிக்குடா நாடுகளில் நிலவிய பலமற்ற அரசியல், அரபுகளது வெளிநாட்டு வணிகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அவர்கள் தமிழகத்தில் குடியேறி, தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு பகுதியாக நிரந்தரமாக தமிழ் மண்ணில் நிலை கொள்வதற்கான நிர்பந்தத்தை ஊக்குவித்தது. இதனால், போர்ச்சுகீஸியருடன் போரிட்டும் அவர்களது கீழை நாட்டு வணிகத்தில் போட்டியிட முடியாத தமிழக இஸ்லாமியர் கடலோர உள்நாட்டு வாணிபத்தில் கவனத்தைச் செலுத்தினர். அத்துடன், அண்மை நாடுகளான வங்காளம் இலங்கை, பர்மா, ஆகிய நாடுகளுடன் அரிசி, தேக்குமரம், கைத்தறித்துணி, ஆடு மாடுகள், ஆகியவைகளைத் தங்கள் மரக்கலங்களில் எடுத்துச் சென்றுவிற்றனர். மேலும், அவர்கள் மேற்கொண்டு இருந்த பல்வகைப்பட்ட தொழிலைக் கீழ்க்கண்ட பழம் பாடல்[1] விவரிக்கின்றது.

"நீரோட்டஞ் சங்கெடுத்தல். நித்தில சலாப,
நீந்தி நீர்க் குளித்தல், வலையின் மீன் இழுத்தல்
பார் நீட்ட மறிதல், மீன் உலத்தல், மீன் விற்றல்,
பாறு முதற்பி ளோப்பல், வெளிருப்புப் படுத்தல்,
காரோட்டங் காணல், மீன் கோட் பறையோடத்தி
கண்டை கோட்டல், வலை பாட்டு கழற ம்பியோட்டல்
சூழ் காட்டல், பிறர்தேசம் புகுதல் .... .... ...".


பெரும்பாலும், கிழக்கு கடற்கரையோரப் பட்டினங்களான நாகபட்டினம், அதிராம்படடினம், பாசிப்பட்டினம், தொண்டி, தேவி பட்டினம், பாம்பன் இராமேஸ்வரம், வேதாளை, பெரியபட்டினம், கீழக்கரை, தூத்துக்குடி. காயல்பட்டினம், ஆகிய ஊர்களில் உள்ள இஸ்லாமியர் இந்த தொழில்களில் அண்மைக்காலம் வரை ஈடுபட்டு இருந்தனர். இவர்கள், தோணி, டிங்கி, சாம்பான் என்ற வகையான மரக்கலங்களைத் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தினர். அவர்கள் மரைக்காயர், (மரக்கலராயர்) எனவும் வழங்கப்பட்டனர். மரக்கலம் என்ற பொருளைத் தருகிற "மர்க்கப்” என்ற அரபுச் சொல்லின் தமிழ் ஆக்கமே மரைக்கார் என்பது பேராசிரியர் முகம்மது ஹூஸைன் நயினார் அவர்களது முடிவு. தமிழக இஸ்லாமியரின் ஒரு பிரிவினரை, - தங்களுக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியரைக்-குறிக்க பயன்படுத்தப்பட்ட தமிழ்ச் சொல்லே' மரைக்காயர் என்பது. மரக்கலராயர் என்ற நல்ல தமிழின் திரிபு தான் மரைக்கார் அல்லது மரைக்காயர். குதிரைப் படையின் தளபதியைக் குறிக்க வழங்கிய ராகுத்தராயன் என்ற சொல் ராவுத் தன் எனத் திரிந்தாற் போல மரக்கலங்களின் தலைவன் என்ற பெயரில் மரக்கலராயர் என புனையப்பட்டுள்ள பிற்காலத் தமிழ்ச் சொல் இங்ங்னம் திரிபு பெற்றுள்ளது.[2] இதனைப் போன்று மரக்கலம் சம்பந்தப்பட்ட இஸ்லாமியரைக் குறிக்க “ஓடாளி” (ஓடாவி) என்ற பெயரும் உள்ளது, ஆனால் இந்தச் சொல் கீழக்கரை, தொண்டி போன்ற பழமையான கடற்கரை ஊர்களில் “ஓடாளி” (ஓடாவி) என வழக்கு பெற்றுள்ளது. ஓடத்தை ஆள்பவன் என்ற பொருளில்.

அண்மை நாடான இலங்கையில், இஸ்லாமியர்களை சிங்கள மொழியில் மரக்கல மினிசு’’ என்றே வழங்குகின்றனர்.[3]மரக்கலத்தில் வந்த (வணிக) மக்கள் என்னும் பொருளில், தமிழ்ப் பதமான மரக்கலம், சிங்களத்திலும் திசைச் சொல்லாக வழங்குகிறது. "கட்டுமரம்" என்ற தனித்தமிழ்ச் சொல், ஆங்கில மொழியில் “கட்டமரான்” என்றால் போல, இத்தகைய வணிகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மரக்கலத்திற்கு ஒரு வகையான இறை விதிக்கப்பட்டது. செக்கிறை, தறிஇறை, போன்று மரக்கலக் காணம் என்பதே அந்த வரியாகும். இதே சொல் பிற்காலத்தில் மரக்காணம் என மருவியுள்ளது. செங்கை மாவட்டத்தில் சென்னை பட்டினத்திற்கு அருகில் உள்ள கடல் துறை ஒன்றினுக்கு மரக் காணம் என்ற பெயரே நிலைத்துவிட்டது. இந்த ஊரைப் போன்று, இராமநாதபுரம் மாவட்டத்தில் “மரைக்காயர்" என்ற பெயருடன் கடற்றுறை யொன்று மண்டபத்திற்கு அண்மையில் "மரைக்காயர் பட்டினம்" என வழங்கி வருகிறது. கீழக்கரையில் வாணிபச் செல்வாக்கில் மிகுந்து நின்ற ஹபீபு மரக்காயர் என்பவர் நினைவாக எழுந்தது இந்த ஊர். மற்றும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதினைந்தாவது நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் "மரக்கலச் சுதந்திரம" என்றதொரு தொடர் காணப்படுகிறது.[4] ரக்கலங்கள் அமைக்கத் தகுந்த மரங்களைக் காடுகளில் இருத்து வெட்டிக்கொள்ளும் உரிமைதான் இங்ங்னம் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த மரைக்காயரில் ஒரு பிரிவினர் - "தண்டல்” என அழைக்கப்பட்டுவந்தனர். இதனது நேரடியான பொருள் படகுத்தலைவன் என்பதை தமிழில் மட்டும் அல்லாமல், தண்டல் (சிங்களம்)தண்டெலு (தெலுங்கு) தந்தல் (மலையாளம்)தண்டேல் (உருது) (அரபி) ஆகிய பிற மொழிச் சொற்களிலும் வழங்கப்படுவது இங்கு சிந்திக்கத்தக்கது. கடல் வாணிபத்தின் பிறிதொரு பகுதியான மீன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள இன்னொரு பிரிவினர் "சம்மாட்டி" என்றும் அழைக்கப்படுகின்றனர். மீன் பிடித்தலுக்குப் பயன்படும் நடுத்தர வகையான “சாம்பான்” என்ற வள்ளத்தை இயக்குபவர் என்ற பொருளில் சாம்பான் ஓட்டி காலப்போக்கில் சம்மாட்டி யானதாகத் தெரிகிறது. இராமநாதபுரம் கடற்கரைப் பகுதிகளில் உள்ள இந்து, இஸ்லாமியர் ஆகிய இரு பிரிவினரான மீன் வணிகர்களும் சம்மாட்டி என்றே குறிக்கப்படுகின்றனர். சித்தூர் தர்ஷணப் பள்ளியின் கி.பி. 1409ம் ஆண்டு கல்வெட்டிலும் பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் கிராமத்து கி.பி. 1567ம் ஆண்டு கல்வெட்டிலும் "சம்மாட்டி" என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.[5] எதிர்க்கரையான ஈழத்தில் வணிகர்களைக் குறிக்க "சம்மாங்காரர்" என்ற வழக்கு உள்ளது. சம்மாந்துறை” என்ற ஊரும் அங்கு கிழக்கு மாகாணத்தில் உள்ளது. மலேசியா மொழியிலும், வணிகர்கள் “ஹம்மங்கராய" என்ற மூன்று சொற்களுக்கும் வணிகம் என்ற பொருளில் தொடர்பு உள்ளது[6] . காரணம் இந்த நாடுகளுடன் தமிழக இஸ்லாமியர்கள் வணிக தொடர்புகளுடன் மண உறவுகளும் கொண்டிருந்தது, இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த இஸ்லாமியர், ஈழத்தில் "மரிக்கார்" என்ற பிரிவினராக வழங்கப்படுகின்றனர். ஆனால், பர்மா, மலேஷியா நாடுகளில் இவர்கள் "சோழிய முஸ்லீம்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், தமிழகம் முழுதும் சோழர்களது செங்கொற்றக் குடையின் கீழ் இருந்ததால் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் சோழ மண்டலக் கரை என்றே குறிக்கப்படடது. (இந்தச் சொல்லை பிற்கால ஆங்கிலேயரும், சோழ மண்டலக் கரை முழுவதையும் "கோரமாண்டல் கோலட்” எனப்பெயரிட்டு அழைத்தனர்). இந்தக் கரையினின்றும் அந்த நாடுகளுக்குச் சென்று குடியேறிய முஸ்லீம்கள் என்ற காரணத்தினால் "சோழிய" (சோழ நாட்டு) என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது. ரங்கூனிலும் (பர்மா) பினாங்கிலும் (மலேஷியா)சோழிய முஸ்லிம் பள்ளிகளும், சங்கங்களும், வீதிகளும் இருந்து வருவது இங்கு குறிப்பிட்த்தக்கது.

மரைக்காயர் பற்றிய விவரங்களைக் குறிப்பிடும் பொழுது மரைக்காயரில் பதினேழாவது நூற்றாண்டின் பிற்பகுதியில், செம்மாந்து நின்ற சீதக்காதியின் புகழ்வடிவு நம் மனத்திரையில் வரைபடமாக வளர்த்தோங்கி விளங்குகிறது. கீழக்கரையை தாயகமாகக் கொண்ட வள்ளல் ஷெய்கு அப்துல் காதிறு மரைக்காயர் அவர்கள் தம்மை நாடி வந்தவர்களுக்கு, பொன்னும் பொருளும், ஈந்து தமிழ் வள்ளல்கள் வழியிலே தமிழ் மரபு காத்தார். எழுவானையும் தொடுவானையும் தொடர்ந்து சென்ற அவரது நாவாய்கள், சுமந்து வந்த செல்வ மனைத்தும் ஈதல் அறத்திற்கு ஈடாக நின்றன. பெரும் புலவர்களான படிக்காசுத் தம்பிரானும் நமச்சிவாயப் புலவரும் உமறு கத்தாப் புலவரும் இயற்றிய பாக்கள் அவரது வள்ளண்மைக்கு கால மெல்லாம் கட்டியங்கறி, அவரது புகழைப் போற்றி வருகின்றன.[7] வள்ளல் அவர்களது வாணிபச் சிறப்பை பெரும் புலவர் உமறு கத்தாப்பின் "சீதக்காதி திருமண வாழ்த்து’’ பாக்கள் வழிகாணலாம். திரிகாலமும் உணர்ந்த தவச் செல்வர் ஞானி சதக்கத்துல்லாவை ஆசானாகவும், வணங்காமுடி வேந்தரான விஜய ரகுநாத (கிழவன்) சேதுபதியை உடன்பிறவாச் சோதரராகவும் கொண்டிருந்த இந்த வள்ளலை, தமிழ் வழங்கும் ஐந்திணை யெங்கும், செத்தும் கொடுத்த சீதக்காதி என, சென்ற இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக முழங்கி வருவதே அவரது நல்லியல்புகளுக்கு நிலையான சான்றாகும்.

  1. பிரபந்த திரட்டு (1982) பாடல் எண் 351
  2. இதே சொல் அண்டை நாடுகளான இலங்கையிலும், கேரளத்திலும் சில பகுதிகளில் உள்ள இஸ்லாமியரைக் குறிக்கும் இனப்பெயராகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
  3. பிறையன்பன் - கலையும் பண்பாடும் (1962) பக். 58,
  4. Pudukottai State Inscriptions No : 58
  5. A.R. 392/1914 - (பரமக்குடி)
  6. A.R. 324 / 1912 - (திர்ஷணப்பள்ளி)
  7. பிறையன்பன் - கலையும் பண்பாடும் (இலங்கை)1962 - பக். 58