வஞ்சிமாநகரம்/19. குமரனின் கோபம்
கடற்கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்களைத் துரத்தியதோடு மட்டுமின்றி அவர்களுடைய ஒரேஒரு மரக்கலத்தைத் தவிர ஏனைய மரக்கலங்கள் அனைத்தையும் நெருப்பிட்டு அழித்த குமரன் கொடுங்கோளுரும் சேரநாட்டுக் கடற்கரை நகரங்களும் அந்த வெற்றிப் பெருமிதத்தில் ஆழந்திருக்கும்போது தான் மட்டும் தீர்க்க முடியாத கடுங்கோபத்தோடு - வேளாவிக்கோ மாளிகையை நோக்கி விரைந்தான்.
அமைச்சர் அழும்பில்வேள் தன்னை ஏமாற்றி விட்டார் என்ற எண்ணம் அவன் மனத்தைக் கொதிப்படையச் செய்திருந்தது. கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவன் என்ற முறையில் அமைச்சரின் கட்டளைகளை நிறைவேற்றக் கடமைப் பட்டவன் அவன்.
எந்தக் கட்டளையையும் நேரடியாக அவர் அவனுக்கு இட்டிருக்கலாம். அப்படி இட்டிருந்தாலே அவன் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றக் கடமைப்பட்டவன்.
ஆனால் அவர் இப்படிச் சுற்றி வளைத்துக் கூறித் தன்னை ஏமாற்றியதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அமைச்சர் அழும்பில் வேள் கடற்கொள்ளைக்காரர்களின் முற்றுகையைக் காண்பித்து எவ்வளவோ பரபரப்புக் காட்டினாலும் - அந்த வெற்றியை வாங்கிக்கொடுத்த முயற்சியும் சாதுரியமும் தன்னுடையவையே என்பதைக் குமரன்நம்பி நன்கு உணர்ந்திருந்தான்.
எனவேதான் அவனுக்கு அமைச்சர் அழும்பில்வேள் மேல் பொறுத்துக்கொள்ள முடியாத கோபம் வந்தது.
வேளாவிக்கோமாளிகையைவிட உலகம் பரந்தது-விரிந்தது என்ற உணர்வை அமைச்சருக்கு உண்டாக்கிக் காட்டவேண்டும் போலத் துடி துடிப்பாக இருந்தது அவனுக்கு.
அழும்பில்வேளின் மேலும், வேளாவிக்கோ மாளிகையின் கட்டளைகள் மேலும் அவனுக்கு நம்பிக்கையும் பயபக்தியும் உண்டுதான்.
ஆனால் அதற்காக அமைச்சரிடமும் வேளாவிக்கோ மாளிகையிடமும் ஏமாந்துபோகிற அளவு தாழ்ந்துவிட விரும்பவில்லை அவன்.
தலைநகரிலும் கொடுங்கோளுரிலும் படைகள் குறைவாக இருந்த சமயத்தில் மிகவும் கடுமையான கடற்கொள்ளைக்காரர் முற்றுகையை மீட்டு நாட்டுக்கு வெற்றி தேடிக்கொடுத்திருக்கிறான் அவன். அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஏமாற்றுகிற எந்தக் காரியங்களையும் இப்போது அவன் பொருட்படுத்த முடியாது.
வேளாவிக்கோமாளிகையை அவன் அடைந்தபோது இன்றும் அமைச்சரை உடனே சந்திக்க முடியவில்லை. வடதிசைக் குயிலாலுவப் போரில் வெற்றிபெற்றுப் பெரும்படையுடன் வஞ்சிமா நகருக்குத் திரும்ப வந்து கொண்டிருக்கும் பேரரசர் செங்குட்டுவரையும், பெரும் படைத் தலைவனான வில்லவன் கோதையையும் சிறப்பாக வரவேற்பதற்கான ஏற்பாடுகளை மந்திரச் சுற்றத்தினருடன் கலந்து பேசிக் கொண்டிருந்தார் அமைச்சர் அழும்பில்வேள்.
நாட்டுக்கும், கடற்கரையோர நகரங்களுக்கும் உடனடியான ஆபத்தினைத் தரவல்ல கடற்கொள்ளைக்காரர்களை விரட்டியடித்து வெற்றிவாகை சூடிக்கொண்டு வந்திருக்கும் தன்னை ஏனென்று கேட்கவோ எதிர்கொண்டு வரவேற்கவோ மனிதர்களில்லை என்பதை அவன் அப்போது உணர்ந்தான்.
அந்த உணர்வு அவன் மனத்தைப் புண்படுத்தினாலும் அழும்பில்வேளைச் சந்தித்த பின்பே கொடுங்கோளுர் திரும்புவது என்று பொறுமையோடு காத்திருந்தான் அவன்.
கடம்பர்களை இதற்குமுன் பலமுறை வென்றவர்கள் யாவரும் இவ்வளவு குறுகிய காலத்தில் குறுகிய படை வசதிகளின் துணை கொண்டு வென்றதே இல்லை.
பெருமன்னர் செங்குட்டுவர் கோநகரில் இல்லாத சமயத்தில் இத்தகைய வெற்றிச் செயலை அவன் புரிந்திருக்கிறான் என்பது இன்னும் சிறப்பான காரியம். அந்தச் சிறப்பான காரியத்துக்காகக் கொடுங்கோளுரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் அவனைக் கொண்டாடக் காத்திருந்தும் - அவன் அவைகளை எல்லாம் விட்டுவிட்டு வஞ்சிமா நகரத்தின் வேளாவிக்கோ மாளிகையில் அமைச்சர் அழும்பில்வேளைத் தேடி வந்திருந்தான்.
தோற்றோடிய கடம்பர்களையோ ஆந்தைக்கண்ணனையோ சந்தேகிக்க ஒன்றுமில்லை என்றும் தோன்றியது. அமைச்சரோ அவருடைய அந்தரங்க ஊழியர்களோ கூறியபடி கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை ஆந்தைக் கண்ணன் சிறைப்பிடித்து வைத்திருக்க முடியுமானால் - அவனுடைய மரக்கலங்கள் அனைத்தையும் கைப்பற்றித் தான் சோதனையிட்டபோது அவள் கிடைத்திருக்க வேண்டும். அப்படியில்லாததால்தான் அமைச்சர் அழும்பில்வேளின் மேல் அவனுடைய கோபமெல்லாம் திரும்பியது.
ஆந்தைக் கண்ணன் கூறியதிலிருந்து - அவனோ அவனுடைய ஆட்களோ - கொடுங்கோளுருக்குள் வந்து எதையும் கடத்த முடியவில்லை என்று தெரிந்தது.
ஆகவே அமுதவல்லியை அவனோ அவனுடைய ஆட்களோ சிறைப்பிடித்திருக்க வழியேயில்லை. சிறைப்பிடித்துவிட்டு தன்னிடம் மறைக்கவோ, பொய் சொல்லவோ கடம்பர்களால் முடியாது என்பதும் குமரன் நம்பிக்குத் தெரிந்தது.
கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து நகரத்தை மீட்கத் தன்னை முதன் முதலாக அமைச்சர் கூப்பிட்டனுப்பியபோது வேளாவிக்கோ மாளிகைக்கு வந்ததிலிருந்த இந்த விநாடிவரை நிகழ்ந்தவற்றை ஒன்றுவிடாமல் சிந்திக்கத் தொடங்கினான் குமரன் நம்பி.
முதன் முதலாக அவரைச் சந்தித்தவுடன் கடற்கொள்ளைக் காரர்களின் கடல் முற்றுகையைப் பற்றி எதுவுமே விசாரிக்காமல், கொடுங்கோளுர்ப் படைக்கோட்டத்திற்கு அருகிலுள்ள பூந்தோட்டத்தைப்பற்றி அமைச்சர் தன்னிடம் விசாரித்ததை நினைவு கூர்ந்தான் அவன். அப்படி அவர் தன்னை விசாரித்த நாளைக்கு முந்தியநாள் மாலை வேளையில்தான் அதே பூந்தோட்டத்தில் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்ததை அறிந்து அவர் அவ்வாறு கேட்டாரா என்றறிய முடியாமல் - அப்போது தனக்கு ஒருவிதமான மனக் கலக்கம் ஏற்பட்டதையும் நினைவு கூர்ந்தான் அவன்.
திடீரென்று அவர் அந்தப்பூங்காவைப்பற்றிக் கேட்டதும் தான் நாக் குழறிப்போய் அவருக்கு மறுமொழி கூறமுடியாமல் திகைத்த வேளையில், ‘என் வயதுக்கும் முதுமைக்கும் இப்படிப்பட்ட அழகிய பூங்காக்களில் பிரியம் வைப்பது அவ்வளவாகப் பொருத்தமில்லை என்று உனக்குத் தோன்றலாம் குமரா! பூங்காக்களையும் பொழில்களையும் உன்போன்ற மீசை அரும்பும் பருவத்து வாலிபப் பிள்ளைகள்தான் நன்றாக அநுபவிக்க முடியு மென்றாலும் என்போன்ற முதியவர்களுக்கு இயற்கையழகின் மேலுள்ள பிரியம் ஒருநாளும் போய்விடுவதில்லை’ என்று அவனை நோக்கி விஷமமாகச் சிரித்துக் கொண்டே மேலும் வினாவினார் அவர்.
முன்நிற்கும் படைக்கோட்டத்துக் கடமைகளை மறந்துவிட்டு அதற்குப் பக்கத்திலுள்ள மலர்ப்பொழிவில் தான் அமுதவல்வியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததை அறிந்து வைத்துக் கொண்டுதான் அவர் இப்படித் தன்னிடம் அங்கதமாகப் பேசுகிறாரோ என்ற அச்சம் அன்று அவனைப் பிடித்தாட்டியது.
அந்த அச்சத்துடனும் பதற்றத்துடனுமே அன்று அவருக்கு மறுமொழிகளைச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். இன்றோ அவன் வந்திருக்கும் நிலைமை முற்றிலுமே வேறானது.
முன்பு கோநகருக்கு வந்த வேளைகளில் எல்லாம் - வேளாவிக்கோ மாளிகையின் மேலும் அமைச்சர் அழும்பில்வேளின் மேலும் இனம் புரியாத அச்சமும், பிரமிப்பும், மலைப்பும் அவனுள் நிரம்பியிருந்தன.
இன்றோ அமைச்சர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற ஆத்திரம் மட்டுமே அவனுள் நிரம்பியிருந்தது. ஆத்திரத்தில் அச்சம், பிரமிப்பு, மலைப்பு ஆகிய பிற உணர்வுகள் யாவும் அடிபட்டுப் போய்விட்டிருந்தன.
வேளாவிக்கோ மாளிகை அவனை அச்சுறுத்தவில்லை; ஆத்திரமூட்டியது. அங்கே வந்தவுடனே அவன் அமைச்சரைச் சந்திக்க முடியவில்லை என்பது ஆத்திரத்தை மேலும் மேலும் வளர்ப்பதற்குக் காரணமாக அமைந்ததே தவிரக் குறைக்க வில்லை. அவன் இவ்வாறு வேளாவிக்கோ மாளிகையின் தலை வாயிலில் ஆத்திரத்தோடு உலாவிக் கொண்டிருந்த வேளையில் வேளை தெரியாமல் வலியனும் பூழியனும் அவனைச் சந்திக்க வந்து சேர்ந்தார்கள். முறைக்காக அவனைப் பாராட்டவும் செய்தனர்.
“எங்கள் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் படைத் தலைவரே! கடற் கொள்ளைக்காரர்களை இவ்வளவு விரைவில் வெற்றி கொண்டு மீண்ட தங்கள் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று அவர்கள் இருவரும் பாராட்டத் தொடங்கியபோது அந்தப் பாராட்டைப் புறக்கணித்தாற்போல் அலட்சியமாயிருந்து விட்டான் குமரன் நம்பி, வலியனும் பூழியனும் இந்த அலட்சியத்தை எதிர்பார்க்கவில்லை.
“திறமையைப் பாராட்டுகிறவர்கள் எந்த அளவுக்கு மனப்பூர்வமாகப் பாராட்டுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளாமல் சில வேளைகளில் பாராட்டுக்களைக்கூட ஏற்றுக் கொள்ள முடிவதில்லை” என்று படைத் தலைவன் தன் வார்த்தைகளால் அவர்களைச் சாடினான்.
அவர்களுக்கு அவனுடைய ஆத்திரத்தின் காரணம் புரிய வில்லை. மேலே அவனுடன் தொடர்ந்து உரையாட விரும்பவில்லை. ஆதலால் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
சீற்றமடைந்த சினவேங்கையைப்போல் அவன் மட்டுமே தனியாக வேளாவிக்கோ மாளிகை முன்றில் உலாவத் தொடங்கியிருந்தான்.