ரோஜா இதழ்கள்/பகுதி 17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

17


ஞானம் அரசினரின் கருத்தடைப் பிரசாரத்தைக் குறித்துக் காரசாரமாகப் பேசிக்கொண்டிருக்கிறாள். “பெண் குலம்தான் எப்போதும் சுமை சுமக்கவேண்டுமா? துன்பம் அநுபவிக்க வேண்டுமா? வாய்விட்டுச் சொல்லத் தெரியாமல் கிராமங்களில் பெண்கள் இந்த ஐயுஸிடி(IUCD) திட்டத்தில் துன்பம் அநுபவிக்கிறார்கள். அறிந்தவர்கள் எல்லாருமே ஃபிரிக்‌ஷன் காஸஸ் கான்சர் (Friction Causes Cancer)என்று ஒப்புக் கொள்கிறார்கள். தெரிந்து ஏன் தண்டனை கொடுக்க வேண்டும்? செயற்கைத் தடுப்பு முறைகளெல்லாம் தாகத்துக்கு உப்பு நீரைக் குடிப்பதுபோல் என்று காந்திஜியே கருத்துத் தெரிவித்திருக்கிறார். காந்தீயக் கொள்கைகளில் ஊறியவர் என்று நினைக்கும் ஆட்சிபீடத்தார், எவனோ வெளி நாட்டான் இந்த எல்லாம் கொள்ளும் ஏழை நாட்டை நம்பி உருவாக்கிய சரக்கை எல்லாம் நம் தலையில் கட்டுவதற்கு எப்படி இடம் கொடுக்கின்றனர்? அதற்கு இப்படி ஓர் திட்டம்...?”

ஞானத்துக்கு இவ்வளவு ஆத்திரம் இருக்கிறதென்பதை மைத்ரேயி அறியாள். எனவே அவள் யாரிடம் இப்படிப் பேசுகிறாள் என்பதை அறிய ஆவல் கொள்கிறாள். அந்த திட்டத்தைப் பார்க்க யாரேனும் விருந்தினர் வருவதுண்டு.

அப்படி யாரேனும் வந்திருந்து, அலுவலகத்தில் ஒன்றும் பேசாமல் இங்கே வந்து குமுறலைக் கொட்டுகிறார்களா? தம் தம் பொருள் வசதி ஆதாயங்களுக்காக உண்மையை நேரடியாக ஒப்புக் கொள்ளாமல் திரை மறைவில் வந்து குமுறல் களைக் கொட்டி ஆறுவது இந்நாட்டின் சாபக்கேடா?

மைத்ரேயி எட்டிப் பார்க்கிறாள். மொட்டையாக வழுக்கைத் தலை, மொழு மொழுவென்ற முகத்தில் பட்டை பட்டையாக விபூதி, செவிகளில் வயிரக் கடுக்கன், இழிந்து வழியும் சதை .....

எங்கோ பார்த்தாற் போலிருக்கிறது. அருகில் புடவை தெரிகிறது. பச்சையில் ஒற்றை விளிம்பு சரிகை போட்ட பட்டுச்சேலை. இன்னும் யாரோ ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஞானம் பேச்சை முடிக்குமுன் ஜன்னலில் மைத்ரேயியின் உருவம் தெரிந்துவிடுகிறது.

“என்ன ஒளிஞ்சிண்டு பார்க்கறே? வா, மைத்ரேயி! உனக்காகத்தான் இங்கே இவர்கள் எல்லாரும் வந்திருக்கிறார்கள்.”

முன்னறையில் அடிவைத்ததும் மைத்ரேயி கண்களை அகல விழிக்கிறாள்.

லோகா... அந்த குண்டு மனிதர் அவளுடைய கணவர்.

ரோஜா இதழ்கள் லோகாவை இளைஞர் மன்ற காந்தி ஜெயந்தி விழாவில் கூடப் பார்த்தாள்.

அருகில் பார்க்கும்போது, மிகவும் தளர்ந்திருப்பது தெரிகிறது.

அம்மை வடுவுடன் ஒரு இளைஞன் உட்கார்ந்திருக்கிறான். விரல்களில்வயிரமும் பச்சையுமாக மோதிரங்கள் ஒளி வீசுகின்றன. மடிப்புக் கலையாத சட்டையும் அங்கவஸ்திரமும் தரித்திருக்கிறான். அவள் அறையில் நுழையும்போதே அவன் கைகுவித்து “நமஸ்காரம்மா!” என்று கூறுவதை அவள் கவனிக்காமலில்லை.

“என்னம்மா மைத்ரேயி?” என்று மொட்டைத் தலையர் தன் பொய்ப் பற்களை காட்டுகிறார்.

இவர்களெல்லாரும் எதற்கு இங்கு வந்திருக்கிறார்கள் என்று மலைத்தாற்போல் நிற்கிறாள் மைத்ரேயி.

லோகா அவளை, “உட்கார்... ஏன் நிற்கறே?” என்று கூறும்போதும் அந்த மலைப்பு நீங்கவில்லை.

“இப்ப உன்னைப் பார்க்கணும்னுதான் வந்திருக்கோம். நாளைமூணாம் நாள் இவா ஊரில் ராஜாஜி பர்த் டே செலிப்ரேட் பண்றா. அதில் நீ வந்து பேசணும்; பங்கெடுக்கணும்... என்று லோகா மர்மத்தை உடைக்கிறாள். அவளுடைய பேச்சின் ஒலி ‘நான் வாழ்வு கொடுத்து நீ வந்தவள்’ என்று கட்டளை இடுவது போலிருக்கிறது.

மைத்ரேயியின் குரல் தெளிவில்லாமல் ஒலிக்கிறது. “பொலிடிகல் மீடிங் மாதிரியா ஸிஸ்டர்?”

“ஏன்? பொலிடிகல்னா வரமாட்டியா?” என்று மெள்ளச் சிரிக்கிறாள் லோகா.

“நீ சின்ன வயசு. உன்னைப் போல இருக்கிறவாள்ளாம் இப்ப பாலிடிக்ஸில் புகுந்து வரத்தான் வேணும்” என்று உறுதியாகக் கூறுகிறார் மொட்டைத்தலை.

“ஆமாம்மா, எங்க திருச்சின்னபுரம் தொகுதி சுதந்திரக் கட்சி பிரஸிடென்ட் என்ற முறையில் உங்களைக் கூப்பிட வந்திருக்கேன். இன்னிக்கு நாட்டில் நடக்கும் அராஜகத்தைத் தொலைக்க உங்களைப்போல் யங்ஸ்டர்ஸ் வந்துதானாகணும்” என்று அம்மை வடு இளைஞன் தானே அவளை வரவேற்க வந்ததை வெளியிட்டு விடுகிறான்.

மைத்ரேயி குரோதமாக ஞானத்தை விழித்துப் பார்க்கிறாள்.

“இப்ப விருதுநகரில் ஒரு சின்னப்பயல்தான் போட்டி போடறான். அவா நிறையச் சிறு பையன்கள் தான் பார்ட்டி முழுசும். நம்ம பக்கமும் அதுபோல் வரணும். அதனால்தான் உன்னைத் தேடிண்டு வந்திருக்கோம்” என்று மொட்டைத் தலை வற்புறுத்துவதுபோல் கூறுகிறார்.

“நான் சொன்னா நீ தப்பமாட்டேன்னா நம்பி வந்திருக்கோம்” லோகா மெதுவாக ஊசிக் குத்தாய் தைக்கிறாள்.

“அடாடா...நீங்கள் இப்படி எல்லாம் ஏன் நினைக்கணும் ஸிஸ்டர்! பர்த் டே ஸெலிப்ரேஷனில் பேசறது பத்தி நான் ஆட்சேபம் சொல்லலே- ஆனால் பொலிடிகல்னு வந்து நிற்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது?”

“நீங்க என்ன? மூணங்கிளாஸ் படிக்காதவன் பாலிடிக்ஸில் வந்து புகுந்த பெரிய லீடராகி விடுகிறான்? நீங்களெல்லாம் பார்ட்டியில் சேரலேன்னா, அப்புறம் யாரைத்தான் சேர்ப்பது?” என்று மொழிகிறான் அம்மைவடு.

“மன்னிச்சுக்குங்க ஸிஸ்டர், பொலிடிகல் ஃபீல்ட் எனக்குச் சரிவருமான்னுதான் பயமாயிருக்கு. நான் ரொம்ப ஸென்ஸிடிவ்... உணர்ச்சி வசப்பட்டு விடுகிறேன்...” என்று ஞானத்தைக் கண்களால் துணைக்கு அழைக்கிறாள். ஞானம் அவளைப் பார்க்காமலே எங்கோ வெளியே நோக்குகிறாள்.

“நீ என்ன பிகு பண்ணிப்பே போலிருக்கே? நீ மட்டும் தான் ஸென்ஸிடிவா? நானும்தான் ஸென்ஸிடிவ். எல்லாருந்தான் அப்படி. இப்ப உன்னைப்போல இருக்கிற இளைஞர்கள் வரலேன்னா நம்ம கம்யூனிடியை ரெப்ரஸன்ட் பண்ண ஆள் குறைஞ்சு, அங்கே தி.மு.க. வரும். அதை நீ நினைச்சுப் பார்க்கணும்” என்று உண்மையை விளக்குகிறாள் லோகா.

மைத்ரேயிக்குக் கூட்டுச் சேரலின் மர்மம் இப்போது தான் புரிகிறது. அவர்களைச் சார்ந்து இந்த ‘கம்யூனிடீ’, இந்தச் சமூகம் வெற்றி தேடிக்கொள்ள முயல்கிறது. யாரையேனும் சார்ந்து எப்படியேனும் இடங்களைப் பிடிக்க வேண்டும்.

மைத்ரேயி தான் ஒரு பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டாற் போல் உணருகிறாள்.

ராஜா அவளை வற்புறுத்தவில்லை, வரவேற்றார்.

இவர்கள் தீர்மானத்துடன் வந்திருக்கின்றனர்.

லோகா அவளை விரலைக் காட்டி ஆணையிடலாம் என்று நினைக்கிறாள்!

அம்மைவடு ஆசாமி நன்றாக முகஸ்துதி செய்யத் தெரியும் என்று நிரூபிக்கிறான்.

“பளிச்சினு சொல்றேனம்மா, எங்க தொகுதியில் உங்களை நிற்கவைக்கும் எண்ணம் எனக்கு உண்டு. உங்களுக்காகக் கூட்டுக் கட்சிகள் எல்லாம் வேலை செய்யும். பெரும்பான்மையும் மிடில் கிளாஸ் பிராமணர் வோட்டுகள். ஸ்லம் கொஞ்சம்...”

“என்னையா தேர்தலுக்கு நிற்கச் சொல்கிறீர்கள்?” “ஆமாம். ஏன்? நீங்கள் எங்கள் தொகுதியில் நின்றால் வோட்டை அள்ளிக்கொண்டு வருவீர்கள். எங்க தொகுதி சுதந்திராக் கோட்டை. ஸ்லம் முழுசும் கறுப்பு சிவப்பு. நமக்குக்கூட்டு. அவ்வளவு பேரும் நமக்கு வேலை செய்வார்கள். பணச்செலவு பற்றி நீங்கள் கவலையே படவேண்டாம்.”

ஞானம், மைத்ரேயியின் இந்த நிலையை அநுபவிப்பவள் போல் மேசையின்மீது விரல்களால் தாளம் போடுகிறாள்.

“நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்தான். ஆனால் என்னை ரொம்ப மன்னிச்சுக்கணும் ஸிஸ்டர். எனக்குச் சரிவரும்னு தோணல...’

“நீ என்ன இவ்வளவு பயப்படறே, உனக்கே தெரியும். இத்தனை வருஷ காங்கிரஸ் ஆட்சியில் இன்னிக்கு ஜனங்கள் ரேஷன் க்யூவில் நிற்கும் நிலைதான் காண்கிறோம். நான் உள்ளே இருந்து பார்த்தவள். உண்மையாக சுதந்திரத்துக்குப் பாடு பட்டவா யாரும் இன்னிக்கு அங்கே இல்லே. அதுவும் நம்ம கம்யூனிடிக்கு காங்கிரஸ் ஒண்ணுமே நல்லது பண்ணல. இப்போது ஒரு மாறுதலை எல்லாருமே வரவேற்கிறார்கள். அதனால் நீ தயங்கவே வேண்டாம்...” என்று லோகா தன் பேச்சை முடிக்கு முன் அம்மைவடு தன் தோல்பையைத் திறந்து கத்தையாகக் காகிதங்களை எடுத்துப் போடுகிறான்.

இரண்டு மூன்று நீளமான அச்சிட்ட காகிதங்களை உருவி மைத்ரேயியிடமும் ஞானத்திடமும் கொடுக்கிறான். சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் கொண்ட ஒருதாள். இன்னொன்று அதில் சேருவதற்கான விண்ணப்பப் பாரம்.

“நீ அரசியல் உலகில் ஒரு நட்சத்திரமாகப் போகிறாய்!” என்று குளிர்ச்சியாகப் புகழ்பாடுகிறது மொட்டை.

“நான் இம்மாதிரியான பொதுக் கூட்டங்களில் பேசியதே இல்லை ...”

“சும்மா பொய் சொல்லாதே. அன்னிக்கு காந்தி ஜயந்தி கட்டத்தில் நீ பேசிய குரல் இன்னமும் காதில் ஒலிக்கிறது. அது பொதுக்கூட்டம் இல்லையா?”

“நீங்க கட்டாயம் ஒப்புக் கொள்ளணும். பொலிடிகல்னு நினைக்க ஒரு தப்பும் இல்லை. நீங்க யோசனை செய்து பாருங்கள். இதெல்லாம் உங்களுக்கு எங்களுக்கு எல்லாருக்கும் கடமை. இப்படி நாமெல்லாம் ஒதுங்கினால் எப்படி?”

“அதெல்லாம் கவலைப்படவேண்டாம் ஸ்ரீனிவாசன். மைத்ரேயி மாட்டேன்னு சொல்லமாட்டாள்...என்ன?”

லோகா அழகாகச் சிரிக்கிறாள். “நீ யோசனை பண்ணி வை, ஸ்ரீனிவாசன் மறுபடி வருவார்... என்ன?”

“சரி ஸிஸ்டர்...”

“ஓ கே.... அப்ப கிளம்பலாமா? வரேன் ஞானம்மா!”

லோகா எழுந்திருக்கிறாள்.

“வரோம்மா !”

::“வரோம்...”

அவர்கள் விடைபெற்றுக் கொண்டு எழுந்திருக்கின்றனர்.

கையிலிருக்கும் தாள்களை வெறித்துப் பார்க்கிறாள் மைத்ரேயி.

“உங்களால்தான்! எதற்காக அவர்களை உட்காத்தி வைத்தீர்கள்?” என்று பொய்க் கோபம் கொண்டு சாடுகிறாள் ஞானத்தை.

“நானா உட்காருங்கள், மைத்ரேயியைப் பார்த்துவிட்டுப் போங்கள் என்றேன்? லோகா ஆஃபீஸுக்குத் தேடிக் கொண்டு வந்து விட்டாள். அவர்களை நான் கழுத்தைப் பிடித்துத்தள்ளுவதா?”

“அதுசரி, அவர்கள் தேர்தல் அது இது என்றெல்லாம் கொக்கி போடும்போது நீங்கள் ஏன் இடித்த புளிபோல் உட்கார்ந்திருந்தீர்களாம்!”

“நான் வேறென்ன செய்வதாம்?” “நான் உங்கள் சொந்தத் தங்கையாக இருந்தால் இப்படி உட்கார்ந்திருப்பீர்களா?”

“நிச்சயமாக உட்கார்ந்துதானிருப்பேன். உன் சுதந்திரத்தில் நான் ஏன் குறுக்கிடவேண்டும்? உனக்குத்தான் இந்த கட்சியில் நம்பிக்கை இருக்கிறதே?”

“உங்கள் கருத்து என்ன சொல்லுங்கள் அக்கா, இந்த தடவை காங்கிரஸ் விழுந்துவிடுமா?”

“அதென்னமோ, என்னால் சொல்ல முடியாது. ஆனால் இந்தப் பிராமணர் கட்சி நிச்சயமாக வராது.”

“ஏன் இப்படிச் சாபம் கொடுக்கிறீர்கள், அக்கா?” “எலக்க்ஷன் ஒரு சர்க்கஸ். நான் அநுபவத்தில் சொல்லுகிறேன்.”

“காங்கிரஸை எதிர்க்கும் சோஷலிஸ்டுகள் எல்லோரும் தோற்றாலும் நான் வெற்றி பெறுவேன் என்று என் கட்சி நினைத்தது. இளம் வயசு, பெண் என்ற கிளாமர், பேச்சுத் திறன் இவற்றை எல்லாம் தராசுத் தட்டின் கனத்தைக் கூட்ட நம்பியிருந்தது. ஆளும் கட்சியை அசைக்க முடியவில்லை. உனக்கு ஒன்று மட்டும் நான் சொல்வேன். நீ தேர்தலுக்கு நிற்கும் ஆசை இருந்தால் என் சேமிப்பை நான் தருகிறேன். எவரோ பணம் கொடுக்கிறார் என்று மட்டும் நம்பிவிடாதே. பிறகு நீ வெற்றி பெற்றாலும் அவருக்கு அடிமையாக வேண்டும்; தோற்றாலும்தான். புரிந்ததா?” மைத்ரேயி நெஞ்சத்து நெகிழ்வை விழுங்கிக் கொள்கிறாள்.

“நான் நிச்சயமாக அந்தத் தேர்தல் வலையில் விழமாட்டேன்.”

“அது உன் இஷ்டம். உனக்கு அறிவுரை சொன்னேன்.”

“அந்த மொட்டைத் தலையை நினைத்தால் சிரிப்பாய் வருகிறது. தனியாக இந்த வீட்டில் ஏறமாட்டேனென்று பொட்டை அதிகாரம் செய்து கொண்டு இருந்தவர் இப்போது எப்படிச் சேர்ந்திருக்கிறார் லோகா, லோகாவென்று... லோகா எப்படி மாறிவிட்டாள்!”

“சில பலன்களை எதிர்பார்த்துக் கொண்டு அரசியலில் இருப்பவர்கள் மாறுவதில் ஓர் வியப்பும் இல்லை. இந்த வீட்டுக்கு இப்போது யோகம் அடித்திருக்கிறது. வராத பெரிய மனிதர்களெல்லாம் வருகிறார்கள். இன்னும் யார் யார் வருவார்களோ?” என்று கண்களைச் சிமிட்டுகிறாள்.

“நான் திரும்பவும் ஓடிப்போய் விடப்போகிறேன்!” என்று கூறிக்கொண்டு சமையலறைக்குள் செல்கிறாள் மைத்ரேயி.

லோகாவின் வீட்டில் சில நாட்கள் தங்கி அவளுடைய தயவால் அந்த இல்லத்துக்குச் சென்று கல்வி பயின்று முன்னுக்கு வந்திருப்பவள் மைத்ரேயி. அதற்காக அவள் உரிமை கொண்டாடுகிறாள். ஆனால் முழுதுமாக உணவு, உடை, உறையுள், கல்வி உள்பட அன்பையும் பொழியும் இந்த ஞானம் அவள் மீது அப்படி சுதந்திரத்தைப் பறிக்குமளவு உரிமை கொண்டாடவில்லை.

“என்ன யோசனை? இரவு எனக்குச் சாப்பாடு கிடையாது...”

“யாருக்கு பார்ட்டி?” என்று கேட்டுக்கொண்டு தேநீரை அவள் கிண்ணத்தில் வார்க்கிறாள் மைத்ரேயி.

“பட்டுக்குப் பிரமோஷன் வந்திருக்கே. அதுக்கு பார்ட்டியாம். தண்ணியில்லாத பார்ட்டி. நம்ம மணி ஐயரின் குருடாயில் தயாரிப்புக்கள்.”

“அப்படியானால் கொல்லையில் உள்ள புடலங்காயை நாளைக்குப் பறிக்கிறேன்.”

“ஏன்? நீ சாப்பிடவேண்டாமா? புடலங்காயைப் பறித்துச் சமைத்துவை நான் வந்து சாப்பிடுகிறேன்...”

மைத்ரேயிக்கு நாவுக்கு உப்புக்காரத்துடன் நன்றாகச் சமைத்து உண்ணவேண்டும். ஆனால் ஞானமோ,உப்புப் புளிப்புக் காரமில்லாமல் எதையோ சமைத்து வைப்பாள். “நாவை வளர்க்கக் கூடாது. காரசாரம் சாத்வீக உணவல்ல” என்று ஞானம் கூறுவது வழக்கம்.

“நீங்கள் இப்படிச் சாப்பிடுவதனால்தான் சென்ஸார் போர்டு பொறுப்பிலிருந்து இன்றுவரை நேருக்குநேர் பேசத் துணிவின்றி வழவழ குழகுழவென்று இருக்கிறீர்கள்.” என்று விளையாட்டாக மைத்ரேயி மறுமொழியும் கூறுவதுண்டு. இப்போது அவள்மீது லோகாவைப் போல் உரிமை கொண்டாடி, “மைத்ரேயி அப்படி எல்லாம் வரமாட்டாள்!” என்று சொல்ல மாட்டாளா?

அவள் முரளியை மணந்து கொள்ளவேண்டும் என்று அதனாலேயே வற்புறுத்தத் துணியமாட்டாள். ஞானத்தின் இயல்பு மைத்ரேயிக்கு நன்றாகத் தெரியும்.

ஞானம் கூந்தலைச் சீவி முடிந்து முகம் திருத்திக் கொண்டு ஒரு வெள்ளைச் சேலையணிந்து விருந்துக்குச் செல்கிறாள்.

இரவு எட்டேமுக்கால் மணிக்கு ஞானம் திரும்பி வரும் போது மைத்ரேயி கதவையே மூடியிருக்கவில்லை. மடியில் நூலகத்திலிருந்து கொண்டுவந்த புத்தகம் திறந்து இருக்கிறது. காலை இன்னொரு பிரம்பு நாற்காலியில் போட்டுக்கொண்டு யோசனை தான் செய்துகொண்டிருக்கிறாள்.

செருப்பொலி உள்ளே கேட்கும் போதுதான் குளிர்சிலிர்ப்போடு படக்கென்று திரும்புகிறாள். “என்ன, ராமராஜ்யம் வந்து விட்டதென்றே கனவா, மைத்ரேயி? இன்னும் கூட்டுக் கட்சிகள் பதவிக்கு வரவில்லையே? கதவைத் திறந்து வைத்துக் கொண்டே கனவு காண்கிறாயோ?”

மைத்ரேயி உண்மையிலேயே நாணிப் புத்தகத்தைப் பட்டென்று மூடுகிறாள்.

ஞானம் கையிலிருந்த பீடாவை மேசையின்மீது வைத்து விட்டு, “புடலங்காய் வைத்திருக்கிறாயா?” என்று கேட்கிறாள்.

“நான் ஒண்ணுமே பண்ணலே அக்கா...” என்று மைத்ரேயி சோம்பல் முறிக்கிறாள்.

அவள் அருகிலேயே நிற்கும் ஞானம் சில கணங்கள் ஒன்றும் தோன்றாதவள்போல் கூர்ந்து நோக்குகிறாள்.

“மத்தியானம் ஹோட்டலுக்குப் போனியா?”

ஓட்டலில் வயிறு மந்தித்துவிடும்படியாக ஏதேனும் சாப்பிட்டிருப்பாளோ என்றுதான் கேட்கிறாளா?

மைத்ரேயி மறுமொழி கூறவில்லை.

“என்ன சமாசாரம்?”

“உம்..? என் மனசு குழம்பிக் கிடக்கிறது அக்கா. நூல் பாலத்தில் நடந்து தாண்டனும். கீழே விழுந்தால் கிடுகிடு பாதாளம். அப்பால் போனால் பொன்னகரம் இருக்கிறது என்று ஆசை காட்டுகிறார்கள். நூல் பாலம் வேண்டாமென்று ஒதுங்க வேண்டுமானால் குகைக்குள் ஒளிய வேண்டும். குகையில் புலி இருக்குமோ, புதையல் இருக்குமோ தெரியாது...”

“என்ன ஆச்சு? துணிந்து மேடையில் ஏறிப்பேசு. இல்லா விட்டால் கட்சி, அரசியல் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டுப்போ. இதற்கென்ன தலைபோகும் யோசனை?”

“இது என்ன யோசனை?”

“வேறு நான் சொல்லும் யோசனைதான் உனக்குப் பிடிக்கலியே ?”

“என்ன யோசனை ?”

“முரளி உன்னிடம் என்ன பேசினான் ?”

“உங்களுக்கு எப்படித் தெரிந்தது? “ நீ லைப்ரரி புத்தகத்தை மடியில் போட்டுக்கொண்டு மூன்று மணிநேரம் பகற்கனவு கண்டால் இரண்டும் இரண்டும் நாலு என்று புரிந்துகொள்ளக் கஷ்டமா ?”

“எனக்கு மனசு ஒப்பவில்லை அக்கா. ஒருதரம் என் மீது பட்ட கறையைக் கையால் துடைப்பதுபோல் துடைத்துவிட்டு இன்னொருதரம் இன்னொருவருடன் வாழ்க்கையில் பங்கு கொள்ள முடியுமென்று தோன்றவில்லை. அப்படி முடியாமலிருப்பதை மறந்து நிம்மதியாகவுமில்லை.”

“ஏன்? உன்னை யாரும் வற்புறுத்தவில்லையே? அது சரி, ரொட்டியைக் காய்ச்சித் தருகிறேன். சாப்பிட்டுவிட்டுப் பாலைக் குடித்துவிட்டு, பேச்சுக்குத் தயார் செய்துகொள்...” என்று கூறிவிட்டு ஞானம் உள்ளே செல்கிறாள். வெற்றிலைப் பட்டியைக் கையில் வைத்துத் திருப்பிப் பார்த்துக்கொண்டே வாய்திறவாது அமர்ந்திருக்கிறாள் மைத்ரேயி.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_17&oldid=1115394" இருந்து மீள்விக்கப்பட்டது