உள்ளடக்கத்துக்குச் செல்

முஸ்லீம்களும் தமிழகமும்/மீண்டும் வாணிபத்தில்

விக்கிமூலம் இலிருந்து

16

மீண்டும் வாணிபத்தில்

போர்ச்சுக்கீஸிய பரங்கிகளது மிருகத்தனமான நடவடிக்கைகளாக பாதிக்கப்பட்டிருந்த மலாக்கா முதல் ஏடன் வரையிலான நீண்ட வாணிப வழியில் இசுலாமியரது மரக்கலங்கள் மீண்டும் மெதுவாக செல்லத் தொடங்கின. அவை அனைத்தும் கீழக்கரை வள்ளல் சீதக்காதி என்ற ஷெய்கு அப்துல் காதிறு மரைக்காயருடையவை, "தரணி புகழ் பெரிய தம்பி வரத்தால் உதித்த” இந்த வணிகப் பெருமகனுக்கு பதினேழாவது நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்தில் எவருக்கும் வாய்த்து இராத செல்வவளம் இருந்தது. அதற்கு மேலாக, மக்கட்கு அள்ளி அள்ளி வழங்கும் அன்பு உள்ளமும் அமைந்து இருந்தது. "திரைகண்டு எழுங்கடல் மீதே தன் வங்கத்தை செல்லவிட்டு கரைகண்டவர்” என வள்ளலது கடல் வாணிபத்துக்கு புலவர் ஒருவர் கரை கண்டுள்ளார்.[1] அவரது கப்பல்கள் சீனத்து நவமணிகளையும, அச்சைனில்(கம்போடிய) இருந்து அழகிய குதிரைகளையும், மலாக்காவில் இருந்து கஸ்தூரி, அம்பர், முதலிய வாசனைப் பொருட்களையும், ஈழத்தில் இருந்து வேழங்களையும் இன்னும் பல தேசத்து பொன்னையும், மலைகள் போல கொண்டு வந்து குவித்தாக அவரது வாணிப வன்மையை இன்னொரு பாடல் அளவிடுகிறது.[2]

"செய்யி தப்துல்காதிறு மரைக்காயர் திருமணவாழ்த்து. "சீதக்காதி நொண்டிநாடகம்" என்ற இருசிற்றிலக்கியங்களுக்கும் இன்னும், படிக்காசுப்புலவர் நமச்சிவாயப்புலவர் ஆகிய புலவர் பெருமக்களது தனிப்பாடல்களுக்கும், பாட்டுடைத் தலைவராக விளங்கும் இந்த வள்ளலைப் பற்றிய போதியவரலாற்று ஆவணங்கள் கிடைக்காதது தமிழக முஸ்லீம்களது துரதிர்ஷ்டம் என்றே குறிக்க வேண்டியுள்ளது. ஈதலறத்திற்கு இலக்கணமாக, இஸ்லாமிய நெறிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்த இசுலாமிய தமிழ்த்தலைவனை முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்டோம். ஆனால் கி.பி. 1682க்கும் கி.பி. 1698 க்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்குமான மிளகு, கைத்தறித்துணிகள் முத்து, சங்கு, ஆகிய வணிகத்தில் நேரடியாக போட்டியிட்ட டச்சுக்கிழக்கு இந்தியக் கும்பெனியாரது ஆவணங்களில் இருந்து அவரது வாணிப வளத்தை ஓரளவு தெரிந்து கொள்ளத்தக்கதாக இருக்கிறது. அவரது வாணிபக் கலங்கள் நமது நாட்டுக் கடலோர வணிகத்தில் ஈடுபட்டதுமல்லாமல்-வங்காளம்-மலாக்கா, அச்சைன் ஆகிய தூர கிழக்கு நாடுகளுக்கு சென்று வந்த விவரமும் தெரிகிறது. மற்றும், சென்னை கோட்டைகுறிப்புகளில் இருந்து வள்ளல் அவர்கள் ஆங்கில கிழக்கிந்திய கும்பெனியாரு டன் கி.பி. 1685-87ல் மிளகு, அரிசி, வாணிபம் சம்பந்தமாக கொண்டிருந்ததொடர்புகள் தெரியவருகின்றன.[3] மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்த டச்சு தளபதி படேனியாவில் உள்ள டச்சுக்கவர்னருக்கு அனுப்பிய குறிப்புகளில் இருந்து கி.பி. 1695ல் வள்ளல் சீதக்காதி டச்சுக்காரர்களுடன் வாணிபத் தொடர்புகள் கொண்டு இருந்ததையும்: மன்னருக்கும் கல்பிட்டியாவிற்கு இடைப்பட்ட கடல் பகுதியில் சங்கு குளிப்பதற்கான அனுமதி கோரிய விவரமும் தெரியவருகிறது.[4] அன்றைய காலகட்டத்தில் மன்னார் வளைகுடாவிலும், சோழமண்டலக்கரையிலும் எடுக்கப்பட்ட சங்குகள் பெரும்பாலும் வங்காளத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. நமது நாட்டில் ஏனைய பகுதிகளைவிட வங்காளத்து இந்துக்கள் சங்கை சிறந்த மங்கலப் பொருளாக புனிதமுடன் போற்றி வந்தனர். வங்க நாட்டுப் பெண்கள் சங்கினால் செய்யப்பட்ட வளையல்களை சங்க காலத்து தமிழ் மகளிரைப் போல் அணிந்து வந்தனர்.

தமிழகத்துச் சங்குகள் வங்காளம் சென்ற விவரங்களை அரபி பயணி அபூசெய்து (கி.பி.851) இத்தாலிய பயணி பார் போஸா (கி.பி.1565) பொக்காரோ (கி.பி.1644) கத்தோலிக்க பாதிரியார் மார்ட்டின் (கி.பி.1700) ஆகியோரது பயணக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[5] பிரஞ்சு வணிகர் தாவர்ணியரது (கி பி. (1644/89) குறிப்புகள் அந்தச் சங்குகள் வங்காளத்தில் இருந்து இன்னும் வடக்கே பூட்டானுக்கும் திபெத்திற்கும் அனுப்பப்பட்டதை தெரிவிக்கின்றன[6].

மன்னர் வளைகுடாவில் கிடைக்கும் சங்குகளில், இலங்கை கடல்பகுதி சங்குகளைவிட தமிழக கடல் பகுதி சங்குகள் அளவிலும் பருமனிலும் பெரியதாக இருந்ததால், அவைகளுக்கு நல்ல சந்தை மதிப்பு இருந்தது. இந்தச் சங்குகள், தூத்துக்குடிக்கும் தொண்டிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியிலும் கடலூருக்கு அருகிலும் மிகுதியாகக் கிடைத்தன. இந்தச் சங்குகளை கடலில் குளித்து எடுக்கும் தொழிலில் அப்பொழுது இசுலாமியர்கள் ஈடுபட்டு இருந்தனர். ஏற்கெனவே முத்துக்குளித்தலில் தேர்ந்த அவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டது பொருத்தமானதொன்று இவர்களில் பெரும்பாலானவர்கள் பெரியபட்டினம் கீழக்கரை ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள்[7]. இலங்கையும் ஆங்கிலேயர் ஆட்சியில் அமைந்து இருந்த சென்ற நூற்றாண்டில் கூட, இலங்கைக்கடலில் சங்கு குளிப்பதற்கு பெரிய பட்டினத்து சங்குகுளித் தொழிலாளர்கள் அனுப்பப்பட்ட விவரம்தெரிய வருகிறது[8]. இன்னும் பெரியபட்டினத்தில் சங்குகுளிகாரத்தெரு என்ற வீதியும் சங்குகுளிக்கும் தொழிலில் அனுபவமும் உள்ள ஏராளமான இசுலாமியரும் உள்ளனர்.

மேலும் தமிழக இசுலாமியரது மரக்கலங்களில் இந்தச் சங்குகள் ஏற்றப்பட்டு வங்காளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த மரக்கலங்களை இயக்கிய தண்டல்களும் இசுலாமியரே. கி. பி. 1794ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமான 11,20,000 சங்குகள் தேவிபட்டினம் துறையில் இருந்து கிழக்கரை எல்லே தண்டல் என்பவரது "களிமண்பார"' என்ற சரக்கு கப்பலில் ஏற்றப்பட்டு வங்காளத்திற்கு அனுப்பப்பட்டது. மீரா நயினா என்ற பிரமுகர், மன்னரது வியாபாரப் பிரதிநிதியாக கல்கத்தாவில் பணிபுரிந்தார். இந்தக்கப்பல் தேவி பட்டினம் துறைமுகத்திலிருந்து நாகூர், கட்டிக்கூர், பிம்லிபட்டினம், பச்சைமரி, ஹூக்லி துறைமுகங்களைத் தொட்டு கல்கத்தா சென்று அடைந்ததாக அரசு ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.[9] வங்காளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான கடல் பயணம் நீண்ட நெடுங்காலமாக இந்த ஊர்களின் வழிதான் சென்றது என்பதை இளையான்குடி மதாறுப்புலவர் பாடிய சேதுபதி ஏலப்பாட்டு என்ற சிற்றிலக்கியமும் உறுதி செய்கிறது.[10] வங்காளத்தில் இருந்து திரும்பும் தோணிகளில் அந்த நாட்டு, அரிசி, சீனப்பட்டு, கண்ணாடிச்சாமான், லஸ்தர் விளக்குகள் போன்ற புதுமைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்கு ஏற்றி வரப்பட்டன. வாணிபம் மீண்டும் உச்சநிலையையடைந்தாலும் தொடர்ந்து அந்த நிலைமை உறுதிபடுத்தக்கூடிய வரலாற்று, இலக்கியச்சான்றுகள் இல்லை. அப்பொழுது தமிழக வாணிபத்தில் ஈடுபட்ட டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர் பங்கும், போட்டியும் மிகுந்து இருந்தன. என்றாலும், கரையோர வாணிபத்தில் ஆங்காங்குள்ள மரக்காயர்கள் ஈடுபட்டு இருந்ததாக டச்சு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்நாட்டிற்கும் வங்கத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும், இசுலாமியரது மரக்கலங்கள், கைத்தறித்துணிகள், சங்கு, உப்பு, நெல், கரு வாட்டு சிப்பங்கள் தென்னங்கீற்றுகள், ஆகிய பொருட்களை எடுத்துச் சென்றன. தூத்துக்குடி கீழக்கரை, வேதாளைபாம்பன், தேவிபட்டினம், தொண்டி, பாசிப்பட்டினம் அதிவீரராமபட்டினம், கடலூர், நாகப்பட்டினம், போர்டோ நோவோ, பாண்டிச்சேரி ஆகிய துறைகள் இத்தகைய சரக்குகளைக் கொண்ட தோனிகள், தண்டல்களுடன் காட்சியளித்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், உள்நாட்டு வாணிபத்தில் கீழக்கரை சைய்யிது அப்துல் காதிர் மரைக்காயர் என்பவர் சிறப்புடன் இருந்ததை ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வணிகப் பெருமகனைப் பற்றிய செய்திகள் கி பி.1789 முதல் கிடைக்கின்றன. இராமநாதபுரத்திலும், கீழக்கரையிலும் இவருக்கு பண்டக சாலைகள் இருந்தன. இரும்பு, ஒடு, மரம், தானியங்கள், தலைப்பாகைத்துணி, துப்பட்டா. கம்பளங்கள் ஆகிய வியாபாரங்களில் ஈடுபட்டு இருந்தார்.[11] அப்பொழுது இராம நாதபுரம் மன்னராக இருந்த விஜயரகுநாத முத்துராமலிங்க சேதுபதி (கி பி.1762-1795)யின் உற்ற நண்பனாகவும் இருந்தார் எனத் தெரிகிறது.[12]

வள்ளல் சீதக்காதி காலந்தொட்டு, கீழக்கரை இசுலாமிய தன வணிகர்களுக்கும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு மிடையே நிலவிய நேச மனப்பான்மை காரணமாகவும், இராமநாதபுரம் சீமையெங்கும் வியாபாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அப்துல் காதிர் மரைக்காயரது பொருட்களுக்கு மாமூலான சுங்கவரி விதிப்பில், இருபத்து ஐந்து விழுக்காடு சலுகை அளிக்கப்பட்டு வந்தது.[13]சேதுபதி மன்னரைச் சிறையில் அடைத்து, ஆற்காட்டு நவாப்பின் பிரதிநிதிகளாக, அந்த நாட்டை ஆண்ட ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் காலத்திலும் இந்தச் சலுகை தொடர்ந்தது. அத்துடன் கடல் துறைகளிலும் கடற்கரைப்பட்டினங்களிலும் புதிதாக வணிக நிறுவனங்களை துவக்கி வணிகத்தை வளர்ப்பதற்கும் ஆற்காட்டு நவாப் முகம்மது அலி வாலாஜா" மரைக்காயருக்கு "பர்வானா" (அனுமதி உத்தரவு) வழங்கி இருந்தார்.[14] அதன் காரணமாக அப்துல் காதிர் மரைக்காயர் திருநெல்வேலிச் சீமையிலும் அவரது வாணிபத்தை விரிவுபடுத்தினார். காயல்பட்டினம், குல சேகரப்பட்டினம், வேம்பாறு ஆகிய ஊர்களிலும், வேறு பல இடங்களிலும் பண்டகசாலைகளைத் நிறுவி இருந்தார்.[15] அத்துடன், இராமநாதபுரம் சீமையில் கும்பெனியார், குடிமக்களிடமிருந்து கிஸ்தி (தீர்வை)யாகப் பெற்ற ஏராளமான நெல்லை, அப்துல் காதிறு மரைக்காயரிடம் விற்று வந்தனர். இந்த நெல் விற்பனையில்" "ஏகபோக உரிமை"யால் பாதிக்கப்பட்ட மெய் ஜியர் என்ற டச்சு நாட்டு தானிய வியாபாரி, கும்பெனி தலைமைக்கு வரைந்துள்ள புகாரிலிருந்தும் [16] இன்னும் இராமநாதபுரம் கலைக்டராக இருந்த காலின்ஸ் ஜாக்ஸனது துபாஷான ரங்கபிள்ளை மீது எழுப்பப்ட்ட ஊழல் புகார் பற்றிய ஆவணங்களில் இருந்தும், இந்த விவரங்கள் தெரியவருகின்றன.[17]

இந்தக்கால கட்டத்தில், கீழக்கரை மாமுனா லெப்பையும், காயல்பட்டினம் சேகனா லெப்பை என்பவரும் நவமணி வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்த செய்திகளும் உள்ளன. இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இந்த தனவணிகர்களிடமிருந்து நவரத்தினங்கள் வாங்கிய விவரத்தை கும்பெனியாரது ஆவணமொன்று குறிப்பிடுகின்றது.[18] சேகனா லெப்பை என்பவர் அறிஞர் பெருமக்களால் "புலவர் நாயகம்" என போற்றப்பட்ட ஷெய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை (சேகனாப்புலவர்) ஆலிமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில் அவர், இசுலாமிய காப்பியங்களின் படைப்பாளியாக மாறுவதற்கு முன்னர்,அவரது தந்தை ஹபீபு முகம்மது லெப்பை மரைக்காயரைப் போல, முதலில் நவரத்தின வணிகராகவே வாழ்வைத் தொடங்கினார். இவர்களைத் தொடர்ந்து கீழக்கரையில் சேகு ஸதக்கத்துல்லா, முகம்மது காசீம் மரைக்காயர், ஹபீபு மரைக்காயர் போன்ற சில வணிகர்கள் பத்தொன்பதாவது நூற்றாண்டின் துவக்கத்தில் வாணிபத்தில் சிறந்து விளங்கினர் எனத் தெரிகிறது. அவர்களது பெரிய பண்டகசாலை கீழக்கரையில், கீழப்பண்டகசாலை என்ற பெயருடன் வழங்கப்பட்டது. அந்தப்பகுதி இன்றும் பண்டகசாலைத்தெரு என குறிப்பிடப்படுகிறது. அப்பொழுது, இராமநாதபுரம் சீமையில் வடக்கே கலிய நகரியில் இருந்து தெற்கே வேம்பாறு வரை பல உப்பளங்கள் இருந்த பொழுதும், கீழக்கரைக்கு அருகே உள்ள வாளைத் தீவு, ஆனைப் பார் தீவுகளில் இயற்கையாக விளைந்த உப்பினை அவர்கள் எடுத்து வந்து விற்ற செய்தியை கும்பெனியாரது ஆவணமொன்று தெரிவிக்கிறது.[19] இவர்கள் பலமுறை "பாக் நீர் வழியில்" முத்துக்குளித்தல் மேற்கொண்டதை இன்னொரு ஆவணம் தெரிவிக்கிறது.[20]இன்னும் இந்த நூற்றாண்டில், கடலூர், சிதம்பரம், பகுதியில் செல்வாக்குடன் இருந்த மக்தும் நெயினா, அப்துல் லெப்பை, அலி என்ற இஸ்லாமியப் பெரு மக்கள் ஆங்கில கிழக்கிந்தியா கும்பெனியாரது வணிகத்தில் அவர்களுக்கு உதவிகரமாக இருந்தனர் எனத் தெரிகிறது. அப்பொழுது ஆற்காட்டு நவாப் தாவுதுகானிடம், மக்தும் நெய்னா பலமுறை பேட்டி கண்டு, ஆங்கிலேயருக்கு பல சலுகைகளைப் பெற்றுத்தந்தாராம். பொதுவாக இந்தக் காலக்கட்டத்தில் தமிழக இசுலாமியர் வாணிப உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்திய வரலாற்றுச் சான்றுகள் இல்லை.

  1. தனிப்பாடல் - நமச்சிவாயப்புலவர்
  2. உமறுப்புலவர் - சீதக்காதி திருமண வாழ்த்து கண்ணிகள் 75-83-1952
  3. அமீர் அலி - என், சீதக்காதி சமயமும் வாழ்வும் (1993)
  4. Memoir of Hendrick Zwaardecroom (1911) p. 9.
  5. Arunachalam-History of pearl Fishery of Tamil Coast(1952)
  6. Ibid
  7. கமால் - எஸ். எம். - இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக்குறிப்புகள் (1984) பக். 75
  8. Madura Dist. Records - vol. 4673. 15-8-1825.
  9. Tamilnadu Archives - Military Consultations vol. 105 A р. 2622.
  10. அமீர் அலி N. கேப்டன் - இசுலாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர் (1973) பக். 41, 42.
  11. Revenue Consultations — Vol. 62. A.p.p. 1796-9.
  12. Madurai Collectorate. Records - Vol. 1140 - 18-10-1802 p.141
  13. Ibid
  14. Madurai Collectorate Records. Vol. 1178 p. 4 to 71.
  15. Revenue Consultations vol. 91A. 15-12–1797 p. 45. 64
  16. Revenue consultations vol. 91A. p. 45, 61
  17. கமால் Dr. எஸ்.எம்-விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) பக், 156-157
  18. Tamilnadu Archives-Revenue Consultations. vol. 62A p. p. 17, 96, 97
  19. Madurai Collectonate Reconds vos. 4681. B. 26-2-183:p.p. 33–34
  20. Ibid 17-1-1833 p.p. 20-25 Tamilnadu Archives-Public Consultations vois XIII, X,XXVII ХХХ.