வஞ்சிமாநகரம்/13. ஒற்றன் ஒருவன்
ஒசைப்படாமல் குமரன் தன் பின்னே அழைத்து வந்த ஐம்பது சேர நாட்டு வீரர்களும் புதர்களிலிருந்து அந்தப் படகை வியூகமாக வளைத்ததுபோல் பல்வேறு திசைகளிலிருந்து வெளிப்பட்டனர். திடீரென்று இப்படி ஒரு நிலைமையை எதிர்பாராத கடம்பர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. உருவிய வாள்களோடு கரையில் குதித்தனர். முதலில் குமரன் மேல் பாய்ந்து அவனைக் குத்திக் கொல்வது அவர்கள் முயற்சியாய் இருந்தது. சேர வீரர்களில் பலர் வில்லும் அம்பும்கூட வைத்திருந்ததனால் புதர்களில் பல்வேறு கோணங்களிலிருந்து கடம்பர்கள் மேல் அம்புமழை பொழியலாயிற்று. அந்த அம்பு மழையினிடையேயிருந்து தப்பிக் குமரனைக் கொல்ல அவர்களால் முடியவில்லை.
அதற்கு நேர்மாறாகக் குமரனோடு படகில் வந்த முரட்டுக் கடம்பர்களில் மூவர் இறந்து போயினர். இருவர் கொடுங்கோளுர் வீரர்களிடம் சிறைப்பட்டார்கள். அவர்கள் வந்த படகு சேர நாட்டு வீரர்களால் கைப்பற்றப்பட்டது. இறந்தவர்களின் சடலங்களை அந்தப் படகில் போட்டுக் கரையோரமாக அதைக் கொண்டுபோய் மிதக்க விட்டுவிடுமாறு தன்ஆட்களுக்குக் கட்டளையிட்டான் குமரன்நம்பி அப்படியே செய்யப்பட்டது. உடனே மகோதைக்கரை நகரங்களுக்குக் கடல் வழியே சிறு மரக்கலங்களிலோ, படகுகளிலோ உள் நுழையும் மூன்றே வழிகளான ஆயிரை, பொன்வானி, பேரியாறு ஆகியவற்றின் வழிகளை வில் அம்புகளோடு கூடிய வீரர்கள் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடம்பர்களின் ஒரே பலம் கடல்தான். மரக் கலங்களில் இருந்தபடியே போர் புரியவோ, கடற்கொள்ளைகள் செய்யவோ, அவர்களுக்குத் தெரிந்த அளவு தரையில் எதிர்ப்பவர்களை முறையாக எதிர்கொண்டு போர் செய்ய அவர்களுக்குத் தெரியாது. அவர்களுடைய ஒரே பலம் கடலும் மரக்கலங்களும்தான். தரை என்பது அவர்களுடைய பலவீனமான களம் என்பதைக் குமரன் நம்பி மிக நன்கு அறிந்திருந்தான்.
சிறைப்பிடிக்கப்பட்ட இரண்டு கடம்பர்களைக் கொடுங்கோளுர் கோட்டையின் உள்ளே பத்திரமான அறை ஒன்றில் அடைத்தபோது, ‘உள்ளே செல்லச் செல்ல நிலைமைகளை நீங்கள் இன்னும் நன்றாக அறியலாம்’ என்று முன்பு அவர்களிடம் கூறியிருந்த ஒரு வாக்கியத்தையே வேறு அர்த்தம் தொனிக்கும் படி இப்போது திரும்பவும் கூறிவிட்டு ஏளனமாக நகைத்தான் குமரன் நம்பி.
கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்தில் அமைச்சர் அழும்பில்வேளால் அனுப்பப்பட்டுத் தங்கியிருந்த வலியனும் பூழியனும் குமரன் நம்பியை அவன் மிகவும் சாமர்த்தியமாகக் கடம்பர்களிடமிருந்து தப்பிவந்ததற்காகப் பாராட்டினார்கள். அந்த விவரங்களை உடனே ஒரு வீரன் மூலமாகத் தலை நகரிலுள்ள வேளாவிக்கோ மாளிகைக்குச் சொல்லி அனுப்பினார்கள். அதன் பின்பும் அவர்கள் இருவரும் குமரன் நம்பியிடம் பேசும்போதெல்லாம் ஒரு செய்தியை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அதை ஏன் அவர்கள் அவ்வளவு தூரம் தன்னிடம் வற்புறுத்துகிறார்கள் என்பதைக் குமரன் நம்பியாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. தற்செயலாக வற்புறுத்துகிறார்களா? அல்லது ஏதாவதொரு அர்த்தத்தோடு எதையாவது புரிந்துகொண்டு வற்புறுத்துகிறார்களா என்பதை அவனால் விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது.
“படைத்தலைவர் கடம்பர்களின் கொள்ளை மரக்கலத்திலிருந்து அவர்கள் துணையுடனேயே தப்பி வந்தது சாமர்த்தியமான காரியம்தான் என்றாலும் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்கிறவரை நாம் பெருமைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை- என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்”- என்று அமைச்சர் அழும்பில்வேளின் ஆட்களாகிய அவர்கள் தன்னிடம் அடிக்கடி கூறி வந்ததன் பின்புலத்தில் என்ன சிந்தனை மூலமாக இருக்கிறதென்பதை அறிய முயன்றான் குமரன் நம்பி.
ஆனால் அதே சமயத்தில் அவர்கள் அப்படி அடிக்கொரு முறை இரத்தின வணிகர் மகளும் தன் ஆருயிர்க் காதலியும் ஆகிய அமுதவல்லியை நினைவூட்டிக் கொண்டிருந்ததில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சியும் இருந்தது. கடம்பர்களை எப்படியும் முறியடித்து அவளை மீட்கவேண்டுமென்ற ஆவலும் துணிவும் உறுதிப்பட அவர்களுடைய வார்த்தைகள் துணைசெய்கின்றன என்ற முறையில் அவற்றை அவன் விரும்பினான், வரவேற்றான்.
அடுத்து அவனுடைய சிந்தனை ஆந்தைக்கண்ணனிடம் சிறைப்பட்டிருக்கும் மற்றவர்களை எப்படி விடுவிப்பது என்பதில் சென்றது. தன்னிடம் சிக்கியிருக்கும் கடம்பர்கள் இருவரைக் கொண்டு அவர்களிடம் சிக்கியிருக்கும் கொடுங்கோளுர் வீரர்கள் இருவரையும் எப்படி மீட்பது என்று சூழ்ச்சிகளை ஒவ்வொன்றாகச் சிந்திக்கலானான் குமரன் நம்பி. ஏற்கெனவே கடம்பர்களிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளுர் வீரர்கள் தான் திரும்பி வரும்போது தன்னுடைய சூழ்ச்சி நோக்கத்தை விளங்கிக் கொள்ளாமல் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தான் உயிர்தப்புவதற்கு ஆசைப்பட்டுக் கொண்டு கடம்பர்களுக்குக் கொடுங்கோளுரைக் காட்டிக் கொடுப்பதற்காகப் புறப்பட்டு விட்டதாக அவர்கள் நினைத்து விட்டது அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது.
அவர்கள் அனைவரையும் சாமர்த்தியமாகக் கடம்பர்களிடமிருந்து மீட்கிறவரை எதுவுமே மேலே செய்வதற்கு இல்லை என்பதையும் குமரன் தம்பி உணர்ந்தான். அந்த வீரர்களை மீட்பதற்குமுன் முற்றுகை இட்டிருக்கும் கடம்பர் மரக் கலங்களைத் தாக்கவும் முடியாது. அல்லது கடம்பர்களே கொடுங்கோளுரை நெருங்கினாலும்கூட அவர்களிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளுர் வீரர்கள் தப்பிவிட முடியாது. நகருக்குள் கரையை நெருங்கி வந்துவிட்டால் இங்குள்ள நிலைமையையும் நான் தப்பிவிட்டேன் என்பதையும் ஆந்தைக் கண்ணன் அறிய நேரிடும். அதை அவன் அறிய நேர்ந்ததும் அவனுக்கு ஏற்படுகிற முதற் கடுங்கோபத்துக்குப் பலியாகிறவர்கள் அவனிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங் கோளுர் வீரர்களாகத்தான் இருப்பார்கள் என்பது நிச்சயம். அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு முன் கொடுங்கோளூர் வீரர்களை அங்கிருந்து காப்பாற்றிவிடவேண்டும் என்பதில் குமரன் நம்பி அதிகக் கவனமாயிருந்தான். அதற்காகவும் அவன் ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டியிருந்தது.
தன்னிடம் சிறைப்பட்டிருக்கிற கடம்பர்களில் ஒருவனிடமிருந்து ஆந்தைக்கண்ணனுக்கு அவன் தானாகவே எழுதுவது போல் ஒர் ஒலை எழுதிவாங்க வேண்டியிருந்தது. அந்த ஒலையில் “வழிகளைக் காட்டுவதற்காகச் சேர நாட்டு வீரர்களின் துணையோடு-மூன்று படகுகளில் நம் கடம்பர்களையும் சேர்த்து இன்றிரவு பொன்வானி முகத்துவாரத்தின் வழியே நகருக்குள் அனுப்பவும். இங்கு யாவும் நமக்கு உறுதியான நன்னிலையிலுள்ளன. இந்த ஒலையைக் கொண்டு வருபவன் ஒரு செவிட்டு ஊமை, குமரன் நம்பி நமக்கு மிகவும் துணையாயிருக்கிறார். இந்த ஒலையைக் கொண்டு வருபவன் மேலும் என்மேலும் தாங்கள் சந்தேகப்படாமலிருப்பதற்காக - இதை நாங்கள் இங்கு வந்த அதே படகில் அனுப்புகிறேன் - என்று எழுதி ஆந்தைக்கண்ணனுக்கு ஓர் ஊமையிடமோ அல்லது ஊமைபோல் நடிக்க முடிந்தவனிடமோ கொடுத்து, அன்று கடம்பர்களின் பிணங்களோடு கடற்கரையில் மிதக்கவிட்ட படகில் பிணங்களை நீக்கிவிட்டு அவனை அனுப்புவதென்று திட்டமிட்டான் குமரன் நம்பி.
இந்தத் திட்டம் நிறைவேறுவது அவன் கையில் மட்டுமில்லை. எழுதுகிற ஒலையில் சிறையிலிருக்கும் கடம்பர்களில் யாராவது ஒருவனுடைய கைச்சாத்துக் கிடைக்க வேண்டும். இல்லா விட்டால் ஆந்தைக்கண்ணன் அதை நம்புவது அரிதென்பது குமரனுக்குத் தெரியும். ஒற்று வேலைகளில் - போர்க் காலங்களில் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துக்குப் பயன்படுவதற்காக ஊமைகள் போலவும் செவிடர்கள் போலவும் நடித்துப் பகைவரை ஏமாற்றி இரகசியங்களை அறிந்து வருவதற்குச் சிலர் இருந்தனர். அவர்களில் ஒருவருடைய உதவியை இப்போது நாடுவது என்று குமரன்நம்பி முடிவு செய்து கொண்டான்.
கடம்பர்களிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளூர் வீரர்களை மீட்பதோடு - அந்த வீரர்களோடு கடம்பர்களில் பலரையும் பொன்வானி முகத்துவாரத்துக்கு வரவழைத்துக் கொன்றுவிட்டால், ஆந்தைக்கண்ணனின் முற்றுகை பேரளவில் வலிமை குன்றியதாகப் போய்விடும். தன்வசமுள்ள வீரர்களின் வலிமை குறையக் குறைய ஆந்தைக்கண்ணனின் முற்றுகை தோல்வியை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. அல்லது அவன் தன்னுடைய கொள்ளை மரக்கலங்களோடு மேலும் சில நாட்கள் தாமதித்தால் கூட நல்லதுதான் என்றெண்ணினான் குமரன் நம்பி. முற்றுகை நீடிக்க நீடிக்கக் குயிலாலுவத்திற்குச் சென்றிருக்கும் பெரும்படையோடு பெருமன்னர் திரும்பி வருகிற சமயமும் நெருங்கிவிடலாம். படைகளின் வரவோடு மன்னரும் திரும்பிவிட்டால் பின்பு ஆந்தைக்கண்ணனை ஓட ஓட விரட்டலாம்.
ஆனாலும் அந்த வழியைவிட முதலில் சிந்தித்த வழியே நல்லது என்றெண்ணினான் அவன். ஒலை எழுதப்பட்டது. கடம்பர்களில் சிறைப்பட்டிருந்த இருவரும் அந்த ஒலையிற் கைச்சாத்திட மறுத்தனர். நீண்ட நேரம் சித்திரவதை செய்து வதைத்தபின் ஒருவன் கைச்சாத்திட இனங்கினான். அதற்குப் பின் மற்றொருவனையும் எவ்வளவோ கொடுமைப் படுத்தி வற்புறுத்தியும் பயனில்லாமல் போயிற்று. அதற்கப்புறம் படைக் கோட்டத்து ஒற்றர்களில் தன்னந்தனியே செவிட்டூமைப்போல நடித்து ஆந்தைக்கண்ணனைச் சந்திக்கப் போவதற்கு ஒரு தீரனைத் தேட வேண்டியிருந்தது. சூழ்நிலையை எண்ணி ஆந்தைக்கண்ணனிடம் சென்றால், உயிருக்கு ஆபத்தாகுமே என்ற நடுக்கத்தினால் பலர் அஞ்சினார்கள். குமரன் நம்பியின் நீண்ட உறுதிமொழிகளுக்குப் பின் ஒர் இளம்பருவத்து ஒற்றன் அந்த வேலையைச் செய்ய முன் வந்தான்.