மேனகா 1/005-022

விக்கிமூலம் இலிருந்து

மேனகா

1-வது அதிகாரம்


சாம்பசிவ ஐயங்கார்


பு
த்தியில்லாதவனுக்குச் சுகமில்லை; என்ன செய்கிறது குட்டிச் சுவரைப்போல வயதான ஒரு கிழம் சொல்லுகிறதே, அதைக்கேட்கவேண்டுமே என்கிற மதிப்பு கொஞ்சமாவது இருந்தால் இந்த கஷ்டமெல்லாம் ஏன் உண்டாகிறது?” என்று எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தகுந்த கடுகடுத்த முகத்தோடு கனகம்மாள் தனக்குத்தானே மொழிந்து கொண்டு சமையலறையிலிருந்து கூடத்து அறைக்குச் சென்றாள்.

கூடத்தில் போடப்பட்டிருந்த சாய்மான நாற்காலியில் சாய்ந்து தமக்கெதிரில் இருந்த சிறிய மேஜையின் மீது கால்களை நீட்டி விட்டிருந்த டிப்டி கலெக்டர் சாம்பசிவ ஐயங்கார் தமது இடக்கரத்தால் நெற்றியைப் புதைத்துக் கண்களை மூடியவண்ணம் அசைவற்றிருந்தார். அவருடைய அன்னை கனகம்மாள் அப்போதைக் கப்போது கொடுத்த கூர்மையான சொல்லம்புகள் அவருடைய செவிகளுக்குள் நுழைந்து துளைத்தனவாயினும் அவர் உணர்வு பெறாமற் சும்மா விருப்பதே சுக மென்றிருந்தார்.

நார்மடிப் புடவையும், நரைத்த சிகையும், துளசிமணி மாலையும், இளமை வடிவமும், பூனைக் கண்ணும்,


குறிப்பு:- சாம்பசிவ ஐயங்கார். மேனகா என்பவை உண்மைப் பெயர்களை மறைக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைப் பெயர்கள். பொக்கைப் பல்லும், வெள்ளிச் செம்பும், தொள்ளைக்காதும் பளபளவென மின்னத் திரும்பி வந்த கனகம்மாள், “ஒரு தரமா! இரண்டு தரமா கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் இலட்சந்தரம் படித்துப் படித்துச் சொன்னேன். பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பொருத்த மிருக்கிறதா இல்லையா வென்று பார்த்து கலியாணத்தைச் செய்யச்சொன்னேன்; அது காதில் துழையாமல் போய்விட்டது” என்று கூறிக்கொண்டே திரும்பவும் சமையலறைக்குள் சென்றாள்.

வீட்டில் மனைவியிடம் கோபத்தையும் ஆத்திரத்தையும் காட்டி, குண்டுச்சட்டியிற் குதிரை யோட்டி, வெளியில் யாவரிடத்திலும் இனிமையே வடிவாய் யாவருக்கும் நல்லவராய் ஒழுகி வரும் எத்தனையோ மனிதரை உலகம் கண்டிருக்கிறது. ஆனால், தஞ்சையின் டிப்டி கலெக்டரான நமது சாம்பசிவ ஐயங்காரோ ஊருக்கெல்லாம் பெருத்த புலி, வீட்டிற்கு மாத்திரம் எலி, பிறரைக் கெடுக்க வேண்டுமென்னும் பொல்லா மனதுடையவ ரன்றாயினும், அவர் தமது முன் கோபத்தாலும், அவசரபுத்தியாலும் தமக்குக் கீழிருந்த தாசில்தார்கள், ரிவின்யூ இன்ஸ்பெக்டர்கள், குமாஸ்தாக்கள், கிராம அதிகாரிகள், சேவகர்கள் முதலியோர் யாவரையும் திட்டி விடுவார். சேவகர் முதலிய சிப்பந்திகளை அடிப்பதும் வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள் அவர் சுற்றுப் பிரயாணம் சென்று வல்லமென்னும் ஊரில் ஒரு சாவடியில் தங்கினார். காலையில் வெளியிற் சென்று தமது அலுவல்களை முடித்து விட்டு பகற் பன்னிரண்டு மணிக்கு சாவடிக்கு வந்து போஜனம் முடித்தார். சாதாரண ஜனங்கள் தமக்கு ஒழிந்த காலத்திலும், தாம் இன்புற்றிருக்கும் காலத்திலும் தமது குழந்தைகளை யெடுத்துக் கட்டி யணைத்து முத்தமிட்டு சீராட்டிப் பாராட்டி, அவற்றின் மழலை மொழிகளைக் கேட்டு அவற்றுடன் கொஞ்சி குலாவுதல் வழக்கமன்றோ, அவ்வாறு புது நாகரீகத்திற் பழகிய அதிகாரிகள் ஒழிந்த வேளையில், தமது பைசைக் (Bicycle) கிலுக்கு முகந்துடைத்து எண்ணெய் தடவி சீவிச் சிங்காரித்து பொட்டிட்டு மையிட்டுக் காற்றாகிய பால் புகட்டி அதனால் ஆத்ம திருப்தியடைதல் பெரும்பான்மையும் காணப்படுகிறது. நமது சாம்பசிவ ஐயங்காரும் அவர்களில் ஒருவராதலால், போஜனத்தின் பிறகு தமது இயற்கையின்படி இரட்டைச்சக்கர வண்டியின் இடத்திற் சென்றவர், அவ்வண்டியாகிய குழந்தைக்கு அன்று ஒரு நோய் கண்டிருந்ததை அறிந்தார். அவர் வெளியிற் சென்றிருந்த தருணத்தில் அவருடைய சமையற்காரன் மாதவன் அதில் முரட்டாட்டமாக ஏறி நெடுந்தூரம் சென்று அதை ஒடித்து வைத்திருந்தான். அதைக்கண்ட சாம்பசிவம் தமது நெற்றிக்கண்ணைத் திறந்தார். வசை மாரியைச் சொரிந்தார்; பிரம்பைக் கையிலெடுத்தார்; எதிரில் நடுநடுங்கி நின்ற டபேதார் ரெங்கராஜூவின் மீது சீறிப் பாய்ந்தார். “நாயே! நீ இங்கே எதற்காக இருக்கிறாய்? உன்னுடைய டாலி டவாலிகளைக் கழற்றிக் கீழே வைத்துவிடு; என் முன்னால் நில்லாதே; ஒடிப்போ கழுதை, உனக்கு எதற்காகச் சம்பளம் கொடுத்துப் பிண்டமும் கொட்டி வீட்டில் உட்கார வைத்திருக்கிறது?” என்று தாறுமாறாய்த் திட்டினார். அவருக்கு முன்னர் வந்திருந்த டிப்டி கலெக்டர்களிடத்தில் அத்தகைய அவமதிப்பை பெற்றறியாத ரெங்கராஜுவின் முகம் சினத்தினால் சிவக்க, இரத்தம் தெறித்தது. அவன்தன்னை அடக்கிக்கொண்டு, “இல்லெ சாமி! சமையக்கார ஐயரு ஏறிக்கிட்டுப் போனாரு; எனக்குச் சங்கதி தெரியாதுங்க” என்று பணிவாக மொழிந்தான். பெருஞ் சீற்றத்தினால் தமது மதியை இழந்த நமது ருத்ர மூர்த்தி, “அந்தப்பயல் இதைத் தொடும்போது யாருக்கு சிறைத்துக்கொண்டு இருந்தாய்? போக்கிரி நாயே குற்றத்தைச் செய்துவிட்டு எதிர்த்துப் பேசுகிறாயா?” என்று பிரம்பை ஓங்கி அவனை இரண்டு அடிகள் அடித்து விட்டார். மானியும் முரட்டு மனிதனுமாகிய ரெங்கராஜூ உடனே தன்னை மறந்தான். அவரது கையிலிருந்த பிரம்பைப் பிடுங்கிக் கொண்டு வட்டியும் முதலுமாக அடியைத் திருப்பிக்கொடுத்து அவருடைய கோபம் தணியும்படி செய்து விட்டான். அதன் பிறகு ரெங்கராஜு பல நாட்கள் வரையில் தன் வேலை போய்விட்ட தென்றே நினைத்து வெற்றிலைப் பாக்குக் கடை வைக்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தான். ஆனால் டிப்டி கலெக்டரோ சிறிதும் களங்கமற்ற இருதயம் உடையவராதலால், அந்த நிகழ்ச்சியை அன்றோடு மறந்து விட்டார். அவனைத் தமது வீட்டைவிட்டு மாற்றாமலே வழக்கப்படி அன்பையும், கோபத்தையும் மாறிமாறிக் காட்டி வந்தார். இத்தகைய குணமுடையவர் தமது வீட்டில் மாத்திரம் அடங்கி ஒடுங்கி அன்னையின் மனதிற்கு விரோதமின்றி நடந்து வந்தார்.

முற் கூறப்பெற்றவாறு கோபத்தோடு சமையலறைக்குள் சென்ற கனகம்மாள் திரும்பவும் வெளியில் வந்தவள், “ஜாதகத்தை நன்றாக பாரடா பாரடாவென்று தலையிலடித்துக் கொண்டேன். ஏதோ காக்கை, குருவி கத்துகிறதென்று நினைத்தானே யொழியக் கொஞ்சமாயினும் அதைக் காதில் வாங்கினானா?” என்றாள்.

அதைக் கேட்ட சாம்பசிவ ஐயங்கார் பொறுமையாக, “ஆமாம்; வெள்ளைக்காரர்களெல்லாரும் ஜாதகம் பார்த்துத்தான் கலியாணம் செய்கிறார்களோ? அவர்களில் ஸ்திரீ புருஷர் சண்டையில்லாமல் அன்போடு ஒற்றுமையாய் வாழவில்லையா? அதெல்லாம் பைத்தியந்தான். நொண்டி வழியால் முயல் போய்விட்டதாக்கும்” என்று மெதுவாக முணுமுணுத்தார்.

கனகம்:- வெள்ளைக்காரனைப் பார்த்துப் பார்த்துத்தானே அநியாயமாய் நம்முடைய தேசமே நாசமாய்ப் போய் விட்டது. ஆனால் அது அவனுடைய குற்றமன்று; உங்களுடையது. நாம் அவனுடைய வழக்கத்தைப் பின்பற்றினால், முற்றிலும் அதையே செய்தல் வேண்டும். இல்லையாகில், நம்முடைய பழக்கவழக்கத்தை விடக்கூடாது; வெள்ளைக்காரன் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில்லை; ஆகையால்; அதை நீங்களும் செய்ய முயலுகிறீர்கள்; ஆனால் அவர்கள் பக்குவமடைந்த பெண்ணையும், பிள்ளையையும் ஒருவரோடு ஒருவர் ஐந்தாறு மாதகாலம் பழகும்படி விடுத்து அவர்களுடைய மனமும், குணமும் பொருந்துகின்றனவா வென்று பார்க்கிறார்களே அப்படி ஏன் நீங்கள் செய்கிறதில்லை? உங்களுடைய காரியமே எப்போதும் பாதிக்கிணற்றைத் தாண்டுவதுதானே. நாம் பாலிய விவாகம் செய்வது நலமென்று வைத்திருக்கிறோம்; பெண்ணும் பிள்ளையும் ஒற்றுமையாய் வாழ்வார்களா வென்பதை அப்போது அநுபவத்தில் அறிய முடியாதாகையால் ஜாதகத்தின் மூலமாக அறிய முயல்கிறோம். அவர்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை கிடையாது; பெண்களையும் பக்குவமடைந்த பிறகே மணம் செய்விக்கிறார்கள். ஆகையால், கைப்புண்ணிற்குக் கண்ணாடி எதற்கு? ஏட்டின் மூலமாய் அறிதலை விட அநுபவத்திலேயே விடுத்துப் பார்த்து விடுகிறார்கள். அதுவும் நல்ல ஏற்பாடுதானே; இல்லற வாழ்க்கை என்பது கணவன், மனைவி யென்னும் இரண்டு மாடுகளால் ஒற்றுமையாக இழுத்து நடத்தப்படும் வண்டி யல்லவா? நம்மிடமுள்ள மாடும் நாம் புதிதாய்க் கொள்ளப்போகும் மாடும் ஒருமணப்பட்டு உழைக்கின்றனவா என்பதை அறிய நாம் அவற்றை வண்டியிற் பூட்டிப் பார்ப்பதில்லையோ? மனமொத்து வாழ்வதற் குரிய காரியமல்லவா? நாம் நம்முடைய பெண்ணின் மீது ஆண் காற்றுவீசுதல் கூடாதென நினைக்கிறோம். வெள்ளைக்காரர்கள் நீடித்த பெருத்த லாபத்தைக் கருதி அற்பக் கேட்டைப் பொருட்படுத்தவில்லை; ஒரு பெண் தனக்குக் கணவனாக வரிக்கப்படும் மனிதனோடு சொற்பகாலம் ஒருமித்துப் பழகுவதினால் என்ன கெடுதி சம்பவிக்கப் போகிறது? அவள் ஒருவனிடம் திருப்தியாக நடக்கத் தவறினும், அவனிடத்திற் கற்ற பாடத்தை இன்னொருவரிடத்தி லாயினும் ஒழுங்காக ஒப்புவிப்பா ளன்றோ? அவர்கள் காரியவாதிகள். நீங்களோ இரண்டிலும் சேராமல் அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் சேர்த்துக்கொண்டு திரிசங்குவின் சுவர்க்கத்திலிருக்கிறீர்கள்.

சாக்குலே கொஞ்சம், பேக்குலே கொஞ்சம் என்றவனுடைய அறியாமைக்கும் உங்களுடைய அறியா மைக்கும் வித்தியாசமில்லை. நாங்கள் சொன்னால் உங்களுக் கெல்லாம் மூக்கின் மேல் கோபம் வந்துவிடும். நீங்கள் எல்லாமறிந்த மேதாவிகள், நாங்கள் இங்கிலீஷ் பாஷை படித்தறியாத முட்டாள்கள். பழைய மூட நம்பிக்கைகளை விடாத பட்டவர்த்தனம்; கர்நாடகம். புது நாடக மாடும் உங்களுக்கெல்லாம் இவ்வித உபத்திரவங்கள் வருவதேன்? ஆனால் உங்களுக்கென்ன வருத்தம்? நீங்கள் செய்யும் விஷப்பரிட்சையினால் ஒன்றையுமறியாத பேதைப் பெண்கள் வதைப்பட்டு அழிகிறார்கள் என்றாள்.

சாம்பசிவ ஐயங்கார் சிறிது கோபங்கொண்டார். எனினும் அதைக்காட்டாமல்,"அம்மா என்ன பைத்தியம் இது எல்லாம் அவரவர்களுடைய தலைவிதிப்படிதானே நடக்கும். நம்மாற் செய்யக்கூடிய தென்ன இருக்கிறது? ஆயிரம் முறை ஜாதகத்தைப் பார்த்தோ அல்லது அதுபோகத்தில் விடுத்தோ கலியாணம் செய்தாலும் வீட்டுக்கு வீடு வாசலுண்டு; கணவனுக்கும், மனைவிக்கும் சண்டையில்லாத வீடேது. ஒரு வீட்டில் சொற்ப சண்டை இருந்தால் இன்னொரு வீட்டிற் பெருத்த பூசலாயிருக்கிறது. ஏழைக் குடும்பங்களில் புருஷன் வழக்கத்திற்கு மாறாக சிறிது தாமதமாய் வீட்டிற்கு வந்தால், அவன்வேறு எந்த ஸ்திரீயோடு பேசி விட்டு வந்தானோ வென்று நினைத்து அவன் மனைவி எரிச்சலும் பொறாமையும் கொண்டு அவனுக்குச் சாப்பாடு போடாமல் கோபித்துக் கொண்டு குப்புறப் படுத்து விடுகிறாள். பெரிய மனிதர் வீட்டிலோ தான் இல்லாத காலத்தில் தன் மனைவி பரிசாரகனோடு திருட்டு நட்புக் கொண்டாளோ வென்று கணவன் ஐயுறுகிறான். இப்படி தக்க முகாந்தரம் இன்றி ஒருவருக்கொருவர் சண்டை யிடுதலும் ஒருவர் மீதொருவர் வெறுப்பைக் கொள்ளுதலும் மனித இயற்கை; என்றாலும் இவன் செய்த காரியத்தைப்போல இந்த உலகத்தில் எவனும் செய்யத்துணிய மாட்டான்; இந்த முட்டாள் என்னை எவ்வளவு அவமதித்து நினைத்த விதம் வைது அவமானப் படுத்தினான் தெரியுமா? இப்படிச் செய்தவன் பெண்ணுக்கு என்ன தீங்கைத்தான் செய்யமாட்டான் அண்டை வீட்டுக்காரர்கள் என்னைக்கண்டவுடன் கண்ணீர் விட்டு அழாத குறையாக இவன் படுத்திவைத்த பாட்டையெல்லாம் சொன்னார்கள். அடடா! என்ன துரதிருஷ்டம் நமக்கிருப்பது ஒரே பெண் குழந்தை யென்று அதன் மேல் நமது ஆசையை யெல்லாம் வைத்து, கிளியை வளர்ப்பதைப் போல எவ்வளவோ அருமையாக வளர்த்து இங்கிதம் அறியாத எருமைக்கடா வினிடத்திற் கொண்டு போய்த் தள்ளினோமே! நம்முடைய புத்தியில் ஆயிரம் தரம் செருப்பால் அடித்துக் கொண்டாலும் அது நம்முடைய மடமைக்கும் போதாது” என்றார்.

கனகம்:- ஆமடா அப்பா! கலியாணத்திற்குப் பெண்ணிருப்பதாகப் பத்திரிகையில் விளம்பரம்செய்து புருஷனைத் தேடிப் பிடித்தாயல்லவா! அதற்குத் தக்க மரியாதையை நீ பெறவேண்டாமா? இந்தமாதிரி அதிசயத்தை எங்கள் அப்பன், பாட்டன் காலத்தில் கேட்டதே யில்லை. இது பெருத்த கூத்தாகத்தான் இருக்கிறது. இந்த உபாயத்தை நீங்கள் எவரிடத்திற் கற்றுக் கொண்டீர்களோ! உங்கள் குருவாகிய வெள்ளைக்காரர்கள் கூட இப்படிப் பத்திரிகையில் விளம்பரம் செய்வதில்லையாமே? வியாபாரத்திற்குப் பெண்ணிருக் கிறதென்று எழுத உங்களுக்கு வெட்கம், மானம் முதலியவை கூடவா இல்லாமற் போகவேண்டும்! சாமான்களை விலைக்குக் கொள்வதைப்போல வியாபாரம் செய்தால் இம்மாதிரியான துன்பந்தான் சம்பவிக்கும். இப்படிக் கலியாணம் செய்வதைவிட மாப்பிள்ளையை வி.பி. தபாலில் அனுப்பும்படி விளம்பரம் செய்வீர்களானால், அது இன்னம் சுலபமா யிருக்கும். தங்கமான பெண்ணை முன்பின் கண்டும் கேட்டு மறியாத ஒரு பைத்தியத்தினிடம் கொண்டுபோய்த் தள்ளி அவளை மீளாத வேதனைக்கு ஆளாக்கினர்கள். இரண்டு கெட்ட முண்டைகளும் நாசமாய்ப் போக; என் வயிறெரிகிற மாதிரி அவர்களுடைய வயிறு எப்போது எரியுமோ? இராவணன் குடியைக் கெடுக்க ஒரு சூர்ப்பனகை வந்தாள்; இந்தப் பைத்தியத்தின் குடியைக் கெடுக்க இரண்டு சூர்ப்பனகைகள் வந்திருக்கிறார்கள். அவர்கள் இருக்கிற வரையில் அந்தக் குடும்பம் உருப்படப்போகிறதில்லை. நம்முடைய குழந்தையும் சுகப்படப் போகிறதில்லை என்றாள்.

சாம்பசிவலயங்கார்:- இனிமேல் என் உயிர் போனாலும் பெண்ணை அங்கே அனுப்ப மாட்டேன். இரண்டு புலிகளின் நடுவில் ஒருமான் அகப்பட்டுக் கொண்டு விடுபட வழியறி யாமல் வருந்துவதைப் போல அந்தத் துஷ்டர்களிடம் இவளிருந்து ஒருநாள் வாழ முடியாது. இவள் இனி இங்கேயே இருந்து விடட்டும், பாலியத்திலேயே விதவையாய்ப் போனதாக நினைத்துக் கொள்வோம்; பெண்கள் சுகப்படும் பொருட்டு புருஷன் வீட்டுக்குப் போவது வழக்கம்.துன்பங்கள் அனுபவிக்க யார் அனுப்புவார்கள்? கலியாணத்துக்கு மூவாயிரம் ரூபா கொடுத்தோம். சாந்தி முகூர்த்தத்திற்கு இரண்டாயிரம் ரூபா பெறுமானமுடைய சிறப்புகளைச் செய்தோம். நான் ஒன்றும் செய்யவில்லை என்று நாத்திமார் இருவரும் துஷிப்பதும் இடித்திடித்துப் பேசுவதும் கணக்கு வழக்கில்லையாம். ஒரு பிடி அரிசியெடுத்து பிச்சைக்காரனுக்குக் போட்டுவிட்டாளாம்; அரைப்படி அரிசியைப் போட்டுவிட்டா ளென்று அவர்கள் அந்தப் பைத்தியத்துக்குச் சொல்லிக் கொடுத்தார்களாம். அந்த முழுமுட்டாள் இரும்புக் கரண்டிக் காம்பைப் பழுக்கக் காயவைத்துக் கையிற் சுட்டுவிட்டானாம். இதைக் கேட்டவுடன் என்மனம் பட்டபாட்டை என்னவென்று சொல்வேன் மானத்துக்கு அஞ்சிப் பேசாமல் வந்துவிட்டேன்.

கனகம்:- ஆகா! பொறுமையில் பூமாதேவி என்றே நம்முடைய குழந்தை மேனகாவை மதிக்க வேண்டும். இத்தனை அக்கிரமங்கள் நடந்திருந்தும், இவள் தன் புருஷன் மீதும், நாத்திமார்களின் மீதும் எவ்வித குறையும் சொல்ல வில்லையே! சூடுபட்ட தழும்பைக் கண்டபோது எனக்கு சந்தேகம் உதித்தது; என்ன வென்றேன். நெருப்புத்தணல் தவறுதலாகக் கையில் விழுந்து விட்டதாகச் சொன்னாளே மேனகா! ஆகா! இவளுடைய நற்குணமும், பெருமையுமே அவர்களை அவசியம் அடித்துவிடும். கொலை செய்யக்கூட அஞ்சமாட்டார்கள் பாதகர்கள். நகைகளை யெல்லாம் பறித்து அடகு வைத்து வாயிற் போட்டுக்கொண்டு குழந்தையை பிறந்த மேனியாக விட்டது போதாதென்று, இப்படி அடித்தும், சுட்டும், வைதும் உபத்திரவிப்பார்களோ! நம்முடைய பெண்ணுக்காகத்தானே நாம் இவ்வளவு பொருளை வாரிக்கொடுத்தோம். நம்முடைய பொன் மாத்திரம் விருப்பமாயிருக்கிறதோ? பிறர் தேடும் பொருளில் இப்படிப் பேராசை கொண்டலையும் நாய்களுக்கு வெட்கமென்ன? மானமென்ன? பெளரஷமென்ன? ஆணவமென்ன? அடடா! அவர்கள் வீடு குட்டிச் சுவராய்த்தான் போய்விடும் - என்றாள்.

சாம்ப:-என்னைக் கண்டவுடன் அந்தப் பைத்தியம், “ஏனடா இங்கே வந்தாய்? அயோக்கியப் பயலே” என்றும், “உள்ளே நுழைந்தால் காலை ஒடித்துவிடுவே” னென்றும் என்னுடைய சேவகர்களுக்கு எதிற் சொன்ன வார்த்தையை நான் மறப்பேனா! - என்றார்.

சமையலறையிலிருந்த கனகம்மாள் ஆத்திரப் பெருக்கில் தன் கையிலிருந்த பெருத்த கீரைத்தண்டைக் கையிற் பிடித்த வண்ணமே டிப்டி கலெக்டருக்கெதிரில் தோன்றின காட்சி, அந்தக் கதாயுதத்தால் அவரை அடிக்க வந்ததைப்போல் இருந்தது. அம்மாள் ஆத்திரத்தோடு கையை நீட்டி, “உனக்கு தெரியா தப்பா! அந்த முண்டைகள் மருந்து போட்டு விட்டார்களடா! கலியாணத்திற்குப் பின் இவ்வளவு காலமாக அவன் இப்படியா இருந்தான்! வரவர அவர்களுடைய துர்போதனையும், மருந்தும் ஏறிவிட்டன வப்பா! அவன் இதைத்தானா செய்வான்? இன்னமும் ஆயிரம் செய்வான். அவன் மேற் குற்றமில்லை. எறும்பூறக் கல்லும் குழிந்து போகாதா! ஓயாமற் போதித்துப் போதித்து மனதில் விஷத்தை ஊட்டிக் கொண்டே வந்தால், கரையாத மனதும் கரைந்து போகாதா?” என்றாள்.

சாம்பசிவஐயங்கார், “அவன் கடைசியில் என்ன செய்தான் தெரியுமா? நான் பெண்ணை அழைத்துப் போக வேண்டு மென்று அவனிடத்திற் சொன்னேன். உடனே அவன் செருப்பை எடுத்துக்கொண்டு என்னை அடிக்க வந்தான். நல்ல வேளையாக நம்முடைய சேவக ரெங்கராஜூ அவனைத் தடுத்து மறைத்துக் கொண்டான். இல்லாவிட்டால், மிகவும் அவமானம் நேரிட்டிருக்கும்” என்றார்.

கனகம்மாள் விசனத்தோடு, “சரிதான்; மாமனாருக்குத் தகுந்த மாப்பிள்ளைதான். உனக்குக் கீழிருப்பவரை அடிக்காதே, வையாதே யென்று நான் எத்தனை தடவைகளில் சொல்லித் தலையில் அடித்துக் கொண்டும் நீ கேளாமற் செய்கிறா யல்லவா, அது வீணாய்ப் போகுமா? நமக்குக் கண்ணுக்குக் கண்ணான குழந்தைமேல், உன் பாபமூட்டை வந்திறங்கி விட்டதாக்கும். உம்; எல்லாம் தலைவிதியப்பா! காசைக் கொடுத்துத் தேளைக் கொட்ட விட்டுக் கொண்டதைப்போலப் பணத்தையும் கொட்டி, அருமையாய் வளர்த்த தங்கத்தையும் தாரை வார்த்தோம். என்ன செய்கிறது? பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டும். அந்த துஷ்ட முண்டைகளால் உபத்திரவம் உண்டாகு மென்பது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும். முன் பின் தெரியாத இடத்தி லெல்லாம் சம்பந்தம் செய்து கொண்டால் அது இப்படித்தான் முடியும். போனது போகட்டும்; நம்முடைய குழந்தையை அழைத்துக்கொண்டு வந்தாயே, அதுவே போதும், அவள் இங்கேயே இருக்கட்டும். நல்ல காலம் வராமற் போகாது. அவனுக்கு எப்போது நல்ல புத்தி வரப்போகிறதோ, பார்க்கலாம்” என்ற வண்ணம் தன் ஆத்திரத்தை அடக்க வல்லமை அற்றவளாய்க் கண்ணுங் கண்ணிருமாய்க் கனகம்மாள் கீரைத்தண்டோடு சமையலறைக்குள் சென்றாள். துயரமே வடிவமாய் உட்கார்ந்திருந்த சாம்பசிவஐயங்கார், மேன்மாடியில் எவரோ விரலை மெதுவாய்ச் சொடுக்கித் தமக்குச் சைகை காட்டியதையுணர்ந்து மேலே நிமிர்ந்து பார்த்தார். அழகே வடிவாய்த் தோன்றிய பொற்கொடி போன்ற ஒரு பெண்மணி அங்கிருந்த வண்ணம் தன் சிரத்தை மாத்திரம் ஒரு பலகணியின் வழியாக நீட்டினாள். அவளுடைய கண்கள் அவரை வருந்தி அழைத்தன.

“சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடந்
துற்றே யசையக் குழையூசலாடத் துவர் கொள் செவ்வாய்
நற்றே னொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே.”

என்னத் தோன்றிய அம் முகத்தை நோக்கிய டிப்டி கலெக்டரின் துயரமும், முக வாட்டமும் பறந்து போயின; இன்ப மயமானார். பத்தரை மாற்றுப் பைம்பொன்னைப் பழித்த அப் பூங்கொடியின் மேனி நிறத்தை அவளால் உடுத்தப் பெற்ற மேகவருணப் பட்டாடையும் இடையை அலங்கரித்த தங்க ஒட்டியாணமும் ஆயிர மடங்கு வனப்பித்தன. வயிரக் கம்மல், வயிர மூக்குப் பொட்டு முதலிய உயர்தர இழைகள் அவளது வதனத்திற் சுடர்விட் டெரித்தன; கறுஞ் சாந்துத் திலகமே கண் கொள்ளாச் சிங்காரமாய்க் காண்போர் மனதிற் காமத் தீயை வளர்த்தது. அவளுக்கு முப்பது வயது நிரம்பியதாயினும், அவளது தோற்றம் அவளுக்கு வயது பதினேழேயென்று பொய்யுரைத்துப் பிரமாணம் செய்தது. அதிக உயரமும் குறுகலு மின்றி நடுத்தர உயரத்தையும், மிக்க பருமனும் மெலிவு மின்றி உருட்சி திரட்சியைக் கொண்ட உன்னத மேனியையும் பெற்றிருந்த அவளிடத்தில் பக்குவ காலத்து யெளவன மடமயிலார்க்கு உரிய விவரித்தற்கரிய வசீகரத் தன்மையும், காண்போர் கண்ணையும் மனத்தையும் ஒருங்கே கவரும் அன்றலர்ந்த அரவிந்தத்தின் தள தளப்பும், மென்மையும் மற்றெல்லா நலன்களும் கொள்ளையாய்ப் பொலிந்தன. யாதொரு மகவையும் பெறாத புதிய சோபனப் பெண்ணைப் போல ஒளிர்ந்து அஞ்சுகம் போலக் கொஞ்சும் அவ் வஞ்சிக்குத் தங்கம்மாள் என்று பெயர் சூட்டியது எத்தகைய பொருத்தம்! கொடிய குணத்தையும் கடிய மனதையுங் கொண்ட கரடி, புலி, சிங்கம் முதலிய விலங்குகளும் தம் பேடுகளைக் கண்டால் அடங்கி ஒடுங்கித் தம்து செருக்கை யிழந்து அவைகளின் காலடியில் வீழ்ந்து அவைகளை நாவினால் நக்கிக் கொடுத்து நைந்திளகு மென்றால், யாவர்மீதும் கோபங்கொள்ளும் சாம்பசிவ ஐயங்கார் அழகுக் குவியலாய்க் காணப்பட்ட தம் மனையாட்டியைக் கண்டு வெண்ணெயைப்போல் இளகி இன்பமாய் நின்றது விந்தையாமோ? மேன்மாடியி லிருந்த காந்தம் டிப்டி கலெக்டரின் சிகையைப் பிடித்து உலுக்கி மேலே இழுத்தது. அடுத்த நொடியில் அவர் மேலே சென்று அந்த வடிவழகியின் பக்கத்திற் பல்லிளித்து நின்றார்.


❊ ❊ ❊ ❊ ❊


"https://ta.wikisource.org/w/index.php?title=மேனகா_1/005-022&oldid=1252298" இலிருந்து மீள்விக்கப்பட்டது