உள்ளடக்கத்துக்குச் செல்

வண்டிக்காரன் மகன்/லட்சாதிபதி

விக்கிமூலம் இலிருந்து

4
லட்சாதிபதி


"இல்லிங்களே!"

"பாருங்க செட்டியார்."

"உங்களுக்கா இல்லேங்கப் போகிறேன். இருந்தா கேக்கணுமா?"

"ரொம்ப அவசரம். இல்லையானா உங்களுக்குத் தொந்தரவு கொடுப்பேனா?"

"அது சரி. நீங்களும் ரொம்ப நாள் வாடிக்கை, நாணயமான கை. என் கையிலேயோ சரக்கு இல்லை. என்னை என்னதான் செய்யச் சொல்றீங்க? ஊம்..சரி. சாயந்தரம் 6 மணிக்கு மேலே வாங்க, பார்க்கலாம்."

"கட்டாயம் ஏற்பாடு பண்ண வேணும், கைவிரிச்சுடக் கூடாது. உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்."

"சரி. வாங்க! கையோடு ரூபா கொண்டுவாங்க...வீசை" என்று சொல்லி மூன்று விரல்களைப் பிரித்துக் காட்டினார் செட்டியார்.

அந்தத் தெருமுனையில் செட்டியார் கடை வைக்கும் போது, "என்ன வியாபாரம் இங்கே நடந்துவிடும் என்று செட்டி கடை வைக்கிறான்?" என்றுதான் சிலர் எண்ணினர். அப்போது அவர் செட்டியார் அல்ல...செட்டிதான்! செட்டியாரும் மிகுந்த நம்பிக்கையோடு கடையைத் துவக்கவில்லை. ஏதோ திண்ணையிலே குந்தியிருப்பதைக் கடையிலே குந்தியிருக்கலாமே என்றுதான் கடையைத் தொடங்கினார். ஆனால் நாளடைவில் அவருக்கே திகைப்பு தரும் வகையில் வியாபாரம் தழைத்தது. அவ்வப்போது சிலசில சரக்குகளுக்கு ஏற்பட்ட கிராக்கி அவருக்குப் பெரிய உதவியாக வந்து சேர்ந்தது. ஒரு ரூபாய்க்கு வாங்கிய சாமான், நாலு ரூபாய்க்குக்கூட விற்றது. சாமான் கிடைக்காதபோது அளவும் நிறையும்கூட செட்டியார் விருப்பப்படிதான். வியாபாரம் தழைத்ததைப் போலவே அவருடைய உடலும் தழைத்தது—பருத்தது என்பது பொருத்தமான சொல். செட்டி என்று சொன்னவர்கள் செட்டியார் என்று சொல்லத் தலைப்பட்டார்கள். செட்டியாரும் அழகுக்காக நெற்றி நடுவில் மட்டும் மெல்லிய சிவப்புக்கோடாக இட்டுக்கொண்டு இருந்த ஒற்றை நாமத்தை இருபக்கமும் வெள்ளையைத் தாராளமாகக் குழைத்துத் தடவி தம்முடைய பக்தியை வெளிப்படுத்திக் கொண்டார். கடையில் அலங்காரமாக இருக்கட்டும் என்றுதான் முனையிலே முடிச்சோடு கூடிய ஒரு கயிற்றைத் தொங்கவிட்டிருந்தார். இப்போதெல்லாம் அதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளாவிட்டால் செட்டியாரால் எழுந்திருக்க முடிவது இல்லை.

இத்தனை மாற்றமும் செட்டியாரின் திறமையால் வந்தவையே. இருப்பதை இல்லை என்று சொல்லியும், இல்லாததை எங்காவது வாங்கிக் கொடுத்தும், இப்படியாகச் செய்த வியாபாரத்தில் விளைந்த மாறுதல் இவ்வளவும். அவருக்கு உதவியாக அவ்வப்பொழுது சில பொருள்கள் 'கட்டுப்பாடு' ஆகும். முன் நாள் செட்டியார் கடையில் அது எத்தனை மூட்டை இருந்தாலும் மறுநாள் இல்லாது போகும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும், தக்க மரியாதை உடன்தான்!

கொஞ்ச நாட்களாகச் சர்க்கரை அப்படித்தான், விசேஷமான மரியாதை-கௌரவங்களுடன் மாலை 6 மணிக்கு மேல் வெளிவந்து கொண்டிருக்கிறது. மிகுந்த சிரமத்தின் பேரில், மிகவும் வேண்டியவர்கள்தான் அதையும் சாதிக்க முடிந்தது. இத்தனைக்கும் அந்த ஊரில் சர்க்கரைக்குக் 'கார்டு'. சர்க்கரை போதாதவர்கள் என்ன செய்வார்கள்? செட்டியார் இருக்கப் பயம் ஏன்?

மந்தத்தில் தொடங்கிய வியாபாரம் படிப்படியாக உயர்ந்து, மதிப்பான நிலைக்கு வந்துவிட்டது. "செட்டியாரிடம் ரொக்கம் ரொம்ப இருக்கும்" என்று பல பேர் பேசத் தலைப்பட்டனர். சிலர் 'ஒரு லட்சம்' என்றுகூட எண்ணி வைத்தவர்களைப்போல் சொன்னார்கள். ஆனால் உண்மை யாருக்கும் தெரியாது. ஏன் என்றால் செட்டியார் தன் கையிருப்பை பாங்கியில் போடுவது இல்லை. கடையை விட்டுவிட்டுப் பாங்கிக்குப் போக வேண்டும், அங்கே கும்பலோடு நின்று பணம் போட வேண்டும், எடுக்க வேண்டும். போடும்போதும் எடுக்கும்போதும் நாலு பேர் பார்ப்பார்கள். ஒருவர் கண் மாதிரி ஒருவர் கண் இருக்காது. ஏனிந்தத் தொல்லை என்று எண்ணினாரோ என்னவோ! நாளதுவரை செட்டியார் பாங்கிக்குப் போனது இல்லை. ஆகவே அவருடைய இருப்பு விஷயம் அவர் ஒருவர்க்கே தெரியும். மனைவிக்குத் தெரியுமோ என்னமோ, நமக்குத் தெரியாது. யாராவது கொஞ்சம் நெருங்கிப் பழகுகின்றவர்கள், "உங்களுக்கு என்ன செட்டியாரே! நீங்கள் லட்சாதிபதி" என்றால், காதுவரை விரியும்படி ஒரு புன்னகை செய்துவிட்டு, "உங்களுக்கென்ன சொல்லாமல்! எனக்கல்லவா உண்மைத் தெரியும்", என்று சொல்வாரே ஒழிய வேறு எதுவும் பேசுவது இல்லை.

'சீனாக்காரன் வருகிறானாமே! அணுகுண்டு போடுவானோ'-இந்த மாதிரிப் பேச்சுக்களுக்குக்கூட செட்டியார் கலங்கமாட்டார். ஓய்வாக இருக்கும்போது, காலையில் பாங்கிப் பெட்டி இடுக்கில் செருகிய தினசரியை எடுத்துக் கண்ணோட்டம் விடும்போது எந்தச் செய்தியும் அவரை ஒன்றும் செய்துவிட முடியாது. 'லாரி ஏறி குழந்தை மரணம்' என்று படித்தால்கூட 'பாவம்' என்று சொல்ல மாட்டார். "தலையெழுத்து யாரை விடும்?" என்றுதான் சொல்வார். அப்படிப்பட்டவர் ஒரு நாள் பத்திரிகையைப் படித்துக் கொண்டு வரும்போது "ஐயோ—இதென்ன அநியாயம்" என்று அலறினார். எதிரே நின்றிருந்த வீட்டு வேலைக்காரி அலமேலுகூடப் பதறிப்போய், "என்னங்க, என்ன சமாசாரம்?" என்று கேட்டாள். நிமிர்ந்து பார்த்த செட்டியார், "என்ன சங்கதி? எங்கே வந்தே? போ! அப்பாலே வா!" என்று விரட்டினார். அலுமேலுவுக்கே அது அதிசயமாக இருந்தது. வீட்டிலே எஜமானி அம்மா, ஏதாவது சங்கதி இருந்தால், வீட்டுக்குத் தேவையான சாமான்கள் முதலியவற்றைப் பற்றி, அலமேலுவிடம்தான் சொல்லியனுப்புவார். கடையிலே கூட்டம் இல்லாதபோது அவள் வந்து போவாள். அவள் வருவதைச் செட்டியார் கொஞ்சம் ஆவலோடு எதிர்பார்த்தார் என்றுகூட சொல்லலாம். அவரும் மனிதர் தானே? அதிலும் அலுமேலுவுக்குக் கொஞ்சம் அலங்காரத்திலே விருப்பம். அவளோடு பேசுவது வியாபாரத்திற்கும் கெடுதல் இல்லாத நேரம். பேச்சுக்குக் கூடவா பஞ்சம்! ஆனால் அந்த அலுமேலுவையே செட்டியார் "அப்புறம் வா—போ, போ" என்று விரட்டி விட்டாரே! ஏன்?

"ஏனோ?" என்று எண்ணியபடி அலுமேலு போய் விட்டாள். செட்டியாருடைய பதறல் போகவில்லை. திரு திரு என்று விழித்தார். கீழும் மேலும் பார்த்தார். பித்துப் பிடித்தவர்போல் ஆனார். பத்திரிகையில் அப்படி என்ன தான் வந்திருந்தது?

கள்ளப் பணம் சிக்கியது.

"இவ்வூரில் பல வியாபாரிகளின் வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டபோது லட்சக்கணக்கான கள்ளப்பணம் கண்டு பிடிக்கப்பட்டது. சிலருடைய வீடுகளில் குளியல் அறையிலும், கழிவிடங்களிலும், படுக்கையிலும், பூஜை அறையிலும், கணக்குகளும், ரூபாயும் கண்டு பிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டன. மேலும் பல ஊர்களில் சோதனை நடத்தப்படும் என்று தெரிகிறது."

என்ற செய்திதான் பெரிதாக வந்திருந்தது. இதைப் படித்துத்தான் செட்டியார் கலங்கிவிட்டார். அவர் பணத்தை கணக்கே எழுதாத-கணக்கில்லாமல் எங்கே வைத்திருக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். இதுவரை அதைக் கண்டவர்கள் யாருமில்லை. ஆனால் இதோ அதிகாரிகள்! குளியல் அறை, கழிவிடம், படுக்கை எல்லாவற்றையுமல்லவா குடைகிறார்கள். ஒரு வேளை தன் செல்வம்—காலமெல்லாம் கஷ்டப்பட்டு காலணா, காலணாவாக (காலணா காலத்திலிருந்து செட்டியாரிடம் இருப்பு வளர்கிறது) சேர்த்த பணத்தைக் கண்டுபிடித்து விட்டார்களானால்? ஏது இவ்வளவு தொகை? கணக்கு எங்கே? எவ்வளவு விற்பனை வரி கட்டுகிறீர்? வருமான வரி கட்டுவது உண்டா? இன்னும் என்னென்ன கேட்பார்களோ? கேட்டால் கேட்டு விட்டுப் போகிறார்கள் என்று விட்டுவிட முடியாது. இந்தக் கேள்விகளுக்குச் செட்டியார் என்ன பதில் சொல்ல முடியும்? விற்பனை வரி, வருமான வரி என்பது எல்லாம் அவரைப் பொருத்தமட்டில் ஒரு பொருளும் இல்லாத சொற்களாக இருந்து வருகின்றனவே! என்ன சொல்வார்? சொல்வது கிடக்கட்டும். கண்டெடுக்கும் பணத்தை என்ன செய்கிறார்கள் என்பதை 'பேப்பர்காரன்' போடவில்லையே. ஒரு வேளை, அதைப் பறிமுதல் செய்து விடுவார்களோ?

இன்ன திசைதான் என்று இல்லை; பலவாறு சென்றது செட்டியாரின் சிந்தனை. அன்று வியாபாரத்தில்கூட அவரால் அதிகக் கவனம் செலுத்தவில்லை; செலுத்த முடியவில்லை. வீசை, மூன்று ரூபாய்க்குச் சர்க்கரை கேட்டவர்களுக்குக்கூட 'இல்லை' என்றே சொல்லிவிட்டார். வீடு பற்றி எரிகிறது; இப்போதுபோய் பீடிக்கு நெருப்பு கேட்கிறார்களே என்ற எரிச்சல் செட்டியாருக்கு.

கடையை மூடிக் கொண்டு வீட்டுக்குப் போன பிறகும் செட்டியாரின் மனம் அமைதியடையவில்லை. சரியாகச் சாப்பிடவில்லை. என்ன காரணம் என்று மனைவியும் கேட்கவில்லை. கேட்டால்தான் செட்டியார் சொல்வாரா என்ன? அதோடு வேலைக்காரியிடம் சொல்லி அனுப்பிய சாமான்கள் வரவில்லையே என்ற ஏக்கம் வேறு அந்த அம்மாளுக்கு. இரவு முழுதும் செட்டியார் தூங்கவில்லை. எப்படித் தூங்க முடியும்? கணக்கு, பணம், சோதனை, கேள்வி, விசாரணை-இதுவே அவருக்கு விசாரமாக இருந்தபோது எங்கிருந்து தூக்கம் வரும்?

மறுநாள் செட்டியாரின் கடையில் உட்கார்ந்திருந்தபோது நாலைந்து ஜீப்புகள் அவசரம் அவசரமாகப் பறந்து கொண்டிருந்ததைக் கண்டார். புதிய புதிய அதிகாரிகள் அந்த வண்டிகளிலே இருந்தனர். அவர்கள் யார் என்பதையாவது தெரிந்து கொள்ளலாம் என்றால் யாரைக் கேட்பது? கேட்டால் ஒரு வேளை வீணாகச் சந்தேகம் வருமோ, என்னமோ? சும்மா இருக்கும் சங்கை ஏன் ஊதிக் கெடுக்கவேண்டுமென்ற எண்ணத்தில் யாரையும் கேட்கவில்லை. தீர்மானமே செய்துவிட்டார், அவர்கள் சோதனை செய்ய வந்த அதிகாரிகள்தான் என்று. சுரத்தில்லாமல் கடையில் இயந்திரம் மாதிரி உட்கார்ந்து அளந்து நிறுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவருடைய மனமோ தீவிரமான எண்ணங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. எப்படியாவது தம் வசம் இருக்கும் பெருந்தொகையை அதிகாரிகள் கண்ணில் படாமல் மறைத்துவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். எங்கே ஒளிப்பது? அதுதான் தெரியவில்லை. கழிவிடம், மறைவிடம், படுக்கையறை, பூஜை அறை எதையும் விடுவது இல்லையாமே? எங்கேதான் ஒளித்து வைப்பது? சே! என்ன சங்கடம் இது!

தன்னை ஒரு புள்ளியாக மதித்து வந்து சோதனை போடுவார்களா, சின்ன கடைதானே என்று விட்டுவிடுவார்கள் என்று ஒரு ஆசை.

ஆனால், மறுகணமே அது மறைந்துவிடும். எப்படிச் சொல்லமுடியும்? தன்மீது பலருக்குப் பொறாமை என்பதைச் செட்டியார் அறிவார். எவன் எந்த அதிகாரிக்கு மொட்டைக் கடிதம் எழுதுவனோ? மொட்டைக் கடிதம் எழுதுவது என்ன, நேரே போய்ச் சொல்லிவிட்டு வந்தால்தான் அவர் என்ன செய்ய முடியும்?

எப்படியும் கைவசம் உள்ள தொகையை, இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றிவிட வேண்டும். இந்தக் கண்டம் தாண்டினால் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நிலமோ, வீடோ வாங்கிப் போட்டுவிட வேண்டியதுதான். என்ன விலை ஆனாலும் விடக்கூடாது என்று தீர்மானித்துவிட்டார்.

அதெல்லாம் சரி! ஆனால் இப்போதைக்கு எங்கே அதை—சனியன் என்றுகூட வாய் தவறிச் சொல்லிவிட்டார்—ஒளிப்பது?

"சாமி" அலுமேலுதான் குரல் கொடுத்தாள்; நிமிர்ந்து பார்த்தார். நேற்றைய தினம்போல் "போ! போ!" என்று விரட்டி விடவில்லை. "என்ன?" என்று கேட்டார். கேட்கும்போது அலுமேலுவை நோட்டம் விட்டார். அவளுடைய அழகு, கால் என்றால் அலங்காரம் முக்கால். சாதாரண நாட்களாக இருந்தால், செட்டியார் பேச்சிலே வம்புக்கு இழுப்பார். "என்ன அலுமேலு! இந்தப் புடவைக்கு என்ன பெயர்? இந்த ஜாக்கட்தான் இப்ப பேஷனா?" என்றுகூட கேட்பார். "போங்க, சாமி நீங்க ஒண்ணு?" என்று அவள் சிணுங்குவாள். அலுமேலுக்குத் திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருக்கின்றன. ஆனால் அவளைப் பார்ப்பவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.

செட்டியார் இப்போது அவளை 'ரசிக்கும்' நிலையில் இல்லை; அதனால் "என்ன?" என்று மட்டும் கேட்டு வைத்தார்.

அலுமேலுவுக்கு எங்கிருந்தோ மிகுந்த வெட்கம் வந்து விட்டது. ஒரு நெளி நெளிந்தாள். "சும்மா சொல்லு" என்றார் செட்டியார்.

"ஒன்றும் இல்லைங்க. ஒரு புடவை எடுக்க வேணும். பத்து ரூபா கேக்கலாம்னு..." அலமேலு இழுத்தாள்.

செட்டியார் வரவு செலவில் இறுக்கம்தான் என்றாலும், அலுமேலுவுக்கு ஐந்து பத்து அவ்வப்போது தருவார். அதை அலுமேலுவும் சரி, செட்டியாரும் சரி எஜமானியம்மாளிடம் சொல்வது இல்லை. ஆனால் ஒன்று இரண்டாகப் பாதியளவாவது திரும்ப வாங்குவார். அந்தப் பழக்கத்தில் தான் அலுமேலு பத்து ரூபாய் கேட்டாள்.

செட்டியார் சிந்தனையில் இருந்ததினால் உடனே பதில் சொல்லவில்லை. கொடுக்கத் தயங்குகிறாரோ என்று எண்ணிய அலுமேலு பணத்தின் அவசியத் தேவையை மீண்டும் சொன்னாள்.

"வேறே ஒண்ணும் இல்லீங்க. நாளைக்கி நான் ஊருக்குப் போறேங்க. அம்மாவுக்கு ஒரு புடவை எடுத்துக்கிட்டுப் போகலாம்னு நெனைச்சிதாங்க."

செட்டியாருடைய மனதில், எண்ணத்தில் மின்னல் பாய்ந்தது போலிருந்தது. ஏதோ தீர்மானத்திற்கு வந்தவர் போல் சிலிர்த்து உட்கார்ந்தார்.

"என்ன சொன்னே அலுமேலு? நாளைக்கு ஊருக்குப் போறயா? எந்த ஊர்?"

அலமேலுவுக்குப் புரியவில்லை. செட்டியார் ஏன் அவ்வளவு பரபரப்போடு கேட்கிறாரென்று. ஆனாலும் ரூபா வேண்டுமே! பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்.

"ஆமா சாமி! நாளக்கிப் போறேன். மண்ணூர்தானுங்களே, எங்க ஊர்—அங்கதாங்க போறேன்."

"அங்கே யார் இருக்கிறது?"

"அம்மா, அப்பா இருக்கிறாங்க. நேத்தே கொளந்தைகளை இட்டுகினு அவரு போயிருக்கிறாரு. நான் நாளைக்குப் போறேங்க..."

"சரி, நொம்ப சந்தோஷம். ரூபா தர்ரேன். அதோடு ஒரு சின்ன டிரங்கு பெட்டியும் தர்ரேன்; அதையும் எடுத்துக்கிட்டுப் போ. உடனே திரும்பிடாதே. பத்து நாள் அங்கேயே இரு. பிறகு வா. டிரங்கு பெட்டி பத்திரம். பூட்டிதான் வச்சிருக்கேன். திறக்கக் கூடாது. டிரங்கு பெட்டி உள்ளே சாமி படம் வைச்சிருக்கேன். ஒரு பத்து நாள் வெளியூர்லே வைக்கறேன்னு பிரார்த்தனை. அதான் உன்னிடம் தருகிறேன். வேறே ஒண்ணுமில்லை. பெட்டியை அனாவசியமாகத் தொடக்கூடாது. பூட்டிலே கையே படக்கூடாது. என்ன, வெச்சிருந்து கொண்டு வருவியா?" என்றார் செட்டியார்.

அலமேலுவுக்குச் செட்டியார் என்ன சொல்லுகிறார் என்பதே புரியவில்லை. கேலி செய்கிறாரோ என்றுகூட நினைத்தாள். செட்டியார் மெல்ல மெல்ல அவளிடம் சங்கதியைக் கூறும் வகையில் விளக்கிப் பத்து ரூபாயையும், பெட்டியையும் கொடுத்தனுப்பினார்.

பெட்டியோடு அலுமேலு சென்றதற்குப் பிறகு செட்டியாருக்குப் புதிய தெம்பு பிறந்தது. அப்பாடா! ஒரு வழியாக ஒரு பத்து நாளைக்கு அதை இப்போது சனியன் என்று சொல்லவில்லை—அதிகாரிகள்—பாவிகள்—கண்ணில் படாமல் ஒளித்தாயிற்று—இனி, பயமில்லை. இந்த அதிகாரிகள் ஆட்டம் ஓய்ந்ததும், அப்பாவி அலமேலு பெட்டியைக் கொண்டு வந்து பயபக்தியோடு ஒப்படைக்கப் போகிறாள். அப்புறம் என்ன கவலை!

செட்டியார் கெடுவுப்படி பத்து நாள் கழித்து அலமேலுவின் வரவை ஆவலோடு எதிர்பார்த்தார். பத்து நாளுக்கு மேல் பத்து நாள் ஆன பிறகும் கூட அவள் வரவில்லை. அந்தப் பத்து நாளில் இருபது முறை அலமேலுவின் குடிசைக்குப் போய் வந்து விட்டார். காலையும் மாலையும் அவர் அங்கே தவறாமல் வந்து அலமேலுவைப் பற்றி விசாரித்ததை வித்தியாசமாகக்கூட நினைத்துக் கொண்டார்கள். ஒருத்தர் செட்டியாரின் அந்தரங்கமாகக்கூட அதைச் சொல்லியும் காட்டினார். "என்ன செட்டியார்வாள்! அவள் அப்படி! அபூர்வமான வேலைக்காரி. அவள் போனால் போகட்டுமே, வேறே சின்னவளாகக்கூட யாரையாவது பார்த்து ஏற்பாடு செய்து கொண்டால் போயிற்றென்றார்". அன்றிலிருந்து அந்தக் குடிசைப் பக்கம் போவதையும் செட்டியார் நிறுத்திக் கொண்டார்.

சரி, மண்ணூருக்குப் போய்விட்டு வருவது என்று தீர்மானித்து ஒரு நாள் அந்த ஊருக்குச் சென்றார். அலமேலு வீடு எது என்று கேட்டு விசாரித்துக் கொண்டு அவள் வீட்டிற்குப் போனார். வீடு பூட்டிக் கிடந்தது. எங்கே போயிருக்கிறார்கள் என்று விசாரித்தார் "எங்கு போனார்களோ யாருக்குத் தெரியும். இந்த வீட்டை விற்று விட்டு அவர்கள் போய் பதினைந்து நாளாயிற்று!" என்ற தகவல்தான் கிடைத்தது.

திகைத்தார் செட்டியார். எந்த இடம் சென்று அவர் அலுமேலுவைத் தேடுவார்?

இப்போது எல்லாம் செட்டியார் கடையிலே சர்க்கரை பகலில்தான் விற்கப்படுகிறது. யாராவது செட்டியாரைப் பார்த்து "உமக்கென்ன லட்சாதிபதி" என்றால் செட்டியார் புன்முறுவல் செய்வது இல்லை. "உனக்கென்னய்யா வீண் பேச்செல்லாம்? எது வேண்டுமோ கேள். தருகிறேன். வாங்கிக் கொள். போய் வா" என்று பொரிந்து தள்ளுகின்றார்.

செட்டியார் மாறிவிட்டார் என்று ஊரிலே பேசிக் கொண்டார்களே தவிர அதற்கான காரணம் யாருக்கும் தெரியாது...



செவ்வாழை
(சிறுகதைகள்)
பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை

மனிதன் மறைவான். ஆனால் மனிதருள் மாணிக்கமாகத் திகழும் மேதைகள் படைத்த இலக்கியம் என்றுமே மறைவதில்லை.

அது சாகாவரம் பெற்றது. வாழையடி வாழையென வரும் திருக்கூட்டம் செய்யும் தவறைத் திருத்தும் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் சக்தி அதற்குண்டு.

அமரர் அண்ணாவின் பொற்காலக் கதை இலக்கியமும் அத்தகையதே.

'செவ்வாழை' கதையோடு கைகோர்த்து வரும் ஒவ்வொரு கதையும் நாட்டுக்குத் திறவுகோல் போன்றது.

எனவே—

சமூகத்தில் நெறியோடு வாழக் கற்றுக் கொடுக்கும் அண்ணாவின் சிறுகதையாம் நறுங்கனியை நீங்களும் சுவையுங்கள்; மற்றவர்களையும் சுவைக்கச் செய்யுங்கள்.

விலை ரூ. 5.90

பூம்புகார் பிரசுரம் பிரஸ்
63, பிராட்வே, சென்னை - 1.



பேரறிஞர் அண்ணா

"அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொது மேடை வானில் முன்பு ஒளிர்ந்த மினமினிகள், விண்மீன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப் பொழுது மலரச் செய்யும் "வெங்கதிரவன்" அண்ணா அவர்களே என்பதை அறியாதார் இலர். எழுத்துத் துறையிலும் சுவைகுன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவா் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை, மேடைப் பேச்சுக்கு ஒரு நடை, உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காண முடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்…"

பூம்புகார் பிரசுரம் பிரஸ்
63, பிராட்வே, சென்னை-600 001.