உள்ளடக்கத்துக்குச் செல்

லேவியர்

விக்கிமூலம் இலிருந்து

லேவியர்(The Book of Leviticus)

[தொகு]

முன்னுரை

திருவிவிலியத்தின் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் மூன்றாம் நூலாக அமைந்தது லேவியர் ஆகும். பழங்கால இஸ்ரயேலர்தம் கடவுளின் தூய தன்மையும் அவரை வழிபடுவதற்கான முறைகளும், அவற்றை நிறைவேற்றும் குருக்களுக்கான நெறிகளும் அவ்வினத்தார் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன.

'உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!' என்னும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் பெரிய கட்டளை இந்நூலின் (19:18) இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.


நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. காணிக்கைப் பலிகளுக்கான சட்டங்கள் 1:1 - 7:33 153 - 162
2. ஆரோன், அவர்தம் புதல்வர் ஆகியோரின்

திருநிலைப்பாட்டிற்கான நெறிமுறைகள்

8:1 - 10:20 162 - 166
3. குருக்களின் தூய்மையும் தீட்டும் பற்றிய

சட்டங்கள்

11:1 - 15:33 166 - 175
4. பாவக்கழுவாய் நாள் 16:1-34 175 - 177
5. தூய்மையான வாழ்விற்கும் வழிபாட்டிற்குமான

சட்டங்கள்

17:1 - 27:34 177 - 195

லேவியர்

[தொகு]

அதிகாரம் 1

[தொகு]

எரி பலிகள்

[தொகு]


1 ஆண்டவர் மோசேயை அழைத்துச் சந்திப்புக் கூடாரத்திலிருந்து அவரோடு பேசினார்.
2 இஸ்ரயேல் மக்களோடு நீ பேசி அவர்களுக்குச் சொல்ல வேண்டியது: உங்களில் ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சை செலுத்த வந்தால், மாட்டு மந்தையிலிருந்தோ ஆட்டு மந்தையிலிருந்தோ கால்நடையை ஒப்புக்கொடுப்பார்.
3 அவரது நேர்ச்சை எரிபலி எனில், மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட, பழுதற்ற ஒரு காளையை அவர் படைக்கவேண்டும். ஆண்டவர் திருமுன் ஏற்புடையதாகுமாறு, அதைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் அவர் படைக்கட்டும்.
4 அவர் எரிபலியின் தலைமேல் தம் கையை வைப்பார். அது அவருடைய பாவத்திற்கு கழுவாயாக ஏற்றுக்கொள்ளப்படும்.
5 அந்த இளம் காளையை அவர் ஆண்டவர் திருமுன் அடிப்பார். ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைக் கொண்டு வந்து, சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிப்பர்.
6 பின்பு, அவர் எரிபலியைத் தோலுரித்துப் பகுதி பகுதியாகத் துண்டிப்பார்.
7 ஆரோனின் புதல்வராகிய குருக்கள் பலிபீடத்தின்மேல் தழல் இட்டு அந்நெருப்பின்மேல் விறகுக் கட்டைகளை அடுக்குவர்.
8 ஆரோனின் புதல்வராகிய குருக்கள் துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் அடுக்கியிருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பர்.
9 அதன் குடலையும் கால்களையும் தண்ணீரில் கழுவி அவை எல்லாவற்றையும் குருக்கள் பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவர். நெருப்பாலான இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப்பலி ஆகும்.


10 எரிபலிக்கான அவரது நேர்ச்சை ஆட்டுமந்தையிலுள்ள செம்மறி அல்லது வெள்ளாடாக இருந்தால், அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக் கிடாயைக் கொண்டு வரவேண்டும்.
11 ஆண்டவர் திருமுன் பலிபீடத்தின் வடபுறத்தில் அதை அவர் கொல்ல வேண்டும். ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.
12 அவர் அதைப் பகுதிகளாகத் துண்டித்து, துண்டங்களோடு தலையையும் கொழுப்பையும் சேர்த்து வைப்பார். பின்பு, குரு அவற்றைப் பலிபீடத்திலுள்ள நெருப்பின்மேல் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கி வைப்பார்.
13 அதன் குடலும் பின்னந்தொடைகளும் தண்ணீரால் கழுவப்படும். அவை அனைத்தையும் பலிபீடத்தின்மேல் குரு எரியூட்டுவார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்பாலான எரிபலி ஆகும்.
14 அவர் ஆண்டவருக்குச் செலுத்தும் நேர்ச்சை பறவை எரிபலி எனில், காட்டுப் புறாக்களையாவது மாடப்புறாக்களையாவது நேர்ச்சையாகச் செலுத்த வேண்டும்.
15 அதைக் குரு பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து அதன் தலையைத் திருகி, பலிபீடத்தில் எரித்து விடுவார்; அதன் இரத்தத்தையோ பலிபீடத்தின் பக்கத்தில் சிந்த விடுவார்;
16 அதன் இரைப்பையையும் இறகுகளையும் அகற்றி, அவற்றைப் பலிபீடத்திற்கருகில் கிழக்குப்புறமாக சாம்பல் இடுகிற இடத்தில் எறிந்து விடுவார்;
17 அதன் இறக்கைகளைப் பிடித்து இரண்டாக்காமல் அதனைக் கிழிப்பார். அவ்வாறு கிழித்தபின் குரு அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரியூட்டுவார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்பாலான எரிபலி ஆகும்.

அதிகாரம் 2

[தொகு]

தானியப் படையல்கள்

[தொகு]


1 ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக உணவுப் படையல் செய்ய வந்தால், அவர் படையல் மெல்லிய மாவாய் இருக்கட்டும். அவர் அதன் மேல் எண்ணெய் வார்த்து சாம்பிராணிப் பொடி தூவி,
2 அதை ஆரோனின் புதல்வராகிய குருக்களிடம் கொண்டு வருவார். குரு அந்த எண்ணெய், சாம்பிராணி கலந்த அந்த மாவில் கை நிறைய எடுப்பார். நினைவுப் படையலாக அதைக் குரு பலிபீடத்தின் மேல் எரிப்பார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப் பலி ஆகும்.
3 உணவுப் படையலில் எஞ்சியது ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் உரியது. ஆண்டவருக்கான நெருப்புப் பலிகளில் அது மிகவும் தூயது.
4 நேர்ச்சையாக அடுப்பிலே சுட்ட உணவுப் படையலைச் செலுத்தினால், அது எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவில் செய்த புளிப்பற்ற அதிரசங்களும், எண்ணெயில் தோய்த்த அடைகளுமாய் இருக்கட்டும்.
5 உனது நேர்ச்சை தட்டையான சட்டியில் சுட்ட உணவுப் படையலாக இருந்தால், அது எண்ணெய் வார்த்த புளிப்பற்ற மெல்லிய மாவால் செய்யப்பட வேண்டும்.
6 அதைத் துண்டுகளாகப் பிட்டு அதன்மேல் எண்ணெய் விட வேண்டும்; அது ஓர் உணவுப் படையல்.
7 உனது நேர்ச்சை, சட்டியில் செய்யப்படுகிற உணவுப்படையல் எனில், அது மெல்லிய மாவால் எண்ணெயில் செய்யப்படவேண்டும்.
8 இம்முறையில் செய்யப்பட்டவற்றை ஆண்டவருக்கு உணவுப் படையலாகச் செலுத்துவாயாக. அது குருவிடம் வந்து சேரும்போது அவர் அதைப் பலிபீடத்துக்குக் கொண்டு போவார்.
9 குரு உணவுப் படையலிலிருந்து நினைவுப் படையலைத் தனித்தெடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிப்பார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப்பலி.
10 உணவுப்படையலில் எஞ்சியது ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் உரியது. ஆண்டவருக்கான நெருப்புப் பலிகளில் இது மிகவும் தூயது.


11 ஆண்டவருக்குச் செலுத்தும் உணவுப்படையல் எதுவும் புளிப்பேறியதாய்ச் செய்யப்படலாகாது. புளிக்காரம், தேன் எதையுமே ஆண்டவருக்கு நெருப்புப் பலியாக்க வேண்டாம்.
12 அவற்றை, முதற்பலன் படையலாக ஆண்டவருக்குச் செலுத்தலாம். ஆனால், இவை இனிய நறுமணமாகப் பலிபீடத்தில் எரிக்கப்படலாகாது.
13 நேர்ச்சையான எந்த உணவுப் படையலும் உப்பிடப்பட வேண்டும். உன் உணவுப் படையலில் கடவுளின் உடன்படிக்கையாகிய உப்பைக் குறையவிடாமல் உன் நேர்ச்சைகள் அனைத்தோடும் உப்பையும் படைப்பாயாக.
14 முதற்பலன்களின் உணவுப் படையலை ஆண்டவருக்கு செலுத்தினால், அறுவடையான கதிர்களை நெருப்பில் வாட்டி உதிர்த்து, உன் முதற்பலன்களின் உணவுப் படையலாகச் செலுத்த வேண்டும்.
15 அதன்மேல் எண்ணெய் ஊற்றிச் சாம்பிராணி போடவேண்டும். இதுவும் ஓர் உணவுப் படையலே.
16 உதிர்க்கப்பட்டவற்றிலும் எண்ணெயிலுமிருந்து நினைவுப் படையலுக்கான பகுதியை குரு எடுத்துச் சாம்பிராணியோடு எரித்து விடுவார். இது ஆண்டவருக்கான நெருப்புப்பலி.

அதிகாரம் 3

[தொகு]


1 ஒருவரது நேர்ச்சை நல்லுறவுப் பலியாய் இருந்தால், அது அவரது மாட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்தப்படும். காளையாகவோ பசுவாகவோ இருந்தால், அவர் பழுதற்ற ஒன்றை ஆண்டவருக்கு முன்பாகக் கொண்டு வருவார்.
2 நேர்ச்சையின் தலைமேல் அவர் தம் கையை வைத்துச் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் அதனைக் கொல்லவேண்டும். அப்போது ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.
3 நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப்பலியாகக் குடல்களைச் செலுத்த வேண்டியது: அவற்றைச் சுற்றிலுமுள்ள கொழுப்பு முழுவதும்
4 இரு சிறுநீரகங்களும் அவற்றின்மேல் சிறு குடல்களிடத்தில் இருக்கும் கொழுப்பும் சிறுநீரகங்களோடு கல்லீரலின் மேல் இருக்கிற கல்லும் ஆகும்.
5 ஆரோனின் புதல்வர் அதைப் பலிபீடத்தில் நெருப்பின் மீது உள்ள கட்டைகளில் ஏற்கெனவே வைத்திருக்கும் எரிபலியோடு எரிப்பர். அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி ஆகும்.


6 ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக நல்லுறவுப் பலியைத் தம் ஆட்டு மந்தையிலிருந்து செலுத்தினால், அது பழுதற்ற கிடாயாகவோ ஆடாகவோ இருக்கட்டும்.
7 ஒருவர் நேர்ச்சையாக ஆட்டைச் செலுத்தினால், அதை ஆண்டவர் திருமுன் கொண்டு வந்து,
8 நேர்ச்சையின் தலைமேல் அவர் தம் கையை வைத்து, சந்திப்புக் கூடாரத்தின் முன்பாக அதனைக் கொல்லவேண்டும். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிப்பர்.
9 நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப் பலியாகச் செலுத்துவது, அதன் கொழுப்பும், முதுகெலும்பின் அருகில் வெட்டியெடுத்த கொழுப்பு வாலும் குடல்களை மூடிய கொழுப்பும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதும்,
10 இரு சிறுநீரகங்களும், அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பும், சிறுநீரகங்களை அடுத்து கல்லீரலின்மேல் உள்ள சவ்வும் ஆகும்.
11 இவற்றைக் குருக்கள் பலிபீடத்தின்மேல் எரிப்பர். இது ஆண்டவருக்கு உகந்த நெருப்புப்பலி உணவாகும்.


12 நேர்ச்சையாக ஒருவர் வெள்ளாட்டுக் கிடாயைச் செலுத்தினால், அதை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து
13 அதன் தலைமேல் தம் கையை வைத்துச் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்வார். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.
14 நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப் பலியாகச் செலுத்த வேண்டியது; குடல்களை மூடிய கொழுப்பும் அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதும்,
15 இரு சிறுநீரகங்களும் அவற்றின் மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பும் சிறுநீரகங்களோடு கல்லீரல்மேல் இருக்கிற சவ்வும் ஆகும்.
16 குருக்கள் பலிபீடத்தின்மேல் அவற்றை எரிப்பர். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி உணவாகும்.
17 கொழுப்பையோ இரத்தத்தையோ நீங்கள் உண்ணலாகாது. இது உங்கள் உறைவிடம் எங்கும் தலைமுறைதோறும் உங்களுக்கு மாறாத நியமமாக விளங்கும்.

அதிகாரம் 4

[தொகு]

அறியாமல் செய்த பாவங்களுக்கான காணிக்கைகள்

[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 நீ இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்க வேண்டியது: ஒருவர் அறியாமையினால் ஆண்டவரின் கட்டளைகளில் ஒன்றையேனும் மீறிப் பாவம் செய்தால் அவர் செய்யவேண்டியது:


3 அருள்பொழிவு பெற்ற குரு பாவம் செய்து மக்கள்மீது குற்றப்பழி வந்தால், தான் செய்த பாவத்தை முன்னிட்டுப் பழுதற்ற ஓர் இளங்காளையைப் பாவம் போக்கும் பலியாக ஆண்டவருக்குச் செலுத்துவாராக.
4 சந்திப்புக் கூடார நுழைவாயிலில், ஆண்டவர் திருமுன் அதைக்கொண்டு வந்து, அதன் தலைமேல் தன் கையை வைத்து ஆண்டவர் திருமுன் அதைக் கொல்வார்.
5 அருள்பொழிவு பெற்ற குரு அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து அதைச் சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவந்து,
6 அந்த இரத்தத்தில் தன் விரலைத் தோய்த்துத் தூயகத்தின் தொங்கு திரைக்கு எதிரே ஆண்டவர் திருமுன் ஏழுமுறை தெளிப்பாராக.
7 குரு அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துச் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் நறுமணத்தூப பீடக்கொம்புகளில் பூசுவார். காளையின் எஞ்சிய இரத்தம் முழுவதையும் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி அடித்தளத்தில் ஊற்றுவார்.
8 பாவம் போக்கும் பலிக்காளையின் எல்லாக் கொழுப்பையும் குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பையும் அவற்றின் மேலுள்ள கொழுப்பு முழுவதையும் எடுப்பார்.
9 மேலும் இரு சிறுநீரகங்கள், அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பு, சிறுநீரகங்களை அடுத்துக் கல்லீரலின்மேல் உள்ள சவ்வு ஆகியவற்றை
10 நல்லுறவுப் பலிக் காளையிலிருந்து எடுப்பதுபோல எடுத்து, குரு அவற்றை எரிபலிபீடத்தின்மேல் எரிப்பார்.
11 காளையின் தோலையும் அதன் இறைச்சியையும் தலையையும் கால்களையும் குடல்களையும் சாணத்தையும்
12 காளை முழுவதையும் பாளையத்திற்கு வெளியே சாம்பல் கொட்டுகிற தூய்மையான இடத்தில் கொண்டுபோய் விறகுக்கட்டைகளிட்டு நெருப்பால் எரிக்க வேண்டும். சாம்பல் கொட்டும் இடத்தில் அனைத்தையும் சுட்டெரிக்க வேண்டும்.


13 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் அறியாமையினால் தவறிழைத்து, அது அவர்கள் கண்களுக்கு மறைவாய் இருந்தாலும், ஆண்டவரின் கட்டளைகளை மீறி, தகாதன செய்து குற்றத்திற்கு உள்ளானால்,
14 அவர்கள் செய்தது பாவம் எனத் தெரியவரும்போது, ஓர் இளங்காளையைச் சபையார் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகப் பாவம் போக்கும் பலியாகக் கொண்டு வர வேண்டும்.
15 மக்கள் கூட்டமைப்பின் பெரியோர் அனைவரும் ஆண்டவர் திருமுன் தம் கைகளைக் காளையின் தலைமேல் வைப்பார்கள். ஆண்டவர் திருமுன் அந்தக் காளை கொல்லப்படும்.
16 அருள்பொழிவு பெற்ற குரு அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவருவார்.
17 குரு அந்த இரத்தத்தில் தம் விரலைத் தோய்த்து ஆண்டவர் திருமுன் தொங்குதிரைக்கு முன்பாகத் தெளிப்பார்.
18 சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடக் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, எஞ்சிய இரத்தத்தை எல்லாம் சந்திப்புக்கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
19 காளையின் கொழுப்பு முழுவதையும் எடுத்துப் பலிபீடத்தில் எரிப்பார்.
20 பாவம் போக்கும் பலிக்காளைக்குச் செய்ததுபோல, இந்தக் காளைக்கும் செய்து, குரு அவர்களுக்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார். அப்பொழுது அவர்கள் மன்னிப்புப் பெறுவர்.
21 முன்னைய காளையை எரித்ததுபோல இதையும் பாளையத்திற்கு வெளியே கொண்டு போய்ச் சுட்டெரிப்பாராக. இது சபையாருக்கான பாவம்போக்கும் பலி.


22 தலைவன் ஒருவன் தன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளில் எதையாவது அறியாமையால் மீறிப் பாவம் செய்து குற்றத்திற்குள்ளானால்,
23 தான் செய்தது பாவமென்று அவனுக்குத் தெரியவரும்போது, வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு கிடாயைப் பலியாகக் கொண்டு வருவான்.
24 அந்த ஆட்டுக்கிடாயின் தலைமேல் அவன் தன் கையை வைத்து, எரிபலிப்பொருள் வெட்டப்படும் இடத்தில், ஆண்டவருக்குமுன் அந்தக் கிடாயைப் பலிகொடுப்பான்; இது பாவம் போக்கும் பலி.
25 குரு பாவம் போக்கும் பலிஇரத்தத்தில் சிறிது தம்விரலால் எடுத்து எலிபலிபீடக் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தை அப்பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
26 அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப்பலியின் கொழுப்புக்குச் செய்வதுபோல, பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவார். குரு அவனுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்; அவன் மன்னிப்புப் பெறுவான்.


27 பொதுமக்களின் ஒருவர் ஆண்டவரின் கட்டளைகளில் எதையாவது அறியாமையால் மீறிப் பாவம் செய்து குற்றத்திற்குள்ளானால்,
28 தாம் செய்தது பாவம் என்று அவருக்குத் தெரியவரும்போது, அவர் செய்த பாவத்தை முன்னிட்டு, பழுதற்ற ஒரு வெள்ளாட்டுப் பெண் குட்டியைப் பலியாகக் கொண்டு வருவார்.
29 பாவம் போக்கும் பலியின் தலைமேல் தம் கையை வைத்து, எரிபலியிடும் இடத்தில் அந்தப் பாவம் போக்கும் பலியாட்டை அடிப்பார்.
30 குரு அதன் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்து, எரிபலிபீடக் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தை அப்பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
31 அதன் கொழுப்பு முழவதையும் நல்லுறவு பலியிலுள்ள கொழுப்பைப் போன்று எடுத்துப் பலிபீடத்தின் மேல் ஆண்டவர் விரும்பும் நறுமணமாக குரு எரித்துப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார். அந்த மனிதரும் மன்னிப்புப் பெறுவார்.[*]


32 பாவக்கழுவாய் பலியாக அவர் ஓர் ஆட்டுக் குட்டியைக் கொண்டு வந்தால் அது பழுதற்ற பெண் ஆட்டுக் குட்டியாக இருக்கவேண்டும்.
33 அந்தப் பாவம்போக்கும் பலிப்பொருளின் தலைமீது தம் கையை வைத்து எரிபலியை அடிக்க வேண்டும். அதே இடத்தில், இப்பாவம் போக்கும் பலியையும் அடிக்க வேண்டும்.
34 குரு அந்தப் பாவம்போக்கும் பலியின் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்து எரிபலிபீடக் கொம்புகளின்மேல் பூசி, எஞ்சிய இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
35 அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப் பலிக்கிடாயின் கொழுப்பை எடுப்பது போன்று எடுத்து, எரிபலிபீடத்தின்மேல் ஆண்டவருக்கான நெருப்புப்பலி போல எரித்துவிடுவார். இவ்வாறாக அந்த மனிதர் செய்த பாவத்திற்குக் குரு பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்; அவரும் மன்னிப்புப் பெறுவார்.

குறிப்பு:

[தொகு]

[*] 4:27-31 = எண் 15:27-28.

அதிகாரம் 5

[தொகு]

பாவக் கழுவாய்க்கான காணிக்கைகள்

[தொகு]


1 ஒருவர் ஒரு காரியத்தைக் கண்டோ கேட்டோ அதற்குச் சாட்சியாளராய் இருந்தும், அதுபற்றிச் சான்று கூறப் பணிக்கும் பொதுக்கட்டளையைக் கேட்டும், அதை அறிவிக்காமல் இருந்து பாவத்திற்கு உட்பட்டால், அவரே இத்தீச்செயலுக்குப் பொறுப்பாவார்.


2 ஒருவர் தீட்டான எதையும் - செத்துத் தீட்டான காட்டு விலங்கையோ, செத்துத் தீட்டான கால்நடையையோ, செத்துத் தீட்டான ஊர்வனவற்றையோ - தெரியாமல் தொட்டுவிட்டாலும் அவர் தீட்டுப்பட்டவரே. அவர் குற்றவாளி ஆவார்.
3 மேலும் எத்தகைய தூய்மைக்கேட்டினாலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதரை ஒருவர் அறியாமலே தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டாலும் அவரும் குற்றவாளியே.
4 தீமை செய்வதற்கோ நன்மை செய்வதற்கோ, எக்காரியத்திலும் ஒருவர் சிந்திக்காமல் வாய்விட்டு ஆணையிட்டபின்னர், தாம் அறியாமல் பதற்றத்தில் ஆணையிட்டு விட்டதாக அவர் உணர்ந்தால், இக்காரியத்தினாலும் அவர் குற்றவாளியே.
5 மேற்குறிப்பிட்டவைகளில் அவர் தவறிழைத்தவராகக் காணப்படும்போது தாம் இழைத்த குற்றத்தை அறிக்கையிட்டு,
6 பாவம்போக்கும் பலிப்பொருளை ஆண்டவருக்குக் கொண்டுவரவேண்டும். ஆட்டு மந்தையிலிருந்து பிடித்த ஒரு பெண் ஆட்டையோ, செம்மறியாட்டுக் குட்டியையோ, வெள்ளாட்டுக் குட்டியையோ பாவம்போக்கும் பலியாகக் கொண்டுவர வேண்டும். அவருக்காகக் குரு அவரது பாவம் நீங்குவதற்குப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்.


7 அவர் தம் குற்றப்பழியை அகற்ற, ஆட்டுக்குட்டி கொண்டுவர இயலாதிருந்தால், இரு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து, ஒன்றைப் பாவம்போக்கும் பலியாகவும் மற்றொன்றை எரிபலியாகவும் ஆண்டவருக்குச் செலுத்த,
8 அவற்றைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். குரு முதலில் பாவம் போக்கும் பலிக்கு உரியதை எடுத்து அதன் கழுத்தைத் திருகித் தலையைத் துண்டிக்காமல் வைக்க வேண்டும்.
9 பாவம் போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து பலிபீட ஓரங்களைச் சுற்றிலும் தெளித்து எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் வடியவிடவேண்டும். இது பாவம் போக்கும் பலி.
10 இரண்டாவதை ஒழுங்குமுறைப்படி அவர் எரிபலிக்கெனச் செலுத்தவேண்டும். அவர் செய்த பாவம் நீங்கக் குரு பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்; அவரும் மன்னிப்புப் பெறுவார்.


11 இரண்டு காட்டுப் புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டு வர இயலாதிருந்தால் குற்றவாளி தாம் செய்த குற்றத்தினிமித்தம் தாம் படைக்கும் காணிக்கைக்கென இருபதுபடி[*] அளவு மிருதுவான மாவில் பத்தில் ஒருபங்கைக் கொண்டுவருவாராக. அதன் மேல் எண்ணெயோ சாம்பிராணியோ இடலாகாது. ஏனெனில் அது பாவம் போக்கும் பலி.
12 அது குருவிடம் கொண்டு வரப்படவேண்டும். குரு நினைவுப்பங்காக ஒரு கைப்பிடி நிறைய எடுத்து ஆண்டவரின் நெருப்புப்பலிகளோடு பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். இது பாவம் போக்கும் பலி.
13 இவ்வாறு, குரு இத்தகைய பாவங்களில் ஒன்றைச் செய்தவருக்காகப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவாராக. அப்போது அவர் மன்னிப்புப்பெறுவார். எஞ்சியது உணவுப் படையலைப்போல குருவைச் சேரும்.

பதிலாகச் செலுத்தவேண்டிய காணிக்கைகள்

[தொகு]


14 ஆண்டவா மோசேயிடம் கூறியது:
15 ஒருவர் ஆண்டவருக்கு அர்ப்பணித்தவற்றில் ஒழுங்கை மீறி அறியாமல் தவறிழைத்தால், அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குத் தம் குற்றப்பழி நீக்கும் பலியாகக் கொண்டு வருவாராக. அது திருத்தலச் செக்கேல் கணக்குக்கேற்ப நீ விதிக்குமளவு மதிப்புடையதாய் இருக்கவேண்டும்.
16 அர்ப்பணித்தவற்றில் தவறிழைத்தால், ஈட்டுத் தொகையோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக்கிக் கொடுக்கவேண்டும். அதைக் குருவிடமே கொடுக்க வேண்டும். குரு பாவக்கழுவாய் செய்து குற்றம் போக்கும் பலியான ஆட்டுக்கிடாயை அவருக்காகப் பலியிடவேண்டும். அப்போழுது அவர் மன்னிப்புப்பெறுவார்.


17 ஆண்டவரின் கட்டளைகளின்படி, செய்யக்கூடாதென்று விலக்கப்பட்ட ஒன்றை ஒருவர் செய்து பாவத்திற்கு உள்ளானால், அவர் அறியாமல் செய்தாலும்கூட, அவர் குற்றவாளியே. அத்தீச்செயலுக்கு அவரே பொறுப்பாவார்.
18 அவர் நீ விதிக்கும் மதிப்பிற்கு ஏற்ப, பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆட்டு மந்தையிலிருந்து பிடித்து அதைக் குற்றப்பழி நீக்கும் பலியாகக் குருவிடம் கொண்டு வருவார். அவர் அறியாமல் செய்த பிழைக்காகக் குரு அவருக்கெனக் கறைநீக்கம் செய்வார். அது அவருக்கு மன்னிக்கப்படும்.
19 அது குற்றப்பழி நீக்கும் பலி. அவர் ஆண்டவருக்கு எதிராகவே குற்றம் செய்துள்ளார்.

குறிப்பு:

[தொகு]

[*] 5:11 'ஓர் ஏப்பா' என்பது எபிரேய பாடம்.

அதிகாரம் 6

[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
2 தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த அல்லது பணையமாய் வைக்கப்பட்டிருந்த பொருளை ஒருவர் தம் இனத்தாரிடமிருந்து ஏமாற்றி எடுத்துக் கொண்டோ, அவரிடமிருந்து ஒரு பொருளைத் திருடிக்கொண்டோ, தம் இனத்தாரை ஒடுக்கிப் பறித்துக் கொண்டோ,
3 காணாமற்போனதைக் கண்டெடுத்தும் அதை மறுத்துப் பொய்யாணையிட்டோ - இவற்றைப் போன்ற பாவத்திற்கு உட்பட்டு, ஆண்டவருக்குத் துரோகம் செய்தால்,
4 அவர் பாவத்திற்கு உட்பட்டு, குற்றப்பழி உடையவராய் இருப்பார். அவர் தாம் திருடிக்கொண்டதையோ, ஒடுக்கிப் பறித்துக்கொண்டதையோ தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த பொருளையோ காணாமற்போய்த் தாம் கண்டெடுத்ததையோ
5 பொய் ஆணையிட்டுப் பெற்றுக்கொண்டதையோ - இவை அனைத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். அந்த முதலை முழுமையாகக் கொடுப்பதோடு, அதன் ஐந்தில் ஒருபங்கைசச் சேர்த்துக் குற்றப்பழி நீக்கும் பலிநாளில் உரியவருக்குக் கொடுக்க வேண்டும்.
6 குற்றப்பழி நீக்கும் பலியாக நீ விதிக்கும் மதிப்பிற்குச் சரியாகப் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குச் செலுத்தும்படி குற்றப்பழி நீக்கும் பலியாக குருவிடம் செலுத்தவேண்டும்.
7 அப்பொழுது குரு ஆண்டவருக்கு முன்பாகக் கறை நீக்கம் செய்வார்; இவற்றுள் எதையேனும் செய்து குற்றத்திற்கு உள்ளானால், அது மன்னிக்கப்பெறும்.[1]

எரிபலிகள்

[தொகு]


8 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
9 ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது: எரிபலி பற்றிய சட்டம் இதுவே: இரவு முழுவதும் காலைவரையும் பலிபீடத்தின் நெருப்பின் மேல் எரிபலி இருக்க வேண்டும். பலிபீடத்தின்மேல் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.
10 குரு தன் நார்ப்பட்டு அங்கியை அணிந்து தன் நார்ப்பட்டு உள்ளாடையை இடுப்பில் கட்டிக்கொள்ளவேண்டும்; பலிபீடத்தின்மேல் நெருப்பில் எரித்த எரிபலியின் சாம்பலை எடுத்துப் பலிபீடத்திற்கருகே கொட்டவேண்டும்;
11 பின்னர் தன் உடைகளை மாற்றி வேறு ஆடைகள் அணிந்துகொண்டு அந்தச் சாம்பலைப் பாளையத்திற்கு வெளியே தூய்மையான இடத்தில் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்.
12 பலிபீடத்தின்மேல் இருக்கிற நெருப்போ அணையாமல் எரிந்து கொண்டே இருக்கவேண்டும். காலைதோறும் குரு அதன்மேல் எரியும்படி கட்டைகளை வைத்து, அதன்மேல் எரிபலியை அடுக்கி அவற்றின் மீது நல்லுறவுப் பலிகளின் கொழுப்பை இட்டு எரிக்கவேண்டும்;
13 பலிபீடத்தின்மேல் நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அது ஒருபோதும் அணைந்துவிடலாகாது.

தானியப் படையல்கள்

[தொகு]


14 உணவுப் படையல் பற்றிய சட்டம் இதுவே: ஆண்டவரின் திருமுன் அதைப் பலிபீடத்திற்கெதிரே ஆரோனின் புதல்வர் படைக்க வேண்டும்.
15 அவர்கள் உணவுப் படையலின் மிருதுவான மாவிலும் அதன் எண்ணெயிலும் உணவுப் படையலின் மீதுள்ள எல்லாச் சாம்பிராணியிலும் ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, அதை நினைவுப் படையலாகப் பலிபீடத்தின்மேல் எரிப்பர். அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நினைவுப்பலியாகும்.
16 எஞ்சியதை ஆரோனும் அவன் புதல்வரும் உண்பர். அதைப் புளிப்பற்றதாகப் புனிதத் தலத்தில் உண்பர். சந்திப்புக் கூடாரத்தின் முற்றத்தில் அதை உண்பர்.
17 அதைப் புளிப்பேற்றிச் சுடவேண்டாம். எனக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் அதை நான் அவர்கள் பங்காகக் கொடுத்துள்ளேன். அது பாவம் போக்கும் பலிபோலவும் குற்றப்பழி நீக்கும் பலிபோலவும் மிகத் தூயது.


18 ஆரோனின் பிள்ளைகளில் ஆண்கள் மட்டுமே அதை உண்ணவேண்டும். இது தலைமுறைதோறும் உங்களுக்கு மாறாத நியமமாய் விளங்கும். ஆண்டவருக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் எதையும் தொடுகிறவன் தூயவனாய் இருப்பான்.
19 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
20 ஆரோனும் அவன் புதல்வரும் அருள்பொழிவு பெறுகின்ற நாளில் அவனும் அவன் புதல்வரும் ஆண்டவருக்குக் கொண்டுவர வேண்டிய படையல் இதுவே. இருபது படி[2] அளவான மிருதுவான மாவில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக் காலையில் பாதியும், மாலையில் பாதியுமாக எந்நாளும் உணவுப் படையலாக அளிக்க வேண்டும்.
21 தட்டையான சட்டியில் எண்ணெய் விட்டு அதைச் சுடவேண்டும். சுட்ட பின்னர் அதை எடுத்துப் பத்துத் துண்டுகளாக்கி ஆண்டவருக்கே உகந்த நறுமணமிக்க உணவுப் படையலாக அளிக்க வேண்டும்.
22 அவன் புதல்வரில் அவனுக்குப்பின் அருள்பொழிவு பெறும் குரு என்றென்றும் மாறாத நியமமாக இதைப்படைக்க வேண்டும். இது ஆண்டவருக்காக முழுவதும் எரிக்கப்படும்.
23 குருவின் எந்த உணவுப்படையலும் முழுவதும் எரிக்கப்படவேண்டும். அதை உண்ணலாகாது.

குற்ற நீக்கக் காணிக்கைகள்

[தொகு]


24 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
25 நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்ல வேண்டியது: பாவம் போக்கும் பலி பற்றிய சட்டம் இதுவே: எரிபலிக்குரியதும் பாவம் போக்கும் பலிக்குரியதும் பலியாக்கப்படுகிற இடத்திலேயே ஆண்டவர் திருமுன் அடிக்கப்படவேண்டும். அது மிகத் தூயது.
26 பாவம் போக்குவதற்கென அதைப் படைக்கும் குரு அதை உண்பார். சந்திப்புக் கூடாரத்தின் முற்றமாகிய தூய தளத்தில் அது உண்ணப்படவேண்டும்.
27 அந்த இறைச்சியில்படுகிற எதுவும் தூய்மையானதே. அதன் இரத்தம் ஒரு துணியில் தெறித்தால், இரத்தம் தெறித்த துணியைத் தூய தளத்தில் துவைக்கவேண்டும்.
28 அதை வேகவைத்த மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும். வெண்கலப் பானையில் வேகவைத்தால் அதைத் தேய்த்துத் தண்ணீரால் நன்கு கழுவவேண்டும்.
29 குருக்களில் ஆண் மக்கள் யாவரும் அதை உண்ணலாம். அது மிகத் தூயது.
30 கறைநீக்கம் செய்யும்படி சந்திப்புக் கூடாரத்திற்குள் தூயகத்திற்குக் கொண்டு வரப்பட்ட இரத்தத்திற்குரிய பாவம் போக்கும் பலி உண்ணப்படலாகாது; நெருப்பில் எரிக்கப்படவேண்டும்.

குறிப்புகள்:

[தொகு]


[1] 6:1-7 = எண் 5:5-8.
[2] 6:20 = 'ஓர் ஏப்பா' என்பது எபிரேய பாடம்.

அதிகாரம் 7

[தொகு]


1 குற்றப்பழி நீக்கும் பலிபற்றிய கட்டளை இதுவே; அது மிகத்தூயது.
2 எரிபலி அடிக்கப்படும் இடத்திலேயே குற்றப்பழி நீக்கும் பலியும் அடிக்கப்படவேண்டும். அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கவேண்டும்.
3 அதன் கொழுப்பு முழுவதையும், அதன் கொழுப்பு வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும்,
4 இரு சிறுநீரகங்களையும் அவற்றின்மேல் குடல்களோடு சேர்ந்திருக்கிற கொழுப்பையும் சிறுநீரகங்களோடு கல்லீரலின் மேல் இருக்கிற சவ்வையும் எடுத்து,
5 இவற்றைக் குரு பலிபீடத்தின்மேல் ஆண்டவருக்கு நெருப்புப்பலி ஆக்கவேண்டும். அது குற்றப்பழி நீக்கும் பலி.
6 குருக்களில் ஆண்மக்கள் யாவரும் அதை உண்பர். அதைத் தூய தலத்தில் உண்ண வேண்டும். அது மிகத் தூயது.


7 பாவம் போக்கும் பலியைப் போன்றதே குற்றப்பழி நீக்கும் பலியும். அவற்றிற்குரிய சட்டம் ஒன்றே. அது கறை நீக்கம் செய்யும் குருவுக்கே உரியது.
8 ஒருவர் செலுத்தும் எரிபலியின் தோல் அப்பலியைச் செலுத்தும் குருவுக்கே உரியது.
9 அடுப்பில் சுட்டதும், பொரிக்கும் சட்டியிலும் தட்டையான சட்டியிலும் தயாரித்ததுமான உணவுப் படையல் அனைத்தும் அதைச் செலுத்துகிற குருவுக்கே உரியவை.
10 எண்ணெயில் பிசைந்ததும் பிசையாததுமான உணவுப்படையல் அனைத்தும் ஆரோனின் புதல்வர் யாவருக்கும் சரிபங்காகச் சேரும்.

நல்லுறவுக் காணிக்கைகள்

[தொகு]


11 ஆண்டவருக்கு ஒருவர் செலுத்தும் நல்லுறவுப் பலிபற்றிய சட்டம் இதுவே:
12 அவர் அதை நன்றிக் கடனாகச் செலுத்தினால் எண்ணெயில் தோய்த்த நெய்யப்பங்கள், எண்ணெய் பூசிய புளிப்பற்ற அடைகள், மெல்லிய மாவினால் எண்ணெயில் நன்கு பிசைந்து செய்த நெய்யப்பங்கள் ஆகியவற்றை நன்றிப் பலியோடு கொண்டுவர வேண்டும்.
13 புளித்த மாவினால் செய்த நெய்யப்பங்களை நன்றிக்கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியைத் தமது நேர்ச்சையாக அவர் கொண்டுவருவார்.
14 ஒவ்வொரு காணிக்கையிலும் ஒன்றை எடுத்து, ஆண்டவருக்குரிய பங்காகப் படைக்க வேண்டும். இப்பொருள்கள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தைத் தெளிக்கும் குருவுக்கே உரியவை.
15 நன்றிக் கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியின் இறைச்சி படைக்கப்படும் நாளில் உண்ணப்படவேண்டும். விடியுமட்டும் அதில் எதையும் மீதி வைக்கலாகாது.


16 அவர் செலுத்தும் நேர்ச்சைப் பலி ஒரு பொருத்தனையாகவோ தன்னார்வப்பலியாகவோ இருந்தால், அதைப் படைக்கும் நாளிலும் எஞ்சியதை மறுநாளிலும் உண்ணலாம்.
17 பலி இறைச்சியில் எஞ்சியிருப்பதெல்லாம் மூன்றாம் நாளில் நெருப்பால் எரிக்கப்பட வேண்டும்.
18 நல்லுறவுப்பலி இறைச்சியில் எஞ்சியதை மூன்றாம் நாளில் உண்பது உகந்தன்று. அதைச் செலுத்தினவருக்கும் அது பயன் அளிக்காது. அது அருவருப்பானது. அதை உண்பவர் தம் குற்றபழியைச் சுமப்பார்.
19 தீட்டான எந்தப் பொருளிலாவது அந்த இறைச்சி பட நேர்ந்தால் அதை உண்ணலாகாது. அதை நெருப்பில் எரிக்க வேண்டும். மற்ற இறைச்சியையோ தூய்மையாய் இருக்கிறவர் எவரும் உண்ணலாம்.
20 தீட்டுப்பட்ட ஒருவர் ஆண்டவரின் நல்லுறவுப் பலியின் இறைச்சியை உண்பாராகில், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.
21 தீட்டான எதையும் தீட்டுப்பட்ட மனிதரையோ கால்நடையையோ, தீட்டான ஊர்வனவற்றையோ ஒருவர் தீண்டியவராக இருந்து ஆண்டவருக்குப் படைக்கும் நல்லுறவுப்பலி இறைச்சியை உண்டால், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.


22 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
23 நீ இஸ்ரயேல் மக்களிடம், "மாடு, ஆடு, வெள்ளாடு இவற்றின் கொழுப்பை நீங்கள் உண்ணலாகாது.
24 தானாய்ச் செத்ததின் கொழுப்பையும், பீறுண்டதின் கொழுப்பையும் வேறு செயல்களுக்குப் பயன்படுத்தலாமேயன்றி நீங்கள் அதை ஒருபோதும் உண்ணலாகாது.
25 ஏனெனில், ஆண்டவருக்கு நெருப்புப்பலியாகப் படைக்கும் கால்நடையின் கொழுப்பை உண்கிற எவரும் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.
26 உங்கள் குடியிருப்புகள் எங்கும், பறவையின் இரத்தத்தையோ கால்நடைகளின் இரத்தத்தையோ, வேறு எந்த இரத்தத்தையுமோ உண்ணலாகாது.
27 இரத்தத்தை உண்ணும் எவரும் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்" என்று சொல். [*]


28 ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
29 நீ இஸ்ரயேல் மக்களிடம், "ஆண்டவருக்கு நல்லுறவுப் பலி செலுத்துபவர், தாம் செலுத்தும் நல்லுறவுப் பலியிலிருந்து ஆண்டவருக்குரிய நேர்ச்சையைக் கொண்டுவர வேண்டும்.
30 ஆண்டவருக்குரிய நெருப்புப் பலியை அவரே கொண்டு வரவேண்டும். நெஞ்சுக் கறியையும் அதனோடு அதன் மேலுள்ள கொழுப்பையும் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாகக் கொண்டு வர வேண்டும்.
31 குரு அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தில் எரிப்பார். நெஞ்சுக் கறியோ ஆரோனுக்கும் அவன் புதல்வர்க்கும் உரியதாகும்.
32 நல்லுறவுப் பலிகளில் வலது பின்னந்தொடையைக் குருவிடம் பங்காகக் கொடுக்க வேண்டும்.
33 ஆரோனின் புதல்வருள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தையும், கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு வலது பின்னந்தொடை பங்காகச் சேரும்.
34 நல்லுறவுப் பலிகளில் ஆரத்திப் பலியாகிய நெஞ்சுக் கறியையும் பங்காகிய பின்னந்தொடையையும் நான் இஸ்ரயேல் மக்களிடமிருந்து எடுத்து குருவாகிய ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுத்துள்ளேன். இது இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெறும் நிலையான பங்காகும்" என்று சொல்.
35 ஆரோனும் அவன் புதல்வரும் ஆண்டவர்க்குரிய குருக்களாகும்படி அழைத்து வரப்பட்ட நாளிலிருந்து இது ஆண்டவரின் நெருப்புப் பலியிலிருந்து அவர்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட பங்காகும்.
36 ஆண்டவர் அவர்களுக்கு அருள்பொழிவு செய்த நாளில், அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு மாறாத பங்காகக் கொடுக்கக் கட்டளையிட்டார்.


37 எரிபலி, உணவுப் படையல், பாவம் போக்கும் பலி, குற்றப்பழி நீக்கும் பலி, திருநிலைப்படுத்தும் பலி, நல்லுறவுப் பலி ஆகிய பலிகளைப்பற்றிய சட்டம் இதுவே.
38 தமக்குச் செலுத்த வேண்டிய நேர்ச்சைகளைப் பற்றி ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்குச் சீனாய்ப் பாலைநிலத்தில் கட்டளையிட்ட நாளில் மோசேக்கு அவர் சீனாய் மலையில் இட்ட கட்டளைகள் இவையே.

குறிப்பு:

[தொகு]

[*] 7:26-27 தொநூ 9:4; லேவி 17:10 14; 19:26; இச 12:16,23; 15:23.

"https://ta.wikisource.org/w/index.php?title=லேவியர்&oldid=7770" இலிருந்து மீள்விக்கப்பட்டது