வஞ்சிமாநகரம்/16. மீண்டும் வேளாவிக்கோ மாளிகை
சிறைப்பட்ட கடம்பர்களைச் சிறையிலடைத்தும், சிறை மீட்கப்பட்ட சேர வீரர்களுக்கு உண்டாட்டு நிகழ்த்தியும் கொண்டாடிக் கொண்டிருந்த குமரன் நம்பி மறுநாள் படை வீரர்களுடன் கடலிற் புகுந்து ஆந்தைக்கண்ணனை வளைக்கத் திட்டமிட்டிருந்தான்.
கடம்பர்களில் பலரைச் சாதுரியமாகப் பொன்வானி முகத்துவாரத்திற்கு அழைத்துச் சிறைபிடித்து விட்டாலும், குமரன் நம்பியின் முதன்மையான நோக்கம் என்னவோ இன்னும் நிறைவேறாமலேயே இருந்தது. ஆந்தைக்கண்ணனிடம் சிறைப்பட்டுவிட்ட இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்க வேண்டுமென்பதே அவனுடைய நோக்கமாயிருந்தும் அந்த உயிர் நோக்கம் இந்த விநாடிவரை நிறைவேறவே இல்லை. அதற்கான வழித்துறைகளைச் சிந்தித்துச் சிந்தித்து முடிவில் ஆந்தைக்கண்ணன் மேல் படையெடுத்து அவனுடைய மரக்கலங்களை மறித்துச் சோதனையிடுவதென்ற முடிவுக்கு வந்திருந்தான்.
ஆனால் அதற்கு முன்பே இரத்தின வணிகர் வீட்டிலும் இரத்தின வணிகர் வீதியிலும் அவன் அந்தரங்கமாக அறிந்து கொள்ள வேண்டிய சில செய்திகள் இருந்தன. அவற்றை அறிவதற்கு அவன் முயன்றான். காலதாமதத்தால் வரும் விளைவுகளையும் அவன் சிந்தித்து வைத்திருந்தான். இந்த வேளையில் மீண்டும் உடனே வஞ்சிமாநகரத்துக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அமைச்சர் அழும்பில்வேள் அழைத்து விட்டார்.
மீண்டும் வேளாவிக்கோ மாளிகையில் நுழைவதற்குரிய தைரியத்தை அவன் தன்னுள் நிரப்பிக்கொள்ள வேண்டியிருந்தது. அமைச்சர் அழும்பில்வேளை சந்தித்துச் செல்வதாயிருந்தால் - அதுவரை ஆந்தைக்கண்ணனை வளைப்பதற்காகக் கடலுக்குள் செல்வதைத் தள்ளி வைக்க வேண்டியிருக்கும். அப்படித் தள்ளி வைப்பதனால் - தான் ஆந்தைக்கண்ணனை நோக்கிச் செல்லவேண்டிய அவசியம் நேருமுன் ஆந்தைக் கண்ணனே பொன்வானி முகத்துவாரத்தின் வழியே கொடுங்கோளுரையும் தன்னையும் தேடிவரக்கூடிய நிலை ஏற்பட்டு விடக் கூடாதே என்ற பயமும் அவனுக்கு இருந்தது.
அமைச்சரின் கட்டளையை அறவே மறுத்து ஒதுக்கவும் துணிவில்லை. தன்னுடனேயே சுற்றிக் கொண்டிருந்து மகா மண்டலேசுவரருக்கு இணையான அமைச்சருக்கு அடிக்கடி கொடுங்கோளுர் நிலைமைகளைச் சொல்லிவரும் வலியன், பூழியன் ஆகிய இருவர் மேலும் அவனது சினம் திரும்பியது. சினம் கொண்டு அவர்களை அவனால் ஒன்றும் செய்துவிட முடியாது. என்றாலும், அமைச்சர் அழைத்தனுப்பக் காரணமான ஏதாவதொரு செய்தி கொடுங்கோளுரிலிருந்து வேளாவிக்கோ மாளிகைக்கு வந்திருக்க முடியுமானால் அது வலியனாலும் பூழியனாலும்தான் வந்திருக்க முடியுமென்பதைக் குமரன் நம்பி அநுமானித்துத் தெரிந்துக்கொள்ள முடிந்தது. எவ்வளவுக் கெவ்வளவு விரைவாக வேளாவிக்கோ மாளிகைக்குச் சென்று திரும்புகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு விரைவாக மற்றக் காரியங்களைக் கவனிக்கலாம் என்று தோன்றவே உடனே அவன் வஞ்சிமாநகரத்துக்குப் பயணம் புறப்பட்டான்.
அந்தப் புரவிப் பயணத்தைத் தொடங்கும்போது முன்மாலை நேரம். முன்னிரவு நேரத்திற்குள் அமைச்சரைக்கண்டு பேசிவிட்டு நள்ளிரவுக்குள் மீண்டும் கொடுங்கோளுருக்குத் திரும்ப எண்ணியிருந்தான் அவன் என்ன காரணத்தினாலோ அவன் கொடுங்கோளுருக்குப் புரவிப் பயணம் புறப்பட்ட வேளையில் - அமைச்சர் பெருமானின் அந்தரங்க ஊழியர்களான வலியனும் பூழியனும் உடன் புறப்படாமல் கொடுங்கோளூரிலேயே தங்கி விட்டார்கள். இது வேறு குமரன் நம்பியின் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்கியது.
தன்னை வேளாவிக்கோ மாளிகைக்கு அனுப்பிவிட்டு இவர்கள் இருவரும் மட்டும் கொடுங்கோளுரில் தங்குவதன் மர்மம் என்னவென்பதைத் தன்னால் ஆனமட்டும் சிந்தித்துப் புரிந்துகொள்ள முயன்றான் குமரன் நம்பி. முடியாத காரியமாகப் போயிற்று அது.
கொடுங்கோளுரையும் - கோநகரமான வஞ்சிமா நகரத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் இயல்பைமீறிய அமைதி நிலவியது. இயல்பான வழக்கமான போக்குவரவோ மக்கள் நடமாட்டமோ அந்தச் சாலையில் இல்லை. அந்த அமைதி புதியதாகவும் பெரியதாகவும் இருந்தது. ஏதோ ஒரு பயம், அல்லது இயல்பற்றநிலை நாடு முழுமையும் பற்றி ஆட்டிக் கொண்டிருப்பதை அவன் உணர முடிந்தது. ஒரு வகையில் அந்த அமைதி அவனுக்குப் பயன்பட்டது. புரவியை மிக வேகமாகச் செலுத்திக் கோநகரத்தைக் குறுகிய நேரத்தில் அடைவதற்கு அந்த அமைதி உதவுவதாக இருந்தது.
வேளாவிக்கோ மாளிகை நெருங்க நெருங்க - அந்த அரசதந்திர மாளிகையை அணுகும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் தயக்கமும், மனப்பதற்றமும் இன்றும் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டன.
வேளாவிக்கோ மாளிகைக்கு அதற்கு முந்திய முறை செல்ல நேர்ந்த சூழ்நிலையையும் இன்று செல்கிற சூழ்நிலையையும் சேர்த்து நினைத்தபோது சென்றமுறையைவிட இந்த முறை அது இன்னும் சூழ்ச்சியும் அந்தரங்கங்களும் அதிகமாகிவிட்ட இடம் போல் மனத்திற்குள் ஒரு பிரமை ஏற்பட்டது.
தோட்டத்தில் புகுந்து புரவியைக் கட்டிவிட்டு அவன் அந்த மாளிகையில் நுழையும்போது மேல்வானத்தில் மாலையைப் போலவே அவன் மனமும் குழம்பிக் கலங்கிப்போய்த்தான் இருந்தது.
அரண்மனையின் மற்ற பகுதிகளில் அந்தி விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். கீதசாலைகளில் மகளிர் முணுமுணுக்கும் இனிய பண்ணொலிகள் அரண்மனை அந்தப்புரப் பகுதியிலிருந்து வேளாவிக்கோ மாளிகைச் சுவர் வரை எதிரொலித்தது. அதற்கப்பால் அந்த அரசதந்திர மாளிகைக்குள்ளே நுழைய அஞ்சுவதுபோல் வந்த வழியே திரும்பிவிடுவது போல் தோன்றியது குமரன் நம்பிக்கு.
அமைச்சரை அணுக இசைமுதலிய நளின கலைகளுக்குக்கூட அச்சம் போலிருக்கிறது. வேளாவிக்கோ மாளிகையை நெருங்க மனிதர்கள் பயப்படுவார்கள் என்றால் இசையின் ஒலிகூடப் பயப் படுவதுபோல் அல்லவா தெரிகிறது - என்று தனக்குத்தானே நினைத்துப் பார்த்தபோது குமரன் நம்பியின் இதழ்களிலே புன்னகை தவழ்ந்து மறையத் தவறவில்லை.
மாளிகையின் கூடத்தில் அமைச்சரைச் சந்திப்பதற்காக அவன் நுழையவேண்டிய கூடத்தில் மட்டும் இரண்டு காவலர்கள் வேலேந்தியபடி நின்றார்கள். அமைச்சரிடம் தன் வரவைத் தெரிவிக்குமாறு அவர்களில் ஒருவனிடம் குமரன் நம்பி வேண்டினான். ஆனால் காவலன் கூறிய மறுமொழி அவனைத் திகைக்க வைப்பதாக இருந்தது.
“அமைச்சர் பெருமான் இப்போது மாளிகையில் இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். தாங்கள் அதுவரை காத்திருக்க வேண்டுமென்பது கட்டளை ” - இதைக் கேட்டுக் குமரன் நம்பி ஆத்திரமடைந்தாலும் -தன் ஆத்திரத்தை அவனால் வெளிக்காட்டிக்கொள்ள முடியாமலிருந்தது.
ஒவ்வொருமுறையும் அமைச்சர் அழும்பிள்வேள் தன்னைத் தேடி வருகிறவனுக்குத் தாழ்வுமனப்பான்மை உண்டாகும் படியாக இப்படி ஏதாவது செய்து கொண்டிருப்பதை அவன் வெறுத்தான். தேடி வருகிற எதிராளியைச் சந்திக்கும் முன்பே அவனுடைய அகங்காரத்தை வெற்றிக்கொண்டு விடுவதுதான் தேர்ந்த அரசதந்திரக்காரர்களுடைய முறையோ என்று அவனுள் ஒரு சந்தேகம் எழலாயிற்று.
அவன் அமைச்சர் பெருமானைச் சந்திக்கிற ஒவ்வொரு முறையும் கோபத்தோடு வருகிறான். வந்த வேகத்தில் தன்னுடைய அகங்காரத்தை இழக்கிறான். அப்படி அகங்காரத்தை இழந்த மறுகணமே அவரைச் சந்திக்க நேரிடுகிறது. அவரோ அவன் மனத்தில் தாழ்வு மனப்பான்மை கிளறும்படி செய்து விடுகிறார். தாழ்வு மனப்பான்மையோ அவனுடைய அகங்காரத்தை அவனே மறந்துப்போகும்படி செய்துவிடுகிறது. இன்றும் அதே நிலையில்தான் அவன் இருந்தான். அவர் வருகிற வரை தோட்டத்தில் உலாவிக்கொண்டிருக்கலாம் என்று அவன் புறப்பட்டபோது அவனை அவ்வாறு செய்யவிடாமல் அவரே வந்துவிட்டார். அவரைத் திடீரென்று எதிரே பார்த்தவுடன் அவனுக்கு கையும் காலும் ஒடவில்லை. அந்தக் கம்பீரத் தோற்றத்தை எதிர்கொள்வது கடினமாயிருந்தது. அவருக்கு வணக்கம் செலுத்தி வரவேற்ற சுவட்டோடு - உடன் உள்ளே சென்றான் குமரன் நம்பி.
“கொடுங்கோளுர்ப் படைக்கோட்டத் தலைவன் இந்தச் சில நாட்களில் அரசியல் சாகஸங்களில் தேர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. கடம்பர்களின் தலைவனையே ஏமாற்றும் அளவிற்கு வளர்ந்த திறமையைப் பாராட்ட வேண்டியதுதான்” என்று அவர் தொடங்கியபோது அவனுக்கு மறுமொழி எதுவும் கூறுவதற்குச் சொற்கள் கிடைக்கவில்லை. அவன் வாளா நின்றான்.
மெளனமாக இதைப் பார்த்தபடி அமைச்சர் அழும்பில்வேள், உலாவி வரத் தொடங்கினார். உலாவிக்கொண்டே வந்தவர், திடீரென்று ஒரு திருமுக ஒலையை எடுத்து, “இந்த ஒலை இன்று காலையில் எனக்குக் கிடைத்தது. படைமுகத்திலிருந்து வந்திருக்கிறது. இதைக் கவனித்தால் நீ செய்ய வேண்டிய காரியங்களில் உனக்கு எவ்வளவு விரைவு தேவையென்று உடனே புரியும்.”
“ஒலையை நான் கவனிக்கும்படி என்ன இருக்கப்போகிறது அமைச்சர் பெருமானே! கட்டளை இடவேண்டியதை நீங்களே இடலாம்.”
“கட்டளையை நான் இடாவிட்டாலும் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்க வேண்டுமென்று படைத்தலைவனுக்கு ஆவல் இருக்காதா என்ன?”
“நாட்டைக்காக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நாட்டில் அமுதவல்லியைக் காப்பதும் ஒரு சிறு கடமையே தவிர அமுதவல்லியைக் காப்பதே என் நோக்கமாயிருக்க முடியாது. நான் தங்கள் கட்டளையைச் செய்யக் கடமைப் பட்டவன். எனக்குக் கட்டளையிடுங்கள்...” என்று அவன் குழைந்ததைப் பார்த்து அமைச்சர் அழும்பில் வேள் அவனையே உற்றுப் பார்த்தார். அவர் கண்கள் அவனை ஊடுருவின.