ரோஜா இதழ்கள்/பகுதி 7

விக்கிமூலம் இலிருந்து
7

மேசை மீது அழகாகப் பூக்கள் அச்சிட்ட வெள்ளை விரிப்பு கஞ்சி முரமுரப்புடன் தொங்குகிறது. பெரிய பெரிய சம்பங்கிப் பூக்களைப் போன்ற வெண்மையான மலர்களை அழகிய தேன் வண்ணப் பட்டைக் கண்ணாடிக் குடுவையில் அநுசுயா செருகி வைத்திருக்கிறாள். அவள்தான் மைத்ரேயிக்கு உதவியாகச் சமையலறையில் பூரி இட்டுத்தந்து கறிக்குப் பக்குவம் பார்த்து, உணவைத் தயார் செய்திருக்கிறாள். பூக்கள் அச்சிட்ட நாப்கின் காகிதங்களை பெரிய மலர்களைப் போல் சிங்காரமாக மடித்து அலத்திச் செருகியிருக்கிறாள். பளபளக்கும் பீங்கான் தட்டுக்களையும் கரண்டிகளையும், அவள் அலங்காரமாக எடுத்து வைக்கிறாள். அநுசுயாவுக்கு அந்த வீட்டில் வெகுநாளையப் பழக்கம் இருக்கிறதென்று மைத்ரேயி ஊகித்துக் கொள்கிறாள்.

ராஜாவும் லோகாவும் உணவு கொள்ள வந்தமருமுன்பே பரபரப்பு மைத்ரேயியை ஆட்கொள்ளுகிறது. சேதுவும் அந்நேரத்துக்குக் கல்லூரியிலிருந்து வந்திருக்கிறான். அவனும் உணவு கொள்ள வருகிறான். குதிரை போல் ஸீஸரும் வருகிறது. ராஜாவை அது அருகில் வந்து மோந்து பார்க்கிறது.

“டோன் பீ நாட்டி, கம்ஹியர், ஸீஸர்....கோ! கோ டூ யுவர் ப்ளேஸ்!” என்று அதட்டுகிறான் சேது.

அது. வெளியே ஓடுகிறது.

“எட்டு மாசத்துக்குள் நல்லா வளர்ந்திருக்கே?....” என்று கூறுகிறான் ராஜா.

“ஹூம், கரம் மசாலா மணம் வரதே? அநுசுயாதான் சமையல் பண்ணாளா?”

அநுசுயா தலைகுனியப் புன்னகை செய்துகொண்டு ‘ஜக்’கில் குடிநீர் கொணர்ந்து வைக்கிறாள்.

லோகா மகனை சற்றே கடுமை தெரிய நோக்குகிறாள்.

“என்னை ஏம்மா முறைச்சுப் பாக்கறே? நானொண்ணும் அப்பாக்குச் சொல்லிடமாட்டேன். இந்த வாசனை வெளி வாசலெல்லாம் ஜம்முனு பிரயாணம் பண்ணப் போறதேன்னு நினைச்சேன். தந்தூரி கோழி பண்ணியிருக்காளோன்னு ஸார் நினைச்சுக்கப் போறார்......”

நல்ல உயரமும் தாட்டியும் சிவந்த மேனியுமாக விளங்கும் ராஜா, அரும்புமீசையும் கொழுக்கட்டை மூக்கும் மலரச் சிரிக்கிறார்.

தங்கப்பற்கள் இரண்டு தெரிகின்றன. தங்க பிரேம் மூக்குக் கண்ணாடி. மினுமினுப்பாகத் தெரியும் மெல்லிய பட்டு ஜிப்பா தரித்திருக்கிறார். அது கதர்ப்பட்டாக இருக்கலாம். முடி நல்ல கறுப்பாக இருக்கிறது.

“சேதுவும் நான் மூணு மாசத்துக்கு முன்ன பார்த்ததுக் கிப்ப வளர்ந்திருக்கிறான். பி.எ. எகனாமிக்ஸ் பண்ணிட்டு என்ன பண்ணப் போறே?”

“முதலில் அதை முடிக்கட்டும் கழுதை, படிக்கிறதே இல்லை ...” என்று குற்றம் சாட்டுகிறாள் லோகா.

“அம்மா, நான் படிக்கும் நேரத்தில் தூங்கிட்டிருக்கிறதால நான் படிக்கிறதே இல்லேன்னு முடிவு கட்டிடறா ஸார். அதற்கு நான் என்ன பண்ணட்டும்?”

“சயன்ஸ்ணு சப்ஜெக்ட் எடுத்திருக்கணும் நீ. இனிமே லெல்லாம் சயன்ஸும் டெக்னாலஜியும்தான். அமெரிக்காவுக்கோ ஜர்மனிக்கோ போகலாம்...”

“கிரிதர் கனடாவுக்குப் போய் மூணு வருஷமாகிறதில்லே? எப்ப வரப்போறான் ?...” என்று கேட்கிறாள் லோகா.

“அவன் அங்கேயே ரொம்ப கெட்டிக்காரன்னு பேர் வாங்கிட்டான். இனிமே அந்தமாதிரி விஞ்ஞானப் படிப்புதான் நமக்கு வேணும்.”

“இவனை ஆனமட்டும் இன்ஜினீயரிங் காலேஜில் இடம் வாங்கித் தரேண்டான்னு முட்டிக்கிட்டேன். கேக்கலே...” என்ற லோகா, தட்டுக் காலியாக இருப்பது கண்டு... “மைத்ரேயி!” என்று குரல் கொடுக்கிறாள்.

மைத்ரேயி முகத்தைக் கழுவிப் பவுடர் போட்டுக் கொண்டு சேலையைப் பாங்காக உடுத்தியிருக்கிறாள்.

பட்டாணியும் கோசும் கலந்த கறியை எடுத்துக்கொண்டு அவள் வரும்போது, ஏதோ பேசிக் கொண்டிருந்த ராஜா, திடுக்குற்றாற்போல் பார்க்கிறார்.

“இது யாரு லோகா?” மைத்ரேயிக்குக் கை நடுங்குகிறது. ராஜாவின் தட்டில் பெரிய கரண்டியால் கறியை எடுத்து வைக்கிறாள்; மேசை விரிப்பில் பட்டாணி சிந்தி விழுகிறது.

“புது குக் ஸார்!” என்று தெரிவிக்கிறான் சேது.

“குக்கா?” என்று கேட்டவர் மீண்டும் வாயடைத்தாற் போல் அவளைப் பார்க்கிறார்.

“இந்த வீட்டில் இதோடு இந்த வருஷத்துக்கு எழுபத்தெட்டு குக் வந்தாச்சு ஸார். இவா டெம்ப்ரரி அபாயின்ட்மென்ட்கூட இல்ல. ஹோமுக்காக மதுரம் மாமி கூட்டி வந்திருக்கா...” என்று விவரம் அறிவிக்கிறான் சேது.

ராஜாவுக்கு இது அதற்கும் மேலான அதிர்ச்சியூட்டுவது போலிருக்கிறது. “அப்படியா? ஹோம்ல...சேரவா?”

“அம்மாக்கு லக் இருக்கு. ஒரு நாள்கூட அம்மாவுக்குக் கரண்டி பிடிக்கச் சந்தர்ப்பம் வரதில்ல. என் ஃபிரன்ட்ஸ் வீட்டுக்குப் போனா அங்கெல்லாம் அம்மாக்களே எல்லாம் கொடுத்து உபசாரம் செய்யறதைப் பார்க்கிறேன். எனக்கு அம்மா அது மாதிரி ஒரு நாள் கரண்டியும் கையுமா சமையல் ரூமுலேந்து வரணும்னு ஆசை!”

“உனக்கு வரவ கரண்டி எடுத்துப் பரிமாறுபவளான்னு பார்த்துக்கோ! வாயரட்டைக் கழுதை! இலையப் பார்த்துப் போதுமா, வேணுமான்னு சொல்லு!”

“நான் அப்பவே போதும்னு கைகாட்டியாச்சு” என்று சேது மைத்ரேயியைப் பார்க்கிறான். உருளைக்கிழங்கை நாவில் வைத்துக்கொண்டு, “இவ்வளவு மசாலா அநுசுயா தான் போட்டிருப்பா. கொஞ்சம் எங்களுக்குத் தனியா வச்சி ருக்கணும்னு அவளுக்குத் தெரியுமே? வைக்கல?” என்று கேட்கிறான்.

ராஜா இன்னும் அவளைத்தான் கவனிக்கிறார். நேரடியாகவே அவளிடம், “உன்பேரென்னம்மா?” என்று விசாரிக்கிறார்.

“மைத்ரேயி” என்று சட்டென்று லோகாவே கூறுகிறாள்.

“நான் நினைச்சேன் லோகா, ராதா வீட்டுச் சொந்தக்காரப் பெண் யாரோ வந்திருக்காப் போல இருக்குன்னு. ஹோம்ல சேர வந்திருப்பதாக இன்னமும் நம்ப முடியலே...”

மதுரம்தான் சொல்லிக் கூட்டிவந்திருக்கா-தாய் தகப்பன் இல்லே. அக்கா யாரோ கிழவனுக்கு மூணாந்தாரமாய்க் கட்டிக் கொடுக்க நினைச்சாப் போல. கிணற்றில் விழ வந்திருக்கிறாள்....”

அவர்கள் தன்னைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்கிறாள் மைத்ரேயி. ஆனால் விவரத்தை முழுதும் புரிந்து கொள்ள முடியாமல் இடை இடையே உள்ளே வரவேண்டியிருக்கிறது.

“இதுபோல் கீழ்தளத்தில் நடக்கலாம். உயர்வகுப்பில், இவ்வளவு மறுமலர்ச்சியும் முற்போக்கும் வந்த பின்னரும் நடக்கிறதென்பதை நம்ப முடியவில்லை...” என்று கூறுகிறான் ராஜா.

சாம்பார் சாதத்தைப் பிசைந்துகொண்டு லோகா, “எல்லா வகுப்பிலும் எல்லாம் இருக்கிறது. வறுமைதான் காரணம்” என்று மொழிகிறாள்.

“படிச்சிருக்கியாம்மா?”

அவர் கடைசியில் கூறியதற்கு லோகா மறுமொழி கொடுத்ததிலிருந்து, தன்னுடைய தவறுக்கு வறுமையைக் காரணமாக்குகிறார்கள் என்று மைத்ரேயி புரிந்து கொள்கிறாள். ஆனால் உண்மை அதில்லையே? பாலும் தயிருமாக சாப்பிடக் கூடிய வீடு அல்லவா? அவள் வீடு. ஆனால் அவர்கள் அவளை எதுவும் கேட்காதபோது அவளாகத் தலையிட்டுச் சொல்வது அவர்கள் கோபத்தைக் கிளப்பிவிடக் கூடுமே?

“எஸ்.எஸ்.எல்.சி. பாதி வரை படிச்சேன். அதை முடிச்சிடணும்னுதான் ஒரே ஆசையாக இருக்கு...” என்று அவளே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் உள்ளத்தை வெளியிடுகிறாள். ராஜா லோகாவைப் பார்க்கிறார்.

“எனக்கு ஒரு யோசனை, சீரியஸாகக் கொஞ்ச நாளாக நினைக்கிறேன்..”

“சொல்லுங்க ப்ளீஸ்...” என்று சேது சொல்கிறான்.

லோகாவோ, மௌனமாக அவரைப் பார்க்கிறாள்.

“வரவர நம்ம பார்ட்டிக்கு மாஸ் காண்டாக்டே குறைஞ்சு போயிட்டிருக்கு. முழுநேர பிரசாரகர்கள் நமக்கு வேணும். இது போல இளைஞர்களைச் சேர்த்துப் பயிற்சி கொடுத்து, கட்சிப் பிரசாரத்துக்கே கிராமம் கிராமமா அனுப்பனும். அந்த மாதிரி ஒரு ஏற்பாட்டுக்கு இப்படிப் பெண்கள் நமக்குத் தேவை...”

லோகா விடுவிடென்று பேசுகிறாள். “ஏன்? கிராம சேவிகா அது இதெல்லாம் என்ன பின்ன? என்னைக் கேட்டா இது மாதிரி பிரசாரத்துக்கு இளைஞர்களை நம்பிப் பிரயோசனமில்லை. ஒரு கிராம சேவிகையின் பிரச்னையை நான் நேரில் பார்த்தேன். ஒரு விவரம் தெரியாத பெண் வந்து நமக்கு யோசனை சொல்றதான்னு கிராம மக்கள் நினைக்கிறாங்க. அவளைக் கேலியும் கிண்டலும் செய்து அவளுக்குப் போதும் போதும்னு பண்ணிடறாங்க. ஒரு பொண்ணு எங்கிட்டச் சொல்லி அழுதா. சிவனேன்னு டீச்சர் டிரெயினிங்னாலும் போயிருப்பேன், இப்படி வந்து மாட்டின்டேன்னா ...”

“நோ நோ-நான் சொல்றது அந்த மாதிரியே இல்லே லோகா. அது அரசுச் சார்புடையது, இது முழுக்க முழுக்க பார்ட்டி. இவர்கள் பொதுமேடையில் கிராம மக்களைக் கவரும் விதமாகப் பேசுவார்கள்; நாடகங்கள் நடித்துக் காட்டுவார்கள்; பாட்டுக்கள் பாடுவார்கள்; கதைகள் சொல்லுவார்கள். இதற்கு முதலில் ஒரு நல்ல ஆளுமை, பர்சனாலிடி, கம்பீரம் வேணும், தோற்றத்தைப் பார்த்தே. வந்து மேடையில் நின்றாலே கவர்ச்சிகரமாக இருக்கணும், பிறகு பேச்சில அந்தக் கவர்ச்சியைக் கொண்டுவரப் பயிற்சி கொடுக்கணும்”

லோகா ஒன்றும் பேசவில்லை.

“ஸாரோட திட்டம் புரிஞ்சு போச்சு. இப்ப வந்திருக்கும் குக்குக்கு இந்தத் தகுதி எல்லாம் இருக்குன்னு சொல்றார். அம்மா! இந்த நிம்மதிக்கும் ஆபத்து!” என்று கிண்டுகிறான் சேது.

“நீ எதானும் உளறாதே சேது! சாப்பிட்டாச்சுன்னா உன் வேலையைப் பார்த்துட்டு எழுந்துபோ!” என்று எரிச்சலுடன் பேசுகிறாள் லோகா. அதே வேகத்துடன் மடமடவென்று தண்ணீரைக் குடித்துவிட்டு, வாஷ்பேசினில் கையைக் கழுவிக் கொண்டு துடைத்துக் கொள்கிறாள். அநுசுயா அங்கேயே இன்னொரு சிறு மேசையின் மேல் வெற்றிலை பாக்குத் தட்டைக் கொண்டு வைத்திருக்கிறாள்.

“லோகா, என்ன அதுக்குள்ள எழுந்து போயிட்டே? மாம்பழம் சாப்பிடல?”

அப்போதுதான் மைத்ரேயி, அநுசுயா அழகாகக் கூறுகள் போட்டுவைத்த மாம்பழத் தட்டைத் தூக்கி வருகிறாள். மாம்பழக்கூடை ராஜா வரும்போது காரில் வந்தது.

“பாக்குப் போட்டுண்டேன். வேண்டாம்-”

“பாக்குத்தானே? துப்பிட்டுச் சாப்பிட்டுப்பாரு. நான் ஸ்பெஷலாச் சொல்லி பங்கனபள்ளிலேந்து தருவிச்சேன். இங்கே உங்களுக்குத்தான் கொண்டு வந்தேன். ஒண்ணு சாப்பிட்டு மாதிரி பாரு-”

“வேண்டாம் ராஜா... நான் அப்புறம் சாப்பிடுறேனே? பாக்குப்போட்டுண்டா அப்புறம் எதையும் நாக்கு ஏத்துக்கிறதல்ல” என்று மறுக்கிறாள் லோகா.

சேது ஒவ்வொன்றாகத் துண்டங்களை எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறான். சாவதானமாக, “ஸார் மேலே உள்ள கோபத்தை என் மேல காட்டிப் பாத்தா, இப்ப மாம்பழத்தின் மேல் காட்டறா...” என்று கிண்டுகிறான்.

“சேது! யூ ஹேவ்பிகம் இன்டாலரபிள் (you have become Intolarable)” என்று கத்துகிறாள் லோகா.

அந்தக் குரலைக் கேட்டு மைத்ரேயி அதிர்ந்தாற்போல் பார்க்கிறாள். அநுசுயா அவரைப் பார்த்துத் தலைகுனிந்து நிற்கிறாள்.

சேது சிரித்துக்கொண்டே கையலம்பிக் கொண்டு போகிறான். ராஜா இப்போதுதான் தயிருக்கு வந்திருக்கிறார்.

மைத்ரேயி மௌனமாக ஊறுகாய் போடுகிறாள். ராஜா உண்டு முடிந்து அறைக்குச் செல்கிறார்.

மேசையைச் சுத்தம் செய்யும் அநுசுயா மாம்பழத் தட்டைக் கொண்டுவந்து சமையலறையில் வைக்கிறாள்.

முதல் நாள் மதுரமும் அவளும் சாப்பிட உட்கார்ந்தாற் போல் இன்று அநுசுயாவும் அவளும் சமையலறைத் தரையிலேயே இருவரும் ஆளுக்கொரு இலையில் அமருகின்றனர்.

மாம்பழத் துண்டங்களை அநு இலையில் வைக்கிறாள்.

“அது இருக்கட்டுமே? பாலா வந்தால் சாப்பிட மாட்டா ?”

“ஏன்? பாலாதான் சாப்பிடணுமா? நாமும் சாப்பிடலாம். பாலா வந்தால் முழுப்பழம் இருக்கு... நானும் இப்ப ஃபிரிட்ஜைத் திறந்து இன்னொறு பழம் எடுத்திட்டு வந்து முழுசாச் சாப்பிடப் போறேன்...”

“எனக்கு எப்படியோ இருக்கு அநு. இவர்தான் எம்.பி.யா?”

“ஆமாம். இவருதான் ஹோம் கமிட்டில பிரஸிடன்ட். அம்மா வைஸ் பிரஸிடன்ட்.”

“எனக்கு ஹோமில் சேர்ந்துடணும்னு இருக்கு. இந்த வீட்டு விவகாரம் எனக்கு எப்படியோ இருக்கு. பர்ண சாலையிலே அவரு. அவர் ஏன் இங்கே வந்து சகஜமா இருக்கிறதில்ல?”

அநுசுயா முழு மாம்பழச்சாறு ஒழுக நடுவில் நின்று சிரிக்கிறாள்.

“அது அப்படித்தான். அதைக் கண்டால் எனக்கே பிடிக்காது. அம்மா ரொம்பப் பெருந்தன்மை. அது என்னை உள்ளே நுழையவிடாது, முதமுதல்ல நான் ஒரு நாள் அதுக்குக் காப்பி கொண்டுவச்சேன். அப்ப ஊரிலேந்து வந்த புதிசு. ஏதோ பொம்பளை விவகாரத்தில் மாட்டிட்டுத்தானே அடி வாங்கிட்டாரு? அதனால தள்ளி மேசை மேல வச்சிட்டு எத்திட்டேன்.

“யே யாருடி நீ புதுசா இருக்கியே? அங்கியே வச்சிட்டு பொனா என்ன அர்த்தம்!”ன்னாரு.

நான் மேசையை நகர்த்திப் போட்டேன். “துண்டு கொண்டா”ன்னாரு, கொண்டாந்தேன்.

“அப்படி வச்சிட்டு நில்லு. நான் சாப்பிட்டாப்புறம் கை கழுவித் துடைச்சப்பறம் சுத்தம் பண்ணி எடுத்திட்டுப்போ!”ன்னாரு.

“ந்தாய்யா? அந்த வேலையெல்லாம் ஏங்கிட்ட வச்சுக்காதே உக்கும்”ன்னு முறைச்சேன்.

அந்த ஆளு அப்ப தரக்குறைவாகப் பேசத் தொடங்கிட்டாரு. நான் அதுக்கப்புறம் போறதில்ல. கோகிலாங்கிட்ட போயி, பறச்சாதியெல்லாம் உள்ளே வந்து தொடச் சொல்றா. நீ அம்மாட்டச் சொல்லிடு. நான் இனிமே அவ தொட்டா சாப்பிடமாட்டேன்னு..... கோகிலா அம்மாகிட்டச் சொல்லாம ஏங்கிட்டச் சொன்னா.

நான் அப்புறம் அந்தப் பக்கம் போறதில்லை. பாலா போய்க் காப்பி குடுக்கும், சோறு கொண்டுவைக்கும். வைக்கலேன்னா இங்கே வந்து கன்னா பின்னான்னு அம்மாளைத் திட்டுவொரு. அம்மா அதுக்கு அஞ்சி நம்மையே கொண்டு வைக்க செல்லி விரட்டுவாங்க.”

“தமாஷ்தான்-”

“அந்தாளு மகாமட்டமான ஆளு, அந்தக் காலத்தில் சொத்து வெளியே போகக்கூடாதுன்னு கட்டி வச்சிட்டாங்க.”

ஒரே மகளாக, எல்லா வசதிகளும் இருந்தும் இப்படிக் கூடச் செய்வார்களா என்று மைத்ரேயி எண்ணிப் பார்க்கிறாள்.

பூசை, புனஸ்காரம், ஆசாரம் என்று அவர் பேசியதே அதிகப்படியாக அவளுக்குத் தோன்றியது. “பட்டுத்திரைக்குப் பின்னால் கைகளில்லாத பெண் ஒருத்தி கால்களால் வேலை செய்யக் காண நேர்ந்தாற் போலிருக்கிறது. களிப்பூட்டும் அற்புதக் காட்சி!” என்று மாம்பாக்கத்தில் வந்த சர்க்கஸ் கொட்டகையில் விளம்பரம் செய்திருந்தனர். பட்டுத்திரை தொங்கியது. அது விலகியதும், கைகளில்லாத ஒரு பெண் - அவள் முகத்தில்பால்வடியும் இளமை, கைகளில்லாத கோலம் அவள் நெஞ்சை அமுக்கிப் பிசைந்தது. அவளால் அந்தப் பெண் கால்களால் தேநீர் தயாரித்ததை அற்புதமாக நினைக்க முடியவில்லை. பல இரவுகளில் அந்த அற்புதம், பயங்கரமாக மாறி அவளுடைய கனவுகளில் தோன்றியிருக்கிறது.

“இந்த மதுரத்தம்மா புருசன் இருக்கே, அது ஒரு மோசமான ஆள். அது போய்க் குடிசையில் அந்தாளுக்கு கஞ்சா வாங்கிக் கொடுக்குது. பாவம் அம்மா, வீட்டுக்குள்ளே ஒண்ணும் செய்ய முடியாம பாதிப் பொழுதும் வெளியே போயிடறாங்க...” என்று மேலும் விள்ளுகிறாள் அநுசுயா.

“உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?”

“எனக்கு கோகிலா சொல்லுவாள். நான்தான் இங்கே அடிக்கடி வருவேன். வேறு யாரையும் அம்மாளுக்குப் பிடிக்காது.”

“உனக்கு ஹோம்ல சம்பளமா?..”

“எனக்கு முன்னெல்லாம் ஒண்ணும் கிடையாது. இப்பத் தான் நாலுமாசமா ‘சில்ட்ரன் செக்ஷன்ல’ வேலை செய்யிறேன். மாசம் அறுபது ரூபாய் சம்பளம். நாற்பது ரூபாய் அங்கேயே சாப்பாட்டுக்குக் கொடுத்துடுவேன்.”

“ஓ, என்னைப்போல இருக்கிறவங்க வந்தாவேலை கிடைக்குமா? வேலை செய்து கொண்டு படிக்கலாம்னு ஆசை இருக்கு. அம்மா கிட்டக் கேட்கணும்னு இருக்கேன்...”

“ஐயோ, வேணாம். நீ ஏன் அங்கே போகணும்? இப்பக்கூட எனக்கு வேற வழியில்லாததால அங்கே இருக்கிறேன். காலையிலே கேழ்வரகுக் கஞ்சி ஊத்துவாங்க. பகல் நேரத்தில் பாதி நாளும் சோறு பத்தாம போயிடும். பாச்சை விழுந்த ரசத்தை அப்படியே பாச்சையைத் தூக்கி எறிஞ்சிட்டு முத்தம்மா ஊத்துவா. தலைநிறைய ஈறும் பேனுமாப்பிடுங்கும். ஜெயில் புள்ளிகளைப் போல வெளியே போகணும்; வரணும். யாரேனும் பெரிய மனுஷங்க வந்தா வெள்ளையா நல்ல சேலை உடுத்தி எக்சிபிஷன்போல நிக்கணும். ஒரு மெம்பருக்குப் புடிச்சது இன்னொரு மெம்பருக்குப் புடிக்காது. சாந்தா சுந்தரம்னு ஒரு மெம்பர். டீன்னுதான் கூப்பிடுவா. அவ வீட்டில் யாருக்கோ குழந்தை பிறந்ததுன்னு என்னை உதவிக்குக் கூட்டிப் போனா. நான் இங்கே குழந்தைகளைப் பார்க்கிறேனேன்னு குழந்தைக்கு நர்சாயிருக்கத்தான் கூட்டிருக்காங்கன்னு நினைச்சேன். பெட்பான் வச்செடு, துணி துவைச்சுப் போடுன்னு ஏவினாங்க. அதான் போகட்டும்னா சோறு பின்கட்டிலே வச்சுப் போட்டாங்க. நான் மூணுநாளு இருந்ததும் ஓடிவந்து நம்பம்மாகிட்ட அழுதேன். புடிக்கலேன்னா திருட்டுக்குத்தம் சுமத்தக்கூடத் தயங்கமாட்டாங்க. எங்களுக்கு வீடு வாசல் நாதியில்லே. வந்திட்டோம். நீ போய் அங்கே ஏன் விழறே?” என்றெல்லாம் அநுசுயா அவளுக்கு அறிவுறுத்துகிறாள்.

“எனக்குந்தான் வீடு வாசலில்லையே?”

“இருக்குன்னியே? அக்கா, அத்தான் வீட்டில இருந்து நானே படிச்சிருக்கே?”

“அதான் புத்திகெட்டு வீட்டை விட்டு ஓடிப்போயிட்டேனே? அதை எல்லாரிடமும் சொல்லவே எனக்குக் கூச்சமாயிருக்கு. திரும்பி வந்து அவங்க காலில் விழுந்தேன். என்னைச் சேர்த்துக்கல்ல.”

“த்ஸ...த்ஸ... அப்ப பருவதத்தைப் போலா நீ...”

“யாரு பருவதம்?”

“அப்படி ஒரு பொண்ணு ‘ஹோமில்’ இருக்கு. உங்களவங்கதான். ஏழுமாசம் கர்ப்பத்தோட வந்திருக்கு.”

மைத்ரேயிக்கு முகம் சிவக்கிறது. “அப்படியெல்லாம் நான் எந்த மாதிரியான நிலைக்கும் வருமுன், ஒரு அம்மா எச்சரிக்கை பண்ணி கையில் பணமும் கொடுத்து அனுப்பினாங்க. அக்கா வீட்ல வெளிலே துரத்தினதும் மதுரத்தம்மா தான் சோறுபோட்டு இங்கே கூட்டி வந்தது.”

மனநெகிழ்ச்சி, அநுசுயாவை ஒத்தவளாகக் கொண்டு விடுகிறது. அவளிடம் உள்ளத்தைக் கூறியதும் ஓர் ஆறுதல் தோன்றுகிறது.

“ஆனா, அம்மா உன்னை இங்கே வச்சிக்கிறது சந்தேகம். ராஜா என்ன பேசினார் தெரியுமில்லே?...”

“தெரியாதே! நான் கவனிக்கலியே ?”

“உன்னை ஹோமிலே சேர்க்க அவர் இஷ்டப் படலேன்னு நினைச்சேன்”.

“அம்மா இப்ப அவங்க ரூமில்தானே இருப்பாங்க? நான் போயி கேட்கட்டுமா? எனக்குச் சமயம் எதுன்னே புரியல”

“நீயாப்போயி அவங்களிடம் கேட்காதே. அவங்களுக்குத்தான் தெரியுமே? சொல்லுவாங்க. ஏன், ராஜாபார்ட்டி வேலைக்கு உன்னை எடுத்திட்டா உனக்கு நல்லதுதானே ? நீ பெரிய ஆளாப்போறா!”

“அப்படி யார் சொன்னது?”

“அட மக்கு அவங்க பேசிட்டாங்களே, கேக்கல? அம்மாளுக்கு அது புடிக்காமதான் உர்ருனு எழுந்து ரூமுக்குப் போயிட்டாங்க, மாடிக்கு!”

மைத்ரேயியின் முகம் விரிகிறது. “அப்படியா ? நான்தானே பரிமாறினேன்? நீ உள்ளே இருந்தாயே ? எப்படிக் கேட்டே?”

“காதால் கேட்டேன். அவங்க பேச்சை நீ கேட்காம என்ன பரிமாறினே ?”

“சிலது காதில் விழுந்தது. என்னமோ பார்ட்டி வொர்க் டிரெயினிங்குன்னு சொன்னார். பிரசாரம்னு சொன்னது தெரிஞ்சுது. எனக்கா அது?”

“உன்னைப் பார்த்ததும் சொன்னால், உனக்குத்தான். நீ என்ன இருந்தாலும் உசந்த சாதி; அழகு. ஆனா, உங்களை ஒத்தவங்க எங்கேனாலும் வீட்ல வேலைக்குப் போனாலும் கஷ்டம். பர்வதம் பாரு, ஒரு பெரிய கிரிமினல் லாயர் வீட்ல வேலைக்கிருந்த பொண்ணுதான். லாயரே அந்தக் குழந்தைக்கு அப்பாவோ, அவருடைய மகனோ. இரண்டாம் பேரறியாம ஹோமுக்கு வந்துட்டது. பிரசவம்னா ஆசுபத்திரிக்குப் போகும். இங்கே குழந்தை அம்மா ரெண்டு பேரும் இருப்பாங்க. தாமரை குளத்து மீன் ருசியாத்தானிருக்கும். ஆனா தாமரைக் கொடி, சேறு இதை எல்லாம் சமாளிச்சாத்தான் மீன் பிடிக்கலாம்...” என்று அவளுக்குத் தெரியாத விவரங்களைக் கூறுகிறாள் அநுசுயா.

“தாமரைக் குளத்து மீன் ருசியாயிருக்குமா? தெரியாது எனக்கு!” என்று சிரிக்கிறாள் மைத்ரேயி.

“அப்டீன்னு எங்க தாத்தா சொல்லுவாரு. எனக்குக் கனாப்போல இருக்கு. தாமரைக் குளத்திலே வருசத்துக் கொருக்கா மீன் ஏலம் விடுவாங்க. எங்க தாத்தா வாங்கி யாருவார். அவரே குழம்பும் வைப்பார்...”

“உனக்கு வைக்கத் தெரியுமா?”

“மசாலை அரைச்சுக் குடுப்பேன். அப்பனை எனக்கு நினைவு தெரியுமுன்னே யாரோ கொலை செஞ்சிட்டாங்க. விவரமெல்லாம் நல்லாத் தெரியாது. நானா யூகிக்கிறேன் எங்கம்மா விவகாரமா இருக்கும்னு. அந்தாளு ஆறுவருசமோ என்னமோ ஜெயில்ல இருந்திட்டு வந்தப்ப, எங்கம்மா கடைக்குப் போயிட்டு வாரேன்னு கேவுரு முட்டையைத் தலையில் வச்சிட்டுக் கிழக்கால போனா வரவேயில்ல. நான் அழுதிட்டே இருந்ததும், தாத்தா என்னைக் கையிலே புடிச்சிட்டு ஊர் ஊராத் தேடிட்டு வந்ததும் நினைப்பிருக்கு. தாத்தாதான் என்னைப் பேட்டை அரிஜன இல்லத்தில் கொண்டாந்து சேர்த்தார். “கேடு கெட்டவன் கொலைகாரப் பயல், அவளை புடிச்சிட்டுப் போயிட்டான்னு திட்டினாரு. அப்ப எனக்குப் புரியல. பின்னால நானா நினைச்சுப் பாத்துப்பேன். தாத்தாவை நான் பிறகு பார்க்கலே. அவரும் உடனே இறந்து போயிட்டாரு. அங்கேந்து இங்கே மூணு வருஷத்துக்கு முன்னதான் வந்தேன்..” என்று தன் கதையைக் கூறி முடிக்கிறாள் அநுசுயா.

பெற்ற குழந்தையைக் கூடப் புறக்கணித்துவிட்டுப் போகும் அளவுக்கு ஒரு உடல் வேட்கையா?

கல்வியறிவும் மறுமலர்ச்சியும் இல்லாதவளின் வேட்கை அத்தகையதோ என்னமோ? சாதி, குடும்பமேன்மை, தார்மிக நெறிகள் எல்லாவற்றையுமே அந்த வேட்கை பலவீனமாக்கி விடும்போது எந்த மேன்மையும் இல்லாதவர்களிடத்தில் அது ஆட்சி செலுத்துவதில் என்ன வியப்பு?

“பிறகு நீ உங்க அம்மாளைப் பார்க்கவே இல்லையா அநுசுயா ?”

“ஊஹும். காந்தி இல்லத்து சாரதாம்மாதான் எனக்கு அநுசுயான்னு பேர் வச்சாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க. இப்ப கல்யாணம் கட்டிட்டு வடக்க எங்கியோ இருக்காங்க...”

“ஏன் அது, உசந்த சாதி, தாழ்ந்த சாதின்னு இருக்கறதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்று மைத்ரேயி தீவிரமாக ஒரு கேள்வியைக் கேட்கிறாள்.

“என்ன நினைக்கிறது? உசந்த சாதி உசந்த சாதிதான். அதனாலதான் நீ பூரிசுட இடத் தெரியாமலிருந்தும் சமையல் ரூமுக்குள்ள இருக்கே. நான் எல்லாம் தெரிஞ்சும் வெளிலே தான் நிக்க வேண்டி இருக்கு. இந்த அம்மா வீட்டிலதான் நான் உள்ளே வர்றேன். ஏன், நான் உள்ளே வந்து தொடுறது வெளியே இருக்கும் ஐயாவுக்குத் தெரியாது. கோகிலம்கூட ஒரு மாதிரிப் பேசுவா. எனக்கு ஒரு சந்தேகம், ராஜாவுக்குக் கூடக் பிடிக்காதுன்னு.”

கறுப்பாக, குட்டையாக, சற்றே மாறு கண்ணுடன், நெற்றியில் பச்சைக்குத்துப் பொட்டுடன் விளங்கும் அதுசுயா தான் தீண்டாத வகுப்பிற்பட்டவள் என்பதைக் கூறாமல் விளக்குகிறாள்.

லோகாவின் மீது மைத்ரேயிக்குப் பெருமதிப்பு உண்டாகிறது.

“உங்க சாதியில் எல்லாரும் நல்லாயிருக்கிறீங்க, உங்களுக்குப் படிப்பு வருது. நான் காந்தி இல்லத்து ஹைஸ்கூலில்தான் படிச்சேன். முதல் மார்க் வாங்குகிறது அநேகமா உங்களவங்க பிள்ளைங்கதான். எனக்கு எட்டாவதிலியே மூணுதரம் தவறிப் போச்சு. படிப்பை நிறுத்திட்டு கைவேலையிலே போட்டாங்க. பிறகு இங்கே வந்து சேர்ந்தேன்...”

“படிச்சிட்டாப் போதுமா அநு?”

“ஏன், எல்லாம் அநேகமாப் படிச்சி எப்படியோ பெரிய வேலைக்குத்தான் போறாங்க. எந்த ஐயரானும் மூட்டை தூக்கறாரா? எந்த ஐயரேனும் டவாலி போட்டுட்டுப் பியூன், இதுபோல வேலைக்குப் போறாங்களா. மதுரத்தம்மா புருஷனுக்கு அம்மா எதோ வேலை போட்டு வைக்கலான்னு சொன்னாங்க போலிருக்கு. ஒருநா நானிங்க இருக்கையிலே, நான் மேசைக்கு மேசை எச்சித்தட்டு தூக்கற பயல்னு நினைச்சியோ ஓட்டல்ல வேலைன்னா அப்பிடி இல்லே! சரக்கு மாஸ்டர்னா எச்சி கழுவும் வேலையில்லன்னு கத்தினாரு. அது உசந்த சாதின்னுவர பேச்சுத் தானே ?” என்று கேட்கிறாள் அது.

“சேச்சே, அவங்கல்லாம், உண்மையில் உசந்த சாதி இல்லே...”

“அப்படி நீ சொல்லலாம். எல்லாரும் சொல்லுறதில்லையே ?”

“படிப்பு வர்றதனால உசந்த சாதி இல்லே, படிப்பு வராததுனால தாழ்ந்த சாதியுமில்ல. இது விஷயமா ஆராய்ச்சி பண்ணணும்னு எனக்கு ஆசை. யார் யாருக்கு அநீதி பண்ணினாங்க, எப்ப, எதுக்கு எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ஆசை.”

“தெரிஞ்சிட்டு என்ன செய்யப் போறே?”

அவள் கேலியாகச் சிரிக்கிறாள். அந்தக் கேலி இமயமலை கல்லா மண்ணா என்று ஆராய்ச்சி செய்து எலிக்கு என்ன ஆக வேண்டும் என்று கேட்பதுபோல் இருக்கிறது.

உண்மையில் அந்தச் சாதியில் பிறந்திருப்பதனால் அதற்கு நேரும் அவமானம் முழுவதையும் தானே தாங்கிக் கொள்பவள்போல் ஏன் தோன்றுகிறது? சமுதாயத்தில் வழி வழியாக உயர் மதிப்பையே பெற்றிருக்கும் உரிமையைக் கொண்டு, அந்த உரிமைக்கான பொறுப்பை நழுவவிட்டதை மறந்த மாறுபட்ட வாழ்வில் எதிர்ப்புக்களையும் சுடு சொற்களையும் ஏற்க வேண்டியிருப்பதைப் பொறுக்க இயலாமல் அவள் துடிப்பானேன்? உண்மையில் சாதி என்பது எப்படி வந்தது? மேல் நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவர்களாகவே இருப்பதால் சாதிகள் கிடையாதாம். அப்படி சாதிப் பிரிவு என்ற ஒன்றில்லாமலிருந்தால் அக்காவும் மற்றவரும் அவள் தனராஜிடம் தன்னை இழக்கத் துணியும் வரை நிகழ்ந்திருக்குமோ? அப்படியே இருந்தாலும், அவர்கள் அவளை முதலிலேயே வீட்டைவிட்டுத் துரத்தும் அளவுக்கு வெகுண்டிருக்கமாட்டார்கள். அதற்குக் காரணம் அவன் வேறு சாதிக்காரன். அவள் தாழ்ந்த சாதியாக இருந்து அவன் உயர்ந்த சாதிக்காரனாக இருந்தால் நிராகரிப்பு அவனுடைய பக்கத்திலிருந்து வந்திருக்கும். ஜாதகப் பொருத்தம் குலம் கோத்திரம் எல்லாம் பார்த்துத்தான் இந்த லோகாவுக்கும் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். உண்மையில் மதுரத்தின் குடும்ப வாழ்வைவிட லோகாவின் வாழ்வு எந்த அளவில் மேம்பட்டது?

‘அந்தணன்’ என்று அவளால் அநுமானிக்க இயலாத ஒரு செல்வாக்குக்காரன் சொந்தமாக உள்ளே வந்து உணவு கொண்டு வீட்டின் முன்னறையில் தங்குகிறான். கட்டிய கணவன் உள்ளே வராமல் ஒரு போலி வாழ்வு நடத்துகிறான். இவளே தள்ளிவைத்தாலும் அவனுக்கு எதிர்க்கத் துணிவில்லை. ஏன்? இவ்விதம் பணியாட்களுக்கெல்லாம் தெரியத் தன்மானமின்றி வாழ்வதைக் காட்டிலும் வேறெந்த ஊரிலேனும் இருக்கலாமே?...

சாப்பாடு முடித்துப் பாத்திரங்களைக் கோகிலத்துக்குக் கொண்டு போடுகிறாள் மைத்ரேயி, பேச்சு சுவாரசியத்தில், லோகா மாடியிலிருந்து கீழிறங்கி வந்ததைக்கூட கவனித்திருக்கவில்லை அவள்.

திடுமென்று உள்ளே வரும் லோகா, “ரெண்டுபேரும் சுவாரசியமா அரட்டையடிக்கிறீங்க, டெலிபோன் மணி அடிச்சது கூடத் தெரியல. மைத்ரேயி, இன்னிக்குச் சாயங் காலம் உன்னை ஹோமில் கொண்டுவிடப் போறேன். தயாராக இரு!” என்று கூறிவிட்டுப் போகிறாள். மைத்ரேயி துணுக்குற்றாப்போல் நிற்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_7&oldid=1115343" இலிருந்து மீள்விக்கப்பட்டது