வனதேவியின் மைந்தர்கள்/13
13
நந்தமுனி, அவள் முகத்தில் அந்த ஆற்றுநீரைக் கைகளில் முகர்ந்து வந்து, துடைக்கிறார். புளிப்பும் இனிப்புமான கனிகளை அவள் உண்ணக் கொடுக்கிறார். யானைகள் ஆற்றில் இறங்கிச் செல்கின்றன.
எல்லாம் கனவு போல் தோன்றுகிறது.
“சுவாமி, இங்குதான் என் தந்தை ஏர்பிடித்து உழுதாரோ?”
“ஆற்றுக்கு அக்கரை. நாம் பார்ப்போம். அந்த இடத்தில் இப்போது தானிய வயல்கள் விரிந்திருக்கின்றன. அப்பால் வாழை வனத்துக்கு யானைகள் செல்கின்றன. அதையும் கடந்தால், சத்திய முனியின் இருக்கை, வேடர்குடில்கள் வரும் யாவாலி அம்மை இருந்த ஆசிரமம். இக்கரையில் சிறிது தொலைவு சென்றால், மார்க்க முனியிருந்த ஆசிரமம் தெரியும்.அவர் இப்போது இல்லை. அவர் இருந்த இடத்தில்தான் பெரியன்னை இருந்தார், முன்பு. எனக்குக்கூட நினைவு தெரியாத நாட்கள் அவை, இப்போது, நாம் தங்கப் போவது, பூச்சிக்காடு என்று முன்பு அழைக்கப்பட்ட வனப்பகுதி. பெரியம்மை அங்கே செல்கிறார். கிழக்கே சென்றால் மிதுன புரி.”
இவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒர் ஒற்றை ஒடம் வருகிறது. முனி கைதட்டி அழைக்கிறார்.
மாநிற முகம் அரையில் வெறும் நார்க்கச்சை முடியை மேலே முடிந்த கோலம், மீசை முளைக்காத பாலகன்.அவன் தான் துடுப்புப் போட்டு வருகிறான்.
“சம்பூகா? தேவியை அக்கரை கொண்டு செல்ல வேண்டும். பெரியம்மா நலமா? நீ மிதுனபுரிக்கா போய் வருகிறாய்?”
“ஆமாம் சுவாமி. அங்கே படைத்தலைவருக்கு, மஞ்சள் பரவும் நோய் வந்துவிட்டது. மூன்று நாட்களாய் சென்று அவருக்குப் பணி செய்து விட்டு வருகிறேன். நிறையப் பேருக்கு இந்த நோய் வந்துவிட்டது சுவாமி!”
“இனி எல்லாரும் நலமடைவார்கள். நீ வாழ்க, சம்பூகா, உன் தொண்டு அரியது. நீ அருள் பெற்ற பாலகன்.
அவர்கள் உரையாடலில் பூமகள் மகிழ்ச்சியடைகிறாள்.
“சுவாமி, இந்தச் சிறுவன் வைத்தியனா?”
“இவன் அரண்யாணியின் அருள் பெற்றவன். எந்த நோயானாலும், இவன் மூலிகை கொண்டு சென்றாலே நோய் தீரும் மூலிகைக்கும் இவன் கைக்கும் ஒர் அரிய தொடர்பு உள்ளது: அமைதி கிடைக்கும்.”
“ஆச்சரியமாக இருக்கிறது கவாமி. இவன் பெயர். என்ன சொன்னிர்கள்?”
“சம்பூகன், மிதுனபுரியைச் சேர்ந்த வணிகர் வீட்டு வாயிலில் குழந்தையாகக் கிடந்தான். இவனைச் சத்திய முனி தளர்நடைப் பருவத்தில் கொண்டு வந்தார். யாரோ அந்தணர் பார்த்து, இந்தப் பிள்ளை முற்பிறவியில் பலரைக் கொன்று பாவத்தின் பயனாக வந்திருக்கிறான். இவனை உங்கள் வீட்டில் ஏற்றால் நாசம் வரும் என்றாராம் சத்திய முனிவர் எடுத்து வந்தார். வந்த புதிதில் பேச்சு வராது. செய்கையாகவே உலகம் அறிந்தான். இப்போதும் மிகக் குறைவாகவே பேசுவான்.
மனசுக்குள் கொக்கிபோல் வினா எழும்புகிறது.
குழந்தை பிறந்ததும் இப்படியும் சோதிடம் கூறுவரோ? அதற்காகப் பெற்ற பிள்ளையை அநாதையாக விடுவதோ? அழிவு என்றால், யாருக்கு எப்படி வரும்?
“சுவாமி சத்திய முனிவரை நான் பார்க்க வேண்டும். வணங்க வேண்டும்; ஆசி பெற வேண்டும்.”
படகில் ஆறு தாண்டி அவர்கள் கரையேறுகிறார்கள். வேடர்குலச் சிறுவர் சிறுமியர் சிலர் கண்டு சேதி சொல்ல ஒடிப்போகிறார்கள். இருள் இன்னமும் ஒளியைத் துடைத்து விழுங்கவில்லை.
என்றாலும் அவர்கள் வந்ததை அறிந்த சிறுவர் பலர் பந்தம் கொளுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள்.
ஏதோ ஒரு தேவதையைப் பார்ப்பதுபோல், வியப்பு மலர அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள். நந்தபிரும்மசாரி, அவர்களுக்குப் புரியும் மொழியில் பேசுவது புரிகிறது. அவர்கள் அவள் முன் வணங்கி, ‘வனராணிக்கு மங்களம்’ என்று முகமன் கூறுகிறார்கள். அவர்கள் யாரும் அரைக்கச்சைக்குமேல் ஆடை அணிந்திருக்கவில்லை. பெண்களும் ஆண்களும் - சிறுவர் சிறுமியர் வேறுபாடு தெரியவில்லை. ஒரு சிறு பையன் அம்மணமாக அவளைக் கண்களை இடுக்கிக் கொண்டு கூர்ந்து நோக்குகிறான். அடுத்த கணம், அவன் கையில் கவண்கல் போல் ஒர் ஆயுதம் இருப்பதை அவள் பார்த்து விடுகிறாள்.
அதற்குள் அந்தச் சிறுவனின் தாய் போன்ற அம்மை வந்து அதைப் பறித்து எங்கோ வீசுகிறாள்.
அந்தப் பெண்மணி சிரிக்கிறாள். பற்கள் கருப்பு. நெற்றி மோவாய் நெடுக பச்சைக்குத்துக் கோலம்.
ஒ, இவர்களுக்கெல்லாம் ஒன்றும் கொண்டுவராமல் வந்திருக்கிறேனே. என்று தன்னைச் சபித்துக் கொள்கிறாள்.
நிறையப் பெண்கள் அவர்கள் வழியில் எதிர்ப்பட்டு குலவை இட்டு வரவேற்புச் செய்து அழைத்துச் செல்கின்றனர்.
வளர்ப்பு நாய்கள் குரைக்கின்றன.
ஒரு வேடுவப் பெண் அவற்றை அதட்டி அமர்த்துகிறாள்.
நன்றாகத் துப்புரவு செய்யப்பட்ட பெரிய முற்றம் அரண்போல் மனமலர் சொரியும் மரங்கள்; செடி கொடிகள் புல்வேய்ந்த நீண்ட சதுரமான ஒரு கூடம் தெரிகிறது. அருகில் சிறிய இரண்டு குடில்கள். நந்தசுவாமி அவளை ஒரு குடிலுக்குள் அழைத்துச் செல்கிறார். குனிந்து அவர் முன் சென்று அவளையும் உள்ளே வரச் செய்கிறார். ஒர் அகல் சுடர்விட்டு எரிகிறது. கோரைப் பாய் விரிப்பில் நிழலுருவமாகத் தெரிபவர். எடுப்பான நாசி; அகன்ற நெற்றி, நூலிழைப்போல் வெண்கூந்தல் விரிந்து தோள்களில் விழுந்திருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே உருவம் தன் கையைப் பற்றி அவளை அழைத்துக் கொண்டு மரம் செடி, கொடி என்று காட்டிக் கதை சொன்ன அதே அன்னை. ஆனால், முகத்தில் காலம் இட்ட கோடுகள் கிறுக்கல்கள், அவள் வாழ்க்கையின் புதிர்போல் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றன்.
முதியவளின் கண்களில் ஒளி திரண்டு கூர்மையாகிறது.
“அம்மா..!” என்று பூமகள் அவள் பாதம் தொட்டுப் பணிகிறாள்.
“தாயே, உங்களுக்குத் தேவையான சஞ்சீவனி இனி உங்களுக்கு அலுப்பும் ஆயாசமும் இருக்கலாகாது”
“எனக்குப் புரியவில்லையே, நந்தா? அயோத்தி மன்னனின் பட்டத்து அரசியா? அவளா இந்தக் கானகத்துக் குடிலில் வந்திருக்கிறாள்? பதினான்காண்டுகள் கானகத்தில் இருந்ததும், மாற்றான் தோட்டத்தில் சிறை இருந்ததும் காற்று வாக்கில் செய்திகள் வந்தன. வேதபுரிச்சாலியர் வந்து சொன்னார்கள். அந்த என் குழந்தையா இங்கு வந்திருக்கிறாள்? என்னைக் கூட்டிச் செல்லுங்கள் என்று தானே சொன்னேன்? மறுபடியும் கானகமா? அதுவும் இந்த நிலையில்”. அவள் கூந்தலை அன்புடன் தடவி, “பயணத்தில் களைத்திருப்பாய். தேர்ப்பாதைகூடச் சரியாக இருக்காதே? மன்னர் வெளியிலிருக்கிறாரா? அயோத்தியின் பட்டத்து அரசி, இங்கே வந்திருக்கிறாய், மகளே. நான் என்ன பேறு பெற்றேன்!” என்று தழுவி முத்தமிடுகிறாள்.
“திருமணத்துக்குப் புறப்பட்டு வர வேண்டும் என்று வந்தவளால் பார்க்க முடியவில்லை. நீ மன்னரோடு தேரில் கிளம்பும்போதுதான் வந்து பார்த்தேன். குழந்தாய், தேரைவிட்டிறங்கி இந்தத் தாய் அன்போடு உனக்குப் பிரியமான கனிகளை இலைப்பையில் போட்டுத் தந்தேனே.”
கண்ணிர் பெருகுகிறது. அவளால் விம்மலை அடக்க முடியவில்லை.
“மன்னர் வரவில்லை தாயே, நான். நான் இனி இங்குதான் இருப்பேன். எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாத துன்பம், குலம் கோத்திரம் அறியாத இந்த அபலைக்கு நேரிட்டிருக்கிறது. ஆனால், அம்மா, இதுவே இனி என் இடம் என் குழந்தைக்கும் இதுவே வாழ்விடம்.”
பெரியம்மை பதறிப் போகிறாள். என்றாலும் சுதாகரித்துக் கொள்கிறாள்.
“என் கண்ணம்மா, என் வாழ்நாள் ஏன் நீண்டு போகிறது என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் நான் மிகப்பெரிய ஒரு காரணத்துக்காக உயிர் வாழ்ந்திருக்கிறேன். குழந்தாய், இந்த இடம், உன்னை அன்பு மயமாக அனைத்துக் கொள்ளும்.” என்று மடியில் அவளைச் சாத்திக் கொள்கிறாள். அன்னை மடி. அன்னை மடி.
“என்னை நாடுகடத்தினர்; ஆனால் நான் பெறற்கரிய பேறு பெற்றுவிட்டேன். மாளிகைச் சிறையில் இருந்து, இந்த இதமான இடத்துக்குக் கொண்டு சேர்த்த உமக்கு நன்றி.” என்று மனசோடு கூறிக் கொள்கிறாள்.
சலசலவென்று நீரோடும் ஒசையில் செவிகள் நனைவது போன்ற உணர்வில் திளைக்கிறாள். உடல் முழுதும் ஏற்படும் சிலிர்ப்பில், கனத்த போர்வையை மேலே போர்த்து விடுவது போன்ற இதம். இது உறக்கமா, விழிப்பு நிலையா? அவள் கர்ப்பத்துச் சிசுவாகிவிட்டாளா? உண்மையா? உண்மைதானா? ஒருகால் அவள் ஒர் உயிரை வெளியாக்கி ஜனனியாகி விட்டாளா?
அவள் விருட்டென்று எழுந்திருக்கிறாள்.
“தாயே, இந்த விளைநிலம் எந்தக் குலத்துக்கு உரியது?” அவளையறியாமல் அவள் கை மணி வயிற்றில் படிகிறது.
“கண்ணம்மா, விளை நிலங்களுக்குக் குலமேது? அது உயிர்களைப் பிறப்பித்து, வித்துக்கு வீரியம் அளிக்கிறது. அனைத்து மலங்களையும் உட்கொண்டு மேலும் மேலும் புனிதமாகிறது. புனிதமாகும், புனிதமாக்கும் மாட்சிமை உடையது. அதுவே முழு முதற்குலம்.”
“பின் பிரும்மகுலம், கூடித்திரிய குலம் என்றெல்லாம் எப்படி வருகிறது?.”
“குழந்தாய், குலங்களை விளைநிலம் தோற்றுவிப்பதில்லை. பேராசை தோற்றுவிக்கிறது. காமம், குரோதம், லோபம் ஆகிய புன்மைக் குணங்கள் தோற்றுவிக்கின்றன. இந்தப் புன்மைக் குணங்களால் ஆண் விளை நிலத்தை அரவணைக்காமல் ஆக்கிரமிக்கிறான். சுயநலங்களும் பேராசையும் இரண்களரியும் இரத்தம் பெருகும் கொடுமைகளும் விளையக் காரணமாகின்றன.
என் செல்வமே, இந்த இடத்தில் அகங்கார ஆதிக்கங்களும் அடிமைத்தனத்தின் சிறுமைகளும் இல்லை. இங்கே மிகப்பெரிய மதில் சுவர்கள் இல்லை. காவலுக்கு என்ற பணியாளரும் இல்லை. எம்மிடம் உள்ள செல்வங்களை யாரும் கவர்ந்து செல்ல முடியாது. அச்செல்வங்கள் பலருக்கும் பயன்படுவதால் மேலும் பெருகக் கூடியவை. நீ இங்கு நலமாக இருப்பாய்; உன் உதரத்தில் கண்வளரும் உயிர். இந்தக் குடிலை மட்டுமல்ல; இந்த வனத்தையே பாவனமாக்கட்டும். துன்ப நினைவுகள் இங்கே அன்பின் ஆட்சியில் அழிந்து போகும்.”
உண்மையிலேயே இந்தவனம், இங்கு வாழும் மக்கள், விலங்குகள், அனைத்துமே ஒர் அபூர்வமான இசையை அவளுள் இசைக்கின்றன. யாவாலி ஆசிரமத்தில் இருந்து பிள்ளைகளும், பெண்களும் வருகிறார்கள். சத்திய முனிவர் தீர்த்த யாத்திரை சென்று இருக்கிறாராம். உழுநிலங்களில் அவர்கள் தானியம் விளைவிக்கிறார்கள். மரங்களில் பரண் கட்டிக் கொண்டு தானியங்களைக் கொதத்த வரும் பறவைகளை விரட்டுகிறார்கள். ஆனால் அடித்து வீழ்த்துவதில்லை.
அடுத்தநாள் அவர்கள் அருகிலிருந்த ஒர் அருவிக்குநீராடச் செல்கிறார்கள். வழியெலாம் மூலிகைகளின் நறுமணம் உற்சாகமளிக்கிறது. குன்றுபோல் மேடாக அமைந்த அடர்ந்த கானகப் பகுதியில் செல்லும்போது அச்சம் தெரியவில்லை.
“வனதேவியே எங்கள் முன் வந்தாற்போல் இருக்கிறது’. என்று சொல்லும் வேடுவப் பெண்ணின் பெயர் உலும்பி என்று சொன்னாள். ஆனால் உலு என்று பெரியன்னை அழைத்தாள் பாதங்களில் மணிக்கற்கள் உறுத்தாமலிருக்க, இளந்தோலினால் செய்யப்பட்ட காலணிகளை அவளுக்கு அளித்திருக்கிறார்கள் செல்லும் வழியில் பசும் குவியல்களாக ஒரே மாதிரியான செடிகளும் மரங்களும் தென்படுகின்றன. அவற்றில் சிலவற்றில் இளமஞ்சள் நிறத்திலும், வெண்மையாகவும் மலர்களோ முட்டைகளோ என்று புரிந்து கொள்ள முடியாத விசித்திர மலர்களைப் பார்க்கிறாள். தோளில் பெரிய பிரப்பங்கூடைகளில் அவற்றைச் சேமிக்கும் சிலரையும் பார்க்கிறாள்.
“அவர்கள், மிதுனபுரிச்சாலியர்.இவைதாம், பட்டுக்கூடுகள் அரசர்கள், பெருமக்கள் விரும்பி வாங்கும் பட்டாடைகள் நெய்வார்கள்.
உலு இந்தச் செய்திகளைக் கண்களை உருட்டியும், கைகளை அசைத்தும் சாடையாகத் தெரிவித்தாலும் அவள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால் புரிந்து கொள்கிறாள். வேடர்குடியில் இருந்து இளவட்டப் பெண்கள், குன்பி, மரீசி, ரீமு என்று பலரும் வருகிறார்கள். அரையில் வெறும் கச்சையணிந்து இருக்கும் இப்பெண்கள், நறுமண இலைகளைக் கொணர்ந்து கல்லில் தேய்த்து நீராடச் செய்கிறார்கள்.
“முன்பு இந்த வனத்துக்கு யாருமே வரமாட்டார்கள். யாரேனும் வந்தால், நஞ்சு தோய்ந்த அம்பை எய்துவிடுவார்கள். குறி தவறாமல் போய் விழும். ஆள் அங்கேயே விழுந்து இறப்பர்.”
“ஏன்?.”
“ஏனென்றால், ராசாக்கள் வந்து எங்களைப் பிடிச்சிப் போராங்க”
“எதற்கு?.”
“எதற்கு?.”
கண்களை அகற்றி, “உங்களுக்குத் தெரியாது?” என்று கேட்கிறாள்.
“அரண்மனைக்குக் கொண்டு போவாங்க” என்று சொல்லி, வெட்டுவது போலும் குத்துவது போலும் சைகை செய்கிறாள்.
“எதற்கு?”
“எதற்கு? யானை, ஆடு, மாடு, எல்லாம் புடிச்சிட்டுப் போறாப்பல எங்களையும் கொண்டு போவாங்க. இந்த எல்லையிலேந்து ஒருத்தர் கூடப் போனதில்ல. நச்சுக்கொட்டை காட்டுறேன் பார்.” என்று அடர்ந்த புல் பகுதியில் முழங்கால் மறையும் பசுமைக்குள் அடி வைத்து ஒரு வேர், கொட்டை இரண்டும் கொண்டு வருகிறாள். இதை அரைத்து, ஒரு மூங்கில் குடுவையில் வைத்திருப்போம். அம்பில் தோய்த்து விடுவோம். எங்கள் பிள்ளைகளில் சின்னஞ்சிறிசு கூடக் கவண்கல் குறி தவறாமல் விடும்.
அப்போது அவளுக்கு முதல் நாளைய வரவேற்பில் ஒரு சிறுவன் கையில் அதைக் கண்ட நினைவு வருகிறது.
“இப்போதும் அடிப்பார்களா உலூ?.”
“முன்னே நடந்திச்சி. மிதுனபுரிலேந்தும் வேதபுரிலேந்தும் யாரும் வரமாட்டார்கள். இந்தப் பட்டுக்கூடுகள் அறுந்து பறந்து கிடக்கும். பூச்சிகள் பறக்கும். யாரேனும் திருட்டுத்தனமாக அறுந்துதொங்கும் இழைகளை எடுக்க வரும்போது அம்பு பாயும்.”
“உங்களுக்கு இப்போது எப்படித் தைரியம் வந்தது?”
“சத்தியமுனிவர். ஒருநாள் அவரையே அடித்துவிட்டார்கள். அப்படியும் அவர் திரும்பத் திரும்ப வந்தார். அப்படியெல்லாம் யாரையும் யாரும் பிடிச்சிட்டுப் போக விடமாட்டோம்னு சொன்னாங்க. இப்ப அந்தக் காடு, இந்தக் காடு எல்லாம் ஒண்ணாப்போச்சி. சாலியர் வந்து இதெல்லாம் கொண்டு போவாங்க. நாங்களும் மிதுனபுரிச்சந்தைக்குப் போவோம். வேணுங்கற சாமானெல்லாம் கிடைக்கும். பானை, துடுப்பு, தட்டு, இந்த மூங்கில் வெட்டிக்கூடை பண்ணுவோம். பெரி.ய சந்தை. நந்தசாமிக்கு அதான் ஊராம். அங்கேகூட வயசான ராணியம்மா இருக்காங்களாம்.”
இவள் பேச்சில் சைகையே மிஞ்சி இருப்பதால் கொச்சை மொழியையும் புரிந்து கொள்கிறாள். இந்த மரங்கள், செடிகளை நட்டு வளர்த்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் காட்டும் அன்பு, அரண்மனைக்குள் அவள் கண்டிருந்த மகாராணி பணிப்பெண் அன்பு அல்ல. இவர்களுடன் கூட்டமாக உணவு கொள்வதே புதுமையாக இருக்கிறது.
பெரிய பானையில் பொங்கிய தானிய உணவு. அவித்த கிழங்கோ, மீனோ தெரியாத ஒரு மசியல். தேனில் பிசைந்த மாவு. எல்லோரும் கையில் தேக்கிலையோ வாழை இலையோ, ஏதாவதோர் இலையை வைத்துக் கொண்டு, சமமாக லூவோ, குல்பியோ போடுகிறார்கள். குடுவையில் நல்ல நீர்..
இது மீனா, இறைச்சியா என்றறியாமலே அவள் உண்ணுகிறாள். பகிர்ந்து உண்ணுதல். பிள்ளைகளும் அவளிடம் வந்து வாங்கிக் கொள்கிறார்கள்.
பெரியம்மா, வனதேவிக்கு புட்டு செய்து கொடுக்கச் சொன்னார். ராக்கன் வேதவதியில் இருந்து பெரிய மீன் பிடித்து வந்தான். அரண்மனையில் இதுபோல் இருக்குமா?
கவளம் நெஞ்சில் சிக்கிப் புரையேறிக் கொள்கிறது.
பெரியம்மா அவள் உச்சியை மெல்ல தட்டி குடுவை நீரைக் குடிக்கச் செய்கிறாள்.
அரண்மனையில் யாரோ நினைப்பார்கள்! சொல்லி சிரிக்கிறாள்.
“பெரியம்மா,... அரண்மனையில் இந்த மாதிரி உணவு கிடைக்குமா என்று கேட்டாளே? நிச்சயம் கிடைக்காது. இந்த மகாராணிக்கு ஒரு சிறு குழந்தைக்கு, சமையலறை ராதையின் பஞ்சைக் குழந்தைக்கு ஒரு விள்ளல் விண்டு கொடுக்க முடியாது. அங்கு அன்பு இல்லை. முள்வேலிகள்: முட்சுவர்கள். பெரியம்மா, இவர்கள் முன்பு நச்சம்பு போட்டு வெளியாட்களைக் கொன்று விடுவார்களாமே?”
“ஆமாம். முள்வேலிகளுக்கிடையில் இருந்து ஊழியம் செய்வதைக் காட்டிலும் தன்மானத்துடன் பட்டினி அதுபவிக் கலாம் என்று நினைத்தார்கள். வெளியாள் தென்பட்டால் கொன்று இழுத்து வந்து, அவன் எலும்புகளை மட்டுமே இக் காட்டின் அரணாகப் போட்டுவிடுவார்கள். அந்த இடத்தில்தான் நீ இருக்கிறாய். இங்கேதான் இந்த அன்பு விளைந்திருக்கிறது.”
பூமகள் எதுவுமே சொல்லத்தோன்றாதவளாக இருக்கிறாள்.