வனதேவியின் மைந்தர்கள்/12
12
நினைவுகள் பாலாய்க்குளிர்ந்து, பனியாய் உருகி, நெஞ்சு நிறைந்தாற் போல் புளகம் சூடுகின்றன. தெய்வீக இசையா இது? பறவைகளில் கூட்டுக் கலவையொலிகளா? பசிய மரங்களின் பெரிய பெரிய இலைகளில் நீர்த்துளிகள்.அவற்றில் கதிரொளி பட்டுச் சுடர் தெறிக்கிறது. அந்தச் சுடர் அவள் கண்களில் குளிர்ச்சியாக வருகிறது. இத்தகைய வாசக் கலவையை அவள் எங்கும், எப்போதம் நுகர்ந்ததாகப் புரியவில்லை. அரண்மனையின் கஸ்தூரி, சந்தனம், அகில் போன்ற வாசனைகளை அவள் நுகர்ந்திருக்கிறாள். அன்னத்துவிகளின் பஞ்சனையில் நறுமண மலர்களின் மென்மையான இதழ்களை அவள் உணர்ந்திருக்கிறாள். ஆனால், இங்கே, காட்சி, செவிப்புலன், நுகர்புலன் எல்லாமே இணைந்து முன்பின் அறிந்திராத ஒர் இலயத்துள் அவளை ஒன்றச் செய்திருக்கின்றன. இதுவே மானுடப் பிறவி எடுத்திருப்பதனால் எய்தக் கூடிய வீடுபேறோ? இது கணமோ? யுகமோ? அவள் மானோ? மயிலோ? கரடியோ? மீனோ? தத்தம்மாவோ? தாமரைத் தண்டோ? பாடித்திரியும் சிறு
வண்டோ?. எல்லாம் எல்லாம் அவள்.
அவள் அன்னையாகப் போகிறாள். அவள் குழந்தை. அன்னை மடியில், அவள் குழந்தை.
ஒடத்தில் கங்கை நடுவே அவள் இருக்கிறாள் பல்லக்கில் அவள் அசைந்து செல்கையில் தத்தம்மா தோளில் இருந்து மழலை பேசுகிறது. அதன் இனிமை ததும்புகிறது. சொல் புரிய வில்லை. அந்தப் புரியாத மழலையைக் காலமெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
“தேவி! பொழுது புலர்ந்து விட்டது; பூபாளம் இசைக் கிறார்கள். கண்மலருங்கள்!” அவந்திகாவின் குரல்.
“இனிய இலயங்களில் ஒன்றி இருக்கிறேன். அவந்திகா, எனக்கு மாளிகைக் சட்டதிட்டங்கள் எதுவும் வேண்டாம்!”
“மன்னர் வந்து காத்திருக்கிறார், தேவி! அவசரச் செய்தி போல் இருக்கிறது!”
அவள் திடுக்கிட்டுக் கண்விழிக்கிறாள். உணர்வுகள் கலைகின்றன.
அவள் கானகத்தில் புல்படுக்கையில் கண்ணயர்ந் திருக்கிறாள். காலை இளம் பரிதியின் கிரணங்கள் இதமாக அவளுக்கு முகமன் கூறுகின்றன. வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள்.
பறவைகள் அவளுக்கு உதய கீதமிசைக்கின்றன.“தத்தம்மா.” என்று கண்களை மேலே நிமிர்த்திப் பார்க்கிறாள்.
தத்தம்மாவைக் காணவில்லை.
தடாகக்கரையோரம். உச்சியில் முடிந்த முடியும் வற்றி உலர்ந்த மேனியும், ஒற்றை நாண் யாழுமாக.“டொய்-டொய்.நீ.ம். ரீம்..” சரக்கென்று எழுந்திருக்கிறாள். “நேசமுள்ளாரை நெஞ்சிலே நினைந்தாலே, போதும்”, “எந்தையே! என்னை வாழ்த்துங்கள்.” புற்றரையில் ஒரு முரட்டுக்காலணியுடன் நடந்து வரும் அவர்முன் பணிகிறாள். நீர் முத்துக்கள் அந்தக் காலணியின் இடைப்பட்ட மெலிந்த பாதங்களுக்கு அணிகளாய் வீழ்கின்றன.
அவர் அவளை மெல்லத் தோள்களைப் பற்றி எழுப்புகிறார்.
“நீ மங்களச் செல்வி ஆற்றுக்கரையில் உன் கிளி எனக்குச் சேதி கூறிற்று. உன்மீது எந்த மாசும் ஒட்டாது. உனக்கு எந்தத் துயரும் வராது, தாயே, உன் அருள் நெஞ்சில் எந்தச் சோகத்தின் நிழலும் கரையும்.வா, குழந்தாய்!”
“சுவாமி, மன்னருடன் கானகம் வந்த நாட்களில், உங்களை எங்கேனும் சந்திப்பேனோ என்று நாள்தோறும் நினைப்பேன். பல நாட்கள், காதம் காதமாக நடந்தோம். அப்போதெல்லாம் நீங்கள் காணக் கிடைக்க வில்லை. இப்போது, என் உள்ளார்ந்த தாபமே தங்களை இங்கே கொண்டு வந்து விட்டது. பெரியம்மா நலமாக இருக்கிறாரா? என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் சுவாமி!”
“நிச்சயமாக அங்கேதான் செல்கிறோம். உண்மையில், நீ சொன்னதை மனசில் எண்ணிக் கொண்டு, மன்னரையும் கண்டு உங்களை அழைத்துச் செல்லவே நான் வந்து கொண்டிருந்தேன். ஒடக்காரர் ஒருவர், காலையில் தான் இளவரசரும் மகாராணியும் ஆறு கடந்து சென்றார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். புரியவில்லை. உடனே உன் கிளி “உண்மை, உண்மை.” என்று சொல்லிப் பறந்து சென்றது.”
தடாக நீரில் புதுமை பெற்று, கனிகளைப் பறித்துப் பசியாறிக் கொண்டு அவர்கள் நடக்கிறார்கள். பூமைக்குக் களைப்பே தெரியவில்லை. வழியெல்லாம், சிறுமிப் பருவ நினைவுகளை மகிழ்ச்சி பொங்கப் புதுப்பித்தவளாய் அவருடன் நடக்கிறாள். பசியாறக்கனிகளுக்குப் பஞ்சமில்லை. மேலாடை உள்ளாடைகள் தவிர, அணிகளில்லாத நிலையில், அந்தக் கோமகள் கருவுற்ற நிலையில், அற்பமான இன்னல்கள் என்று அவற்றை வென்ற வண்ணம் நடக்கிறாள். வழியில் வேடர் குடில்கள் வருகின்றன.
அவர்கள் இந்தப் பூமகளுக்கு மாற்று மரவுரிகளும் தோலாடைகளும் தருகிறார்கள். பட்டாடைகள் துய்மை பெற்று, மீண்டும் அவள் இடையில் இசைகின்றன. “உங்களுக்கெல்லாம் நான் ஆடைகள் எடுத்து வைத்தேன். என் விதி இப்படி ஆயிற்றே” என்ற சோகம் முகசந்திரனின் நிழலாகப் படிகிறது.
அவர்கள் பதமான இறைச்சி உணவும், இலுப்பைப் பூவின் மதுவும் தருகிறார்கள். அவள் இன்ன உணவென்று தெரியாமலே அவற்றைக் கொண்டு, களைப்பும் சோர்வும் மாறுகிறாள். பிரியா விடைபெற்று, தாயை, தன் தாயிடத்தைக் காண மீண்டும் பயணம் புறப்படுகிறாள்.
வானளாவும் மரங்கள். பெரிய பெரிய இலைகள். சுற்றிச் கற்றிக் கொடிகள். மூலிகை மணங்கள். புற்றரையில் குளிர்ச்சி படிந்திருக்கிறது.
அங்கிருந்து பார்க்கையில், ஏதோ நிலத்தில் கருமேகம் படை திரண்டு வந்தாற்போல் தோன்றுகிறது.
அங்கேயே நின்று உற்றுப் பார்க்கிறாள்.
அது யானைக் கூட்டம். தலைவன் குஞ்சு குழந்தைக் குடும்பங்கள் ஆண், பெண் என்று செல்கின்றன.
அமைதியாக அவை செல்வதைக் கண்டு அவள் வியப்படைகிறாள். இவை எத்துணை ஒற்றுமையாகச் செல்கின்றன? முன்னால் செல்லும் யானை தும்பிக்கையில் தான் செல்லும் இடம் - தரைப்பகுதி உறுதியுடன் கூடிய நிலமா, அல்லது, பத்திரமில்லாமல் கால் வைத்த உடன் உள்ளே இழுக்கும் பொறியா என்று சோதிப்பது போல் பார்த்துக் கொண்டே செல்வதைப் பார்க்கிறாள்.
“மனிதர். அதுவும் மன்னர்கள் எத்துணை கொடியவர்கள்! இந்த விலங்குகளைத் தந்திரமாகப்பிடித்து, இவர்களுடைய மண்ணாசைக்குப் பலியாக, போரிடப்பழக்குகிறார்கள்.மதுவைக் குடிக்கச் செய்து பகை மன்னரின் கோட்டைச் சுவர்களைத் தகர்க்கச் சொல்வார்களாம்! அப்படியா சுவாமி!”
நந்தமுனி புன்னகை செய்கிறார்.
“அதைப்பற்றி நாம் ஏன் இப்போது சிந்திக்க வேண்டும். நாமும் இப்போது அந்த யானைக் கூட்டத்தோடு போகிறோம். நமக்கு அவர்கள் நண்பர்கள். அவர்கள் எங்கே போகிறார்கள் தெரியுமா?”
“எங்கே?.”
“நாம் எங்கே போக வேண்டுமோ அங்கே தான் போகிறார்கள். வாழை வனம்”
“வாழை வனத்தில் யானை புகுந்து அழிக்குமா?”
“யானைகள் அழிக்காது. யானைகளோ வேறு விலங்குகளோ வனங்களை அழிக்கா. மனிதர்தாம் அழிப்பவர். யானைகள் உணவு தேடிச் செல்லும், இன்ன இன்ன இடங்களில் உணவு இந்தந்தக்கால இடைவெளியில் கொள்ளலாம் என்ற உணர்வு அவைகளுக்கு உண்டு. வாழை வனம் வந்து இந்த மந்தை இப்போது உண்டு சென்றால், மீண்டும் ஒரு பருவம் வந்தபின் வரும் போது செழித்திருக்கும். யானைகள் உண்டு வனங்கள் அழிந்ததாக வரலாறே இல்லை. முன்பு ஒரு முறை மிதுனபுரி மன்னர் அவ்வனத்தை அழித்தார் என்பார்கள். யானைகள் வருவதைத் தடுக்க முடியவில்லை. நாம் அவைகளுக்குத் தீமை செய்யவோ, கிடங்கில் தள்ளிப் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து அடிமைகளாக்கவோ முயலுகிறோம் என்றால் காடு கொள்ளாமல் பிளிறி, நாசம் செய்யும். எத்தனை கயிறுகள் கட்டினாலும் அறுத்துவிடும். மனிதர் கிட்ட வரவொட்டாமல் குதித்து, அறைந்து கொல்லும். ஏன், குட்டியைப் பற்றி விடுவார்களோ என்று தாய் குட்டியைக் கூடக் கொன்று விடும். அதுவும் உண்ணாமல் இருந்து மடியும். மனிதர் செய்யும் பாவங்களில் தலையாயது இத்தகைய பிராணிகளை அடிமையாக்குவது தான்!...”
“என்னை அதுபற்றிச் சிந்திக்க வேண்டாம் என்று சொல்லி விட்டுத் தாங்கள் பேசுகிறீர்களே?”
“இல்லையம்மா.
வையம் குளிர்ந்தெழ, கான்பகங்குடைவிரிய,
நெஞ்சில் அன்பு சுரக்கும்; பஞ்சமில்லை; பசியுமில்லை.”
ஒற்றை நாணின் ஒலியில் வையமே ஒன்றுவதுபோல் தோன்றுகிறது. எங்கோ வானவெளியில் சஞ்சரிப்பது போல் அவள் காற்றைப்போல் இலேசாகிறாள். யானைக்கூட்டத்தின் மிக அருகே அவர்கள் செல்கிறார்கள். பூமகள் பயிற்சி பெற்ற யானைகளின் அணி வகுப்பைப் பார்த்திருக்கிறாள்.
பொன்னின் முகபடாம் தரித்த பட்டத்து யானை மீது, பொற்பிடப் பட்டு ஆசனத்தில் அவள் ஏறி அமர்ந்து ஊர்வலம் வந்திருக்கிறாள். இப்போது அதை எல்லாம் நினைத்து உள்ளுற நாணி, வருத்தம் கொள்கிறாள்.
அருகில் வரும்போதுதான், யானைகளின் முதுகுகளில் படிந்த செம்புழுதியும், ஒருவித வாசமும், இவை திருந்தா யானைகள் என்ற உணர்வைத் தருகின்றன. முரட்டுத்தனமாக ஒன்றையொன்று விஞ்சிக் கொண்டு முன்னேறிச் செல்கின்றன. ஒரு தாய் யானை, சிறு குட்டியை இரண்டு கால்களுக்கிடையில் பாதுகாப்பது போல் நடந்து செல்லும் விந்தையைப் பார்க்கிறாள். முன்னே செல்லும் கரிய கொம்பன், தலைவன் போலும் அது முன்னே சென்று, சிறிது நேரத்துக்கொருமுறை திரும்பிப் பார்த்து நின்று கூட்டம் தொடருகிறதா என்று பார்க்கிறது.
மான் கூட்டமும் இப்படித்தான். ஒரு தலைவர், அல்லது மன்னர், வழிகாட்டலில் எதிர்ப்புகளை, இன்னல்களை வென்று முன்னேறி, உணவு தேடிப்பசியாறி, இனம் பெருக்கி.
அவள் அம்மையின் அரவணைப்பில் அபாயம் அறியாமல் திமிறிச் செல்லும் குட்டியையே பார்க்கிறாள்.அந்தக் குட்டியைப் பற்றி அதைக் கொஞ்ச வேண்டும் போல் இருக்கிறது.
“அந்தக் குட்டியை நான் தொட்டுக் கொஞ்சலாமா, சுவாமி?”
அவர் சிரிக்கிறார். பிறகு அவளைப் பற்றி அருகே அழைத்துச் சென்று தாய் யானையைத் தொடச் செய்கிறார். அவள் பரவசமடைகிறாள். யானைக் கூட்டமே நிற்கிறது. முதலில் சென்ற கொம்பன் திரும்பிப் பார்க்கிறது. அப்போது, நாடி நரம்புகளில் அச்சத்தின் குளிர்திரி ஒடச் சிலிர்க்கிறாள்.
காட்டு யானைக் கூட்டத்தின் இடையே புகுவது சரியன்று: மனிதர்கள் அருகில் கண்டால் இழுத்துத் தள்ளி மிதித்துக் கொல்லும் என்று சொல்வார்கள். கோதாவரிக்கரையில் யானைகள் நீர் குடிக்க வரும். அப்போது, அவள் நாயகன் எச்சரித்து, இளையவரை வில்-அம்புடன் நிற்கச் செய்வான்.
அருகில் இருந்து அக்கூட்டத்தைப் பார்த்தவாரே. குட்டியானையைக் குனிந்து தடவிக் கொடுக்கிறாள். அப்போது தான் கூட்டத்தில் நான்கைந்து யானைக்கன்றுகள் இருப்பது தெரிகிறது. ஆண்கன்று ஒன்று முளைத்த கொம்புடன் மற்றவரை நெட்டித் தள்ளுகிறது. தும்பிக்கை வளைத்து ஆட்டம் ஆடித் தன் துருதுருப்பை வெளியாக்குகிறது. குடுகுடென்று அது ஒடி ஏதோ ஒரு கிளையை ஒடித்து வாயில் திணித்துக் கொள்கிறது. அதன் தாயோ, தந்தையோ, அதன் வாயைப் பற்றி இழுத்து, ஏய் சும்மா இரு’ என்று மிரட்டுகிறது.
பூமகள் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு அந்தக் குட்டியானையைத் தடவிய வண்ணம் இருக்கிறாள்.
அப்போது நந்தமுனி, “கஜராஜா!” என்று குரல் கொடுக்கிறார். முன்னே சென்ற கொம்பன் திரும்பிப் பார்க்க, நந்தமுனி அதன் அருகில் செல்கிறார். குறும்பு செய்யும் கன்று குடுகுடுவென்று வருகிறது. குட்டி ஒன்று தாயின் மடியை முட்டுகிறது; செல்லமாகக் குரல் கொடுக்கிறது ஒரு கிழட்டு யானை. முன்னே வந்து தலைமைக் கொம்பனுடன் உராய்கிறது.
நந்தமுனி கொம்பனைத் தட்டிக் கொடுக்கிறார். அது துதிக்கையை நீட்டுகிறது. அவர் இரண்டுக் கனிகளை முடிந்து அரைக்கச்சில் வைத்திருக்கிறார். அதைக் கொடுக்கிறார்.
யானை அதை வாங்கி வாயில் போட்டுக் கொள்கிறது. பிறகு, தழைந்து குனிந்து, முன் காலை மடித்து, படி போல் நீட்டுகிறது.
“குழந்தாய், இந்தக் கொம்பன் ஒன்றும் செய்யாது. ஏறிக் கொள்.”
அவள் கையைப் பற்றி வந்து, துதிக்கையைத் தடவிக் கொடுக்கச் சொல்கிறார். முன்னங்காலைத் தடவிவிட இன்னம், இன்னம் என்று காட்டுகிறது. பிறகு நன்றாக அமர, முதுகைத் தடவி விடுகிறாள்.
“பார்த்தாயா மகளே? இவற்றுக்கு நம் அன்பு வேண்டும். ஆனால் நாம் அன்பு செய்யாமல் கொலை வெறி ஊட்டுகிறோம்; நாசம் செய்யத் துரண்டுகிறோம். ஒவ்வோர் உயிரும் வாழத்தான் உயிர்க்கிறது; உண்டு இனம் பெருக்கி, மடிந்து உயிர்ச்சங்கிலியை மாயாமல் வைக்கிறது. இதுதான் இயற்கை நமக்குச் சொல்லித்தரும் பாடம்.”
“மத்தா, கஜராஜா, இவளை முதுகிலேற்றி வருகிறாயா? உன்னால் முடியுமே? பலவீனருக்கு உதவுவது உன் தர்மமாயிற்றே?”
பூமகளுக்கு, என்றுமில்லாமல் ஓர் உவகை மலர்கிறது. அடிமனதில் கனத்தோடு கூடிய ஒரு மரியாதை மேவுகிறது. அதன் முதுகில் ஏறி அமருகிறாள். “மத்தா, உன் குறும்பையோ, ஆட்ட பாட்டத்தையோ தாங்க மாட்டாள். ஒர் உயிரைச் சுமக்கிறாள். கவனமாகச் செல்..” என்று உரைக்கிறார்.
அது அடி எடுத்து வைக்கையில் அவள் அஞ்சி அதன் பிடரியைப் பற்றிக் கொள்கிறாள். மரக்கிளையில் ஊஞ்சலாடுவதுபோலும் குலுங்குவது போலும் விழுந்து விடுவது போலும் அச்சம் பரபரக்கிறது. மத்தன் அவளை ஏற்றி இருக்கும் உற்சாகத்தில் கர்வம் கொண்டு நடந்து செல்வது போல் தோன்றுகிறது. நந்தமுனி பின் தங்கிவிட்டார்.
இவள் “சுவாமி, சுவாமி!” என்று குரல் கொடுக்கிறாள். புல்வெளிகள் கடந்து, மரங்கள், பறவைகள் மரங்களின் உயரத்தில் பறக்கும் ஒசைகள், எல்லாமே அச்சமூட்டுகின்றன.
வழியில் மரக்கிளைகளை ஒடித்து அவை உண்ணுகின்றன. பூமகளுக்கு இறங்கி விடலாம் போல் இருக்கிறது.
“அஞ்சாதே குழந்தாய், உனக்கு ஒர் அபாயமும் வராது. உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராது.”
அவர் எவ்வளவு கூறியும் பூமகளுக்கு அமைதி வரவில்லை. இது என்ன விளையாட்டு மானைப் பிடித்துத் தரச் சொன்னேன். கொன்று விடக்கூடாதென்று. அதுபோல் யானைக்கன்றிடம் சிநேகம் பாராட்டியது இந்த விளைவுக்கு ஆதாரமாகி விட்டதே? விதியின் சூழ்ச்சியா?
இன்னும் என்ன விதியின் சூழ்ச்சி இருக்கிறது?
திடமாக இரு மனமே! நந்தமுனி, காப்பாளர், இந்த நேரத்தில் நேயமுடன் வந்த மாமனிதர். அவர் சொல்வதில் சத்தியம் உண்டு.
யானைகள் அந்திசாயும் நேரத்தில் ஒர் ஆற்றுக்கரைக்கு வருகின்றன. கரை முழுவதும் வரிசையாகச் செவ்வரளிப் பூக்கள்.
அந்தச் சூரியனின் ஒளியில் அந்த ஆறு பொன்னாய்த் தகதகக்க ஒர் அற்புத உலகம் அவள் கண்முன் விரிகிறது.
“இறங்கலாமம்மா! நம் இடம் வந்து விட்டோம். இதுவே வேதவதி ஆறு.”
அவள் இறங்க வசதியாக, மத்தன் குனிந்து தழைந்து, காலை மடித்து, அவள் பாதம் ஏந்துகிறான். அவள் இறங்குகிறாள்.
ஒருகணம் உலகமே சுழல்வது போல் தோன்றுகிறது. கண்களை மூடிக் கொள்கிறாள். என் இடம். வேதவதிக்கரை. என் தாய் மண். தாயே உனக்கு வணக்கம். நான் அநாதை இல்லை. உணர்ச்சிகள் கொப்புளிக்க அவள் விம்மி அழுகிறாள்.