மெய்யறம் (அந்தணரியல்)

விக்கிமூலம் இலிருந்து

111. அந்தண ரியல்பு[தொகு]

  • 1101. அந்தண ரறத்தோடு செந்தன்மை பூண்டவர்.
  • அந்தணர் என்பவர் அறச்செயல்கள் செய்வதோடு கருணையும் நிரம்பியவர் ஆவார்.
  • 1102. மாணவர் தம்மையே வளர்க்கு மியல்பினர்.
  • அவர்கள் மாணவர்களை வளர்க்கும் இயல்பினை உடையவர்கள்.
  • 1103.அடுத்தவர் தம்மையு மளிப்பவரில் வாழ்பவர்.
  • இல்லறத்தார் மற்றவர்களையும் பாதுகாப்பர்.
  • 1104. அரசர்நல் லுயிரெலா மளிக்குந் திறத்தினர்.
  • அரசர் நல்ல உயிர்களைப் பாதுகாக்கும் திறமை உடையவர்.
  • 1105. அனைத்துயிர் தம்மையு மளிப்பவ ரந்தணர்.
  • எல்லா உயிர்களையும் பாதுகாப்பவர் அந்தணர்.
  • 1106. முதன்முந் நிலையினர் முகைமலர் காயனர்.
  • சிறுவர், இளைஞர், இல் வாழ்வினர் மூவரும் முறையே அரும்பு, மலர், காய் போன்றவர்கள்.
  • 1107. அந்தணர் மெய்ந்நிலை யடைந்தவர் கனிவிதை.
  • துறவி, ஞானி ஆகியோர் கனி, விதை போன்றவர்கள்.
  • 1108. விதையே மரமிலை மென்முகை யாதியாம்.
  • விதையே மரம், இலை, மெல்லிய அரும்பு போன்றவையாக மாறுகிறது.
  • 1109. மெய்யே யுலகுயி ரைந்நிலை யினராம்.
  • கடவுளே உலகமாகவும் உயிராகவும் ஐந்து நிலையினராகவும் உள்ளார்.
  • 1110. முறைமுகை விதையா முதனிலை யுயிர்மெயாம்.
  • அரும்பு விதையாகும் தன்மை உடையது போல முதல் நிலை உயிர் கடவுள் ஆகும் தன்மை உடையது.

112. அந்தண ரொழுக்கம்[தொகு]

  • 1111. ஓதலி னந்தணர்க் கொழுக்கநன் றென்ப.
  • மந்திரங்களை ஓதுவதைவிட துறவிகளுக்கு ஒழுக்கம் சிறந்தது ஆகும்.
  • 1112. அந்தணர்க் கொழுக்க மனற்குச் சூடுபோன்ம்.
  • அந்தணர்களுக்கு ஒழுக்கம் மனதிற்கு சூடு போல பிரிக்க இயலாதது.
  • 1113. ஒழுக்கமு மறிவு முடனிகழ் தகைமைய.
  • ஒழுக்கமும் அறிவும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கும் தன்மை உடையது.
  • 1114. ஒன்றின் றெனின்மற் றதுவு மிலதாம்.
  • ஒன்று இல்லை எனில் மற்றொன்றும் இருக்காது.
  • 1115. ஞானச் சொல்லெலாங் கானற் சலமாம்.
  • அவர்கள் கூறும் அறிவுரைகள் எல்லாம் கானல் நீர் போன்று உண்மையற்றது.
  • 1116. ஒழுக்க மறிதற் குரைகலின் றென்ப.
  • ஒருவரின் ஒழுக்கத்தை அறிவதற்கு உரைகல் எதுவுமில்லை.
  • 1117. பகுத்தறி வறநூ லுகுத்தவ ரேயவர்.
  • நன்மை, தீமைகளைப் பகுத்து விளக்கும் அறநூல்களில் கூறியுள்ளபடி நடத்தல் வேண்டும்.
  • 1118. ஒழுக்கமெவ் வுயிர்க்கு மூறுசெய் யாமை.
  • ஒழுக்கம் என்பது எந்த உயிருக்கும் துன்பம் செய்யாமை.
  • 1119. இயலு நன்றெலா மிடைவிடா தியற்றல்.
  • செய்ய முடிந்த நன்மைகள் எல்லாம் தொடர்ந்து செய்தல்.
  • 1120. இழுக்கமிவ் விரண்டிலொன் றியற்றத் தவறல்.
  • இவ்விரண்டில் ஒன்று செய்யத் தவறினாலும் அது குற்றம் ஆகும்.

113. கூடா வொழுக்கம்[தொகு]

  • 1121. சாமிக ளுட்பலர் காமிக ளாயினர்.
  • தலைவர்களில் பலர் காம இச்சை மிகுந்தவர்களாக உள்ளனர்.
  • 1122.தேசிக ருட்பல ராசின ராயினர்.
  • ஆசிரியர்களில் பலர் குற்றம் புரிபவர்களாக உள்ளனர்.
  • 1123. மகந்துக ளுட்பல ரிகந்தன ரொழுக்கம்.
  • மடாதிபதிகளில் பலர் ஒழுக்கம் தவறியவர்களாக உள்ளனர்.
  • 1124. தம்பிரான் மறமெலா மெம்பிரா னறிவர்.
  • துறவிகளின் குற்றங்களை இறைவன் அறிவார்.
  • 1125. போலியந் தணர்பலர் புரியா மறமிலை.
  • பல போலித் துறவிகள் செய்யாத குற்றமில்லை.
  • 1126. அரசரு ளுளர்மறங் கரவினி லாள்பவர்.
  • அரசர்களில் மறைவினில் குற்றம் செய்பவர்கள் உள்ளனர்.
  • 1127. இல்வாழ் வினருளும் புல்வாழ் வினருளர்.
  • இல்லறத்தாரிலும் இழிந்த வாழ்க்கை வாழ்பவர்கள் உள்ளனர்.
  • 1128. மாணவ ருளுமுளர் கோணல் கொண்டவர்.
  • மாணவர்களிலும் நேர்மையற்றவர்கள் உள்ளனர்.
  • 1129. உலக மென்றுநல் லொழுக்கங் கொள்ளும்?
  • உலகத்தினர் எப்பொழுது நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள்?
  • 1130. உள்ளும் புறமு மோரியல் பூணும்?
  • உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரியான தன்மை கொண்டவர்களாக மாறுவார்கள்?

114. மானங் காத்தல்[தொகு]

  • 1131. மானமென் பதுதம் மதிப்பை விடாமை;
  • மானம் என்பது தம்முடைய மதிப்பை விடாமல் இருப்பது;
  • 1132. தத்தந் நிலைக்குத் தாழ்ந்தசெய் யாமை;
  • தம்முடைய நிலைக்குக் கீழான செயல்களைச் செய்யாமல் இருப்பது;
  • 1133. தத்த மியற்குத் தக்கவா றொழுகல்.
  • தம்முடைய தன்மைக்குத் தக்கவாறு நடப்பது -ஆகியவை ஆகும்.
  • 1134. மானொரு மயிரற மாயுமவ் விடத்தே.
  • கவரிமான் ஒரு மயிர் உதிர்ந்தாலும் அந்த இடத்திலேயே உயிரைவிடும்.
  • 1135. மனிதர்தம் மதிப்பற வாழ்ந்திடல் வியப்பே.
  • மனிதர் தம் மதிப்பை இழந்த பின்னும் வாழ்வது வியப்புக்கு உரியது ஆகும்.
  • 1136. மாணவ ரிழுக்கலின் மடித னன்றே.
  • மாணவர்கள் குற்றம் செய்வதைவிட மடிதல் சிறந்தது.
  • 1137. இல்லின ரிவறலி னிறத்த னன்றே.
  • இல்லறத்தார் தானம் செய்யாமல் வாழ்வதைவிட இறத்தல் சிறந்தது.
  • 1138. அரசறஞ் செயாமையி னழித னன்றே;
  • அரசர் அறம் செய்யாது இருப்பதைவிட அழிவது சிறந்தது.
  • 1139. தாழ்ந்தார்த் தெறுதலிற் சாத னன்றே.
  • இழிந்தோர் கொல்வதைவிட சாதல் சிறந்தது.
  • 1140. அந்தணர் வெகுளலி னழற்புக னன்றே.
  • துறவிகள் கோபப்படுவதைவிட தீயில் புகுவது சிறந்தது.

115. வெஃகாமை[தொகு]

  • 1141. வெஃகுதல் பிறர்பொருள் விரும்புங் குற்றம்.
  • வெஃகுதல் என்பது பிறர் பொருளை விரும்புகின்ற குற்றம் ஆகும்.
  • 1142. வெஃகலை மறத்தின் வித்தென மொழிப.
  • எல்லா குற்றங்களுக்கும் பிறர் பொருளின் மீது ஏற்படும் விருப்பமே காரணம் ஆகும்.
  • 1143. அதுதீ யவாவி னங்குர மாகும்;
  • அது தீமையை ஏற்படுத்தும் விருப்பத்தின் ஆரம்பம் ஆகும்.
  • 1144. காமமுங் களவுங் கலிதழை யிலைவிடும்;
  • காமம், களவு போன்ற குற்றங்கள் பெருகும்;
  • 1145. கொலையும் பொய்யுமாங் கொம்பொடு கிளைவிடும்;
  • கொலை, பொய் போன்ற குற்றங்கள் வளரும்;
  • 1146. அழிதகு மறங்களா மரும்பொடு மலர்விடும்;
  • நம்மை அழிக்கக் கூடிய குற்றங்களாக மலரும்;
  • 1147. பழியுங் கேடுமா மழியாக் காய்தரும்;
  • பழிச் சொல், அழிவு போன்ற நிலையான துன்பங்களைத் தரும்;
  • 1148. அழிபல நிரயக் கழிபெருங் கனிதரும்;
  • மிக்க துயரத்தைத் தரக்கூடிய நரகத்தைத் தரும்;
  • 1149. பொறிவழித் துன்பமாஞ் செறிபல சுவையாம்.
  • 1150. ஆதலால் வெஃகலை யறவே விடுக.
  • அதனால் பிறர் பொருளை விரும்புகின்ற குற்றத்தை அறவே விட வேண்டும்.

116. வெகுளாமை[தொகு]

  • 1151. வெகுளி யகத்தெழும் வெங்கனற் சுடரே.
  • கோபம் மனத்தினுள் உண்டாகும் மிக்க வெப்பமுடைய தீப்பொறியாகும்.
  • 1152. இச்சுடர் தம்மையு மினத்தையு மழிக்கும்;
  • இப்பொறி கோபம் கொண்டவருடன் அவருடைய இனத்தையும் சேர்த்து அழிக்கும்;
  • 1153. நகையை யுவகையைத் தகையைக் கொல்லும்;
  • சிரிப்பு, மகிழ்ச்சி, கருணை ஆகியவற்றைக் கொல்லும்;
  • 1154.பகையைச் சொல்லரும் வகையில் வளர்க்கும்;
  • பகையை மிக அதிகமாக வளர்க்கும்;
  • 1155. மிகையுந் துயரு மிகுந்திடச் செய்யும்;
  • குற்றமும் துன்பமும் அதிகரிக்கச் செய்யும்;
  • 1156. வெகுளியை விடற்கவ் விருப்பமுட் கொள்ளுக;
  • கோபத்தை விடுவதற்கு அந்த விருப்பத்தை மனதினில் கொள்ள வேண்டும்;
  • 1157. வெகுளியுள் ளெழுங்கா னகுதலேபுரிக;
  • கோபம் மனதினில் தோன்றும் போது புன்னகை செய்ய வேண்டும்;
  • 1158. வெகுளியின் கேடெலாம் விரைந்துட னெண்ணுக;
  • கோபத்தினால் ஏற்படக்கூடிய தீமைகளை எல்லாம் உடனே நினைத்துப் பார்க்க வேண்டும்;
  • 1159. ஆடிகொண் டுடன்முக வழகினை நோக்குக.
  • கோபம் கொண்ட முகத்தின் தோற்றத்தைக் கண்ணாடி மூலம் பார்க்க வேண்டும்.
  • 1160. வெகுளியை யடுதலே தகுதியென் றடுக.
  • கோபத்தைக் கொல்லுவதே நீதி என்பதால் அதைக் கொல்ல வேண்டும்.

117. இன்னா செய்யாமை[தொகு]

  • 1161. மன்னுயி ருளமுடல் வருத்துவ வின்னா.
  • இன்னா என்பது உயிர்களின் மனதையும் உடலையும் துன்புறுத்துவது ஆகும்.
  • 1162. அவைதீச் செயலே யச்சொலே நினைப்பே.
  • அவை தீமை தரும் செயல், சொல், நினைப்பு ஆகியவை ஆகும்.
  • 1163. கொடியது செயலுட் கொலையென மொழிப.
  • தீய செயல்களில் கொடியது கொலை செய்தல் ஆகும்.
  • 1164. கொலையினு மிந்தியங் களைவது கொடியது.
  • கொலையைவிடக் கொடியது ஐம்பொறிகளை நீக்குவது ஆகும்.
  • 1165. அவைகெட வதைசெய லதனினுங் கொடியது.
  • அதைவிடக் கொடியது ஐம்பொறிகளை வருத்துவது ஆகும்.
  • 1166. கொடியவை சொல்லுட் குறளைபொய் நிந்தை.
  • சொல்லில் கொடியது புறம் பேசுதல், பொய் பேசுதல், இகழ்தல் ஆகியவை ஆகும்.
  • 1167. கொடியவை நினைப்புட் கொலைமுத னினைப்பு.
  • எண்ணத்தில் கொடியது கொலை செய்ய நினைப்பது ஆகும்.
  • 1168. இன்னா செய்தார்க் கின்னா வந்துறும்.
  • துன்பம் செய்தவருக்குத் துன்பம் வரும்.
  • 1169. ஒன்றொரு கோடியாய் பின்றைநாள் வந்துறும்.
  • ஒரு துன்பம் ஒரு கோடி துன்பமாக பின்வரும் நாளில் வரும்.
  • 1170. உற்றவுயி ரறிவள வுறுத்தும் நிற்கும்.
  • துன்பம் உற்ற உயிரின் அளவுக்கு ஏற்ப துன்பம் அநுபவித்த பிறகே நிற்கும்.

118. தவஞ் செய்தல்[தொகு]

  • 1171. தவமென் பதுதனைச் சார்ந்தநோய் பொறுத்தல்;
  • தவம் என்பது தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தல்;
  • 1172. உணர்வுடை யுயிர்கட் கூறுசெய் யாமை;
  • மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை;
  • 1173. கைந்நிலை விடாது மெய்ந்நிலை யுள்ளல்;
  • இல்வாழ்க்கையிலிருந்து நீங்காது இறைவனை நினைத்தல்;
  • 1174. மனத்தை யடக்கி வசஞ்செய முயறல்;
  • மனத்தைக் கட்டுப்படுத்தி நமக்குக் கீழ்ப்படியச் செய்ய முயலுதல்;
  • 1175. அதற்கின்றி யமையா வப்பியா சங்கள்.
  • அதற்குப் பயிற்சிகள் மிகவும் முக்கியமானவை.
  • 1176. தவஞ்செய லொன்றே தஞ்செய லென்ப.
  • தவம் செய்தல் ஒன்றே நாம் செய்ய வேண்டிய கடமை ஆகும்.
  • 1177. தவத்தி னளவே தனமுறு மென்ப.
  • நாம் செய்யும் தவத்தின் அளவுக்கு ஏற்பவே செல்வம் வரும்.
  • 1178. தவமுடித் தாரே சமனைக் கடப்பர்.
  • தவம் செய்தவர்கள் எமனையும் வெல்லுவர்.
  • 1179. தவமே யிகபரந் தருநன் முயற்சி.
  • இவ்வுலகத்திலும் மேலுலகத்திலும் இன்பம் அடைய தவமே சிறந்த முயற்சி ஆகும்.
  • 1180. தவமே யியற்றுக தகவுற வேண்டுவர்.
  • பெருமை அடைய விரும்புபவர் தவம் செய்தல் வேண்டும்.

119. துற வடைதல்[தொகு]

  • 1181. துறவியா னெனதெனு முறவினை யொழித்தல்;
  • துறவு என்பது 'யான்', 'எனது' என்ற பற்றினை விடுதல்;
  • 1182. மன்னுயி ரெல்லாந் தன்னுயி ரென்றல்;
  • எல்லா உயிர்களையும் தன்னுடைய உயிரைப் போல நினைத்தல்;
  • 1183. தன்பொருண் மன்னுயிர் தமதென வாழல்.
  • தன்னுடைய பொருள் மற்ற உயிர்களுக்குச் சொந்தமானது என்று வாழ்தல்;
  • 1184. துறவென விவ்வகத் துறவையே மொழிப.
  • இந்த அகத்துறவே உண்மையான துறவு ஆகும்.
  • 1185. புறத்துற வெல்லாம் பொய்த்துற வாமே.
  • புறத்துறவு(காவி ஆடை, சடை வளர்த்தல் போன்றவை) உண்மையான துறவு ஆகாது.
  • 1186. துறவந் தணருக் குறவொழுக் கன்றோ?
  • துறவு பூண்ட அறவோர்க்கு உறவு ஒழுக்கம் அல்லவா?
  • 1187. தாய்தந் தையரைத் தள்ளலுந் தண்மையோ?
  • பெற்றோரைப் பிரிவது மேன்மையான செயலா?
  • 1188. தன்னுயிர்த் துணையைத் தவிர்தலுந் தண்மையோ?
  • தன்னுயிர்த் துணையைத் தவிர்த்தல் மேன்மையான செயலா?
  • 1189. தீயவா மிவையெலாம் பேயா டுறவே.
  • தீமை பயக்கக் கூடிய இவை எல்லாம் வெறி பிடித்த விருப்பங்களாகும்.
  • 1190. தமரையே யளியார் பிறவுயி ரளிப்பரோ?
  • தம் உறவினரையே பாதுகாக்காதவர் பிற உயிர்களைப் பாதுகாப்பாரா?

120. அருள் புரிதல்[தொகு]

  • 1191. அருள்பல வுயிர்க்கு மன்புபா ராட்டல்.
  • அருள் என்பது எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல் ஆகும்.
  • 1192. உயிரெலா மெய்யது பயிரெனக் காண்க.
  • எல்லா உயிர்களும் இறைவனது குழந்தைகள் என்று பார்க்க வேண்டும்.
  • 1193. எவ்வகை யுயிர்க்கு மின்னா செயற்க.
  • எந்த உயிருக்கும் துன்பம் செய்தல் கூடாது.
  • 1194. அவற்றிற் காவன வனைத்து முதவுக.
  • அவற்றிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
  • 1195. தமையவை வருத்தினு மவைதமை யோம்புக.
  • நமக்கு அவை துன்பம் கொடுத்தாலும் நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
  • 1196. அருளுடை யார்மெய்ப் பொருளடை வதுதிடம்.
  • அன்புடையவர்கள் இறைவனை அடைவது உறுதி ஆகும்.
  • 1197. அருள்பே ணாருள மருண்மிகு முண்மை.
  • அன்பு செய்யாதவர்களின் உள்ளத்தில் தெளிவு இல்லாமல் குழப்பம் மிகும் என்பது உண்மை ஆகும்.
  • 1198. சுயநயச் செயலரு ளினையற வோட்டும்.
  • தன்னுடைய நலத்தைக் கருதிச் செய்யும் செயல்கள் அருளினை அறவே நீக்கும்.
  • 1199. பரநயச் செயலருள் பரவிடச் செய்யும்.
  • பிறருடைய நலத்தைக் கருதிச் செய்யும் செயல்கள் அருளினை பரவச் செய்யும்.
  • 1200. அருள்விடா தவரைமெய்ப் பொருள்விடா துண்மை.
  • அன்பு காட்டுபவரை இறைவன் கைவிடமாட்டான் என்பது உண்மை ஆகும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=மெய்யறம்_(அந்தணரியல்)&oldid=19812" இலிருந்து மீள்விக்கப்பட்டது