ரங்கோன் ராதா/அத்தியாயம் 19
1
[தொகு]மகனே! விபரீதமான சம்பவமாகத்தான் தோன்றும் உனக்கும் சரி, எனக்கும் சரி. கட்டுக்கதைகளிலும் இப்படி இராதே என்றே கூறுவர். ஆனால், எனக்கு ஏற்பட்ட மனமுறிவு என்னை எந்த விபரீதத்துக்கும் தயாராக்கிவிட்டது. ராதா சொல்வாள், பூனைகூடப் புலியாக மாறும் என்று. நம்மைக் கண்டதும் ஓடும் பூனையைத் துரத்திக் கொண்டு சென்று, ஒரு அறையில் அது புகுந்த பிறகு, கதவைத் தாளிட்டுக் கொண்டால், தப்பி ஓட மார்க்கமே இல்லாததால், பூனைக்குப் பிரமாதமான திகில் ஏற்பட்டு, திகிலின் விளைவாகத் தைரியம் உண்டாகிப் பாய்ந்து, நமது கண்களை நாசம் செய்துவிடுமாம்! பூனை அல்ல அந்த நேரம், புலியாகிவிடுகிறது என்று ராதா கூறுவாள். நான் பட்ட வேதனை என்னை அவ்விதமாக்கிவிட்டது. என்னவோ ஓர் வகையான வெறி, சே! எக்கேடு கெட்டாலும் கெடுவோம், இந்தக் கெடுமதியாளனுடன் மட்டும் இனி இருக்கக்கூடாது என்று ஒரு எண்ணம், அசைக்க முடியாதபடி ஏற்பட்டுவிட்டது. பிணம் சுடலையில் வேகிறது. நான் ஆண் உடையில் ஊரைவிட்டு வெளியே செல்கிறேன்.
அப்பா! நான் காவி அணிந்து உலவிய காலம் இருக்கிறதே, அது வெந்த புண்ணுக்கு வேல் ஆக முடிந்தது. கயவர்களின் கூட்டுறவே கிடைத்தது. அவர்கள் ஊரை ஏய்க்க உரத்த குரலில் பாடும் பஜனைப் பாட்டுக்களை, நானும் முதலில் நம்பினேன். நானும் அவர்களில் ஒருத்தியாக இருக்க ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது, அவர்களைப் போல் மூடர்கள் வேறு கிடையாது என்பது. பலர் என்னைப் போலவே வாழ்க்கையில் ஏற்பட்ட திகைப்பினாலேயே திருவோடு தூக்கினவர்கள் - பிறகோ, அவர்கள் பாடுபட்டுப் பிழைக்க விரும்புபவருக்குக் கைகொடுக்க மறுக்கும் உலகை ஏய்த்து வாழ இதுவே எளிய வழி என்று கண்டறிந்து, அதற்கேற்றபடியே நடக்கலாயினர். இத்தகையவர்களுடன், நான் சில மாதங்கள் உலாவினேன். திருவிழா எங்கெங்கு நடக்கிறதோ அங்கெல்லாம் செல்வது.
சாவடிகள் எங்களுக்குச் சொந்தம். குளத்தங்கரைகளில் கொண்டாட்டம் - போலீஸின் கண்களில் சிக்கிவிட்டால் ஆபத்துதான். இந்நிலையில், நான் பெற்ற அனுபவம் இருக்கிறதே, அதனை ஆயுட்காலம் பூராவும் கூறலாம். ராதாவிடம் சொல்லித்தான், பண்டாரங்களைப் பற்றியே ஒரு பெரிய புத்தகம் எழுதச் செய்யவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு விதவிதமான பண்டாரங்களைபற்றி எனக்குத் தெரியும். அவர்களின் 'கதைகள்' உலகுக்கு, எச்சரிக்கையாகக்கூட இருக்கும். நான் அந்த உலகிலே கண்ட பல அதிசயங்களைக் கூறி உனக்குச் சலிப்பு உண்டாக்கப் பிரியப்படவில்லை. சுருக்கமாகச் சிலது மட்டும் கூறுகிறேன் - பல இரவுகள் பட்டினி கிடந்திருக்கிறேன். திருட்டுச் சொத்திலே பங்கு பெற்றிருக்கிறேன் - போலீஸில் கூடச் சிக்கிக் கொள்ள இருந்தேன் ஒரு முறை! இவ்வளவும், எனக்கு அல்லலைத் தந்ததே தவிர, ஆபத்தைத் தரவில்லை - ஆண் உடை எனக்குக் கவசமாக அமைந்திருந்தது. ஆனால் மகனே! நான் எப்படியடா கூறுவேன், அந்தக் கவசம் என்னைக் கடைசி வரை காப்பாற்ற முடியாது போயிற்று. நான் படுகுழியில் தள்ளப்பட்டேன்... உன் அன்னை என்ற அந்தஸ்திலிருந்து வீழ்ந்தேன். அன்று எனக்குக் கடுமையான ஜுரம். நான் கூட்டாளியாகக் கொண்டிருந்த கிழப் பண்டாரம், எனக்கு மருந்து வாங்கிக் கொடுத்தான். மருந்தோடு விபசாரம் என்ற விஷமும் கலந்தான்.
தற்செயலாகத்தான் கண்டுகொண்டான் - தகாத காரியம் என்று கெஞ்சினேன், எதிர்க்கச் சக்தி இல்லை. நான் வீழ்ந்தேன்! விழியில் வழிந்தோடிய நீர் கொஞ்சமல்ல. மேலும் நடந்தவைகளைக் கூறி உன்னைச் சித்திரவதை செய்யத் துணியவில்லையடா கண்ணே! நான் துரோகியானேன் - விபசாரியானேன் - பிறகு எனக்கும் பண்டாரக் கூட்டமோ, காவி உடையோ தேவைப்படவில்லை. கிழப் பண்டாரம் சில நாட்களுக்குப் பிறகு, என்னைத் தன் தங்கை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பெருமையுடன் கூறினான். "ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லி என்னை இந்தத் தள்ளாத வயதிலே துரத்தினாயே, பார்த்தாயா, புதையல்!" என்றான். அவள் என்னைப் பார்த்த பார்வையை இப்போது எண்ணிக் கொண்டாலும் நடுக்கம் பிறக்கிறது. சிறிய பலகாரக் கடை அது. பலகாரம் மட்டுமல்ல, திருட்டுச் சாராயக் கடையும் அதுதான்.
அது என்னைப் போல அபலைகள் சிக்கிக் கொள்ளும் சமயத்திலே விபசார விடுதியாகவும் மாறும். அவள் இரண்டு முறை தண்டனை பெற்றவள் - திருட்டுக் குற்றத்துக்காக. அதனால் அவளுக்கும் போலீஸிடம் பயம் இருப்பதில்லை. கேலியாகக் கூடப் பேசுவாள். அவர்களும், அவளைத் தமாஷ் செய்வார்கள். எப்படித்தான் ஏற்பட்டதோ அந்த வேகம். எனக்கே புரியவில்லை; நான் அந்த இடத்திற்கு வந்த சில வாரங்களுக்குள் முழுவதும் அழுகிய மனதைப் பெற்றுவிட்டேன். சேற்றிலே கால் வைத்தாகி விட்டது. ஆழப் புதைந்து கொண்டது. காலைச் சேற்றிலே இருந்து எடுத்துக் கொள்ளச் சக்தியுமற்றுப் போயிற்று. பிறகு அந்தச் சேறு, சந்தனம் ஆகிவிடத்தானே வேண்டும். விடுதியிலே, சந்தித்த நாயுடுதான், விடுதலைக்கு வழி சொன்னான் - ரங்கோன் போய் விடுவோம் என்று. கிளம்பினேன். ரங்கோனிலும் என் வாழ்க்கை, புயலில் சிக்கிய கலம் போலத்தான். நாயுடு சம்பாதிப்பார் - குடிக்க மட்டுமே தான் அந்தப் பணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் போலச் சில சமயம் நடந்து கொள்வார். சில சமயம், வேதாந்தம் பேசுவார். சில வேளைகளில் ஏதோ போன ஜென்மத்திலே நமக்குள் தொடர்பு இருந்திருக்க வேண்டும். அதனாலேதான் இந்த ஜென்மத்திலே இது ஏற்பட்டது என்பார்.
2
[தொகு]ராதா பிறந்தாள் - எனக்கு அந்த வேதனையான வாழ்விலேயும் ஒருவகை ஆனந்தம் தர, அவள் பிறந்தாள்.
மகனே! அவளும் நானும் இங்கு வர நேரிட்டது ஜப்பானின் குண்டு வீச்சால். அந்தக் குண்டு வீச்சின் கொடுமையைவிட, அதிகக் கொடுமைக்கு நான் உன்னை ஆளாக்கிவிட்டேன். ஆனால், நான் இவ்வளவும் கூறாவிட்டால் என் மனம் வெடித்து விடும் என்று பயந்து விட்டேன். என்னை மன்னித்துவிடு! உன் மாதா நான். ஆனால், மாபாவியானேன் - என் மன வேதனை அளவு கடந்தது. அதன் விளைவுகள் பல - நான் இவைகளைக் கூறி என் நடத்தைக்குச் சமாதானம் தேடுகிறேன் என்று எண்ணாதே. என் கடைசி நாட்களில் நிம்மதி வேண்டும் - மனத்தின் பாரம் குறைய வேண்டும். உன்னைக் கண்டேன், என் துர்நடத்தையையும் கூறினேன் - என்னை மன்னித்துவிடு - ஆனால் நான் உன் மாதா என்பதையும் மறந்துவிடு.
குற்றம் செய்வதற்கு முன்பு கொடுமைக்கு ஆளானாள் என்பதை மட்டும், மனமார நம்பு. அப்பா! பொன் நிற மேனியிலே படரும் புண், கருநிறத்தை உண்டாக்கிவிடுகிறதல்லவா, அதுபோல என் நற்குணத்தை உன் அப்பாவின் கொடுமை கெடுத்து, என்னை இக்கதிக்குக் கொண்டு வந்தது. நான் குற்றமற்றவள் என்று வாதாடவில்லை. ஆனால் குற்றவாளி நான் மட்டுமல்ல. உன் அப்பா, பெரிய குற்றவாளி! பணப் பேய் பிடித்தவர் - மாசற்ற மனைவி மீது அபாண்டம் சுமத்தியவர் - கொலைகாரர் - கொடுமை புரிந்தவர் - ஆனால் அவர் இன்னும் ஊரிலே மதிக்கப்படுபவர். நான் வந்திருக்கிறேன், உன்னைக் கண்டேன், பேசினேன், முழு விவரத்தையும் கூறிவிட்டேன் என்பது தெரிந்தால் போதும்; பயத்தால் மாரடைப்பு உண்டாகிப் பிராணன் போய்விடும். அவர் எதற்கும் உலகிலே அஞ்சாமல் இருக்க முடியும். ஆனால் உன் அன்னையை, நேருக்கு நேர் நின்று பார்க்க முடியாது! தைரியம் வராது!
நான் விபசாரி என்று உலகம் என் எதிரிலே கூறும், உன் அப்பாவால் மட்டும் கூற முடியாது. எந்த அக்ரமத்தையாவது அவர் செய்ய எண்ணும்போது கூட, அவருடைய மனக்கண் முன் என் உருவம் தோன்றும். தம்பி! விபசாரியான நான் வேதாந்தம் பேசுகிறேன், வழுக்கி விழுந்து விட்ட நான் பிறர்மீது பழி சுமத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறேன் என்று எண்ணிவிடாதே. இவ்வளவும் நான் உன்னிடம் கூறாமலே இருந்து விட்டிருக்கலாம். நான் யாரோ ரங்கோனிலிருந்து வந்தவள் என்று நினைத்துக் கொண்டு இருப்பாய். என்னால் முடியவில்லை, மூடிபோட்டு வைக்க. பல வருஷங்களாக மனதிலே இருந்து வந்த பெரிய பாரத்தைக் கீழே தள்ளிவிட்டேன்.
நான் சூதுக்காரியல்ல - நான் சூதுக்காரர் கிளப்பிய சூறாவளியிலே சிக்கியவள். என்னிடம் பரிதாபம் காட்டி, பலரறிய, "என் அன்னை, ரங்கம்!" என்று கூறுவாயா என்று நான் கேட்பதற்காகவும் இவ்வளவு பேசவில்லை. பழி தேடிக் கொடுத்தவள்! பாதகி! விபசாரி என்று என்னைப் பற்றி என் கதையை அறியா முன்பு, நீ கூறியிருக்கவோ, எண்ணியிருக்கவோ முடியாது. நான் தான் இறந்துவிட்டேனே, தாயை இழந்தவன் என்றுதானே நீ கருதிக் கொண்டிருந்தாய் - ஊரும் நம்பிற்று. இனியும் அதேபோலத்தான் எண்ணும்.