வனதேவியின் மைந்தர்கள்/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

11

அவன் செல்வதையே அவள் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். கண்கள் அவன் வரிவடிவக் கோட்டில் தன்னுணர்வின்றி ஒன்றுகின்றன. இளையவர்.இளையவர்.

அந்நாளில் மானின் பின் அதைக் கொல்லச் சென்ற அண்ணனுக்குத்துணை போகாத இளையவன்.அண்ணன் அதைக் கொல்லுமுன், அதை அவர் அம்பிலிருந்து காப்பாற்று என்று போகச் சொன்னாள். இளையவன் மறுத்தான். இவனுக்கென்று ஒரு தனி எண்ணம் கிடையாது. அண்ணன் கொலை செய்வதை ஆதரிப்பவன். அவன் நிழல். அவள் ஆத்திரத்துடன் போ... போ... போ! ஏன் இங்கே நிற்கிறாய்? எனக்குக் காவலா? எனக்கு நீ காவலா, அல்லது சமயம் பார்த்திருக்கிறாயா என்று தீச்சொல்லை உமிழ்ந்தாள். அந்தத் தீச்சொல்லும் அவனை விரட்டவில்லை. ஒரு கோட்டைப் போட்டுவிட்டுச் சென்றான்.

‘நீ என்ன எனக்குக் கோடு போடுவது! நான் உன் அடிமையா! கானகம் என்னுடையது; என் அன்னை மடி: நான் எங்கும் திரிவேன்” என்று அந்தக் கோட்டை அழித்தாள்.

இன்று எந்தக் கோடும் இல்லை. அவன் போகிறான்.

அவன் கையில் வில்லும் அம்பும் இல்லை.

அண்ணன் அரக்கர்களை அழித்துவிட்டான். எனவே கானகம் அபாயமற்றது என்று நினைத்தானா? கானகம் அவளுடையது; ஆசைப்பட்டாள்; கொண்டு வந்து விட்டிருக்கிறான். ஆசை. கருவுற்றவள், நிறை சூலியாக இருக்கும்போது, ஆசையை நிறைவேற்ற தன்னந்தனியாக அனுப்பி வைத்திருக்கிறான்.

அவளுக்கு உடலில் சிலிர்ப்பு உண்டாகிறது. கானகம். தண்டனையா? அடிமைப் பெண்களும் அறுசுவை உண்டியும், பஞ்சணை இனிமைகளும் இல்லாத கானகமும், தனிமையும் தண்டனை என்று மெய்ப்பித்திருக்கிறார்களா?

அவந்திகா! சாமளி பெட்டியைத் துக்கிக் கொண்டு மகாராணியைப் பரிசில்களுடன் அனுப்பி வைக்க வந்தீர்களே! உங்கள் மகாராணி நாடு கடத்தப்பட்டிருக்கிறாள். பேதைப் பெண்களா! உங்கள் மகாராணி இனி மகாராணி இல்லை. முழுதுமான பேதை, நீங்கள் இனி யாருக்கு ஊழியம் செய்யப் போவிர்கள்?

அவளுடைய இந்த எண்ண மின்னல்கள், மதுக்குடம் பொங்கிவரும் நுரை போன்ற சிரிப்பாய்ப் பொங்கி வருகிறது: அவள் உரக்கச் சிரிக்கிறாள். அந்தக் காட்டில் பெரிய மாளிகை போல் விழுது பரப்பி நின்ற ஆலமரத்தினடியில், அங்கு குடியிருந்த பல்வேறு உயிரினங்களின் அரவங்களும் அடங்கிவிட, இவளுடைய சிரிப்பு மட்டும் நெடுநேரம் இவளுக்கு ஒலிப்பதாக உணருகிறாள். அந்தச் சிரிப்பு அவளுக்கே அந்நியமாகப்படுகிறது. அவள் சிரிப்பை நிறுத்தியதும் அங்கிருந்த பறவைக் கூட்டங்கள் சிறகடித்து வட்டமாகப் பறக்கின்றன; தங்கள் தங்கள் மொழியில் கூச்சல் போடுகின்றன. ஆலமரப் பொந்தில் சுருண்டு கிடந்த கருநாகம் ஒன்று விருவிரென்று வெளியே வந்து, குடை விரிப்பது போல் படம் எடுத்து அவளுக்குச் சற்று எட்டிய தொலைவில் முகம் காட்டி வரவேற்பு அளிக்கிறது.

சற்று எட்ட, கூட்டமாகச் செல்லும் மானின்ம், அவள் அங்கு இருப்பதைக் கண்டுவிட்ட நிலையில் கூட்டத்தோடு நின்று பார்க்கிறது.

இப்போது அவளுக்கு இன்னும் சிரிப்பு பொங்கி வருகிறது.

“தோழிகளே, தோழர்களே, வாருங்கள். இங்கு வில் அம்பு, வாள், ஈட்டி கவண்கல் எதுவும் கிடையாது. என்னை நம்புங்கள். நான், நான் மட்டுமே இங்குள்ளேன்!”

அவள் சருகுகள் கால்களில் மிதிபடும் மெல்லோசை கேட்க, மான் கூட்டத்தின் அருகே சென்று ஒரு குட்டி மானைப் பற்றித் தன் மென் கரங்களால் தடவிக் கொடுக்கிறாள். அதன் கழுத்தோடு அணைந்து இதம் அநுபவிக்கிறாள். அதன் உறவுக்குழு, அவளால் ஆபத்தொன்றுமில்லை என்றுணர்ந்து அருகில் உள்ள தடாகக்கரைக்கு நகருகிறது. இவளும் தடாகக் கரைக்கு வருகிறாள். எத்தனை நீர்ப்பறவைகள்! அன்னப் பறவைகள் - சிவந்த மூக்கும் வெண்துவிகளுமாக ஒற்றைக்கால் தவமிருக்கும் கொக்கு முனிகள். கதிரவனைப் பார்த்து மலர்ந்து நேயம் அதுபவிக்கும் தாமரைகள். நீலரேகை ஒடும் செந்தாமரைகள் வட்டவட்டமான இலைகளில் முத்துக்கள் இை ழவதும் சிதறுவதுமான கோலங்கள்.வண்டினம் வந்தமர்ந்து தேன் நுகரும் ஆரவாரங்கள்.

பூமகள், அருகில் ஒடும் ஒரு மரத்து வேர்த்தண்டில் அமர்ந்து தடாகத்தில் கால்களை நனைத்துக்கொள்கிறாள். பளிங்கு போன்ற நீர். மீன்கள் அவள் பொற்பாதங்களில் மொய்த்து, பாதசேவை செய்கின்றன.

“அடி, தோழிகளா,போதுமடிசல்லாபமும் சேவையும் நான் தன்னந்தனியாக வந்திருக்கிறேன். புதுமணப்பெண் அல்ல, குறுகுறுத்து நாணுவதற்கு!” என்று கூறிக் கொண்டு கரங்களால் நீரை அள்ளி எடுத்து அவற்றை விரட்டுகிறாள். அது பெரிய தடாகம். மான்கள் எட்ட எதிர்க்கரைக்கு நகர்ந்து போகின்றன. அருகே, புதரிலிருந்து வெளிப்படும் கரடி ஒன்று, சட்டென்று நீரைக் கலக்கிக் கொண்டு மூழ்கி, எழும்புகையில் அதன் வாயில் ஒரு பெரிய மீன் சிக்கி இருக்கிறது.

இவள் கலீரென்று சிரிக்க, அது திடுக்கிட்டாற்போல் அதிர, மீன் நழுவித் தண்ணிரில் விழுகிறது.

“.... கரடி மாமி? உனக்குப் பழமில்லையா? புற்றாஞ்சோறு இல்லையா? தேனில்லையா? ஏன், பாவம், மீனைப் பிடித்து வதைக்கிறீர்கள்?’ என்று அருகில் சென்று அதன் தலையைத் தடவிக் கொடுக்கிறாள். பொச பொசவென்ற முடி நனைந் திருக்கிறது. பட்டுப்போல் மென்மையாக உணருகிறாள். “ஓ! உனக்கும் மசக்கையா? அதனால்தான் மீன் பிடிக்க வந்தாயா?... எனக்கும் மசக்கை ஆசை, ஆனால் இப்போதுதான் மன்னர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்.”

இவள் கைச்சுகத்தில் அந்தக் கரடி கட்டுப்பட்டாற்போல் நிற்கிறது. “உனக்கு மன்னர் இருக்கிறாரா?. இருக்கமாட்டார். இருந்திருந்தால் உன்னைக் காடு கடத்தி, நாட்டு மனிதர்களிடம் அனுப்பி வைத்திருப்பாராக இருக்கும். மாற்றான் வீடு, சிறை, அக்கினிகுண்டம், ஆண்டான், அடிமை எதுவும் இல்லாத உங்கள் உலகம் எனக்குப் பாதுகாப்பானதுதானே?.”

வெயில் ஏறுவது உறைக்காமல் குளிர்ச்சியின் பாயல் படிகிறது. இதமான ஒலிகளும், நீரும் நிழலும், ஒளியும் அவளுக்கு இதமான தாலாட்டுப்போல் சூழலோடு ஒன்ற வைத்து பேரின்பப்படிகளில் ஏற்றுகின்றன. கரடி மீண்டும் மீன் பிடிக்க நீரில் மூழ்குகிறது.

ஒர் எறுப்புச்சாரி, வாயில் வெண்மையாக எதையோ கவ்விக் கொண்டு மரத்தின் மேல் ஏறுகிறது. அவள் நிமிர்ந்து பார்க்கிறாள். இது என்ன மரம்? அரசா? இலைகள் சிறியவை: சூரிய ஒளியில் துளிர்கள் வெள்ளிக்காககள் போல் மின்னுகின்றன; நீரில் நிழல்கள் ஜாலம் செய்கின்றன. சரசரவென்று பறவைகளின் இறக்கைகள் படபடக்கும் ஒசை கேட்கிறது. மரக்கிளைகள் குலுங்குகின்றன. சிவப்பும் மஞ்சளுமாகக் கனிகள் இரைகின்றன.

ஒ.? அதுமனின் குலத்தாரோ?

அதுமன் செய்தி அனுப்பியிருப்பானோ? அந்தக் கனிகளைப் பொறுக்கி முன் மரத்தின் மேல் நிமிர்ந்து பார்க்கிறாள். அந்தக் குரங்கு, குட்டியை மடியில் இடுக்கிக் கொண்டு தாவித்தாவிப் போகிறது. மரத்துக்கு மரம் தாவிச் செல்கின்றன. பல குரங்குகள். அவள் காத்துக் காத்து அருகே செல்கிறாள். எந்தச் சேதியும் யாரும் அனுப்பவில்லை. குரங்கினம் அப்பால் சென்று விட்டது. கீழே செங்காயாகக் கிடக்கும் கனி ஒன்றை எடுத்துக் கடிக்கிறாள். விருவிரென்று இனிப்பும் துவர்ப்புமாக ஒரு சுவை ஆரோக்கியமாகப் பரவுகிறது. நந்தமுனியின் நினைவு வருகிறது.

அவர் இப்போது எங்கே இருப்பார்?. அவர் இங்கே இப்போது வந்தால் எத்துணை நன்றாக இருக்கும்?

அப்போது ஒசைப்படாமல் அவள் தோளில் வந்திறங்குகிறது ஒரு கிளி.

அவள் கையிலிருக்கும் செங்கனியைக் கொத்துகிறது. மனதோடு ஒரு பேரின்ப வாரிதி அலை மோதுகிறது.

“தத்தம்மா! தத்தம்மா? என் உயிர்த்தோழி தத்தம்மா தானா? எனக்கு இது கனவல்லவே?.”

அது அந்தக் கனியை உண்ணவில்லை. கொத்திக் கொத்தித் திருவிப் போடுகிறது.

“என் தத்தம்மா இல்லை. ஆனாலும், நீ என் தோழியாக வந்திருக்கிறாய். என் தனிமையைப் போக்குவாய். உனக்கு நான் கதைகள் சொல்வேன்; பாடல்கள் இசைப்பேன். உன்னைக் கூட்டில் அடைக்கும் சாதியில் பட்டவளல்ல நான். நான் பூமகள். பூமிஜா, உன் பிரியமான தோழி. சொல்லு!” என்று அதைத் தடவிக் கொடுக்கிறாள்.

“ஏய், உன்னை நான் தத்தம்மா என்றே கூப்பிடுகிறேன். ஏன் குரலேகாட்டாமலிருக்கிறாய்! ஊமையா நீ? பறவைகளில் ஊமை உண்டா? நீ என் தத்தம்மா போலவே இருக்கிறாய். அது ஒருநாள் காயம் பட்டு வீழ்ந்தது. அதை எடுத்து இதம் செய்தேன். தோழியாக்கிக் கொண்டேன். மன்னர் பெயரைச் சொல்லப் தே கிக் சொல்ல பழக்கினேன். பேச்சுப் பழக்கினேன். பிறகு ஒருநாள் அது மன்னர் பெயரைச் சொல்ல மறுத்துவிட்டது. மன்னர் பெயரை நான் ஏன் சொல்ல வேண்டும்?; நீதான் எனக்குத் தோழி, எல்லாம் தருகிறஇவள் கூறிமுடித்துக் கன்னத்தோடு பட வைக்கையில் கண்களில் இருந்து வெம்பனி உருகி வழிகிறது.

“தத்தம்மா தத்தம்மா... நீ... நீயா..? நீயா..? ஆம், உன் அடிவயிற்றில் வடு...”

என்று தடவுகிறாள். “தத்தம்மா? நீ காட்டுப்பூனைக்கு விருந்தாகிவிட்டாய் என்றார்கள். எங்கேயடி போயிருந்தாய்? ஊர்சுற்றிவிட்டு என்னைத்தேடிக் கண்டுபிடித்தாயா? தத்தம்மா?”

அதை மார்போடு அணைத்துக் கொள்கிறாள். கன்னத்து வெம்பனியில் சிறகு நனைகிறது.

“பூமிஜா, தாயே, எனக்கு உன்னைப் பார்க்க தாளவில்லை. அநியாயம் நடக்கிறது. அந்தப் பெரிய அரண்மனையில் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியாது. அந்த ஜலஜை, நஞ்சருந்தித் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.” ஒரு கணம் உலகத்துத் துடிப்புகளே நின்றுவிட்டாற்போன்று அவள் திகைக்கிறாள்.

“ஆம், நச்சரளி விதையருந்தி மாண்டு கிடந்தாள். நீங்கள் வனவிருந்தாடச் சென்றீர்களே அப்போது அன்று காலையில்.”

“அதனால்தான் எங்களை அவசரமாக அனுப்பி வைத்தார்களா, தத்தம்மா?”

“இருக்கும். என்னால் இப்பிறவியில் உங்களை அடைய முடியவில்லை. அடுத்த பிறவியில் உங்களை அடைவேன். என்றாளாம். இந்தப் பேச்சு அனைத்துப் பணிப்பெண்கள் வாயிலும் அரைபட்டது. அரக்கனின் நெஞ்சில் தகாத இச்சை பிறந்த குற்றம் உங்களுக்குத் தண்டனையாயிற்று. சிறையிருந்தீர்கள், எரிபுகுந்தீர்கள். சத்தியத்தை நிரூபித்தீர்கள். இப்போது அதே புள்ளி விழுந்திருக்கிறது. சத்தியத்தை யார் நிரூபிக்க வேண்டும்?”

“தத்தம்மா!”

நெஞ்சிலிருந்து வெடித்துவரும் அலறல் போல் ஒலிக்கிறது.

“தாயே உங்களுக்குக் கோபம் வரும். அந்த ஜலஜாவின் புருசன் துணி வெளுப்பவன், அவளை வெகுண்டு கடிந்தானாம். உன் சரிதை எனக்குத் தெரியும் வராதே என்றானாம். அவள் வந்து முறையிட்டுவிட்டு, மாண்டு போனாள். அப்போது, மன்னர் எந்த வகையில் நியாயம் செய்ய வேண்டும்?”

எந்த வகையில்...? அக்கினிகுண்டமும் நாடுகடத்தலும் பெண்ணுக்கு மட்டுமா?

“தாயே, தங்களைப் பார்க்குந்தோறும் அவர்களுக்கு மனச்சாட்சி கூர்முள்ளாக உறுத்தும். எனக்கு உயிர்வாழவே பிடிக்கவில்லை. காட்டுப்பூனை கவ்வட்டும் என்று நானே வலியச் சென்றேன். அது என்னைத் தோட்டம் வரைக்கும் கொண்டு சென்ற பின் அஞ்சி விட்டுவிட்டது. பிறகு.”

அவள் மனதில் கரும்படலத்தில் வரும் மங்கிய காட்சிகளாக இளையவன் வந்ததும் ஆணை என்றதும் கிழட்டுச் சுமந்திரர் தேரோட்டியதும் வருகின்றன.

முள் உறுத்தாமலிருக்க, சத்தியத்தைக் கொல்வதா? எது சத்தியம்? எது முள்? முள்ளை மறைக்க முள் படலத்தையே அதன்மீது போடுவதா? இளையவருக்கு நான் இந்த அநியாயம் செய்ய மாட்டேன் என்று சொல்ல அறிவு இல்லையா? அன்னை கைகேயிக்கு இது தெரியுமா? கிழட்டு மந்திரிக்கு நியாய உணர் வே செத்துவிட்டதா? ஊர்மக்கள் இதை ஒத்துக் கொள்கின்றனரா?.

ஒருகால் இவள் குலம் கோத்திரம் அறியாத அநாதை என்பதால் இந்த நியாயம் செல்லுபடியாகிறதோ?

ஜலஜாவின் முகம் கண்களில் தெரிகிறது.

பெண்ணொருத்திக்கு ஒர் ஆண்மகனை விரும்ப உரிமை கிடையாது.அன்று மூக்கையும் செவியையும் அரிந்தார்கள் பெண் கொலைக்கு இவர்கள் கூசியதில்லையே? பொன்னிறமான சுருண்ட கூந்தலும். பளிங்கு விழிகளும், பொன் மேனியுமாக உலவிய ஜலஜையின் மீது அளவிறந்த இரக்கம் மேலிடுகிறது.

அவள் எந்த உயர்குல அழகியின் வயிற்றில் உதித்தவளோ? அல்லது ஒர் அடிமையின் உடலை எந்த உயர் குலச்சீமான் ஆண்டு தாயாக்கினானோ? தந்தை தெரியாத பாவிக்குத்தான் சாத்திரத்திலும் கோத்திரத்திலும் இடமில்லையே?

... அடிப்பாவிப் பெண்ணே! உயிர் உனக்கு அவ்வளவு எளிதாகிவிட்டதா?

தத்தம்மா ஒரு வட்டம் சுற்றிவிட்டு அவள் முன் வந்து அமருகிறது.

“நான் தோட்டத்தில்தான் இருந்தேன். உன் சுவாசக்காற்று இழையும் இடமாகப் பறந்து வந்தேன். உன் கவடறியாத துயரத்தில், நானும் பங்கு கொண்டு தேரின் பின்புறமும், படகின் பின் விளிம்பிலும் ஒளிந்து வந்தேன். எனக்கு இளவரசரைக்குத்திக் காயப்படுத்த வேண்டும் என்று வெறியே ஏற்பட்டது. ஆனாலும் உனக்குப் பதட்டம் ஏற்படக்கூடாதே என்று பொறுத்தேன்.”

மன்னர் செய்த இந்த அநியாயத்தின் நிழல், காலமெல்லாம் ஒளிபாய்ச்சினாலும் போகாது.

அவள் துயரத்தை விழுங்கிக் கொண்டு சிலையாய் இறுகினாற்போல் அமர்ந்து இருக்கிறாள்.

அகலிகை நினைவுக்கு வருகிறாள். சதானந்தரின் தாய். அவள்மீது பாவத்தின் கருநிழல் படிந்தது; முனிவர் விட்டுச் சென்றார். கல்லாய் இறுகினாற்போல் வாழ்ந்தாளாம். அவள் மன்னர் வந்ததும் எழுந்து வந்து திரும்பி வந்த முனிவரையும் சேர்ந்து பணிந்தாளாம். கல்லைப்போல் கிடந்தவள் உம்மைக் கண்டதும் இளகி வந்தாளாம்.கதைசொல்கிறார்கள். இப்போது. அந்த கோதம முனியையும் மிஞ்சி விட்டீரே?

தத்தம்மா, பறந்து பறந்து கனிகளைக் கொத்தி வந்து, அவள் மடியில் போடுகிறது.

“மகாராணிக்கு நான்தான் உணவு கொடுக்கிறேன்.”

“தத்தம்மா, நீ இருக்கையில் எனக்கென்ன அச்சம்?..” என்று கரையோர தடாகத்து நீரில் முகத்தையும் கைகால்களையும் கழுவிப் புதுமை செய்து கொள்கிறாள். நேரம் குறுகி, அந்திச் செக்கர் பரவுகிறது. பறவைகளின் ஆரவாரங்கள் அடங்க, இரவில் உலவும் இனங்கள். கா னகத்தைத் தங்கள் ஆட்சியில் கொண்டு வருகின்றன.

“தத்தம்மா, எனக்கு வனத்தில் ஒரு பயமுமில்லை. இங்கேயே இளைப்பாறுவேன். நீ ஒரு உதவி செய்ய வேண்டும்” என்று கோருகிறாள்.

“சொல்லுங்கள் மகாராணி, நான் உயிர் பிழைத்திருப்பது அதற்காகவே.”

“இங்கே கங்கை தாண்டி வடக்கே வந்திருக்கிறார்கள். எனக்கு வடக்கா, தெற்கா, கிழக்கா எதுவும் புரியவில்லை. வேதவதிக் கரையில் யாவாலி அம்மை ஆசிரமத்தில் ஒர் அம்மை இருக்கிறார். நந்தமுனி. நந்தபிரும்மசாரி அவரை உனக்கும் தெரிந்திருக்கலாம். நம் மாளிகைத் தோட்டத்துக்கு ஒற்றை நாண் தம்புராவை மீட்டிப் பாடிக் கொண்டு வருவார். அரண்யாணி அன்னையைப் புகழ்ந்து பாடுவார். அவரிடம் சென்று நீ என் செய்தி தெரிவிக்க வேண்டும். செய்வாயா தத்தம்மா!”

“நிச்சயமாக, நான் அவர் எப்படியும் இங்கு வரச்செய்வேன் மகாராணி - மங்களம். சுகமாக உறங்குவீர்.