உள்ளடக்கத்துக்குச் செல்

வனதேவியின் மைந்தர்கள்/10

விக்கிமூலம் இலிருந்து

10

அரண்மனையின் வெளிவாயிலில்தான் இரதங்கள் வந்து நிற்பது வழக்கம். உள்ளே அந்தப்புர மாளிகைகளுக்குச் செல்லும் முற்றத்தில் பல்லக்கு மட்டுமே வரும். ஆனால் இரதம் உள்ளே வந்திருக்கிறதென்று சொல்லிவிட்டு, “உடனே வர வேண்டும்” என்று அவர் முன்னே விரைந்து நடக்கிறார். சிறிது தொலைவு சென்றதும் திரும்பிப் பார்த்து உறுதி செய்து கொண்டு நடக்கிறார்.

கோசலாதேவியின் மாளிகைக்குத்தான் செல்வார். மன்னர் அங்கேதான் இருப்பாராக இருக்கும்... அவளுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் மிகவும் கோபமாக இருப்பாரோ என்று உள்ளுணர்வில் ஒரு கலக்கம் படிகிறது. இது... இவர் செய்வது, தமையனின் ஆணையா? தமையனில்லை; கணவர் என்ற உறவும் இல்லை... மன்னர்... மாமன்னர் ஆணை,,. இந்தச் சூழலிலும் அவளுக்குச் சிரிப்பு வரும் போல் இருக்கிறது.

கானகத்தில் வாழ்ந்தபோது மான் இறைச்சி பதம் செய்து அவளுக்கு ஊட்டவே முன்வருவார். அவள் மறுப்பாள்... “இங்கே வேறு நல்ல உணவு கிடையாது. வெறும் புல்லையும் சருகையும் உண்டு நீ தேய்ந்தால், ஏற்கெனவே நூலிழை போல் இருக்கும் இடை முற்றிலும் தேய்ந்துவிட, நீ இரு துண்டுகளாகிப் போவாய். மனைவியை வைத்துக் காப்பாற்றத் தெரியாத மன்னன் என்ற அவப்புகழை எனக்கு நீ பெற்றுத்தரப் போகிறாயா, பூமிஜா?...” என்பார். “எனக்கு வேண்டாம் என்று மறுக்கிறேன். நீங்கள் என்ன செய்வீர்கள்!” என்று அவள் பிடிவாதமாக அந்த உணவை ஒதுக்குவாள். உடனே கணவர் என்ற காப்பாள உறை கழன்று விழும். மன்னர் ஆணை’ என்ற கத்தி வெளிப்படும். “மன்னன். நான் மன்னன் ஆணையிடுகிறேன். காலத்துக்கும் நீ அடி பணிய வேண்டும், பூமகளே!” என்று குரலை உயர்த்துவார்.

அவள் அப்போது அந்தக் குரலை விளையாட்டாகக் கருதிக் கலகலவென்று சிரிப்பாள்.

ஆனால், சிரிக்கக்கூடிய குரல் அல்ல அது.

அவளை அனற்குழியில் இறங்கச் செய்த குரல் ஆணை அது. அதை அப்போது அவள் உணர்ந்திருக்கவில்லை. ஆனால், இப்போது?

அவளை அவர் வெளி வாயிலுக்கு அல்லவோ அழைத்துச் செல்கிறார்? அச்சம் இனம் புரியாமல் நெஞ்சில் பரவுகிறது.

முதுகாலைப் பொழுது, மாளிகையின் அனைத்துப் பகுதிகளும் சுறுசுறுப்பாக இயங்கும் நேரம், வாயிற் காப்பவர்கள், பணிப்பெண்கள், ஏவலர்கள். அனைவரும் தத்தம் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நேரம் குஞ்சு குழந்தைகள் முதல் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருக்கும். அவள் வெளியே தென்பட்டால் ‘மகாராணிக்கு மங்களம்’ என்று வாழ்த்தி வணங்கும் குரல் ஒலிக்கும்...

ஆனால் சூழல் விறிச்சிட்டுக் கிடக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்து விட்டதோ?...

துடிப்பு கட்டுக்கடங்காமல் போகிறது.

அவரைக் குரலெடுத்துக் கூப்பிடவும் முடியவில்லை. அத்துணை தொலைவில் தன்னை இருத்திக் கொண்டிருக்கிறார். வரிக்கொம்பில் ஒற்றைக் காகம் ஒன்று சோகமாகக் கரைகிறது...

வாயில். வாயிலில் தேர் நிற்கிறது. அதில் பூமாலை அலங்காரங்கள் எதுவும் இல்லை. தேரை ஒட்டும் பாகனாக... மன்னரோ, வேறு எவரோ இல்லை. மன்னர் அதில் அமர்ந்திருக்கவில்லை.

நால்வர் அமரும் பெரிய தேர். உச்சியில் மன்னர் செல்லும்போது பறக்கும் கொடியும் இல்லை. ஒரங்களில் கட்டப்பட்ட மணிகள், வெயிலில் பளபளக்கின்றன. அப்போது தான் அவள் கூர்ந்து பார்க்கிறாள். வெண்புரவிகளின் கயிற்றைப் பற்றிக் கொண்டு சுமந்திரர் நிற்கிறார். ஏதோ கனவில் நிகழ்வது போல் இருக்கிறது.

“தேவி, ஏறி அமரலாமே?...”

அவள் ஏறுவதற்கான படிகள் தாழ்ந்து பாதம் தாங்குகின்றன.

“... மன்னர் வரவில்லையா?”

இளையவர் அதற்கு விடையிறுக்காமல் எங்கோபார்க்கிறார்.

“நான் மட்டுமா போகிறேன்?”

“தாங்கள் ஆசையைத் தெரிவித்தீர்களே?”

“ஆனால் தனிமையில் இல்லையே?”

“மன்னரின் ஆணை; நான் செயலாற்றுகிறேன்.”

“இருக்கட்டும். நான் ராணிமாதாக்களை வணங்கிச் சொல்லிக் கொள்ள வேண்டாமா? அங்கு முனி ஆசிரமங்களுக்கு, வேடர் குடிகளுக்கு ஆடைகள், தானியங்கள் பரிசிலாகக் கொண்டு செல்ல வேண்டுமே? அவள் குரலுக்கு எதிரொலி இல்லை. சுமந்திரர் தேரைக் கிளப்பி விடுகிறார். அவள் முகம் தெரியாதபடி இளையவர் காவல் போல் அமர்ந்திருக்கிறார். மிகப் பெரிய பெட்டியை அவந்திகாவும், விமலையும் சுமந்து கொண்டு விரைந்து வருவது தெரிகிறது. ஆனால் அவளுக்கு ஒலி எழுப்ப முடியவில்லை. நகரவீதிகளைக் கடந்து குதிரைகள் பாய்ந்து செல்கின்றன. அவளுக்கு உடலும் உள்ளமும் குலுங்குகின்றன. நெஞ்சம் வாய்க்கு வந்துவிடும் போல் குலுக்கம். ஒரு மிகப்பெரிய இருள் பந்தாகவந்து எந்தக்குலுக்கலுக்கும் அசையாமல் அவளை விழுங்கி விட்டதாகத் தோன்றுகிறது.

குதிரைகளின் குளம்படி ஓசை மட்டுமே ஒலிக்கிறது. குலுக்கல். உடல், உள்ளம். தனக்குள் இருக்கும் உயிர்... அதற்கும் அதிர்ச்சி ஏற்படுமோ? தன் மலர்க் கரத்தால் வயிற்றைப் பற்றிக்கொள்கிறாள்... உயிர்த்துடிப்புகள் மவுனமாகி விட்டனவோ?... இல்லை... இது, ஒரு விளையாட்டாகவும் இருக்கலாம். மன்னர் கோமதி நதிக்கரையில் காத்திருப்பார். முனி மக்களுக்குரிய பரிசிற் பொருட்களைச் சுமந்து முன்னமே தேர்கள் சென்றி ருக்கலாம். அவளை எதற்காக அவர் இந்நிலையில் சோதிக்க வேண்டும்?... ஒரு கால் ஊர்மியின் விளையாட்டோ? ஊர்மியும் வருகிறாளோ? சதானந்தர் வந்திருந்தாரோ? ஊர்மியை அழைத்துச் செல்லப்போகிறாரா? எபீமந்த முகூர்த்தம் என்றார்கள்?...

ஊர்மிளையின் நினைவு வந்ததும் சிறிது ஆறுதலாக இருக்கிறது. இருக்கட்டும் இருக்கட்டும், இந்தப் போக்கிரிதான் இதற்கெல்லாம் காரணமா?... ஆனால் இந்தச் சுமந்திரர் அன்று எங்களை நாடு கடத்த தேரோட்டி வந்தாற்போல் எதற்கு வருகிறார்? பெண்கள் விஷயத்தில் இவர் எதற்கு மூக்கை நுழைக்க வேண்டும்?. சுமந்திரர். முப்பாட்டன் காலத்து மந்திரி பிடரியில் நரை தெரிய சாயம் மங்கிய பாகை... செவிகளில் குண்டலங்கள் இல்லை; முதுமையே செவிகளை இழிந்து தொங்கச் செய்துவிட்டது. மலையே அசைந்தாலும் பேச்சு வராது... பெரிய மன்னருக்கு சக்கரவர்த்திக்கு - இப்போதைய மன்னருக்கு - இவர் மகனுக்கு இருப்பாரோ? மெய்க்காப்பாளர், அமைச்சர், ஆலோசகர், தேர்ப்பாகன்...

அப்போது ஊரே இவர்கள் பின் அமுது கொண்டு வந்தது. ஆற்றின் கரையில் மக்கள் உறங்கச் சென்ற நேரம் பார்த்து, இரவுக்கிரவே இவர்களை ஆறு கடக்க ஏற்பாடு செய்தார். அப்போது அதெல்லாம் விளையாட்டுப் போல் உற்சாகமாக இருந்தது...

ஆற்றங்கரை தெரிகிறது.

ஊர்மியோ, மன்னரோ, எங்கு இருப்பார்கள்?

ஆற்றில் அதிக வெள்ளப் பெருக்கில்லை. ஆற்றின் கரையில் உள்ள வயல்களைக் கடந்து தேர் செல்கையில் ஆங்காங்கு முற்றிய தானியக் கதிர்களைக் கொத்த வரும் பறவைகளின் மீது கவண் கற்கள் எறியும் உழவர் குடிப்பிள்ளைகளை அவள் பார்க்கிறாள். இவர்கள் தேரைப் பார்த்துவிட்டு ஆங்காங்கு தென்படும், சிறுவர்கள், பெண் மக்கள் வியப்புடன் கண்களை அகல விரிக்கிறார்கள்.

ஏய்... மகாராணி! மகாராணி ராஜா...!

நிலத்தில் வேலை செய்யும் பெண்கள் சரேலென்று மார்பு மறைய, தலை குனிகிறார்கள்.

“மகாராணிக்கு மங்களம்...”

அரவங்கள் மடிந்து போகின்றன. வானமே சல்லென்று கவிழ்ந்துவிட்டாற்போல், தோன்றுகிறது. ரொட்டி விள்ளலும் பாற் கஞ்சியும் நெஞ்சிலேயே குழம்புகின்றன. இத்தனை நேரமாகியும் இத்தனை குலுங்கலிலும் அது சீரணமாக ஏன் குடலுக்கு இறங்கவில்லை? அவள் புளிப்புக் காய்க்கு ஆசைப் பட்டபோது மரங்கள் பூக்கவில்லை. இப்போது பிஞ்சும் காயுமாக மரங்கள். பொன்னிறக் கனிகளைக் குரங்குகள் கடித்துப் போடுகின்றன.... அணில்கள் கண்களில் படவில்லை....

இளையவரும் சுமந்திரரும்கூடப் பேசவில்லை.

ஆற்றில் நீர் மிகக் குறைவாக இருக்கும் பக்கம் தேர்ச்சக்கரம் இறங்கிச் செல்கிறது. நடுவில் மணல் திட்டில் சக்கரம் புதைகிறது. இளையவர் இறங்கித் தள்ளுகிறார். பிறகு புல்லும் புதர்களும் உடைய இடங்கள். ஆறு கடந்து விட்டார்கள். எங்கே? எங்கே போகிறார்கள்? யாரோ எப்போதே கட்டிய மண்குடில்கள்; பிரிந்த கூரைகள். தேர் வருவதைக் கண்ணுற்ற வேடர்கள் சிலர் ஒடி வருகின்றனர். தேர் நிற்கவில்லை. அவர்கள் மேனி குறுக்கி, வாய் பொத்தி, தேருடன் விரைந்து தொடருகின்றனர். அந்திசாயும் நேரம். மாடுகளை மேய்த்துத் திரும்பும் சிறுவர் வியப்புடன் அவளையும் இளையவரையும் மாறி மாறிப் பார்க்கின்றனர். தேர் நிற்கிறது; குதிரைகள் கனைக்கின்றன. சுமந்திரர் தட்டிக் கொடுக்கிறார்.

“பிள்ளைகளா, பக்கத்தில் தங்குமிடம் இருக்கிறதா?”

“இருக்குங்க மகாராசா! நேராகப் போனால் சாமி ஆசிரமங்கள் இருக்கும்....”

வேடர் குடிமகன் ஒருவன் விரைந்து வருகிறான்.

‘சாமி, வாங்க... நம்ம பக்கம் நல்ல இடம் இருக்கு ரா, தங்கி, இளைப்பாறிப் போகலாம்....”

குதிரைகள் மெதுவாகச் செல்கின்றன. முட்டு முட்டாக வேடர் குடில்கள். மரங்களில் தோல்கள் தொங்குகின்றன. நிணம் பொசுங்கும் வாடை... பறவை இறகுகளின் குவியல்கள்.... கண்டியைப் போல் ஒரு குழந்தை அம்மணமாக வருகிறது.

தேரைக் கண்டதும் நாய்கள் குரைக்கின்றன.

தீப்பந்தங்களுடன் பலர் வருகின்றனர். தேர் நிற்கிறது.

பூமகளை ஒரு வேடுவ மகள் கை கொடுத்து, அனைத்து இறங்கச் செய்கிறாள்.

“மகாராணி வாங்க! அடிமை ரீமு நான்...”

தீக்கொழுந்தின் வெளிச்சத்தில், அவள் முன் முடி நரைத்து, முன்பற்கள் விழுந்து கோலம் இணக்கமாகத் தெரிகிறது.

“என்ன சந்தோசமான ராத்திரி... மகாராணி...”

மெள்ள அனைத்து அவளை நடத்திச் செல்கிறார்கள்.

பந்தங்கள் வழி காட்டுகின்றன. ஆடுகள் கத்தும் வரவேற்பொலி குலவையிடும் வரவேற்பு.

தோலாடை விரிப்பில் அமர்த்துமுன், குடுவையில் நீர் கொண்டு வருகிறார்கள் பெண்கள். இருளில், சுளுந்து வெளிச்சங்களில் இணக்கமான அன்பு முகங்கள்... கால்களைக் கழுவி விடுகிறார்கள். முகம் துடைக்கச் செய்கிறார்கள். புத்துணர்வு கூடுகிறது.

இதுதான் என் பிறந்த வீடோ? பிரசவத்துக்கு இந்தத் தாய்வீட்டுக்கு மன்னர் அனுப்பி இருக்கிறாரோ?

முகத்தைக் கழுவிக் கொண்டபின் வாயில் நீருற்றிக் கொப்புளித்ததை ஏந்த ஒரு மண்தாலம் வருகிறது.

ஒங்கரித்து வரும் புரட்டல் அடங்கி, சமனமாகிறது.

அங்கிருந்து இதமாகப் புல் பரப்பிய இன்னொரு குடிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கனிகளைச் சுமந்து ஒரு வேடுவப் பெண் வருகிறாள். பிரப்பந்தட்டில், அரிந்த மாங்கனிகள், இருக்கின்றன. அவள் குனிந்து வைக்கையில், வேடுவருக்கே உரிய ஒரு வாடை வீசுகிறது.

மன்னர் முன்பு தங்களுக்கு ஒருவேடுவக் கிழவி, கடித்துக் கடித்து ருசி பார்த்த கனிகளைத் தந்து உபசரித்ததை விவரித்த வரலாறு நினைவில் முட்டுகிறது. இவரும் கிழவிதான். முன்பற்கள் இல்லை. தாடையோரம் ஒரு பல் தொத்திக் கொண்டு இருக்கிறது. முடி உதிர்ந்து முன் மண்டை தெரிகிறது. இழிந்த செவிகள். மார்பகம்பையாகத் தொங்குகிறது. அரையில் அதிகப்படியாக ஒரு நார் ஆடை மானம் மறைக்கிறது.

அவள் இவள் பட்டுப் போன்ற கூந்தலைத் தேய்ந்த கரத்தால் மென்மையாகத் தடவி, “தேவி, உங்களுக்கு வணக்கம்” என்று கரைகிறாள். இது வணக்கமா? வாழ்த்தா? பூமகளின் நெஞ்சம் உருகுகிறது.

“மகாராணி, பயணத்தில் களைத்திருக்கிறீர்கள். இந்தக் கனிகளை உண்டு இங்கே படுத்து இளைப்பாறுங்கள். எங்கள் குல தெய்வமே வந்தாற்போல் வந்திருக்கிறீர்கள்...” என்று பொருள்பட கொச்சை மொழியில் தழுதழுக்கிறாள் அந்த அம்மை.

அந்தக் கனிகள், புளிப்பு, இனிப்பும் கலந்ததாக, நாரும் தோலுமாக இருந்தாலும், அவர்கள் அன்பு அவளுக்கு அமுதமாக அந்த உணவை மாற்றி விடுகிறது. ஒரு குடுவையில், காரசாரமான விறுவிறுப்பான பானம் ஒன்று கொண்டு வந்து தருகிறார்கள். அவள் அதை அருந்திய பின் அந்தப் புல் படுக்கையில் தலை சாய்க்கிறாள். சற்றைக்கெல்லாம் கண்கள் சுழல, உறக்கம் வந்து விடுகிறது.

கனவுகளே இல்லாத உறக்கம் எங்கோ ஆனந்தம் தாலாட்டும் அமைதி அன்னை மடி என்பது இதுதானோ? என் அன்னை... என் தாய். என்னைப் பத்து மாதங்கள் வைத்துப் பேணிய மணி வயிறு. எனக்கு உயிரும், நிணமும், அறிவும், பிரக்ஞையும் அளித்த கோயில் எனக்கு ஆதாரமுண்டு; எனக்கு நிலையான உணர்வு உண்டு. அதெல்லாம் தந்தவள் அம்மை. அம்மையே, தாங்கள் என் தந்தையறியாமல் என்னைப் பெற்றெடுத்திரோ? தாயே என்னை உன்னதமான குலத்தில் சேர்க்க, மன்னர் உழும் இடத்தில் என்னைக் கிடத்தினிரோ? அதற்காக என்னைத் துறந்தீரோ?.... தாயே, நான் வேடுவகுல மகளாகவே இருந்திருப்பேனே? மன்னரின் மாளிகைப் பஞ்சணைகள் முள் முடிச்சுகள் நிரம்பியவை. அந்தப் பளபளப்பும் பட்டு மென்மைகளும் ஒளியும் குளிர்ச்சியும் கூடியவை அல்ல. மனிதருக்கு மனிதர் வேலிபோடும், தனிமைப்படுத்தும் முட்கள். அரக்கர் வேந்தனின் மாளிகைத் தோட்டம் மட்டுமே சிறையன்று. மன்னர் குடிகள் எல்லாமே பெண்களுக்குச் சிறைதான். என்னை அந்த சிறையில் இருந்து மீட்டுவர தாயே, எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பத்தைத் தந்தீரோ?...

டகடகடகடங்கென்று ஒசை அதிர்கிறது. ஒ. யாரோ அரசகுமாரர் வேட்டைக்கு வந்துள்ளார். நான்கு முழ நீளமுள்ள வேங்கைப்புலி, பெண்புலியை அம்பெய்து வீழ்த்திவிட்டார். அதற்கான வெற்றிக் கொட்டு...

யாருக்கு... யாருக்கு வெற்றி! அந்தப் புலி இரையெடுத்துக் குடும்பம் புலர்த்தும்! அது தப்பா?...

ஏய்... போதும்... போதுமப்பா! போதும்..

யாரோ சிரிக்கிறார்கள்.

பட்டென்று விழிப்பு வருகிறது. அவள் கண்களை மலர மலரக் கொட்டிக் கொண்டும், அங்கையினால் அழுத்திக்கொண்டும், தெளிவு துலங்கப் பார்க்கிறாள். கிழக்கு வெளுத்து உதயவானின் செம்மையும் கரைந்து வருகிறது.

“இவ்வளவு நேரமா தூங்கி விட்டேன்?”

“மன்னித்துக் கொள்ளுங்கள், மகாராணி? ராஜா, காலையில் வந்து, கங்கை கடந்து செல்ல வேண்டும் என்று அழைத்தார். தாங்கள் அயர்ந்து உறங்கினீர்கள்...”

திரை விலகி, நினைவுகள் குவிகின்றன.

அவள் கண்கள் அங்கு கூடியிருந்த முகங்களில் யாரையோ தேடுகிறது. அந்த அம்மை, அவள் அன்னை போல் இதம் செய்த அம்மை எங்கே?

“அவர் எங்கே? எனக்குக் கனிகள் அரிந்து கொடுத்து, இதமாக கால்களைப் பிடித்து விட்ட அன்னை, எங்கே?”

“இவள்தான்... ரீமு...”

“தாயே, நான்தான் கொடுத்தேன்...”

முடியில் பறவை இறகுகளைச் செருகிக் கொண்டு மோவாயில் முக்கட்டி போல் பச்சைக்குத்துடன் ஓர் இளம் பெண் முத்து நகை சிந்துகிறாள்.

“என் அம்மா... நான் தங்களுக்குக் குடுவையில் குடிக்கப் பானம் கொண்டு வந்தேன்...”

அவர்கள் எல்லோரையும் அணைந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.

“நீங்கள் அன்னை, தமக்கை, தங்கை, எல்லா எல்லா உறவுகளும் எனக்கு இங்கே இருக்கின்றன. நான் இப்போது எதற்கு, எங்கு செல்ல வேண்டும்!”

ஆனால் கேட்க நா எழுப்பவில்லை. “மன்னர் ஆணையை, இளையவர் நிறைவேற்றுகிறார். யாரேனும் சடாமுடி முனிவர்க் கங்களைப் பணிந்து ஆசி பெற்று வர வேண்டும்!”

அவள் அவர்களிடம் பிரியாவிடை பெறுகிறாள்.

கங்கை குறுகலாகத் தெரிகிறது. படகோட்டி ஒருவன் சிறு படகைத் தயாராக வைத்திருக்கிறான். அக்கரை கரும்பச்சைக் கானகம் என்று அடர்த்தியாக விள்ளுகிறது.

சுமந்திரர் படகில் ஏறவில்லை. இளையவர் மட்டுமே இருக்கிறார். காலை நேரத்து வெளிச்சம் சிற்றலைகளில் பிரதிபலிப்பது வாழ்க்கையின் கருமைகள் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையாக உள்ளத்தில் படிகிறது. ஆழங்காணாத கிணற்றில் தன் கையைக் கொண்டு தரைக்காகத் துழாவுவது போல் எதிர்க்கரையை வெறித்துப் பார்க்கிறாள்.

அக்கரையில் மனித அரவமே தெரியவில்லை. ஒன்றிரண்டு பறவைகள், வெண் கொக்குகள், பறந்து செல்கின்றன. பெரிய அடர்ந்த மரங்கள். கதம்ப மரங்கள். ஓங்கி உயர்ந்த மருத மரங்கள். அவர் இறங்கி முன்னே செல்கிறார். அவளைத் தொடர்ந்து வர்ப் பணிப்பது போல் நின்று நின்று பார்த்துச் செல்கிறார். குற்றிச்செடிகள் ஒற்றையடிப் பாதைகள். மா, ஆல், அத்தி, என்று பல்வேறு மரங்கள் கானகத்துக்கே உரிய மனங்கள். பல்வேறு பறவைகள். இவள் வரவுக்குக் கட்டியம் கூறுபவைபோல் வெவ்வேறு குரல்களில் ஒலி எழுப்புகின்றன.

மிகப்பெரிய ஆலமரம் ஒன்று பெரிய பெரிய விழுதுகளுடன் அங்கே பரந்திருக்கிறது.

“ஆகா! ஏதோ மன்னர் அரண்மனை போல் இல்லை?” பூமகள், முதன் முதலாக எழுப்பும் குரல் அது. இளையவர் நிற்கிறார்.

“ஆம், தேவி! இனி இதுவே தங்கள் அரண்மனை” பச்சை மரத்தில் ஒரு கத்தி செருகினாற் போன்று அந்த விடை பதிகிறது. அவள் சட்டென்று அந்த முகத்தில், அந்தக் குரலில் செருகப்பட்ட இரகசியத்தைப் பற்றிக்கொள்கிறாள். இதுகாறும் இழைந்த இழை, அறுந்து தொங்குகிறது.

“இது மன்னர் ஆணை,தேவி. என்னை வேறெதுவும் தாங்கள் கேட்காமல் மன்னித்தருளுங்கள்!” அவள் முகம் இருண்டு போகிறது.

திரும்பிச் செல்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வனதேவியின்_மைந்தர்கள்/10&oldid=1304416" இலிருந்து மீள்விக்கப்பட்டது