மெய்யறம் (1917)/அரசியல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அரசியல்.

௬௧-ம் அதி.- அரசு நலம்.

அரசுயிர் கட்கு சிரசென நிற்பது. ௬0௧
அதனலன் மாணவ ரருநல னாளுதல்; ௬0௨
இல்வாழ் வியலெலா மியைந்துநன் கொழுகல்; ௬0௩
சுற்றம் பெருக்கல் சூழ்ச்சி புரிதல்; ௬0௪
தெரிந்து தெளிதல் செய்வினை யாளுதல்; ௬0௫
ஒற்றுரை நூலமைச் சொருங்குட னாளுதல்; ௬0௬
பெரியமன் னரைச்சார்ந் தரியவை பெறுதல்; ௬0௭
நாடரண் பொருள்படை நட்பினி தாளுதல்; ௬0௮
வினைத்திற னனைத்து நினைத்தறிந் தாற்றல்; ௬0௯
முறைசெய் தறம்புரிந் திறையென நிற்றல். ௬௧0

௬௨-ம் அதி.- சுற்றம் பெருக்கல்.

சுற்றமென் பதுதனைச் சூழ விருப்பது. ௬௧௧
சுற்றமு மறிவுபோ லற்றங் காக்கும். ௬௧௨
சுற்ற மின்மை யற்றமுறு விக்கும். ௬௧௩
சுற்ற முடையார் சூழ்வன முடிப்பர். ௬௧௪
சுற்ற மிலார்க்கு சூழ்ச்சியே யில்லை. ௬௧௫
குற்றம் விடுதலாற் சுற்றுறுஞ் சுற்றம். ௬௧௬
கொடையா லின்சொலாற் கூடிடுஞ் சுற்றம். ௬௧௭
வாய்மையாற் பொறுமையாற் றூய்மையாஞ் சுற்றம். ௬௧௮
கொள்ளல் கொடுத்தலாற் குலாவுறுஞ் சுற்றம். ௬௧௯
உணர்ச்சி பழகலாற் லுதவுஞ் சுற்றம். ௬௨0


௬௩-ம் அதி.- கண்ணோட்டம்.

கண்ணோட்டஞ் சுற்றமேற் கண்ணோடி வீழ்தல். ௬௨௧
சுற்றங் கண்டுழிக் குற்ற மறத்தல்; ௬௨௨
சுற்றங் கண்டுழி யுற்றன செய்தல். ௬௨௩
கண்ணிற் கழகு கண்ணோட்ட மென்க. ௬௨௪
உளத்தொடு சேர்ந்தகண் ணோட்ட முயர்ந்தது. ௬௨௫
தீவினை யாளர்பாற் றீதுகண் ணோட்டம். ௬௨௬
கண்டுநஞ் சுணல்கரை கடந்தகண் ணோட்டம். ௬௨௭
கருமம் கெடாவகை கண்ணோடல் தக்கது. ௬௨௮
சிறுவர்பா லென்றுஞ் சிறிதுகண் ணோடுக. ௬௨௯
முறைசெயும் பொழுததை முற்றுமே விடுக. ௬௩0

௬௪-ம் அதி.- சூழ்ச்சி புரிதல்.

இயற்றுவ தெல்லா மெண்ணியே யியற்றுக. ௬௩௧
எண்ணா தியற்றுதல் கண்ணிலார் நடையாம் ௬௩௨
இயற்றத் தொடங்கி யெண்ணுத லிழுக்காம். ௬௩௩
இயற்றுமுன் செயலி னியல்பினை யாய்க. ௬௩௪
அறமெனிற் சுற்றுரு மறிஞரோ டெண்ணுக. ௬௩௫
வரவு செலவு வரும்பய னெண்ணுக. ௬௩௬
செய்வலி செய்வழி செய்பவர்க் கருதுக. ௬௩௭
வரவிற் செலவு வளருமேல் விடுக. ௬௩௮
பெரும்பயன் றராதெனிற் பேணா தொழிக. ௬௩௯
செய்வலி நெறியாள் சீரின்றேல் விடல். ௬௪0


௬௫-ம் அதி.- தெரிந்து தெளிதல்.

செயல்செய் வாரிய லுயர்குடிப் பிறப்பே; ௬௪௧
செம்மையே வாய்மையே தீவினை யின்மையே; ௬௪௨
அறிவே யன்பே யழகே யாற்றலே; ௬௪௩
பண்பே பொறையே பணிவே யின்சொலே; ௬௪௪
மறவி நெடுநீர் மடிதுயி லிலாமையே; ௬௪௫
அவாஅ வின்மையே தவாவினை யுண்மையே; ௬௪௬
பொதுச்சிறப் பெனுமிரு மதிவளர் கல்வியே. ௬௪௭
இவையெலா மியைந்துள வினமெலாந் தெறிக ௬௪௮
அறம்பொரு ளின்புயி ரச்சத்தாற் றெளிக. ௬௪௯
தெளியுமுன் கொண்டிடேல் தெளிந்தபி னையுறேல். ௬௫0

௬௬-ம் அதி.-செய்வினை யாளுதல்.

நன்றுதீ தெண்ணி நலம்புரிவா னாள்க. ௬௫௧
வருவாய் பெருக்கி வளஞ்செய்வா னாள்க. ௬௫௨
ஊறுறா தாற்று முணர்வோனை யாள்க. ௬௫௩
உறுமூ றொழிக்கு முரவோனை யாள்க. ௬௫௪
வினையினிற் றிரியா மெய்யனை யாள்க. ௬௫௫
இதையிதான் முடிப்பனென் றதையவன் பால்விடல் ௬௫௬
அதன்பி னவனையே யதற்குரிய னாக்குக. ௬௫௭
வினைக்கண் வனைசெயும் வீரனை யையுறேல். ௬௫௮
செயல்செயும் பலரையுந் தினந்தொறு நாடுக. ௬௫௯
செயன்முறை செய்தவன் சிந்தைகண் டாற்றல். ௬௬0


௬௭-ம் அதி.- ஒற் றாளுதல்.

ஒற்றுவினை ஞர்பகை சுற்றமறைந் தறிவது; ௬௬௧
கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தறிவது; ௬௬௨
உறுப்பெலாஞ் சிதைப்பினு முகாஅமை வல்லது. ௬௬௩
உலகெலா நிகழ்பவை யொற்றினா லறிக. ௬௬௪
ஒற்றுரை சான்ற நூல் கொற்றவன் கண்களே. ௬௬௫
ஒற்றிலார் கொற்றமும் வெற்றியு மிழப்பர். ௬௬௬
ஒற்றுரைத் ததனைவே ரொற்றினா லொற்றுக. ௬௬௭
ஒற்றுமூன் றொத்திடி னுண்மையென் றறிக. ௬௬௮
ஒற்றொற் றயிரா துணரா தாள்க. ௬௬௯
ஒற்றிற் கயலா ருணர்ந்திடா தீக. ௬௭0

௬௮-ம் அதி.- உரைநூ லாளுதல்.

உரைநூல் புரைதவிர புகழ்சால் நூல்கள். ௬௭௧
அழியாப் பொருள்களை யறைபவே புகழ்பெறும். ௬௭௨
அவைமெய்ப் பொருளே யதிற்சே ரறனே. ௬௭௩
பொருளிலா தறனிலை புணர்விலா தொழிவிலை. ௬௭௪
ஆதலா லவையு மழியாப் பொருள்களே. ௬௭௫
அவ்வைம் பொருளிலு மடங்காப் பொருளில்லை; ௬௭௬
புது நூ லுடனே புகழ்பெற லரிது; ௬௭௭
ஆதலா லுரைநூ லவைசொலுந் தொன்னூல். ௬௭௮
அவைபல மொழியிலு மமைந்துள மறைகள்; ௬௭௯
இனியநந் தமிழி னிலக்கிய மிலக்கணம். ௬௮0


௬௯-ம் அதி.- அமைச் சாளுதல்.

அமைச்சர சிற்கினி தமைவன சொல்வது; ௬௮௧
அரசுசொல் வனவு மமைத்துத் தருவது; ௬௮௨
அரசின் செயற்கெலாஞ் சிரசென நிற்பது; ௬௮௩
அரசின் குடிக்கெலா மன்னையா நிற்பது; ௬௮௪
அரசுயிர்த் துணையா வறனெலாஞ் செய்வது. ௬௮௫
அதனல மரசிய லனைத்துநன் காளுதல்; ௬௮௬
நூலிய லுலகிய னுண்ணறி வுடைமை; ௬௮௭
காமமும் வெகுளியுங் கைக்கொளா தமைதல். ௬௮௮
அமைச்சுபட் டியைப்போ லமைந்தறம் புரிக. ௬௮௯
அரசுவிக் கிரமனி னன்புகொண் டாள்க. ௬௯0

௭0-ம் அதி.- அறிந்து சொல்லல்.

நாநல மழியா நலமென மொழிப. ௬௯௧
ஆக்கமுங் கேடு மதின்வரு மென்ப. ௬௯௨
அறனும் பொருளு மதின்வரு மன்ற. ௬௯௩
அகிலநிற் பதுமஃ தமைதலா னன்றே. ௬௯௪
சொல்லு மியலெலா மொல்லும் வகைசொலல். ௬௯௫
அவையறம் பொருடர வமைத்துச் சொல்லல்; ௬௯௬
கேட்போர்க் கின்பங் கிளைக்கச் சொல்லல்; ௬௯௭
சுருங்கத் தொகுத்து விளங்கச் சொல்லல்; ௬௯௮
வரிசைப் படுத்தி மனங்கொளச் சொல்லல்; ௬௯௯
மறுக்கா விதத்து மாணுறச் சொல்லல். ௭00


௭௧-ம் அதி.- பண்பு செய்தல்.

பாடறிந் தொழுகலே பண்பென மொழிப. ௭0௧
பண்பா லுலக முண்டெனும் பொதுமறை. ௭0௨
மக்களுட் பண்பிலார் மரமெனப் படுவர். ௭0௩
பெரியார்க் கடங்கி யுரியவை வழங்குக. ௭0௪
சிறியரை யடக்கிச் செய்வன செய்க. ௭0௫
மெல்லியன் மகளிருண் மென்மைபா ராட்டுக. ௭0௬
நண்பருள் ளுவப்புற நண்ணிநின் றொழுகுக. ௭0௭
பகைவருள் ளுட்கமே னகைபுரிந் தொழுகுக. ௭0௮
சலவருட் சாலச் சலஞ்செய் தொழுகுக. ௭0௯
பண்பர சின்பெலா மெண்பதத் தாலாம். ௭௧0

௭௨-ம் அதி.- பெரிய வரசரைச் சேர்தல்.

பெரிய வரசர் பெரியநா டாள்பவர்; ௭௧௧
சிறிய வரசர்பாற் றிறைநனி கொள்பவர்; ௭௧௨
எவ்வர சர்க்கு மிளையாத் திறத்தினர்; ௭௧௩
திறனெலாம் பெருக்கி யறனெலாஞ் செய்பவர்; ௭௧௪
மறஞ்செயு மரசரின் றிறஞ்சிதைத் தொழிப்பவர். ௭௧௫
பெரிய வரசர் பெரியார்க் கடுத்தவர். ௭௧௬
அவரைச் சேர்தலா லரும்பெரு மாக்கமாம். ௭௧௭
அமைச்சராய்ப் புலவரா யவரவை சேர்க. ௭௧௮
அருவனைத் தலைவரா யவர்பாற்சேர்க. ௭௧௯
அவருள கொளநடந் தரியவை பெறுக. ௭௨0


௭௩-ம் அதி.- அவர்பா லொழுகல்.

அகலா தணுகா தனற்காய்வார் போல்க. ௭௨௧
அன்பொடு மெய்யொடு மடங்கிநின் றொழுக. ௭௨௨
அவர்முன் செவிச்சொ லயனகை பொருந்தேல். ௭௨௩
அவர்சொலி னலாலொன் ற்றிந்திட விரும்பேல். ௭௨௪
அவர்க்கா வனவு மமையங்கண்டியம்புக. ௭௨௫
அவர்விழை பவற்றை யகத்தினும் விழையேல். ௭௨௬
அவரை யுறாவகை யாங்கணு மொழுகுக. ௭௨௭
இளைய ரினத்தின ரெனநினைந் திகழேல். ௭௨௮
பழையவ ரெனினும் பண்பிலா தனசெயேல். ௭௨௯
தனக்குவேண் டுவவவர் சாற்றெனிற் சாற்றுக. ௭௩0

௭௪-ம் அதி.- குறிப்புணர் வுடைமை.

குறிப்புணர் விரண்டு கூறா கும்மே. ௭௩௧
குறிப்பி னுணர்த்தலே குறிப்பி னுணர்தலே. ௭௩௨
குறிப்பி னுணர்த்தல் கூறா துணர்த்தல். ௭௩௩
குறிப்பி னுணர்தல் கூறா துணர்தல். ௭௩௪
இவையர சமைச்சிற் கின்றியமை யாதவை. ௭௩௫
அகதினி லுள்ளது முகத்தினிற் றெரியும். ௭௩௬
மொழியான் மறைப்பினு முகமதைக் காட்டும். ௭௩௭
முதுவர் குறிப்பினான் மொழிகுவ ரறிகுவர்; ௭௩௮
முகங்கண் களினான் மொழிகுவ ரறிகுவர்; ௭௩௯
முன்சொல் குறிப்பினு மொழிகுவ ரறிகுவர். ௭௪0


௭௫-ம் அதி.- அரியவை பெறுதல்.

அரியவை நட்புநா டரண்பொருள் படையே. ௭௪௧
அவையொருங் கெய்தின்வா யமிழ்தடைந் தற்றே. ௭௪௨
ஒன்றெய் தினும்பிற வுண்டா மெளிதே. ௭௪௩
ஒன்று மிலாது நன்றுற லரிது. ௭௪௪
அவைபெரு மன்னர்க் கரியன வல்ல. ௭௪௫
அவருளங் கொளச்சொலி னவரவை யளிப்பர். ௭௪௬
அவரையோர் தந்தையா வறிந்திட வுடன்படல்; ௭௪௭
அவர்பின் வேண்டுவ ளித்திட வுடன்படல்; ௭௪௮
அவரது பகையை யழித்திட வுடன்படல்; ௭௪௯
பிறவுமொத் தியைவன பெற்றெலாம் பெருக்குக. ௭௫0

௭௬-ம் அதி.- நாடு.

நாடு நாடுவ நல்குநா னிலத்தது. ௭௫௧
மலைகாடு வயல்கடல் மருவிய நானிலம். ௭௫௨
அவை குறிஞ்சி முல்லை மருத நெய்தல். ௭௫௩
அவைபல வுயிருணா மரமுதற் றாங்கும். ௭௫௪
ஒருமொழி வழங்குவ தொருதனி நாடு. ௭௫௫
ஒருபெருங் கண்டத் துறுவவக நாடு. ௭௫௬
பிறபெருங் கண்டத் துறுவபுற நாடு. ௭௫௭
பெருங்கடன் மலையாற் பிரிவது கண்டம். ௭௫௮
கடலுந் தீவுமயற் கண்டமொடு சேரும். ௭௫௯
பலபெருங் கண்டமு முலகெனப் படுமே. ௭௬0


௭௭-ம் அதி.- நாட்டுச் சிறப்பு.

நாட்டுச் சிறப்புநல் வளன்பல வமைதல்; ௭௬௧
உயிகளு முணாக்களு மொக்க நிறைதல்; ௭௬௨
நிலநதி மலைகட னலநிதம் வளர்தல்; ௭௬௩
அரும்பொருள் பெரும்பொரு ளாலய மிகுதல்; ௭௬௪
அரணு மரசு மமைந்துநடு நிற்றல்; ௭௬௫
உறுபசி யரும்பிணி செறுபகை யிலாமை; ௭௬௬
செல்வமு மின்பமுஞ் சீரும் பெருக்கல்; ௭௬௭
ஒழுக்கமுங் கல்வியு முயர்நிலை நிற்றல்; ௭௬௮
திறந்தகை வாய்மை யறந்தவம் வளர்தல்; ௭௬௯
அருளுமெய் யறிவு மமைந்து பரவல். ௭௭0

௭௮-ம் அதி.- அரண்.

அரணுயிர் பொருள்களை யளிக்குமோர் காப்பு. ௭௭௧
இயற்கையுஞ் செயற்கையு மியைந்தர ணாகும். ௭௭௨
அரண்புற வரணக வரணென விரண்டு. ௭௭௩
புறவரண் புறநா டுறாவகை காப்பது. ௭௭௪
அகவர ணரசுயி ரரும்பொருள் காப்பது. ௭௭௫
கண்டத்தைச் சூழ்ந்துள கடனீர் புறவரண். ௭௭௬
அதனை யடுத்துள வருநிலம் புறவரண். ௭௭௭
நிலத்தை யடுத்துள மலைத்தொடர் புறவரண். ௭௭௮
மலையை யடுத்துள மரக்காடு புறவரண். ௭௭௯
நாட்டகத் தமையுமிந் நான்கு மகவரண். ௭௮0


௭௯-ம் அதி.- அர ணமைத்தல்.

அரணிலார்க் கரசிலை யரசிலார்க் கரணிலை. ௭௮௧
அரணன் கமைந்திடி னரசெலாங் கொள்ளும். ௭௮௨
அரணன் கமைத்தலோ ரரும்பெருஞ் செயலே. ௭௮௩
அரணெலா முரியரா லமைத்திடல் வேண்டும். ௭௮௪
புறவர ணான்கையும் பூரண மாக்குக. ௭௮௫
நாட்டி லகவர ணலம்பெற வியற்றுக. ௭௮௬
அவற்று ளகழ்மதி லரசில மாக்குக. ௭௮௭
புறவக நெறிகளைத் திறனுடன் பொருத்துக. ௭௮௮
அவைகணத் தடைக்கவும் திறக்கவும் வேண்டும். ௭௮௯
நெறியுள விடனெலாம் பொறிகளை நிரப்புக. ௭௯0

௮0-ம் அதி.- அர ணளித்தல்.

அரண்படை யளிக்குமஃ தளிப்பது படையே. ௭௯௧
நீரி லரும்படை நெடுங்கல நிறுத்துக. ௭௯௨
நிலத்தி லருந்தொழில் வலப்படை நிரப்புக. ௭௯௩
மலைமதில் களிலரு வினைப்படை நாட்டுக. ௭௯௪
காட்டுட் பகைகொலுங் கரவெலா மாக்குக. ௭௯௫
அரணுட் புறனெலா மாம்விளை வாக்குக. ௭௯௬
உடைபடைக் கலமெலாந் தடைவரா தியற்றுக. ௭௯௭
அவரவர் வசிப்புக் காமில மாக்குக. ௭௯௮
அகழ்மதில் சூழிலத் தரசினம் வாழ்க. ௭௯௯
அகவரண் களையர சனுதினங் காண்க. ௮00


௮௧-ம் அதி.- பொருள்.

விற்கத் தக்க விலையுடை யதுபொருள். ௮0௧
பொருளின் பறம்புகழ் பொருந்திடச் செய்யும். ௮0௨
பயனழ கருமையா லுயர்வஃ தடையும். ௮0௩
விலையிடம் பொழுதால் வேறுபா டுற்றிடும். ௮0௪
பொருண்மண் முதனாற் பூதங்கள் பிராணிகள்; ௮0௫
அவற்றினின் றாவன வாக்கப் படுவன. ௮0௬
உத்தம மவற்றுண் முத்தாதி மணிகளே; ௮0௭
வயிரமுதல் ரத்நமே பொன்முத லுலோகமே; ௮0௮
நவதா னியமே நன்மரஞ் செடிகளே; ௮0௯
உணவுடை யிலஞ்செல வணியமர்க் குரியவே. ௮௧0

௮௨-ம் அதி.- பொருட் சிறப்பு.

பொருளிற் சிறந்தது புகலவொன் றில்லை. ௮௧௧
அதுநினைத் தவையெலா மளிக்குந் திறத்தது; ௮௧௨
நீர்சூ ழுலகெலா மோர்நொடி யிற்றரும்; ௮௧௩
மன்னர்மன் னவரையுந் தன்னடி வீழ்த்தும்; ௮௧௪
அருளையு மெய்யையு மடைந்திடச் செய்யும். ௮௧௫
பொருளிலா ரின்பறம் புகழ்மெய் யிழப்பர்; ௮௧௬
மடையராய்த் தம்மரு நடையெலாம் விடுவர்; ௮௧௭
அடியராய்ச் சிறியரா யலக்கணுற் றுழல்வர்; ௮௧௮
பசியினும் பிணியினும் பட்டுழந் தழிவர்; ௮௧௯
பழியுளு நரகுளு மழியா துறைவர். ௮௨0


௮௩-ம் அதி.- உழவு.

உழவு தொழினில விளையுளைச் செய்தல். ௮௨௧
உழவ ருயிர்க்கெலா முயிரெனத் தக்கவர். ௮௨௨
உழவுசெய் முறைநிலங் கிழவர்தாங் காண்டல்; ௮௨௩
காடுநன் கழித்துக் கோடையி லுழுதல்; ௮௨௪
நிலத்திற் கிசைவன விதைத்திடத் துணிதல்; ௮௨௫
வித்திற் காமெரு மெத்த விடுதல்; ௮௨௬
வேர்செலு மாழ மேர்செல வுழுதல்; ௮௨௭
பதநன் கறிந்துநல் விதைசெல விதைத்தல். ௮௨௮
களைகட்டு நீர்பாய்ச்சிக் காத்துப் பயன்கொளல். ௮௨௯
ஒருபலன் றருநிலத் திருபல னாக்குதல். ௮௩0

௮௪-ம் அதி.- வாணிகம்.

வாணிகம் பண்ட மாற்று நற்றொழில். ௮௩௧
அஃதெஞ் ஞான்று மரசிற் கடுத்தது. ௮௩௨
அஃதிலார்க் கரசிலை யரசிலார்க் கஃதிலை. ௮௩௩
அதன்முறை யதைநித மதிபர்தா நோக்கல்; ௮௩௪
கணிதமெப் பொழுதுநா நுனிவைத் தாளுதல்; ௮௩௫
கொள்ளிடங் கொடையிட முள்ளுணன் கறிதல்; ௮௩௬
செலவெலாங் கூட்டிச் சிறிதேற்றி விற்றல்; ௮௩௭
எவர்க்கு மொருசொலே யின்புறச் சொல்லல்; ௮௩௮
கடனனி கொடுக்கு மடனனி யொழித்தல்; ௮௩௯
பிறரது பொருளையுந் தமதெனப் பேணல். ௮௪0


௮௫-ம் அதி.- கைத் தொழில்.

கைத்தொழில் பொருடரு மெய்த்தொழி லாகும். ௮௪௧
மற்றைய விரண்டையும் வளர்ப்ப தத்தொழில். ௮௪௨
அத்தொழில் பேணா ரடைகுவர் வறுமை. ௮௪௩
அத்தொழில் பல.அவை யாடை நெய்தல்; ௮௪௪
உணற்குஞ் செயற்கு முதவுவ செய்தல்; ௮௪௫
வீடரண் முதலிய மேம்பட வியற்றல்; ௮௪௬
நிலத்திற் செல்பல வலத்தே ராக்கல்; ௮௪௭
நீரிற் செல்பல நாவா யாக்கல்; ௮௪௮
நிலநீ ருள்ளுள பலபொரு ளெடுத்தல்; ௮௪௯
காப்பிற் காம்பல கருவிக ளியற்றல். ௮௫0

௮௬-ம் அதி.- படை.

பகையுயிர் படுத்தலாற் படையெனப் பட்டது. ௮௫௧
உலகெலா மளிப்பதோ ருத்தம வரசே. ௮௫௨
அரசரண் பொருள்களை யளிப்பது படையே. ௮௫௩
இன்பமும் புகழு மீவது படையே. ௮௫௪
மெய்யிய லடையச் செய்வதும் படையே. ௮௫௫
படையிலா ரரசரண் படுபொரு ளிழப்பர்; ௮௫௬
அறம்புக ழின்பறி வருண்மெய் யிழப்பர்; ௮௫௭
அடியராய்ச் சிறைபுகுந் தலக்கணுற் றுழல்வர்; ௮௫௮
பிணியொடும் பசியொடும் பிணக்குற் றழிவர்; ௮௫௯
நரகமும் பழியுங் கிருகமாக் கொள்வர். ௮௬0


௮௭-ம் அதி.- படை வகை.

படைவகை நான்கெனப் பகருவர், அவைதாம். ௮௬௧
முன்னோர் வழிவரு மூலப் படையே; ௮௬௨
நாட்டுளார்க் கூட்டு நாட்டுப் படையே. ௮௬௩
காட்டுளார்க் கூட்டுங் காட்டுப் படையே; ௮௬௪
கொடைநட் பால்வருங் கூலிப் படையே; ௮௬௫
நான்கிலொவ் வொன்று நால்வகைப் படும்அவை; ௮௬௬
நிலமிசை யமர்செயும் வலமிகு படையே; ௮௬௭
நிலக்கீ ழமர்செயு நேரிலாப் படையே; ௮௬௮
நீர்மிசை யமர்செயு நீர்க்கலப் படையே; ௮௬௯
வானிற் றிரிதரும் விமானப் படையே. ௮௭0

௮௮-ம் அதி.- படைக்கலம்.

படைக்கலம் பகைசெறப் படைகை யெடுப்பன. ௮௭௧
படைக்கல மில்லெனிற் படையுமின் றாகும். ௮௭௨
படைக்கல மீட்டல் பயப்பொரு ளீட்டலே. ௮௭௩
பகைத்திற னெண்ணியே படைக்கல மியற்றுக. ௮௭௪
விசையெரி கூருரம் விடமிக வியற்றுக. ௮௭௫
வெடிப்பன தெறிப்பன விசைமிகல் வேண்டும். ௮௭௬
எறிவன விடுவன வெரிமிகல் வேண்டும். ௮௭௭
குத்துவ வெட்டுவ கூர்மிகல் வேண்டும். ௮௭௮
உடைப்பன வறுப்பன வுரமிகல் வேண்டும். ௮௭௯
படைகொலும் படைக்கலம் விடமிகல் வேண்டும். ௮௮0


௮௯-ம் அதி.- படை யமைத்தல்.

பகைத்திற னழிக்கும் வகைத்தே ரியற்றுக. ௮௮௧
பகைக்குழுச் சிதைக்கும் வயக்களி றீட்டுக. ௮௮௨
குறித்த நெறிசெலுங் குதிரைகள் கொள்ளுக. ௮௮௩
இறத்தலி னின்புறூஉ மறத்தினர்க் கூட்டுக. ௮௮௪
தேர்மா பரியாள் சேனையா வகுக்க. ௮௮௫
அறைப்படுத் தேகுதற் காஞ்சில வியற்றுக. ௮௮௬
கடல்செலும் பலவகைக் கலங்களு மியற்றுக. ௮௮௭
விண்செலும் பலவகை விமானமு மியற்றுக. ௮௮௮
அவையாள் படைபடைக் கலமொடு வழங்குக. ௮௮௯
வரிசைத் தலைவரா வுரியரை யுயர்த்துக. ௮௯0

௯0-ம் அதி.- படை யளித்தல்.

படைதன் னுயிரெனப் பார்த்துமன் னோம்புக ௮௯௧
தினம்படை நோக்கித் திறன்மிகுந் திடச்செயல். ௮௯௨
அவரவர் திறனறிந் தளிக்க வேதனம். ௮௯௩
படையுவப் புறச்சீர் பரிசிலும் வழங்குக. ௮௯௪
அமரிற் படுபவர் தமர்தமை யோம்புக. ௮௯௫
படைகளின் கடன்தாம் பகைகொளல் கொலப்படல்; ௮௯௬
கூற்றையு மெதிர்த்திடு மாற்றலொடு செல்லல்; ௮௯௭
இழைத்த திகவாஅ திறந்துபுகழ் கொள்ளல்; ௮௯௮
தலைவரின் சொல்லெலா நிலையுறப் பணிதல்; ௮௯௯
தலைவரைத் தமதுநற் றாயினும் பேணுதல். ௯00


௯௧-ம் அதி.- நட்பு.

நட்பெனப் படுவது பெட்புறு கேண்மை. ௯0௧
அதுநன் மகாருளத் தலரு நன்மலர். ௯0௨
அதனிய லடுத்தவ ரகநக விரும்பல்; ௯0௩
இடித்துக் கூற லிடுக்கண் களைதல். ௯0௪
புணர்ச்சி பழகுத லுணர்ச்சியா னட்பாம். ௯0௫
ஆய்ந்துநன் னட்பறிந் ததன்பின் கொள்ளுக. ௯0௬
ஆய்ந்தறி யாதுறல் சாந்துயர் தருமே. ௯0௭
மருவிப் பன்னா ளொருவா தாய்க. ௯0௮
வாய்க்கா லனைய மாந்தரை நட்டல் ௯0௯
சூட்டுக் கோனிகர் துணைவரைக் கொள்க. ௯௧0

௯௨-ம் அதி.- பழமை.

பழமையெத னாலுங் கிழமைகுன் றாதது. ௯௧௧
அஃதுயர் நட்பி னருங்கனி யாகும். ௯௧௨
பழமையி னின்பம் பயப்பதொன் றில்லை. ௯௧௩
பழயவர் பிழைப்பினும் பழமைமா றற்க. ௯௧௪
அழிவந்த செய்யினு மன்பறா ராகுக. ௯௧௫
பழமையை மறப்போர் பாம்பினுங் கொடியர். ௯௧௬
அலக்கணுங் கேடு மழிவு முறுவர். ௯௧௭
பழமையை விடாரைப் பாரும் விடாது. ௯௧௮
பழையார்ப் பிரியாரை விழையாரும் விழைப. ௯௧௯
பழமையைப் புதுமையிற் பார்ப்போர் பெரியர். ௯௨0


௯௩-ம் அதி.- ஆகா நட்பு.

ஆகா நட்பிவ ணழிவுபழி தருவது. ௯௨௧
அவைநனி தருபவ ரறிவில் பேதையர்; ௯௨௨
உறுவதே தூக்குஞ் சிறுமைமிகு மாந்தர்; ௯௨௩
வினையொடு தஞ்சொல் வேறுபடு வஞ்சகர்; ௯௨௪
ஒல்லுங் கரும முஞற்றாக் கள்ளர்; ௯௨௫
மிகைபல விழைத்து நகைசெய்யும் பகைவர்; ௯௨௬
பக்கத் துறைந்து பதம்பார்த் திருப்பவர்; ௯௨௭
அட்டைபோ லொட்டிநின் றரியவை கவர்வோர்; ௯௨௮
கள்ளுங் கவறுங் கைவிடாப் பதகர்; ௯௨௯
விடருந் தூர்த்தரு நடருமுள் ளிட்டோர். ௯௩0

௯௪-ம் அதி.- இகல்.

இகலெனப் படுவ துளமாறு பாடு. ௯௩௧
நகறரு நட்பிற் கிகன்மறு தலையாம். ௯௩௨
அதனிய லடுத்தவ ரழமனம் விரும்பல்; ௯௩௩
இடருற மொழித லிடுக்கண் புரிதல். ௯௩௪
எதிருணர் வழுக்கா றிறுகுளத் தால்வ கடுத்தது. ௯௩௫
இகலுள மென்று மெரிந்து துன்புறும். ௯௩௬
அன்போ தட்பமோ வின்போ வுறாது. ௯௩௭
இகல்பா ராட்டுவார் தகல்காண் பரிது; ௯௩௮
அருமைச் சுற்றமு மாக்கமு மிழப்பர்; ௯௩௯
கேடு மழிவுங் கிளைகளாக் கொள்வர். ௯௪0


௯௫-ம் அதி.- பகைமை.

பகைமை யென்ப திகலது முதிர்வு. ௯௪௧
பழமையின் மறுதலை பகைமையென் றறிக. ௯௪௨
பகைமையுட் கொடியதுட் பகைமையென் றறைப. ௯௪௩
அதனினுங் கொடியதிங் கரியவை கவர்வது. ௯௪௪
பகைமையை யுட்கொள றகைமையன் றென்ப. ௯௪௫
அதைவிடா தவர்பா லியாதிவண் செய்வது? ௯௪௬
அன்புபா ராட்டி யவரை வளர்ப்பதோ? ௯௪௭
ஈகையென் றவர்கரத் தின்னுயிர் விடுப்பதோ? ௯௪௮
அறமென வெண்ணித் துறவினைக் கொள்வதோ? ௯௪௯
தம்மா ருயிரைத் தாமழித் தொழிவதோ? ௯௫0

௯௬-ம் அதி.- பகையடு நெறி.

பகைமையை விடாரைப் பகைத்தடல் வழக்கு. ௯௫௧
பகையினை யடற்குப் பலபல நெறியுள. ௯௫௨
எதற்கும் பொருளறி வின்றியமை யாதவை. ௯௫௩
ஒல்லு மிடத்தெலாம் வெல்லு மமர்நலம். ௯௫௪
ஒல்லா விடத்தினி லுபாய முறைநலம். ௯௫௫
முறையின் சொல்லே கொடைபிரிப் பழிப்பே. ௯௫௬
முன்னைய விரண்டுந் தன்னினாம் வகைசெயல். ௯௫௭
பின்னைய விரண்டும் பெருந்துணை கொடுசெயல். ௯௫௮
உட்பகை யினரை யுட்பகைத் தடுக. ௯௫௯
ஒட்டிமேய் வாரை யொட்டிமேய்ந் தடுக. ௯௬0


௯௭-ம் அதி.- அமர்வகை.

அமர்வகை நான்கென வறைகுவ ரவைதாம். ௯௬௧
வெட்சியே வஞ்சியே யுழிஞையே தும்பையே. ௯௬௨
வெட்சிநல் லுயிர்களை விரோதிபாற் கவர்தல்; ௯௬௩
அதனிக ழும்பல வமருஞ் செயலும். ௯௬௪
வஞ்சிமண் ணசைமன் னஞ்சவடல் குறித்தல்; ௯௬௫
அதனிக ழும்பல வமருஞ் செயலும். ௯௬௬
உழிஞையரண் முற்றி யுரத்தினாற் கோடல்; ௯௬௭
அதனிக ழும்பல வமருஞ் செயலும். ௯௬௮
தும்பைமுன் வந்தமன் மைந்துதலை யழித்தல்; ௯௬௯
அதனிக ழும்பல வமருஞ் செயலும். ௯௭0

௯௮-ம் அதி.- அமர்த் திட்பம்.

அமர்த்திட்ப மொருவ ரகத்திட்ப மென்ப. ௯௭௧
ஊறுறா தாற்றுக வூறுறிற் றளரேல். ௯௭௨
அமர்க்கெழும் வரையய லறியா தமைக. ௯௭௩
சொல்லுத லெளிது செய்தலோ வரிது. ௯௭௪
அமரின்மாண் டாரை யனைவருந் துதிப்பர். ௯௭௫
திண்ணியா ரெண்ணிய வெண்ணியாங் கடைவர். ௯௭௬
உளிபோல் வாருள ருருக்கண் டிகழேல். ௯௭௭
துணிந்தநல் லமரினைத் தூங்கா தாற்றுக. ௯௭௮
பெரும்பயன் றருமமர் வருந்தியுஞ் செய்க. ௯௭௯
அமர்த்திட்ப மிலாரை யாருமே வேண்டார். ௯௮0


௯௯-ம் அதி.— வலி யறிதல்.

தனது படையையுந் தனத்தையு மறிக. ௯௮௧
பகையது தனத்தையும் படையையு மறிக. ௯௮௨
தன்றுணைப் படையையுந் தனத்தையு மறிக. ௯௮௩
பகைத்துணை தனத்தையும் படையையு மறிக. ௯௮௪
இருதிறப் படைகளி னேற்றத்தாழ் வறிக. ௯௮௫
இருதிறப் படைக்கல வேற்றத்தாழ் வறிக. ௯௮௬
எவ்வமர் செயறனக் கெளிதென் றறிக. ௯௮௭
அதுகொளும் பொருள்படை யாதிய வறிக. ௯௮௮
அயன்மன் வரினா டளிக்குமா றறிக. ௯௮௯
அனையவு மறிந்துபி னமர்செயத் துணிக. ௯௯0

௧00-ம் அதி.— கால மறிதல்.

வலிமிகு கூகையைப் பகல்வெலுங் காகம். ௯௯௧
ஆகுங் காலத் தரியவு மாகும். ௯௯௨
ஆகாக் காலத் தெளியவு மாகா. ௯௯௩
தனக்காங் காலஞ் சார்ந்தமர் தொடங்குக. ௯௯௪
பகைகெடுங் காலம் பார்த்தமர் தொடங்குக. ௯௯௫
பருவம் வரும்வரை பகைவர்க் கடங்குக. ௯௯௬
பருவம் வரினுடன் பகைவரை யடக்குக. ௯௯௭
கூம்பும் பொழுது கொக்கொத் தமர்க. ௯௯௮
அடர்க்கும் பருவத் ததுபோற் குத்துக. ௯௯௯
காலமறிந் தேசெயின் ஞாலமுட னெய்தும். ௧000


௧0௧-ம் அதி.- இட னறிதல்.

நெடும்புனலுண் முதலையா லடுங்களிறு படுமே. ௧00௧
முதனிலத் தெறும்பான் முதலையும் படுமே. ௧00௨
கால்வ னெடுந்தேர் கடலோ டாதே. ௧00௩
நிலமிசை நாவாய் நின்றா டாதே. ௧00௪
முரண்சேர்ந் தவர்க்கு மரண்சேர்த னன்று. ௧00௫
மேலிருந் தமர்செயல் வெல்வோர்க்கு நன்று. ௧00௬
பெருமலை யரணுள பேடியும் வெல்லும். ௧00௭
சிறுபகை தன்னிடத் துறுபகை யழியும். ௧00௮
தெரியா விடத்துப் பெரியாரு மழிவர். ௧00௯
இடங்கண் டல்லது தொடங்கிடே லமரே. ௧0௧0

௧0௨-ம் அதி.- அமர் துணிதல்.

ஒருமா னிடவுயிர்க் குலகெலா மாற்றா. ௧0௧௧
பலமா னிடர்தாம் படுமமர் நன்றோ? ௧0௧௨
படுமா னிடரிற் பலருயி னன்றாம். ௧0௧௩
இவ்வொன் றலாலமர்க் கேதுபிறி தில்லை. ௧0௧௪
ஆன்றோ ரிதனையே யமர்க்கேது வென்ப. ௧0௧௫
அளிக்கப் படுவன வழிவன வெண்ணுக. ௧0௧௬
அளிக்கப் படுவன வதிகமேற் றுணிக. ௧0௧௭
பொருள்படை யமர்த்திறன் பொழுதிட னெண்ணுக. ௧0௧௮
அவைபகை யிற்றனக் கதிகமேற் றுணிக. ௧0௧௯
அன்றே லுலகெலா மழியினும் விடுக. ௧0௨0


௧0௩-ம் அதி.- தூது விடல்.

தூதொரு வர்க்குச் சொலச்சொலுஞ் சொல்லே. ௧0௨௧
எதிரியை யிணைத்தற் கெண்ணிய சொல்லே. ௧0௨௨
அறவர சமர்முன ரதுவிடல் வழக்கே. ௧0௨௩
அமையு மிடத்தெலா மதுவிடல் கடனே. ௧0௨௪
அறியாப் பகைக்கறி வளித்தலுங் கடனே. ௧0௨௫
தூதுரைப் பாரிய றூய்மையே வாய்மையே; ௧0௨௬
அன்பே துணிவே யழகே யாற்றலே; ௧0௨௭
நூலெலா மறிந்துள நுண்ணறி வுடைமையே; ௧0௨௮
அமையமும் பிறவு மறிந்துசொலுந் திறனே; ௧0௨௯
அமைச்சர சியலெலா மமைந்துள தன்மையே. ௧0௩0

௧0௪-ம் அதி.- அமர் செய்தல்.

தூதினுந் தெருளாத் தீயரை யடன்முறை. ௧0௩௧
அவரை யறவடா தவர்தீ தடறலை. ௧0௩௨
அரும்படை பெருக்கி யவரஞ் சச்செயல். ௧0௩௩
அறியா நெறியா லவரைச் சிறைகொளல். ௧0௩௪
அவரய லமர்செயு மமையத் தரண்கொளல். ௧0௩௫
அவரது பகைகொண் டவர்மற வலியடல். ௧0௩௬
அவரிற் சிலர்கொண் டவர்மற வலியடல். ௧0௩௭
அவரிற் சிலர்பிரித் தவர்மற வலியடல். ௧0௩௮
அமையு மமர்செய் தவர்மற வலியடல். ௧0௩௯
அளவுக் கதிக மடுவது தீது. ௧0௪0


௧0௫-ம் அதி.- வெற்றி யடைதல்.

வெற்றிதன் பொருளை மீட்டர சாளுதல். ௧0௪௧
பகைமறம் விடவும் பணியவுஞ் செய்தல். ௧0௪௨
பகையவை செயும்வரை பக்கநாட் டமர்த்தல். ௧0௪௩
பகைமற வலிகெடும் வகையெலாந் திருத்தல். ௧0௪௪
அறஞ்செயு மாறதற் கதனா டீதல். ௧0௪௫
வேரொடும் பகையடல் வெற்றியென் றறைப. ௧0௪௬
அஃதரும் பெருமற மாமென் றறிக. ௧0௪௭
அமர்பகை யெச்ச மனலதா மென்ப. ௧0௪௮
அனலற வொழிப்பவ ரியாங்கணு முளரோ? ௧0௪௯
அடாஅ வகையதை யடக்கிவைத் தாளுக. ௧0௫0

௧0௬-ம் அதி.- அரசு கொள்ளல்.

அரசினைத் தருதற் கருகரந் தணரே. ௧0௫௧
அருளறி வமைந்துள வறவோ ரந்தணர். ௧0௫௨
அவரிலை யெனிற்றரற் கருக ரரசரே. ௧0௫௩
மறத்தினைச் சிதைக்குந் திறத்தின ரரசர். ௧0௫௪
அவரிலை யெனிற்றரற் கருகர் வணிகரே. ௧0௫௫
பொருள்வே ளாண்மை புரிபவர் வணிகர். ௧0௫௬
அவரிலை யெனிற்றரற் கருகர் பிறரே. ௧0௫௭
பிறர்பிற தொழிலெலாம் பேணியிங் காள்பவர். ௧0௫௮
அனைவருந் தரக்கொள லதிகநன் றென்ப. ௧0௫௯
அறஞ்செயத் தானர சாதலும் வழக்கே. ௧0௬0


௧0௭-ம் அதி.- குடி புரத்தல்.

குடியெலா மகவெனக் கொண்டுமன் னோம்புக. ௧0௬௧
அவர்க ளியாவரு மறிவுறச் செய்க; ௧0௬௨
அரியகைத் தொழில்சில வறிந்திடச் செய்க; ௧0௬௩
படைக்கலப் பயிற்சியிற் பாடுறச் செய்க. ௧0௬௪
பொருளைக் குடியின் பொதுவெனப் பெருக்குக. ௧0௬௫
குடிபொருள் செய்தற் கடிமுதல் வழங்குக. ௧0௬௬
குடியில் வாழ்ந்திடக் குறைந்தன வழங்குக. ௧0௬௭
குடிசெயூ தியத்துட் குடியினர் வாழ்க. ௧0௬௮
பொன்றுநாண் மிஞ்சிய பொதுவா மன்கொளல். ௧0௬௯
குடிபசித் துழலன்மன் குற்றமென் றறிக. ௧0௭0

௧0௮-ம் அதி.- இறை கொள்ளல்.

இறைகுடி யூதியத் திறைகொளு மளவே. ௧0௭௧
அஃதறு பங்கிலொன் றாமென மொழிப. ௧0௭௨
இறையிலா றொன்றனு ளிறையினர் வாழ்க. ௧0௭௩
ஒன்றிறை கொளநடு வுதவிட வழங்குக. ௧0௭௪
ஒன்றினாட் டகம்புற மோம்பலை நடாத்துக. ௧0௭௫
ஒன்றினூர் நிலநல முயர்ந்திடச் செய்க. ௧0௭௬
ஒன்றினே கல்வியோ டுயரற மாற்றுக. ௧0௭௭
மிஞ்சுவ பொதுவொடு வேந்துவைத் தோம்புக. ௧0௭௮
புவிநலங் குன்றிற் பொதுப்பொருள் வழங்குக. ௧0௭௯
மறமன் னிலங்கொளத் திறஞ்செய வழங்குக. ௧0௮0


௧0௯-ம் அதி.- முறை செய்தல்.

குடியது குற்றமன் கடிவது முறையாம். ௧0௮௧
கடியு மியலதன் காரணம் போக்கல்; ௧0௮௨
காரணம் போம்வரை காப்பினுள் வைத்தல். ௧0௮௩
எதற்குமோர் வகையறி விலாமையே காரணம். ௧0௮௪
செய்ததைச் செய்ய விடாமையே காப்பு. ௧0௮௫
இவையே யறமுறை நவையே பிறவெலாம். ௧0௮௬
முறைகண் ணோடா துயிர்வௌவ லென்ப. ௧0௮௭
அம்முறை யழிவுறு மரசுசெய் மறமுறை. ௧0௮௮
களையறி யாமை நிலங்குடி யொக்கும். ௧0௮௯
களையோ களையுடை நிலமோ களைவது. ௧0௯0

௧௧0-ம் அதி.- அறம் புரிதல்.

அறமன் னுயிர்த்துய ரறுக்கு நல்வினை. ௧0௯௧
அவ்வினை யுயிர்தொறும் வெவ்வே றாகும். ௧0௯௨
அவையுடன் கண்டுநன் காற்றுதன் மன்கடன். ௧0௯௩
துயர்முத லுயிர்க்கெலாந் துப்புர விலாமை; ௧0௯௪
அதனத னிடத்ததை யமர்த்திவை யாமை; ௧0௯௫
ஆறறி வினர்க்குநல் லறிவில் லாமை. ௧0௯௬
உயிரெலா மதனத னுணவுற வோம்புக. ௧0௯௭
அதனத னெல்லையு ளமர்த்திவைத் தாளுக. ௧0௯௮
ஆறறி வினர்க்குநல் லறிவெலாம் வழங்குக. ௧0௯௯
அறவிரி திருக்குற ளாதியா லறிக. ௧௧00

அரசியல் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=மெய்யறம்_(1917)/அரசியல்&oldid=1403726" இருந்து மீள்விக்கப்பட்டது