ரோஜா இதழ்கள்/பகுதி 18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

18

ஞானம்மாளுடன் முதன்முதலில் பஸ்ஸில் வந்த பிரயாணத்தை நினைத்துக்கொண்டு சீனிவாசனுடன் காரில் பிரயாணம் செய்கிறாள் மைத்ரேயி. அன்று மனம் வண்ணச் சிறகுகள் கொண்டு வானில் திரியும் மகிழ்ச்சியில் திளைத்தது. இன்றோ சிறகுகள் இரண்டிலும் கற்களைக் கட்டிவிட்டாற்போல் இருக்கிறது. அவள் ஞானம்மாளுடன் வராமலிருந் திருந்தால் இந்தக் கார் சவாரி கிடைத்திருக்குமா? முரளி அவளைக் கல்யாணம் செய்துகொள்ள முன் வருவானோ?

மனக்குழப்பங்களை விசிறியடிப்பதுபோல் தலையைத் திருப்பி வெளியே பார்க்கிறாள். அம்மைவடு சீனிவாசன் தான் காரை ஓட்டுகிறான். அவனுடைய ஊரில் அவன் பசையான ஆள். நிலபுலன்களோடு ஒரு அச்சகம், அரிசிமில் முதலியவைகளுக்குச் சொந்தக்காரன். சட்டம் படித்துத் தேர்ந்தவன். வழிநெடுக அவன் தன் பிரதாபங்களைப் பாடிக் கொண்டு வருகிறான். “நீங்கள் பணச்செலவைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். எனக்குப் பணம் பெரிசில்ல, கொள்கைதான் பெரிசு. லோகாவின் தகப்பனார் எல்லாம் எங்களுக்கு ரொம்ப வேண்டியவர். என் பெரிய மாமா சந்தான கிருஷ்ணமாச்சாரி, அந்தக் காலத்தில் ராஜ்நகர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். சின்ன மாமா, கதர் போட்டுண்டு ஜெயிலுக்குப் போனவர். உண்மையான தியாகிகளுக்கு என்ன இருக்கு? அவாளைவிடத் தியாகம்னு சொல்லிண்டு பதவியில் இருக்க ஆசைப்பட்டுக் கதர் போடறவன்தான் இப்ப பெரிய காங்கிரஸ்காரன். நான் நினைச்சா ஐ.ஏ.எஸ்.ஸாப் போயிருக்கலாம். கிராமத்தில் இருந்து நம்மாலானதைச் செய்யணும்னு தங்கிட்டேன்.”

“இந்தத் தொகுதியில் நான் நிற்கணும்னு நீங்க ஏன் வற்புறுத்துகிறீர்கள்? எனக்குப் பணம் செலவழித்து என் வெற்றிக்குப் பாடுபடுவதைவிட நீங்களே நிற்பதுதான் உசிதம். உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது; என்னைவிட...”

“நீங்கள் இல்லை என்றால் நான் தான் நிற்கப் போகிறேன். அதுபற்றி சந்தேகமில்லை. உங்களை ஏன் வற்புறுத்துகிறேன்னா, இந்தத் தொகுதியில் ஸிட்டிங் மெம்பர் ராஜ பூஷணி. ஆளும் கட்சியானதால் எல்லாவகையிலும் வளைச்சுக் கொள்ள வழி செய்வானுகள். முள்ளை முள்ளால்தான் எடுக்கணும். என்ன ஆயிரம் இருந்தாலும் ஜனங்களுக்கு ஒரு பெண் நிற்கிறாள்னா கிளாமர் இருக்கத்தான் இருக்கு. அதனால்தான் எல்லா வகையிலும் அவளைவிட மேலான உங்களை நான் வற்புறுத்தறேன்! லோகாவே இங்கே நிற்கலாம்னு அபிப்பிராயப்பட்டேன் நான். ஆனால், அவா சொந்த ஊர்ப் பக்கம்தான் நிக்கணும்னு அவர் நினைக்கிறார்.

அந்தத் தீர்மானமும் ஒரு வகையில் சரிதானே. இங்கே விட அங்கேதான் லோகல் இன்ஃப்ளுயன்ஸ் இருக்கும். லோகம்மாதான், ஒரேயடியாப் புதிசா யங்ஸ்டர்ஸுக்குக் கொடுக்கணும்னு உங்களைத் தேர்ந்தது.”

“நான் உங்களுடைய கட்சிக்குப் பேசுவதற்கு மட்டுமே தான் ஒப்ப முடியுமே ஒழிய, இருபத்தொரு வயசு எனக்கு முடிய இன்னும் இரண்டு மாசமிருக்கிறது. நான் நிச்சயமாகத் தேர்தலுக்கு நிற்க இஷ்டப்படவில்லை. சொல்லப் போனால் உங்கள் கட்சியை ஒரு சில காரணங்களுக்காக மட்டுமே ஆதரிக்கிறேன். உங்கள் கட்சியின் முக்கியமான கொள்கையையே நான் முற்றிலும் எதிர்ப்பவள். உள் மனசோடு நான் ஒப்புக் கொள்ள வேண்டுமானால் முதலாளித்துவத்தையே வெறுப்பவள். நான் எப்படி இந்த முத்திரையைக் குத்திக் கொள்வேன்?” என்று கேட்கிறாள் மைத்ரேயி.

‘அடாடா..? யார் சொன்னது, இது முதலாளித்துவக் கட்சி என்று ? இப்படித் தவறானதொரு கருத்தைப் படித்தவர்களெல்லாமே பரவவிட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் நானே கம்யூனிசத்தை ஆதரிப்பவன்தான்.”

“ஆமாம், வண்ணானுக்கு வண்ணாத்தி மேலாசை. வண்ணாத்திக்கு. என்று ஏதோ பழமொழி சொல்வார்களே? அப்படித் தான் இருக்கிறது. நீங்கள் கறுப்பு சிவப்புக் கொடியைச் சேர்த்துக் கொள்கிறீர்கள். அவர்கள் கத்தி சுத்தியலையும் கையோடு கொண்டு வருகிறார்கள். இது விநோதத்திலும் விநோதமாக இருக்கிறது.”

சீனிவாசன் சிரிக்கிறான்.

‘நீங்கள் புரியாதவர்களுக்கெல்லாம்கூடப் புரியும்படி பேசக்கூடியவர்கள்னு எடுத்த எடுப்பிலேயே நிரூபிக்கிறீர்கள். இந்தக் கூட்டெல்லாம் காங்கிரசைப் பதவியிலிருந்து இறக்கத் தான். காங்கிரஸ் இத்தனை நாள் நம் கம்யூனிடிக்கு என்ன செய்திருக்கிறது? ஒரு கல்லூரியிலும் திறமைக்கு இடம் கிடையாது. உத்தியோகப் பதவிகளில் வரிசைப்பிரகாரம் வரும்போது ஒரு பிராமணனுக்குத் தலைமைப் பதவி வருவதாக இருந்தால், மேலிருப்பவர்க்கு எக்ஸ்டென்ஷன் கொடுத்தோ, ஏதோ செய்தோ அந்தச் சாதிக்காரன் அப்பதவிக்கு வரமுடியாமலிருக்க வகை செய்கிறான். அவன் ஒய்வு பெற்றவுடன் அடுத்தவனுக்கு அந்தப் பதவி போகும். இதெல்லாம் அக்கிரமம் இல்லையா? எந்தத் துறையை எடுத்தாலும் நம் சாதியினர் முன்னேற முடியாமல் ஆயிரத்தெட்டு இடைஞ்சல்களைச் செய்திருக்கிறார்கள். இப்போது நாமும் குரல் எழுப்பச் சில இடங்களையேனும் பிடித்துக்கொள்ள இவர்கள் வகை செய்கிறார்கள். நான் ஏன் ஐ.ஏ.எஸ். என்று போகவில்லை? நம் மண்ணை நாம் விட்டுக்கொடுக்கக் கூடாது. நம்மவர் இந்தச் சங்கடங்களினால் தாக்குப்பிடிக்க முடியாமல் கிராமத்தைவிட்டு மண்ணைவிட்டுப் பெயர்ந்து நகரத்தில் நாலு வீட்டைக் கட்டிப்போட்டு வாடகை வாங்கி நிம்மதியாக காலம் கழிக்கலாம்னு நினைக்கிறார்கள். அது தப்பு. நம் உரிமைகளை நாம் விட்டுக்கொடுத்துவிட்டு பம்பாய், டில்லி என்று போவது, நம்மை விரட்டப் பார்ப்பவர்களுக்கு நல்லது செய்வதாகும். இல்லையா, மிஸ் மைத்ரேயி?” என்று கேட்கிறான்.

“மிகவும் உண்மை” என்று ஒப்புக் கொள்கிறாள் மைத்ரேயி.

“இந்த நாட்டில் சாதிகள் நிச்சயமாக அழியாது; அதனால் கம்யூனிஸம் வரவே முடியாது. ‘கிளாஸ் வார்’ என்று வரும்போது சாதி குறுக்கிட்டுவிடும். எனவே, சமுதாயத்தைப் பழைய முறையிலேயே பலப்படுத்துவதனால்தான் பொருள் வளத்துக்குப் பாடுபட முடியும். என்ன சொல்கிறீர்கள் ?”

அவன் அவளுடைய எதிர்ப்புச் சிந்தனையையே துண்டித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

“பழைய முறை என்றால் எப்படி? பழைய வருணாசிரமப்படியா?”

“அப்படித்தான் வரவேண்டும். தொழிலை அடிப்படையாகக் கொண்டுதான் சாதிகளும் பழக்க வழக்கங்களும் அமைந்திருக்கின்றன என்றாலும், இயல்பிலும் அந்த அந்த தொழிலுக்கு ஏற்ற வகையில் பிரிவுகள் இருக்கின்றன என்று நான் கூறுகிறேன். சந்தர்ப்பங்களையும் சலுகைகளையும் எத்தனையோ பேருக்கு அளித்தாலும் சில குறிப்பிட்ட வர்க்கத்தாரில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்கூட முன்னுக்கு வருவதில்லை. ஆனால் உயர் குலம் என்ற பிரிவிற் பட்டவர்கள் எத்தனை தடைகளைப் போட்டாலும் மீறிக்கொண்டு கல்வியும் திறமையும் பெறுகிறார்கள்...”

“அப்படி முழுசும் சொல்ல முடியாது. தாழ்த்தப்பட்டவர்கள் பரம்பரை பரம்பரையாக அடிமை போலிருந்ததனால் அவ்வளவு விரைவில் மேலுக்கு வந்துவிட முடியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். வருணாசிரம விதிகள் நிச்சயமாக இன்றும், இன்னும் வரப் போகும் காலத்துக்கும் பொருந்தாது. பிறப்பினால் ஒருவன் தொழிலை வரையறுக்க முடியாது. நீங்கள் சொல்லும் உயர் குலத்தார் இன்று பொருளுக்காக எதையும் செய்யத் தயங்குவதில்லை. உயர்குலத்தான் மனிதத்துவத்தின் உயரிய இலட்சியத்தை என்றோ விட்டுவிட்டான். இன்னும் வெறும் கூட்டை மட்டும் வைத்துக்கொண்டு உயிர் கொடுப்பதாகச் சடங்குகள் செய்வது கேலிக்கூத்து. இந்த மண்ணில் பிறந்திருப்பதற்காக நமக்கு உரிமைகள் மறுக்கப்படுவது அநியாயம். ஆனால் நாம் உயர்குலம் என்று சொல்லிக் கொள்ளும் தகுதிகள் நமக்கு இல்லை. அதனாலேயே உயர் சாதி என்ற ஒன்று, நடை முறையில் கொள்ள முடியாத வாழ்க்கை முறைகளை உண்மையாகவே கொண்டு வாழும் ஒரு பிரிவு இன்றைய சூழ்நிலையில் உயிர்த்திருக்க முடியாது. அது வேண்டியதில்லை. பிரும்மத்தை வழிபடும் பிராமணனுக்குக் கல்லுருவுக்குப் பூசைகள் செய்யும் குருக்கள் என்ற சாதியிற்பட்டவரும் கீழானவரே. அப்படியிருக்க, அந்த உயர்ந்த நிலையைப்பற்றி எண்ணிக்கூடப் பார்க்க இயலாத இந்த இன்றையப்பிரிவைப் பிரிவாகவே தனித்து வைப்பதில் என்ன நன்மை? இது வெறும் கேலிக் கூத்து. இன்றைய அந்தணன் வெற்று நூலைத் தரித்துக்கொண்டு, செல்வரை அண்டி, பொய்க்கு அஞ்சா அரசியல்வாதியை அண்டி, ஏவற்பணி செய்யத் தயங்குவதில்லை. பொருளுக்காகத் தன் மானத்தைக் காலடியில் தேய்க்கத் தயங்குவதில்லை. அந்தணரல்லாத பிரிவில் பட்டவர் அந்தணர்க்குரிய தொழில்களில் இறங்காமலுமில்லை. மிகக் குறைந்த சதவிகிதத்தினராக இருக்கலாம். நான் வன்மையாகப் பேசுவதாக உங்களுக்குத் தோன்றலாம். ஒவ்வொரு சமயம் நம்முடைய சமுதாயத்தின் வறட்சிக்கு நாமே காரணம் என்றே நான் எண்ணுகிறேன்...”

இந்த மூச்சு முட்டும் ஆவேசத்தைச் செவியுறும் சீனிவாசன் எதிர்த்துப் பேசவில்லை “அடேயப்பா! நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள்!” என்று புகழுரையை வீசுகிறான். “இந்தக் கட்சிக்கு நீங்கள் ஸ்டார் ஸ்பீக்கர். ஆமாம். பேச்சின் பொருளைவிட, அதன் அலங்கார ஜோடனைகளே மக்களைக் கவருகின்றன. ஒரு மேடையில் நின்றால் குரலைக் கேட்டால் சொற்களைக்கேட்டால் மக்கள் அசந்து போகணும். நீங்கள்தான் இந்தக் கட்சிக்கு உயிர் தரப்போகிறீர்கள். இப்போதே அடிச்சுச் சொல்லலாம்.”

மைத்ரேயியின் உற்சாகமும் ஆவேசமும் மடிந்து விழுகின்றன.

புறநகர்ப் பகுதிகள் மறைந்து பசிய வயல்களும் தென்னை மரங்களும் பசுமையினிடையே பளிச்சென்ற அலுமினியப் பூச்சுக் கம்பங்களும் நீரிறைக்கும் மின் இயந்திரக் குடில்களும் கண்களையும் கருத்தையும் கவருகின்றன. சாலையில் குடிசைகள் காணும் இடங்களிலெல்லாம் கறுப்பு சிவப்புக் கொடிகள்; தேநீர் கடைகள், முடிதிருத்தும் கடைகள் நெடுகிலும் கறுப்பு சிவப்புத் தோரணங்கள். படிப்பகங்கள், அறிவகங்கள் என்ற அறிவிப்புடன் காணப்படும் மூங்கிற்தட்டிக் கூடங்களில் அண்ணாவின் உருவப்படம் காட்சி தருகிறது. அகப்படும் கற்சுவர்களில், கால்வாய்ப் பால மதகுகளில், காங்கிரஸ் மந்திரிகளின் ஆட்சி ஊழலைப் பற்றிய எதுகை மோனை வசைகள், கொட்டைக் கரி எழுத்துக்களில் கண்களைக் கவ்வுகின்றன. இந்தி வசை இலக்கியத்திற்கு நாயகமாக விளங்குகிறது. இந்திக்குப் பாடை, தமிழுக்கு மேடை. தமிழுக்கு உயிர்; இந்திக்குத் தூக்குக்கயிர் என்றெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் வரிசைகள். உண்மையில் அன்றாடம் மூச்சு முட்டும் வேகத்தில் நகரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள், இம்மாதிரியான எதுகை மோனை வசைகளைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை. ஒரு வகையில், சொல்லப் போனால் நகரில் தனித்துவம் என்பதே அழிந்துபோய், அவ்வப்போது அலைபோல் தோன்றும் ஒரு கூட்ட உணர்ச்சிக்கு அடிமையாய் மக்கள் இயங்குகின்றனர். சில சாதியினர் தனித்துவம் அழிந்துவிடக் கூடாதென்று கட்டுக் கோப்பாய்க் கருத்துான்றி தங்கள் பழமைக் கட்டுப்பாடுகளைக் காத்து வருகின்றனர். உயர் சாதியோ, தனித்துவம் மோதி நசுங்கி உருமாற, மூச்சுக்குப் பிதுங்கும் நிலையில் ஆத்மா அழிய உடற்கூடு மட்டும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அறியாமை நிறைந்த கிராமப்புறங்களில், இரண்டுங்கெட்ட நிலையில் உள்ள குடியிருப்புக்களில் எதுகை மோனைப் பேச்சுக்கள் உணர்ச்சியைக் கிளர்த்துகின்றன.

ஆட்சிமுறை அலுவலகங்களில் இந்தி மொழி வருவதனால் அத்தகைய அலுவலகங்களில் பணிபுரியும் வெள்ளைக் காலர் சிப்பந்திகள் அல்லவோ கவலைப்பட வேண்டும்? ஆனால் அந்த வெள்ளைக்காலர் சிப்பந்திகளால் இப்படி எதிர்ப்புக்காட்ட வரையறையை அறுத்துக்கொண்டு ஒட முடியாது. அதனால், இந்தி என்றால் என்ன என்று புரியாத ஒரு பாமரன், தன் வாழ்வுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் தேவையில்லாத ஒரு கிராமத்தான் அதைப் பயிரை அழிக்கவரும் ஒரு பூச்சிப் படையை ஒழிக்கக் கிளம்புவதைப் போல் எதிர்த்துக் கிளம்பினான். விதை நெல்லாய்ப் பாதுகாக்கப்பட வேண்டிய மாணவ சமுதாயமும் சாதி, இனம் என்ற அடிப்படையில் வெறுக்கக் கற்று தேவநாகரி எழுத்தையே சாபக்கேடாகக் கருதி உணர்ச்சிமயமாக மாறி இருக்கின்றனர். இந்த இளைஞருக்கெல்லாம் எதிர் காலத்தைப் பற்றிய விசாலமான சிந்தனை ஏது?

அவள் பிறந்த சமுதாயத்திற்பட்டவர், ஆங்கிலேயன் நாட்டை ஆளவந்ததும் அம்மொழியில் தேர்ச்சி பெற்று அவனுடைய ஆதரவைப் பெற்றுத் தம்மை உயர்த்திக் கொள்ளத் தவறவில்லை. இன்னொரு ஆதிக்கம் வரும்போது, அப்போதும் தம் சுய முன்னேற்றம் கருதி அதற்குரிய மொழியைக் கற்றுக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். இந்தி வேண்டாமென்று சொன்னாலும் பல பெண்கள், அந்த மொழியைக் கற்றுக் கொள்ளாமலில்லை.

இந்தி, வடமொழிகளைக் கற்றவர்களில் அனைவரிலும் ஒரு சிலரே அந்தணரல்லாத குலத்திற் பிறந்தவர்கள் இருப்பார்கள். ஆனாலும், இப்போது பெரும்பான்மையோர் வடக்கு மொழிகளை எதிர்த்து உணர்ச்சிவசப்பட்ட போராட்டத்தை நடத்தும்போது, இந்த மேன்மைச் சாதியினரைக் கொண்ட கட்சியும் இணைந்திருக்கிறது. இதன் நலிவு, ஏதேனும் ஒர் ஆதாரத்தை அண்டினால் தான் உயிர் வாழலாம் என்ற அளவுக்குப் பரிதாபமாக இருக்கிறது.

பஞ்சம் வந்துற்றபோது, பாலுக்கழும் குழந்தைக்கும் கற்றாழைச் சோற்றை உணவாகக் கொடுக்கலாம் என்பது போன்றதுதான் இந்த நிலை.

மைத்ரேயியின் மனத்திரையில் இத்தகைய சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் திருச்சின்னபுரத்தில் துழைகின்றனர். கடைவீதியே தேர்தல் களமாக இருக்கிறது. நட்சத்திரமும் உதயசூரியனும் பிறைச் சந்திரனும் நீலமும் கறுப்பும் சிவப்பும் பச்சையுமாக, மூவர்ணக் கொடித் தோரணங்கள். கடை வீதியைச் சாலை கடக்கும் இடத்தில் பளிச் பளிச்சென்று சுவரொட்டிகளில் நீல எழுத்துக்கள் கண்களைக் கவருகின்றன. இராஜாஜி பிறந்ததின விழாவில் பேசுபவர்கள் பட்டியலில் அவள் பெயர் கொட்டை எழுத்துக்களில் விளங்குகிறது. ‘செல்வி. மைத்ரேயி எம்.ஏ.’

“இதென்ன, போஸ்டரில் எல்லாம் என்னைக் கேட்காமல் பேரைப் போட்டிருக்கிறீர்கள்? எம்.ஏ. என்று வேறு போட்டிருக்கிறீர்கள்?”

“அதனால் என்ன? நீங்கள் எம்.ஏ.தானே?”

சீனிவாசனின் நிதானமான மறுமொழி அவளுடைய கோபத்தைக் கிளப்புவதாக இருக்கிறது. “நான் எம்.ஏ. பரீட்சைகூட இன்னமும் எழுதலியே?”

‘அதனால் என்ன ? நான் பிராக்கெட் போட்டுக் குடுத்தேன். போடாமலே அச்சடிச்சிட்டான். ஒண்ணுமில்லாதவனெல்லாம் பொய்யா என்னென்னமோ சொல்லிக்கிறான். நீங்க இதோ பரீட்சை எழுதினா பாஸ் பண்ணப் போறேள். என்ன வந்துடுத்து இப்ப, நாம் பொய் சொல்லலியே?”

மைத்ரேயியினால் விழுங்கிக்கொள்ள முடியவில்லை. கோயில், குளத்தைச் சுற்றிய தெருக்கள் எல்லாவற்றையும் கடந்து அவன் வண்டியைச் செலுத்துகிறான். ஊரைவிட்டுத் தள்ளி சினிமாக் கொட்டகையின் பின்னே அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் எழும்பியிருக்கின்றன. ஒரு பெரிய வீட்டின் முகப்பில் சுதந்திரக் கட்சியின் கொடி தெரிகிறது. அந்த வாயிலில்தான் வண்டி வந்து நிற்கிறது. வாயிலில் கூர்ச்சான அழகு மரங்கள் இரண்டு வளர்ந்திருக்கின்றன. சுற்றுச் சுவருக்குமேல் வண்ணத் தோகைகள்போல் போகன் வில்லாக் கொடிகள் வண்ண வண்ண மலர்களைச் சுமந்து கொண்டு விழுகின்றன. முன்முற்றம் அகன்று சிமிட்டித் தளமாக இருக்கிறது. இரண்டு பணியாளர், நீண்ட கயிற்றில் கறுப்பு சிவப்புக் காகிதத்தையும் நட்சத்திர நீலத் தாளையும் ஒட்டித் தோரணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஒருவன் ஓடிவந்து காரின் கதவைத் திறக்கிறான்.

வீட்டுக்குள்ளிருந்து இரண்டு பெண்மணிகளும் லோகாவின் கணவரும் வருகின்றனர். “வாங்கோ...” என்று அவளைப் புன்னகையுடன வரவேற்கும் பெண்மணியின் முகத்தில் வயிரங்கள் வண்ண ஒளிக் கதிர்களை வாரி வீசுகின்றன.

நடுத்தர வயதுக்குரிய அவள் சாதி ஆசாரப்படி காஞ்சீவரம் பட்டுச் சேலையை உடுத்தியிருக்கிறாள். இன்னொருத்தி வயசில் இளையவள். ஆனால் அசைய முடியாத பருமன். அவளும் வயிரமும் தங்கமும் காஞ்சீபுரம் பட்டுமாக மின்னுகிறாள். ஆறு கஜம் சேலை அணிந்து நிற்கும் அவளை சீனிவாசன், “மனைவி” என்று அறிமுகம் செய்துவைக்கிறான். மற்றவள் சகோதரி என்று தெரிந்து கொள்கிறாள்.

பெரிய கூடத்தில் சோபா செட்டுகள் இருக்கின்றன. சீனிவாசனையே அச்சாகக் கொண்ட இரண்டு சிறுவர்கள் நீண்ட பைஜாமா சட்டைகளுடன் புதிய விருந்தாளிக்காக உடை உடுத்துக் கொண்டாற்போல் விளங்குகின்றனர். “சுரேஷ், நரேஷ்...” என்று பெயர் சொல்லுகின்றனர்.

“உட்காருங்கம்மா!” என்று சீனிவாசன் அங்கவஸ்திரத்தை கையிலெடுத்துக் கொண்டு பரபரப்பாக சகோதரியுடன் உள்ளே செல்கிறான்.

எதிரே லோகாவின் கணவர் மொட்டைத் தலைதான் புன்னகை செய்கிறது. “லோகா ரொம்ப பிஸியா இருக்கா. அதனால இன்னிக்கு இங்கே வரமுடியலே. நீங்க போங்கோன்னா ...”

டெரிலின் சட்டை, வயிர மோதிரம், தூய வெள்ளை சலவை மடிப்பு வேட்டி...

மைத்ரேயிக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. ஒரு கணம் தான் எதற்காக அங்கு வந்திருக்கிறாள் என்பது புரியாதவள் போல் சுற்றும் முற்றும் பார்க்கிறாள்.

வாயிலிலிருந்து இருவர் வருகின்றனர். வெற்றிலை புகையிலை வாயும் மூக்குக் கண்ணாடியும் கதர் சால்வையுமாக ஒரு பெரியவர்; கஞ்சி விரைப்பு கதர் சட்டையோடு கூடிய இளைஞன்.

லோகாவின் கணவர் எழுந்து கைகுவித்து வரவேற்றார்.

“இவதான் புரொபஸர் வேதாந்தம். வால்மீகி ராமாயணத்தில் அதாரிட்டி. நீ இவா லெக்சரெல்லாம் கேட்டி ருப்பியே?” | “மைத்ரேயி. இன்னிக்குப் பேசறா... “உங்களுடைய புத்தகம் ஒண்ணு படிச்சிருக்கேன். இந்து சமயம் பற்றியது. நேரில் பார்த்தது ரொம்ப சந்தோஷம்” என்று மைத்ரேயி கைகுவிக்கிறாள்.

“அதுவா? இப்ப லேடஸ்டா ஒண்ணு எழுதியிருக்கேன், பார்த்தேளா? வால்மீகி, கம்பன், துளசி மூணு பேரையும் ஒப்பிட்டு...”

‘பார்க்கலே?”

“பாருங்கோ அவசியம், நீங்கள்ளாந்தான் படிக்கணும்.” ஆட்காட்டி விரலை நீட்டிக் கொண்டு அவர் வற்புறுத்தும் போது சீனிவாசன் வருகிறான்.

“வாங்கோ,எல்லாரும் உள்ளே. கொஞ்சம் டிபன் காபி சாப்பிட்டுப் போனா சரியாயிருக்கும். மணி நாலரையாயிடுத்து...”

முன்கூடத்தை அடுத்த சாப்பிடும் கூடத்தில் கண்ணாடி போன்ற தளத்துடன் சாப்பிடும் மேசையைச் சுற்றி எட்டு நாற்காலிகள் இருக்கின்றன. பளபளக்கும் தட்டுக்களில் கேசரியும் கார சோமாசியும் கொண்டு வந்து சீனிவாசனின் சகோதரியும் இன்னொரு பெண்மணியும் பரிமாறுகின்றனர். தேநீரா, காப்பியா என்று கேட்டுக்கொண்டு போய் எல்லோரும் விரும்பும் காப்பியைக் கொண்டு வருகின்றனர். சிற்றுண்டி முடிந்தபின் மைத்ரேயியும் ராமாயணப் பெரியவரும் லோகாவின் கணவரும் கதர் சட்டை வைத்தியநாதனும் வண்டியில் ஏறிக்கொள்கின்றனர். முன்பு அவள் பார்த்த கடைவீதியின் பின் ஒரு மைதானத்தில் பொதுக் கூட்டமேடை அமைத்திருக்கின்றனர். கறுப்பு, சிவப்பு, நீல நட்சத்திரச் சுவரொட்டிகள், அண்ணாவும் மூதறிஞரும் இணைந்து நிற்கும் படங்கள்.

நட்சத்திரத் தோரணத்துக்கும் குன்றிமணித்தாள் தோரணத்துக்கும் இடையே கூட்டம் சுமாராகக் கூடியிருக்கிறது.

மேடைமீதிருக்கும் ஆறு நாற்காலிகளில் ஒன்றுக்கு அவளை அழைத்துச் செல்கிறான் சீனிவாசன்.

கூட்டத்துக்குத் தலைமை வகிக்க இருக்கும் சந்தான கிருஷ்ணமாச்சாரி அங்கே அவளுக்கு அறிமுகமாகிறார். பெரிய நாமத்துடன் ஒட்டி உலர்ந்த ஒரு முதியவர். திருச்சின்னபுரம் பஞ்சாயத்துத் தலைவர் தனபாண்டி, குன்றி மணிக் கரை வேட்டியுடன் அவளுக்கு அறிமுகமாகிறார். அவர் ஒரு பேச்சாளர். படப்பை வன்னீர்தாஸ்; அவனும் குன்றிமணிக், கரைத் துண்டணிந்து கை குவிக்கிறான். அழகிய மாணவாளன் கதர்த்துண்டும் நெற்றியில் திருமண்ணும் அரிது வெற்றிலை புகையிலை நிறைந்த வாய் சிந்தாமல் கைக்குவிக்கிறான்.

“இவர் தான் இதுவரை நம்ம ஸ்டார் ஸ்பீக்கர்” என்று சீனிவாசன் தெரிவிக்கிறான். உதயசூரியன் வில்லை தரித்த இளவட்டங்கள், குச்சிக்கால் சராயும் சட்டையுமாக அவளைப் பார்க்கும் ஆவலுடன் கைகுவிக்கின்றனர். புகைப்படக் கருவியை தூக்கிக்கொண்டு ஒருவன் அங்குமிங்கும் போகிறான். விளக்குகள், உன் குப்பென்று ஒளிருகின்றன. கூட்டத்தின் ஓர்புறத்தில் சீனிவாசன் குடும்பத்தினரைத் தவிர, பட்டுச்சேலை வயிட்ட அணிகளுடன் பெண்கள் பலர் வந்திருக்கின்றனர். (லோகாவின் கணவர் கூட்டத்தை வரவேற்றுப் பேசுகிறார். மைத்ரேயியை அவர் அறிமுகம் செய்துவைக்கும்போது, “எனக்கு அவளைப் பாவாடைக் கட்டற பிராயத்திலிருந்து பழக்கம். அப்பவே அவ சூடிகையும் புத்திசாலித்தனமும் அபாரம். இன்னிக்குப் பெரியவர் பிறந்தநாள் விழாவிலே பேச வந்திருப்பது கன பொருத்தம். தம்பிகளெல்லாம் காத்திண்டிருக்கா. நான் அதிகம் பேசலே...” என்று அரை மணி நேரம் பேசுகிறார். பிறகு இராமாயண கேசரி புரொ பஸர் வேதாந்தம், இராமாயணத்தில் சூடாமணி படலத்தில் தொடங்கி, பெரியவரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்துகிறார். பிறகு ரகுவம்சம் காவியத்தில் இறங்கி, தம்பிகளின் தலைவருடன் தான் அடிநாளில் பழகியதைப் பற்றி விவரித்துவிட்டு மைத்ரேயியைப் பேசச் சொல்லி ‘மைக்'கை விடுகிறார்.

மைத்ரேயி இத்தனை நாட்களில் மேடைப் பேச்சுக்குப் புதியவளாக இல்லாமல் பழகியிருக்கிறாள், என்றாலும் புதியதாகப் பேசுவதுபோல் உள்ளுற ஓர் நடுக்கம் கூடுகிறது. முதல் நாள் அவள் பிறந்த நாளுக்குரிய முதுபெரும் தலைவரைப் பற்றிய சிறப்புக்களையும் பெருமைகளையும் குறித்துக் கொண்டு வந்திருக்கிறாள். எனினும் பேசப் பொருந்தவில்லை. அந்தப் பெரியவரை அவள் ஒருதரம் பார்த்துப் பேசியதுகூட இல்லை. அவரைப் பற்றிப் பேசவோ, புகழவோ தனக்கு ஒரு தகுதியும் இல்லை என்பதை அப்போதே உணருகிறாள். தனக்குப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் அளித்ததற்குச் சம்பிரதாய நன்றி கூறும் பொழுதில், ஒரு பெரிய ரோஜாமாலையைக் கொண்டு வந்து ஒரு சிறுமி போடுகிறாள். கைதட்டும் ஒலியும் மலரின் குளிர்ந்த தீண்டலும் அவளுக்கு நிலைக்கும் உறுதி யைக் கலைத்துவிட்டாற் போலிருக்கிறது.

ஓர்கணம் ஒன்றும் புரியவில்லை. அவள் பேசவேண்டிய புகழ் மொழிகள் நழுவிப்போகின்றன. வேறு விஷயங்கள் தங்கு தடையின்றி வருகின்றன. ஒரு குடியரசு நாட்டில் ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஆட்சி பீடத்தை அணி செய்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இருக்கிறது. அரசியல் உணர்வு என்பது மேடை ஏறிப் பேசத் தெரிந்திருப்பதோ, மக்களைக் கவரும் வகையில் சுலோகம் எழுதுவதோ அல்ல; அவரவர் நாடு நம்நாடு என்ற பொறுப்போடு தத்தமக்குரிய பணியைச் செவ்வனே ஆற்றும் போதுதான் தத்தம் கடைமையைச் செய்தவராகின்றனர். ‘கடைத் தேறும்வரை’ என்ற நூலைப் படித்து காந்தியடிகள் கண்ட கனவையும் இன்றைய நிலையையும் எடுத்துக்கூறி, மக்களின் உண்மைப் பொறுப்பை வலியுறுத்துகிறாள். அரசமானியம், முதலாளித்துவத்தைச் சாதகமாக்குதல் போன்ற விஷயங்களைத் தொடாமல், முதுபெரும் தலைவரின் பிறந்தநாள் விழாவில், தார்மீகக் கோப்புச் சிதையாமல் நாட்டை நடத்த அவர் கூறும் அரிய கருத்துக்களை வரவேற்றுச் செவிமடுப்போம் என்று உறுதி கொள்ளும்படி கூறி முடிக்கிறாள்.

கையொலி காதைப் பிளக்கிறது; அவள் அமர்ந்த பின்னரும் இன்னமும் மிகவும் உற்சாகத்தோடு அந்த ஒலி வலுவடைவதன் காரணத்தை அறிய இயலாமல் கூட்டம் ஒன்று மேடையை நோக்கி வருகிறது. கையொலி நீடித்ததற்கு வருபவர்களே காரணம் என்று புரிந்துகொள்ளுமுன், அவள் திடுக்கிட்டாற்போல் பார்க்கிறாள்.

சந்தேகமில்லை. மேல்நோக்கி வாரி விடப்பட்ட கிராப்பு, பூச்சி மீசை, சிரிப்பு. சிவப்பு கறுப்புக் கரைத்துண்டு.

நல்ல சந்தனச் சிவப்பு நிறத்தில் உயரமாகக் கண்ணாடி போட்டுக் கொண்டு கால்சட்டை அணிந்த முதியவர் ஒருவரும் உடன் வருகிறார்.

பதவியில் இருந்த நாள் வரையில் சலுகைகளைப் பெற்று ஓய்வு பெற்றபின் எதிர்க் கட்சியில் நிற்கும் முன்னாள் ஐ.ஸி.எஸ். காரர். வெங்கிடாசலம். “வணக்கம் வணக்கம்...” என்று திரும்பிய இடங்களிலெல்லாம் தனராஜ் கை குவிக்கின்றான். மைத்ரேயி மறுவணக்கம் கூறவோ, சிரிக்கவோ இயலாதவளாக உறைந்து போனாற்போல் நிற்கிறாள். சீனிவாசன் ஒரே பரபரப்பும் உற்சாகமுமாக ஒலிபெருக்கி யைப் பற்றிக்கொண்டு அறிவிக்கிறான்.

“பெரியோர்களே, தாய்மார்களே, இப்போது முன்னாள் பெரிய பதவி வகித்து அரசின் ஊழல்களை எல்லாம் அம்பல மாக்கி வரும் திரு வெங்கிடாசலம் ஐ.ஸி.எஸ் அவர்களுடன், பாடலரசு தனராஜ் அவர்களும் வந்துள்ளார்கள். அவர்கள் இருவரும் சிறப்புரை ஆற்றுவார்கள்.”

வெங்கிடாசலம் ஐ.ஸி.எஸ்.ஸு-க்குத் தாய்மொழியிலும் பேசத் தெரியாது; தமிழிலும் பேசத் தெரியாது. எனினும், முன்னுரையாகச் சில சொற்களை மட்டும் நன்றாகப் பேசக்கற்றிருக்கிறார் என்பது தெரியவருகிறது. “அன்பர்களே, இந்த அவையின்கண் என்னை அழைத்துச் சிறப்பித்ததற்காக முதற்கண் எம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்ற முன்னுரைக்குப் பின், அவருடைய சொற்கள் மும் மொழிகளிலும் கலந்து விளையாடி, எல்லோருக்கும் நகைச் சுவை விருந்தளிக்கிறது. இடை இடையே அருகிலுள்ள சீனிவாசனிடம் குனிந்து ஏதோ கேட்டுக் கொள்கிறார்.

“இன்னிக்கு, விசேஷமா, ஒரு ஸ்திரி...அல்ல, லேடி ஸ்பீக்கர், பிரமாதமாப் பேசியிருக்கான்னு தெரியறது. இந்த மாதிரி யங்ஸ்டர்ஸ் அவசியம் முன்னுக்கு வரணும். இப்ப பாலிடிக்ஸ் ஸ்டாக்னண்டாக இருக்கு. இதுக்கு இனிமே ந்யூ ப்ளட் கொடுக்கணும். அவா...மிஸ் மைத்ரேயி எம்.ஏ. ஸ்டுடன்ட்னு தெரியறது. ஐ கங்கிராச்சுலேட் ஹர் ஃபார் ஹர் ஸ்பீச்....”

சந்தான கிருஷ்ணமாச்சாரியாரும் தனராஜூம் ஏதோ பேசிச் சிரிக்கின்றனர்.

வெங்கிடாசலம் முடித்த பின்னர், தனராஜ் எழுந்திருக்கிறான். வழக்கமான கட்டைத் தொண்டையில் மொழி ஒன்றையொன்று தொட்டு அடுக்கு ரயில் விளையாட்டு விளையாடுகிறது. என்ன தானிருந்தாலும் எந்தக் காங்கிரஸ் காரனுக்கும் இப்படிப் பேச வருகிறதா?

“கன்னித் தமிழின் தொன்மையிருக்க, நேற்றுப் புகுந்த அரக்க இந்தி, கள்ளத்தனமாய் பூதகி வேடம் பூண்டு வரு கிறது. விடுவோமா? மூச்சுப் போனாலும் பேச்சுப் போகாமல் போராடுவதே எம் இலட்சியம்” என்று இலட்சியத்தை விளக்குகிறான். “அந்த லட்சியம் ஈடேற மூதறிஞர் அவர்களுக்கு நல்லாசிகூறி ஆதரவளிக்கிறார். அவர் பல்லாண்டு வாழவேண்டும். காங்கிரஸ் பதினேழாண்டு ஆட்சியில் மக்களைப் படியரிசிக்குத் திண்டாட வைக்கத்தான் திட்டம் தீட்டியது. அவர்கள் ரூபாய்க்கு மூன்று படி அள்ளிக் கொடுத்து மக்களை வாழவைப்பார்கள். விண்மீனும் இளம் பரிதியும் வானுக்குச் சொந்தம். அவை கூட்டாகி விண்ணை மண்ணுக்குக் கொண்டுவரும். இரட்டைக்காளை உழைத்து ஓய்ந்து சண்டிகளாகிவிட்டன. இனி அவை கசாப்புக் காரனுக்குத் தான் லாயக்கு...”

அவனுடைய கட்டைக் குரல் ஒலி வடிவங்களில் புகுந்து விளையாடும்போது, மக்கள் அடிக்கடி சிரிக்கிறார்கள். கையும் தட்டுகிறார்கள். கையொலிக்கும் சிரிப்புக்கும் பொருளே இல்லை!

அந்த இருவரையும் நிச்சயமாக எதிர்பார்த்திருக்க வில்லையாதலால் சீனிவாசன் மாலைகள் வாங்கி வைத்தி ருக்கவில்லை போலும்! விரைந்து ஆளனுப்பி இரண்டு மாலைகள் வாங்கிவரச் செய்து அவர்களுக்குக் கூட்டம் முடியும் நேரத்தில் போடுகிறான்.

கூட்டம் முடிந்ததும் மேடையை நோக்கிப் படை எடுக்கிறது ஒரு இளவட்டக் கும்பல். தனராஜிடம் கை பழுத்து வாங்கிய பின் அவளிடமும் சிலர் வருகின்றனர்.

“நானென்ன, கையெழுத்துப் போடப் பெரிய ஆளா!...” என்று விரித்து மறுக்கிறாள் அவள்.

“பெரிய ஆளாய் வந்திண்டிருக்கியே!போட்டுக் கொடு!"என்று லோகாவின் கணவர் ஆமோதிக்கிறார்.

குச்சிக் கால்களும் நைலான் தாவணிகளும் அவளையே பாத்துக் கொண்டு நோட்டுப் புத்தகத்தை நீட்டுகின்றனர்.

முதலில் ‘கன்னித் தமிழே வாழி; அறிவும் அன்பும் இருகண்கள்’ என்று எழுதி தனராஜ் கையெழுத்துப் போட்டிருக்கிறான்.

‘தனராஜ், திரைக் கவிஞர்.... மைத்ரேயி எம்.ஏ. நம்ம ஸ்டார் ஸ்பீக்கர்” என்று சீனிவாசன் அவர்களை அறிமுகம் செய்து வைக்கிறான்.

“வணக்கம்..” என்று அவன் கைகுவிக்கும்போது, அவனுடைய மரியாதையும் கொஞ்சமும் காட்டிக்கொள்ளாத பண்பும் அவளைப் பிரமிக்க வைக்கின்றன.

“மிக்க மகிழ்ச்சி. இங்கே பக்கத்தில் பேசவந்தோம். நம்ம பன்னிர்தாஸ் இங்கும் வந்து போகலாம்னு சொன்னாங்க. வரட்டுமா? வணக்கம், வணக்கம்” என்று கைகுவித்துவிட்டு மாலையுடன் செல்கிறான். அவர்களைத் தொடர்ந்து சீனி வாசனும் செல்கிறான்

மணி ஒன்பதரையாகியிருக்கிறது. இலேசான குளிர் உடலில் படிந்து சிலிர்ப்பூட்டுகிறது. அப்போது ஒரு குச்சிக் கால்சராய் முன்னேறி வருகிறான்.

“என்னங்க... !”

“என்னங்க!...”தன்னைத்தான் அவன் அழைக்கிறான் என்பதை அப்போது தான் அவள் உணருகிறாள்.

“என்னையா கூப்பிட்டீங்க ?”

“வணக்கங்க. உதய ஞாயிறு பத்திரிகை நிருபருங்க. ஒரு பேட்டி...”

பருவப்பெண் படுகொலைச் செய்திகளை முரமுர வென்று சூடாகக் கொடுக்கும் உதயஞாயிறு பத்திரிகைக்கு பேட்டி!

அவள் மெளனநகை செய்கையில் அவன் இன்னொரு படி முன்னதாக வைத்து, “நம்ம வீட்டுக்கு எப்பங்க வரட்டும், பேட்டிக்கு ?” என்று கேட்கையில் அவள் வெட்டுகிறாள்.

“பேட்டி கீட்டி எல்லாம் ஒண்ணும் வாணாம்!”

“அப்படிச் சொல்லக்கூடாதுங்க. சாயங்காலம் சரியாயிருக்குங்களா? நாளைக்கு ஏழு மணிக்கு..”

“நான் பேட்டி வேண்டான்னேன். அதெல்லாம் பிடிக்காது. நீங்கள் போகலாம்.”

“பேட்டி கொடுத்தா என்னங்க ? ஞாயிறு மலர்ல ஃபோட்டோ போட்டு வெளியிடுவோம்...”

மொட்டைத்தலை பேச்சைக் கேட்டாற்போல் வருகிறார்.

“ஏம்மா ? பப்ளிஸிடிதானே ? பாலிடிக்ஸுக்கு இதெல்லாம் சகஜம் மைத்ரேயி, வாணான்னு சொல்லாதே!”

“அப்ப நாளை ஏழரை மணிக்கு வரலாங்களா?”

“எங்கே வருவீங்க?” என்று திருப்பிக் கேட்கிறாள் அவள்.

“நம்ம வீட்டுக்கு..”

வீடு தெரியுமா என்று கேட்கவில்லை. அவன் உறுதி செய்து கொண்டு மீண்டும் வணக்கம் போட்டுவிட்டுப் போகிறான்.

“எக்ஸ்க்யூஸ்மி, ரொம்ப நேரமாயிடுத்து. ஆத்துக்குப் போகலாமா?” என்று சீனிவாசன் பரபரப்பாக வருகிறான்.

“இப்படிக் கொஞ்சம் வாங்க. அவங்க என்னமோ உதயஞாயிறுக்கு பேட்டி அது இதுன்னு நாளைக்கு எங்க வீட்டுக்கு வரேன்னு போயிருக்காங்க. அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்க கடுமையாகக் சொல்லி நிறுத்தணும்.

இவங்க, பேப்பரில் என் பேர் வரவேண்டாம். நான் தேர்தலுக்கு நிற்கப்போகும் ஆளில்லை. வெறும் பேச்சாளி!”

அவளுடைய குரலின் கடுமை அவனுக்கே எதிர் பாராததாக இருக்கிறது.

“அதுக்கென்ன நான் சொல்லிடறேன், இப்ப, சாப்பிடப் போகலாம் வாங்க. சாப்பிட்டானதும் வீட்டில் கொண்டு விட்டுடறேன்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_18&oldid=1115397" இருந்து மீள்விக்கப்பட்டது