வனதேவியின் மைந்தர்கள்/8

விக்கிமூலம் இலிருந்து

8

தாரை தப்பட்டை ஒலி வலுக்கிறது. அவர்கள் நகரின் வாயிலுள் நுழைகிறார்கள். வேட்டைக்குச் சென்று திரும்பும் இளவரசர் வாழ்க! பட்டத்து அரசி வாழ்க! ராஜமாதாக்கள் வாழ்க! இளவரசிகள் வாழ்க!...

வேட்டை மிருகமான ஒரு வேங்கைப்புலியைச் சுமந்து முன்னே செல்லும் தட்டு வண்டிச் சக்கரங்கள் கிறீச்கிறீச் சென்று ஒலிக்கின்றன. பூமைக்கு அது, இனிய இசையின் அபகரமாகச் செவிகளில் விழுகிறது.

இப்போது அருகில் அவந்திகாவை அமர்த்தியிருக்கிறாள் கேகயத்துச் சீமாட்டி பூமை செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“இளவரசர் வேட்டைக்கு வந்தாரா, எங்களுக்குத் துணையாக வந்தாரா அவந்திகா?”

“இரண்டுந்தான். இந்தக் கொடிய வேங்கைப்புலி அரசரின் ஒர் அம்பில் சாய்ந்து விட்டது. பெண்புலியாம். நான்கு முழம் இருக்கிறதாம்?”

“ஐயோ, பாவம், அது இவர்களுக்கு என்ன தீங்கு செய்தது? அதன் மாமிசமும் தின்பார்களா?”

“மகாராணி, நீங்கள் பச்சைக் குழந்தையாக இருக்கிறீர்கள். மகரிஷிகளுக்குப் புலித்தோலாடை - ஆசனங்கள் எப்படிக் கிடைக்கும்? மேலும், இந்தப் புலிகளைப் பெருகவிட்டால் ஊருக்குள் நுழைந்து மனித வேட்டையாடாதா?”

அவள் பேசவில்லை.

அரண்மனைக்குள் துழைகையில் மங்கல வாழ்த்துகளின் பேரொலி செவிகளை நிறைக்கிறது.

வாயிலில் இவர்களை வரவேற்க மாமன்னர் தலைகாட்டவில்லை. அவர் அன்னை மட்டும் முகம் காட்டி “நலமாக வந்தீர்களா? ஒய்வு எடுத்துக்கொள் மகளே!” என்று வாழ்த்தி விட்டுத் திரும்புகிறாள்.

இவள் மாளிகையில் பெண்கள் மங்கள ஆரத்தி எடுத்து, கண்ணேறு படாமல் கழிக்கிறார்கள்.

ஊர்மி, சுதா எல்லோரும் அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்று விட்டார்கள். முற்பகல் தாண்டும் நேரம், வெயில் தீவிரமாக அடிக்கிறது.

தன் மாளிகைத் தோட்டத்துப் பசுமைகள் வாடினாற் போன்று காட்சி அளிக்கின்றன. இரண்டு நாட்கள் மட்டுமே சென்றிருக்கின்றன. ஏதோ நெடுங்காலம் வெளியே சென்று விட்டுத் திரும்புவது போல் இருக்கிறது.

முதியவளான கணிக்ை பத்மினி, தன் நடுங்கும் குரலில்


          “சீர்மேவும் கோசலத்தின் நாயகனின்
          தோள் தழுவும் தூமணியே!
          பார்புகழும் மாமன்னன், பார்த்திபன் தன்
          கண்மணியே...”

என்று பாடி ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகம் இடுகிறாள்.

ஆனால் இதெல்லாம் உண்மையல்ல என்ற மந்திரம் ஒன்று உள்ளே மெள்ள ஒலிக்கிறது.

வாசவி சமையற்கட்டிலிருந்து அகன்ற பாண்டத்தில் வெதுவெதுப்பான நீர் கொண்டு வருகிறாள்.

தாழ்வரையில் கால்களை முற்றத்தில் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்த பூமகளின் பாதங்களில் சாமளி வரைந்த மயில் சிரிக்கிறது. அவந்திகா, கால்களைக் கழுவ வந்தவள் சற்றே நிற்கிறாள்.

“இத்துணை அழகுக் கலையை மன்னர் பார்த்து மகிழவேண்டாமா? இந்தத் திருப்பாதங்களில், பொன்னின் சரங்களும், வண்ணச்சித்திரங்களும், மன்னரல்லவோ கண்டு மகிழ வேண்டும்?”

வாசவி வாளாவிருக்கிறாள். “சாமளி எங்கே?... அவளை அனுப்பி, மகாராணி அழைத்து வரச் சொன்னார் என்று சொல்லலாமா?”

வாசவி விருட்டென்று உள்ளே செல்கிறாள்.

உள்ளிலிருந்து, ராதையின் ஐந்து பிராயச் சிறுமி கண்டி

அழுத முகத்துடன் வந்து மகாராணியின் முன் அழுதுகொண்டே பணிகிறது.

பூமகள் பதறிப் போகிறாள். சிறுமி விம்மி விம்மி அழுகையில் பூமகள் அக் குழந்தையைத் துக்கிக் கண்களைத் துடைக்கிறாள்.

“ஏனடி பெண்களா? இதெல்லாம் என்ன நாடகம்? அழுக்கும் சளியுமாக இவளை இங்கே அனுப்பி...?” என்று அவந்திகா அதட்டுகிறாள்.

ராதை அந்த அதட்டலைப் பொருட்படுத்தவில்லை.

“ஏண்டி, சனியனே? சொல்லித் தொலையேன்? நீ செய்த செயலுக்கு நானே உன்னை வெட்டி அடுப்பில் போடுவேன்!”

“அம்மம்மா! உங்கள் வாயில் இம்மாதிரி வார்த்தைகளைக் கேட்கவோ நான் வந்தேன்? குழந்தையை ஏன் வருட்டுகிறீர்? என்ன நடந்துவிட்டது?”

“மகாராணி! நாங்கள் எதைச் சொல்ல? கிளிக் கூட்டைத் திறந்து விட்டு அதைப் பூனைக்கு விருந்தாக்கிவிட்டாள்!”

“எந்தக் கிளிக்கூடு? தத்தம்மா எப்போதும் கூட்டில் இருக்காதே? அதுவும்... மாளிகையில் அவள் இல்லாத நேரத்தில், கூட்டில் வந்து அமர்ந்ததா?”

“ஆம் தேவி. நேற்று முன்னிரவில் வந்தது. தேவி இல்லையே என்று அதற்குப் பாலும் பழமும் வைத்துக் கூட்டில் அடைத்தேன். இந்தச்சனியன் காலையில் அதைத் திறந்து விட்டிருக்கிறாள்! எங்கிருந்தோ ஒரு நாமதாரிப் பூனை குதித்துக் கவ்விக் கொண்டு போய் விட்டது!”

மனதில் இடிவிழுந்தாற்போல் பூமை குலுங்கிப் போகிறாள்.

“என் தத்தம்மாவா?”

“அதுதான்...”

“இருக்காது. அது வேறு கிளியாக இருக்கும்...”

மனசுக்குள் அவளே ஆறுதல் செய்து கொள்கிறாள்.

ஆனால் குழந்தை அழுதுகொண்டே “அது மூக்கால் தட்டி, திறந்துவிடு திறந்து விடுன்னு கொஞ்சிச்சி...” என்று தன் செய்கையின் நியாயத்தை விளக்குகிறாள்.

வலக்கண் துடித்தது. வளர்த்த கிளி. நெஞ்சம் கலந்த தோழி போன்ற பறவை, பூனைக்கு விருந்தா?...

“பூனைக்கண்ணி” என்று அக்கிளி கூறிய சொல் நெஞ்சைப் பிடிக்கிறது.

என்ன ஒர் ஒற்றுமை? இந்த மாளிகையில் இது வரையிலும் இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்ததே இல்லையே? சமையற்கட்டில் மீன்திருத்தும் போது பூனைகள் வரும். அவள் சாடை மாடையாகப் பார்த்து வெறுப்பைப் புலப்படுத்தி இருக்கிறாள்.

பூனைக்குப் பாலோ மீனோ கொடுப்பதுதானே? கூட்டில் இருக்கும் பால் கிண்ணத்தை நக்கிவிட்டுப் போக வந்ததோ?

பச்சைக்கிளி... அவள் தத்தம்மா... தெய்வமே? இது எந்த நிகழ்வுக்கு அறிகுறி?

“நீசகுலத்தாளே, பூனைபற்றிய சேதியை உடனே வந்த விழ்க்கிறாள்!”

“இல்லை தாயே, எப்படி இந்த விபரீதம் நேர்ந்த தென்றே தெரியவில்லை. நம் அரண்மனைப்பூனை இல்லை இது. நம் பூனைகள் இங்கே கிளிகளோடு சல்லாபம் செய்யும். இரை கொள்ளாது. இது எப்படி எங்கிருந்து வந்ததென்று தெரிய வில்லை. முழங்கால் உயரம் இருந்தது... நாமநாமமாக.. புலிக்குட்டி போல் இருந்தது...” என்று அஞ்சியவண்ணம் ராதை விவரிக்கிறாள்.

“போதும். இப்போது யாரும் இதைப்பற்றிப் பேச வேண்டாம். தேவி, பயணக்களைப்பில் சோர்ந்திருக்கிறீர்கள். வெதுவெதுப்பாக நீராடி, சிறிது உணவு கொண்டு உறங்குங்கள். மாலையில் மன்னர் நிச்சயமாக வருவார்....” என்று அவள் மனமறிந்து அவந்திக்ா இதம் சொல்கிறாள்.

உடல் அசதி தீர நீராடுகிறாள். துடைத்து, முடிகாய வைத்துக் கொண்டே உணவு கொண்டுவருகிறாள். பால் கஞ்சி, கீரை, வெண்டை, கத்திரி, பூசணி காய் வகைகளும் பருப்பும் சேர்த்த ஒரு கூட்டு, மிளகு சேர்த்த காரமான ஒரு சாறு. உணவு அவந்திகாவே தயாரித்துக் கொண்டு வந்து அருந்தச் செய்கிறாள். அறையை இருட்டாக்கி, திரைச் சீலைகளை இழுத்துவிட்டு, பஞ்சனையில் அவளைப் படுக்கச் செய்கிறாள்.

பூமை சிறிது நேரத்தில் உறங்கிப் போகிறாள். மனதில் ஒன்றுமே இல்லை. நடப்பது நடக்கட்டும். ஆம் நடப்பது நடக்கட்டும். என்ற உறுதியை அவள் பற்றிக் கொண்டிருக்கிறாள்.

ஆழ்ந்த உறக்கம். கனவுகளும் காட்சிகளும் தோன்றாத உறக்கம். விழிப்பு வரும்போது எங்கோ மணி அடிக்கிறது. மணி. விடியற்காலையில் அருணோதயத்துக்கு முகமன் கூறும் மணி அல்லவோ இது!...

பூமகள் மெள்ளக் கண்களை அகற்றுகிறாள்.

படுக்கையைச்சுற்றி மெல்லிய வலைச்சீலையை விலக்கிப் பார்க்கிறாள். மாடத்தில் மினுக் மினுக் கென்று ஒர் அகல் வெளிச்சம் காட்டுகிறது. அவந்திகா கீழே அயர்ந்து உறங்குகிறாள். அவளுடைய தளர்ந்த சுருக்கம் விழுந்த கை. அதைத் தலைக்கு அணையாகக் கொண்டு ஒரு கோரைப் பாயில் உறங்குகிறாள். வெளியே அரவம் கேட்கிறது....

“மகாராணிக்கு மங்களம்...” என்று சொல்லிவிட்டு, கிழட்டுக் குரல்,


          “செம்மை பூத்தது வானம்.
          செந்தாமரைகள் அலர்ந்தன.
          செகம்புகழ் மன்னரின் பட்டத்து அரசியே,
          கண் மலர்ந்தருள்வீர்...”

என்று பள்ளி யெழுச்சி பாடுகிறது.

தாம் எப்போது படுத்தோம் என்று சிந்தனை செய்கிறாள். கூடவே, மன்னர் இரவு வந்து பார்த்துவிட்டுப் போயிருப்பாரோ என்ற இழப்புணர்வும் அடிவயிற்றில் குழி பறிப்பது போன்ற வேதனையைத் தோற்றுவிக்கிறது.

“யாரங்கே?”

கலத்தில் நீரேந்தி வருகிறாள்.

“சாமளி, மன்னர் இரவு வந்தாரா?...”

அவள்... “இல்லையே?” என்று கூறுமுன் அவந்திகா விருட்டென்று எழுந்திருக்கிறாள்.

“நீ கண்டாயா? நீ உன் புருசனைப் பார்க்க ஓடி விட்டாய். அவன் எந்தப் பொம்புள பின் ஒடுகிறானோ என்ற கவலையில், இங்கே மகாராணி இல்லை என்ற நினைப்பில் நீ எதையும் கவனித்திருக்க மாட்டாய். நான் உன்னையே முதலில் நேற்று வந்ததில் இருந்து பார்க்கவில்லை. இப்போது மன்னர் வந்தாரா என்று கேட்டால் இல்லை என்று பார்த்தாற் போல் சொல்கிறாய்! மன்னர் ராத்திரி வந்தார். அருகில் வந்து பார்த்தார். ஒசைப் படாமல் நின்றார். என்னிடம் விசாரித்தார். நலமாகத்தானே இருக்கிறாள் என்று கேட்டார். நான் சொன்னேன். துங்கட்டும், எழுப்ப வேண்டாம், காலையில் பார்க்கலாம் என்று சொல்லி விட்டுப் போனார். இத்தனை நடந்து இருக்கிறது, இவள் மன்னர் வரவில்லை என்கிறாள். இங்கு தீபச்சுடர் தட்டிக் கரிந்து போனாலும் அதைத் துாண்டி எண்ணெய்விட நாதி இல்லை. பேசுகிறார்கள் கூடிக் கூடி!”

பூமகளுக்கு அவந்திகாவின் பேச்சு ஏன் இயல்பாகத் தோன்றவில்லை?

சாமளி இங்குதான் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் கூறியது ஏன் உண்மையாக இருக்கலாகாது?

ஊடே கிளியைப் பூனை கவ்வும் தோற்றம் சிந்தனையில் வேலாய்ப்பாய்கிறது.தத்தம்மா, என் தத்தம்மா, சத்தியம், அதையா பூனை கவ்விவிட்டது? திடீரென்று நினைவுவந்தாற் போல், “அந்தப் பணிப்பெண்ணைக் கூட்டிவா என்று சொன்னேனே, அவந்திகா? நினைவிருக்கிறதா? கூட்டிவாயேன்!” என்று மெல்லிய குரலில் நினைவூட்டுகிறாள்.

“யார் தேவி? பூவாடை நெய்யும் ஒண்ரைக்கண் பிந்துவா?...” அவந்திகாவும் வேண்டுமென்றே தாண்டிச் செல்வதாகப் படுகிறது. "இல்லை. அவள். பெரிய ராணி மாளிகையில் செம்பட்டை முடி...” அப்போது, “வாழ்க! வாழ்க! இளவரசர் வாழ்க! மூத்த இளவரசர் வாழ்க!” என்ற வாழ்த்தொலிகள் கேட்கின்றன.

பூமை வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் விரைந்து கீழே படியிறங்கி வருகையில் முன்முற்ற வாயிலைச் சுத்தம் செய்யும் பணியாளர் திகைத்தாற்போல் பரபரத்து ஒதுங்குகின்றனர். அவந்திகா விரைந்து வந்து அவள் தோளைத் தொடுகிறாள்.

“பதற்றம் வேண்டாம், மகாராணி மன்னர் பார்த்து வரச் சொல்லி இருப்பார். அதனால்தான் ஆரவாரமின்றி வருகிறார்...”

“இருக்கட்டும் இளையவரை நான் வரவேற்க வேண்டாமா?”

முன்முற்றத்துக்கு அவர் வந்து விடுகிறார். இவள் முகமலர அவருக்கு முகமன் கூறி வரவேற்குமுன் அவர் சிரம்குனிய அவள் பாதம் பணிகிறார்.

“அரசியாரை இளையவன் வணங்குகிறேன்!”

அவர் குரல் ஏனிப்படி நடுங்குகிறது? முகத்திலும் ஏனிப்படி வாட்டம்?

“மன்னர் நலம்தானே, தம்பி? நேற்று வந்திருந்தாராம். நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்ததால் எழுப்ப வேண்டாம் என்று திரும்பிவிட்டாராம்!”

“தேவி, தாங்கள் கானகத்தில் முனிவர் ஆசிரமங்களில் சென்று தங்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்களாம். அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்று மன்னர் விரும்புகிறார். என்னை இப்போதே பயணத்துக்குச் சித்தமாகத் தேரைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். நான் மன்னர் பேச்சை ஆணையாக ஏற்று வந்துள்ளேன்...” எந்த நெகிழ்ச்சியுமில்லாத குரல்.

“அவந்திகா!...” மகிழ்ச்சி வெள்ளத்தில் கண்ணிர் முத்துக்களாக உதிர்கின்றன.

“அடி! சாமளி! விமலை? இளவரசர் வந்திருக்கிறார். உபசரியுங்கள். அருந்துவதற்குப் பானம் கொண்டுவாருங்கள்....” என்று ஆரவாரிக்கிறாள்.

ஆசைப்பட்ட இடங்கள்... வேதவதிக்கரை. அவள் பிறவி எடுத்த பூமி, அங்குள்ள மக்கள்... நந்தமுனி, பெரியம்மா.... அவந்திகாவுக்கு உவப்பாகப்படவில்லை.

“இது என்ன அவசரம்? இப்போது தான் ஒரு பயணம் முடிந்து வந்திருக்கிறீர்கள்? என்ன பரபரப்பு?”

கால் கழுவ நீரும், இருக்கையும், கனிச்சாறும் ஏந்திவரும் பணிப்பெண்கள் முற்றத்தில் இளவரசனைக் காணாமல் திகைக்கிறார்கள்.

“மன்னர் தாமே வந்து இதைச் சொல்லக்கூடாதா? இளையவர் ஏதோ காலில் கஞ்சியைக் கொட்டிக் கொண்ட வேகத்தில் ஒடுகிறாரே?”

“அவந்திகா, நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இப்போது ஏதும் குறை சொல்ல வேண்டாம். மன்னர் என் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். அதுவே பேறு. அவருக்குப் பயணத்துக்கு முன் அநேக அலுவல்கள் இருக்கும். தம்பியை அனுப்பியுள்ளார். எனக்கென்ன ஒய்வு? ஒய்வு ஒய்வு ஒய்வு! நான் என்ன வேலை செய்தேன்! நீர்கொண்டு வந்தேனா? குற்றினேனா? இடித்தேனா? புடைத்தேனா? உணவுபக்குவம் செய்தேனா? இப்போது நான் விரைந்து சித்தமாக வேண்டும்”

என்று பரபரக்கிறாள்.

அவந்திகா மவுனமாகிறாள்.

அவளுடைய உடலில் புதிய சக்தி வந்து விட்டாற் போலிருக்கிறது. பட்டாடைகள், அணிபணிகள் வைத்திருக்கும் மரப்பெட்டிகளைத் திறக்கிறாள். வண்ண வண்ணங்களாகக் கண்களுக்கு விருந்தாய் கலைப்படைப்புகள்.... பெருந்தேவி அன்னைக்கு, இந்தப்பட்டாடை இந்தக் கம்பளிப்போர்வை. நந்த முனிவருக்கு ஒரு கம்பளி ஆடை வேடுவப் பெண்களுக்குச் சில ஆடைகள். கஞ்சுகங்கள். இங்கே இந்தப் பெண்களைப் போலில்லாமல்.... அவர்கள் சுதந்தரமானவர்கள். கானகம் செல்கையில், மன்னரைக் காண மீனும் தேனுமாக உபசரித்த படகுக்காரன், அவன் மனைவியின், குஞ்சு குழந்தைகள் கண் முன் பவனி வருகிறார்கள்.... சிறை மீண்டு வருகையில் வேடுவப் பெண்கள் தோலாடையும் மணிமாலையும் அணிந்து வந்த காட்சி தெரிகிறது. ஒரு குழந்தை வெண்முத்துப் பற்களைக் காட்டச் சிரித்த வசீகரத்தில் அவள் அருகே சென்று தொட்டணைத்தாள். அந்த மக்கள் கூட்டத்துக்கே உரித்தான வாடை மறந்து போயிற்று. மூக்கில் ஒரு வளையத்துடன் அந்தப் பெண் குழந்தையின் முகம் தெரிகிறது. மகாராணி தொட்டதை எண்ணி, அவர்கள் மேலும் மேலும் பரவசப் பட்டதை நினைத்தவாறே, ஆடைகளை, அணிகலன்களைப் பொறுக்கி எடுத்துச் செல்லவிருக்கும் பெட்டியில் வைக்கிறாள்....

“அவந்திகா, நான் விரைந்து நீராட வேண்டும். மன்னர் அருகில் இப்படி உறக்க சோம்பேறியாக இருந்தால் பரிகசிப்பார்....”

அவந்திகா வாசனைப் பொடிகள், தைலம், சீப்பு, ஆகியவற்றுடன் நீராடும் முற்றத்துக்கு அவளை அழைத்துச் செல்கிறாள்.

பூமகளுக்குப் பரபரப்பில் என்ன பேசுகிறாள் என்பதே உணர்வில் படியவில்லை. சொற்கள் தன்னிச்சையாக நாவில் எழும்பி உயிர்க்கின்றன.

சுடுநீரில் போதுமான வெம்மை ஏறவில்லை.

“போதும் அவந்திகா கூந்தலை நனைக்க வேண்டாம்!” எல்லாம் விரைவில் முடிகிறது.

“கூந்தல் சிங்காரத்துக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதே! அவர் விரைந்து வந்து விடுவார். பொறுமை கிடையாது! ‘இந்தப் பெண்களே இப்படித்தான் அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கி விட்டால் நேரம் தெரியாது’ என்பார்! நாங்கள் விரைவில் சென்றாலே பொழுது போகு முன் நல்ல இடத்தில் இரவைக் கழிக்க முடியும்... போகும் வழியில் யாரேனும் முனி ஆசிரமத்தில் தான் தங்குவோம். கோமதி ஆற்றின் கரையில் இப்போதெல்லாம் அடர்ந்த காடுகளே இல்லை. விளை நிலங்களாகிவிட்டன. இப்போது என்ன விதைத்திருப்பார்கள்...?” அவந்திகாவுக்கு மென்மையான கை. அவள் கூந்தலைச் சிக்கெடுத்துச் சீராக்கக் கை வைக்கும் போது இதமாக உறக்கம் வந்துவிடும். கூந்தலை, மூன்றாக, நான்காக வகுத்து, சிறு பின்னல்கள் போட்டு, சுற்றிக்கட்டி முத்துக்களும், பொன்னாபரணங்களுமாக அழகு செய்வாள். வண்ணமலர்ச்சரங்களாலும் அழகு செய்வாள். இந்த அலங்காரங்கள் முன்பு செய்யத் தெரியாது. பதினான்கு ஆண்டுக்காலம், இந்த அரண்மனையில், இளைய மாமி, கேகய அரசகுமாரியிடம் கற்றுக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெருமாட்டி அறுபத்து நான்கு கலைகளிலும் தேர்ச்சி பெற்றவராம்.

செண்பகமலர்களைக் கொண்டு வந்து கொட்டுகிறாள்.

“செண்பகச் சரங்கள் சுற்றும் கூந்தல் சிங்காரமா? அவந்திகா, இதற்கு வெகுநேரம் ஆகுமே அவந்திகா?... வேண்டாம். ஒவ்வொரு காலிலும் மலர்களைச் செருகி, பின்னல்களை நாகபட வடிவில் எடுத்துக்கட்டுவதற்குள் பொழுது போய் விடும்...”

“தேவி, மன்னர் பார்த்து மகிழவேண்டாமா? இந்த அலங்காரங்களை, நான் எப்போது யாருக்குச் செய்து காட்ட முடியும்?....”

“போதும், நாங்கள் இப்போது, புனிதப் பயணம்போல் முனி ஆசிரமங்களுக்குப் போகிறோம். கொலு மண்டபத்துக்குப் போகவில்லை. இப்போது தவசிகளின் மனவடக்கம் பாலிக்க வேண்டும் இப்படியெல்லாம் அலங்கரித்துக் கொண்டு போனால், மன்னர் என்னைத் தீண்டக் கூட மாட்டார்...”

“தேவி!” என்று அவந்திகா உரக்கக்கூவுகையில் பூமகள் நாவைக் கடித்துக் கொள்கிறாள்.

...உடல் குலுங்குவது போல் ஒர் அதிர்ச்சி. அவளையும் மீறி விழுந்து விட்ட சொல்லா அது?....

“அவந்திகா? என்ன சொன்னேன்? எதற்காக அப்படி அலறினிர்?”

“அலறினேனா? இல்லை. நீங்கள் அசைந்தீர்கள். சிப்பின் கூரிய பல் முனைபட்டு வருத்தப் போகிறதே என்ற அச்சத்தால் உரத்துக் கூவிவிட்டேன்...”

“மன்னர் தீண்டமாட்டார் என்ற சொல் எப்படி வந்தது?.... ”என்று பேதையாகப் புலம்புகிறாள்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது மன்னருடன் ஆசைப்பட்டதற்கு ஏற்பப் போகப் போகிறீர்கள். அந்த வருத்தமெல்லாம் ஆதவனைக் கண்ட பனியாகக் கரைந்து விடும்; எழுந்திருங்கள், குலதெய்வத்தைத் தொழுது உணவு கொள்ளச் சித்தமாகுங்கள். தேர் வந்துவிடும். மன்னர் உணவு கொண்டு தான் வருத்வாராக இருக்கும். ராதை உணவு கொண்டு வருவாள். நான் சென்று தாங்கள் கொண்டுசெல்லும் பொருட்கள், ஆடைகளைப் பெட்டிகளில் எடுத்து வைத்து விட்டு வருகிறேன்!”

அவந்திகா விரைகிறாள்.

பூமை, குலதெய்வமாகிய தேவன் இருக்கும் மாடத்தின் முன், தாமரை மலர்களை வைத்துக் கண்மூடி அருள் வேண்டுகிறாள். வணங்குகிறாள். துாபம் புகைகிறது; தீபம் சுடர் பொலிகிறது.

“தேவனே, இந்தக் குலக்கொ டிக்குத் தங்கள் ஆசியை அருளுங்கள். வம்சம் தழைக்க, ஒரு செல்வனை அருளுவீர்!”

பட்டாடை சரசரக்க, ஊஞ்சலில் போடப்பட்ட இருக்கையில் வந்து அமருகிறாள். முன்றிலில் இரண்டு அணில்கள் கீச்சுக்கீச் சென்று கூவிக்கொண்டு ஒன்றை ஒன்று துரத்துகிறது. கிளிக்கூண்டுகளில் கிளிகள் இல்லை. எப்போதும் எல்லா வற்றையும் திறந்து விடுவாள். அவை விருப்பம் போல் வந்தமர்ந்து பணிப்பெண்கள் வைக்கும் பால்-பழம் அருந்தும். இவளுடைய தத்தம்மா இல்லை. அது இருக்கும். பூனை கவ்வியது அவள் தத்தம்மா இல்லை...

அப்போது அங்கே கண்டி வந்து எட்டிப் பார்க்கிறது. இடையில் வண்ணம் தெரியாத ஒரு சிறு துண்டு ஆடை அழுக்கும் சளியும் துடைக்கப் பெறாத முகம் பிரிந்த தலை

“குழந்தை, இங்கு வா?”

இவள் அழைத்த குரல் கேட்டதுதான் தாமதம், அவள் விரைந்து உள்ளே சமையற்கட்டுக்குள் மறைகிறாள்.

ராதை தட்டில், உணவுக் கலங்களை ஏந்தி வருகிறாள்.

நெய் மணக்கும் அப்பம். பால் சேர்த்த பொரிக்கஞ்சி. இனிய கனிகள்... இலை விரித்து, அதில் அப்பங்களை, ஆவி மணக்கும் இனிய பண்டங்களை எடுத்து வைக்கிறாள்.

“ராதை, உன் மகள் கண்டியைக் கூப்பிடு? எட்டிப் பார்த்துவிட்டு ஒடுகிறது. நான் கூப்பிட்டால் பயமா?”

“தேவி. நீங்கள் மன்னருடன் புறப்படும் நேரம்.அவள் எதற்கு? அந்தச் சோம்பேறியை மீனைத் தேய்த்துக் கழுவச் சொன்னேன். ஒரு வேலை செய்வதில்லை. இங்கே வேடிக்கை பார்க்க முற்றத்துக்கு வருகிறாள். தேவி, இது கிழங்குமாவில் செய்த அப்பம் ருசி பாருங்கள்!”

பூமகள் அப்பத்தை விண்டு சிறிது சுவைக்கிறாள். “மிக ருசியாக இருக்கிறது. நீ குழந்தையை இங்கே கூப்பிடு”

அவள் சொல்வதற்கு முன் கண்டி, அவசரமாக முகத்தை நீரில் துடைத்துக் கொண்ட கையுடன் சிரித்த வண்ணம் வருகிறாள்.

“அடி தரித்திரம் போடி இங்கே ஏன் வந்தாய்?. மனசுக்குள் பெரிய அரசகுமாரி என்ற நினைப்பு?” என்று ராதை குழந்தையை அடித்து விரட்ட அவள் அழும் குரல் செவிகளில் துன்ப ஒலியாக விழுகிறது.

“ராதை?” என்று கடுமையாக பூமி எச்சரிக்கிறாள்.

“எதற்கு உன் கோபத்தைக் குழந்தையின் மீது காட்டுகிறாய்! இந்தா, உன் அப்பமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என் முன் உனக்கு இத்துணை கடுமை காட்ட உன் மனசில் ஏன் அவ்வளவு வெறுப்பு:

“தேவி!” என்று நிலந்தோய ராதை பணிந்து எழுகிறாள். அவள் மேலே போட்டிருக்கும்.துண்டு ஆடை நிலத்தில் வீழ்கிறது.

“மன்னிக்க வேண்டும். தாங்கள் அவளிடம் காட்டும் அன்பும் சலுகையும் மற்றவர்களின் பொறாமையைத் துண்டிவிடும் ஏழை அடிமைகளுக்குப் பெருந்தன்மை கிடையாது”

அவளுடைய சொற்கள் சுருக்கருக்கென்று ஊசிகள் போல் தைக்கின்றன.

“ஏழையாவது?அடிமையாவது? என் செவிகள் கேட்க, இந்த அரண்மனையில் அப்படிப் பேசாதே ராதை அப்படிப் பார்க்கப் போனால் நானும் குலம் கோத்திரம் அறியாத அநாதையே!”

“சிவ சிவ. நான் மகாராணியைக் குற்றம் சொல்வேனா? அவரவர் அவரவர் இடத்தில் பொருந்தி இருப்பதே உகந்தது. ஊர்க்குருவி, ஊர்க்குருவிதான்.கருடப்பறவை கருடப்பறவைதான். உயர்ந்த குலத்தில் உதித்த, சாம்ராச்சிய அதிபதியின் பட்டத்து ராணி தாங்கள். தங்களுக்குப் பூரண சந்திரன் போல் ஒரு மகன் பிறக்க வேண்டும். இந்த அழுக்குப் பண்டத்தை மடியில் வைத்துக் கொஞ்சுவது பொருந்துமா? இந்த ஏழைகளின் நெஞ்சில், பட்டாடைகள், முத்துக்கள், பாலன்னங்கள், பஞ்சனைகள் என்றெல்லாம் ஆசைகளை வளர விடலாமா? கல்திரிகையில் கலம் தானியம் கட்டி இழுத்து மாவாக்க வேண்டும்... மணி மணியாக தானியம் குற்றி உமி போகப் புடைத்து வைக்கவேண்டும்... ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?...”

அவளுடைய நெஞ்சை இனந்தெரியாத சுமை அழுத்துகிறது.

அந்தப் பருவத்தில், அரண்மனைத் தோட்டத்தில் தான் ஆடிப்பாடி மகிழ்ந்ததை நினைவூட்டிக் கொள்கிறாள்.

உணவு இறங்கவில்லை.

கை கழுவ நீரும் தாலமும் ஏந்தி வருகிறாள்.

“உனக்கு எத்தனை குழந்தைகள்?

“இரண்டு பிள்ளைகள்...”

“அவர்கள் குருகுல வாசம செய்கிறார்களா?”

“எங்களுக்கேதம்மா குருகுல வாசம்? அப்பனுடன் உழுவதற்குப் போகிறான். இளையவன் ஆறு வயசு கொட்டில் சுத்தம் செய்யும். ஆடு மேய்க்கும். இவள் அவனுக்கும் இளையவள். வீட்டில் தனியாக இருந்தால் ஒடிப் போய்விடும்.”

“ஏன் ராதை? உங்கள் பிள்ளைகள் குருகுல வாசம் செய்யக்கூடாதா?” அவள் சிரிக்கிறாள். வெறுமை பளிச்சிடுகிறது.

“மன்னர் ஆட்சியில் வாழ்கிறோம். நேரத்துக்குச் சோறு. ஏதோ பணி கிடைக்கிறது. மந்திரக் கல்வியும் தந்திரப் போரும் உயர்ந்த குலத்தோருக்கே உண்டு...”

பூமை கைகழுவவும் மறந்து சிந்தையில் ஆழ்கிறாள்.

எத்துணை உண்மை? மந்திரக்கல்வி... தந்திரப்போர்...

இதெல்லாம் யாரிடமிருந்து யாரைக் காப்பாற்ற?

மன்னர்கள் யாரிடமிருந்து யாரைக் காப்பாற்ற வில்லும் அம்பும் சுமந்து திரிய வேண்டும்?

இவள் பிள்ளைக்கும் வில் வித்தை பயிற்றுவிப்பார்கள். நீ உன் அரசைக் காப்பாற்றப் பகைவர்களை அழிக்க வேண்டும். யார் பகைவர்கள்? பகைவர்கள் எப்படித் தோன்றுகிறார்கள்? முனிவர்களுக்கு அரக்கர்கள் எப்படிப் பகைவர்களானார்கள்?

சுற்றிச் சுற்றி ஒரே இடத்தில் வந்து நிற்கிறாள். அதை விட்டு வெளியே வர முடியவில்லை.

திடீரென்று ஒர் அச்சம் புகுந்து கொள்கிறது. இப்போது, மன்னரும் இவளும் மட்டும் கானகத்துக்குச் செல்லும்போது, முனிவர்களின் ஆசிரமங்களில் தங்கும்போது, ஆபத்து நேரிடாது என்பது என்ன நிச்சயம்?

பகைமை கொடியது... ஒருகால் யாரேனும் மன்னரைத் துக்கிச் சென்றால் அவள் என்ன செய்வாள்?

இவளுக்கு இளைய ராஜமாதா போல் தேரோட்டத் தெரியாது. அம்பெய்தத் தெரியாது. ஈ எறும்பைக் கூடக் கொல்லமாட்டாள்... ஆனால் அந்த அன்னை அவ்வளவு தேர்ந்தவளாக இருந்ததாலேயே மாமன்னரைக் காப்பாற்றினாள். அதுவே பல குழப்பங்களுக்கு அடித்தலமாயிற்று. இரண்டு வரங்கள். புத்திர சோக சாபம்...

கையில் வில்லும் அம்பும் இருந்தாலே கொலை வெறி வந்து விடுமோ? இல்லாத போனால், அந்த மாமன்னர், கண்ணால் பார்க்காத ஒரு விலங்கை, அது தண்ணிர் குடிப்பதாக அதுமானித்து, ஒசை வந்த இடம் நோக்கிக் கொலை கார அம்பை எய்வாரா? அந்த யானையைக் கொல்லலாகாது என்று ஏன் நினைக்கவில்லை? தெய்வம் தந்த கானகம்; தெய்வம் தந்த நீர்நிலை; தெய்வம் தந்த உயிர். இன்னாருக்கு இன்ன உணவு இயற்கை நியதி. இதெல்லாம் மெத்தக் கல்வி பயின்றிருந்த மாமன்னருக்கு ஏன் தெரியவில்லை? குருட்டுப் பெற்றோரின் ஒரே மகனை அந்த அம்பு கொலை செய்தது. எந்த ஒரு கொலைக்கும் பின் விளைவு இல்லாமல் இருக்காது!.. இப்போது. ஏன் மனம் குழம்புகிறது?

“அம்மா? ஏணிப்படி வாட்டமாக அமர்ந்திருக்கிறீர்கள்? அரசமாதாக்களை வணங்கி ஆசிபெற வேண்டாமா?... அவந்திகா இன்னமும் பெட்டிகளைச் சித்தமாக்குகிறார். பிறகு என்னைக் கோபிப்பார், மன்னர் வந்துவிட்டார் என்றால்...”

இவள் சொல்லி முடிக்கு முன், நிழல் தெரிகிறது. பட்டாடை அசையும் மெல்லொலி...

இளையவர்... தம்பிதான்.

கோபமா, அல்லது துக்கமா?

முகம் ஏன் கடுமை பாய்ந்த அமைதியில் ஆழ்ந்து போயிருக்கிறது? சினம், துயரம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை இந்த முகத்தில் காண முடியாது.

“தேவி, இரதம் முற்றத்தில் வந்து நிற்கிறது. வந்து ஏறுங்கள்!”

அவள் உள்ளத்தின் எதிர்பார்ப்புகள் வண்ணமிழக்கின்றன.

“இதோ...” அவள் எழுந்து அவனைப் பின் தொடருகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வனதேவியின்_மைந்தர்கள்/8&oldid=1304402" இலிருந்து மீள்விக்கப்பட்டது