உள்ளடக்கத்துக்குச் செல்

வனதேவியின் மைந்தர்கள்/2

விக்கிமூலம் இலிருந்து

2

ஒற்றை நாணின் மீட்டல்.

கி...ய்.. கிய்.. கிய்.. கில்.ரீம்... ரீம்...

இது ஏதேனும் வண்டின் ரீங்காரமோ?

அந்த மீட்டொலி அவள் செவிகளில் நிறைந்து, நாடி நரம்பெல்லாம் பரவுவதாக உடல் புல்லரிக்கிறது. நினைவுகளில் முன்னறியாத ஓர் ஆனந்தம்.

“அவந்திகா?.... ஏதோ ஓர் இசை கேட்கவில்லை ?..”

“இசையா?”

அவள் புருவம் சுருக்குகிறாள். வந்தியும் மாதுரியும் ஏதேனும் இசைபயின்று கொண்டிருப்பார்கள். அரண்மனையில் நடனமாடுபவள் வந்தி. அவர்கள் பயிலும் இடம் இங்கே இல்லையே? அதுவும் இந்தப் பிற்பகல் நேரத்தில் அழைத்தாலொழிய எவரும் யாழை எடுத்துக் கொண்டுவரமாட்டார்களே?

“.. தெரியவில்லையே தேவி?”

“ரீம்... ரீம்... ரீம்..” சுருதி... துல்லியமாகக் கேட்கிறது. பாடலின் சொற்கள் புரியவில்லை. ஆனால் இசை. அவளைச் சிலிர்க்க வைக்கும் இசை... பூமகள் சாளரத்தின் வழியே கீழே தோட்டமெங்கும் பார்வையால் துழாவுகிறாள். அந்த நாதம், அவளை அற்புதமாகக் கழித்த கனவுலகுக்குக் கொண்டு செல்கிறது.

ஆம்... மரக்கிளைகளின் பசுமைக் குவியல்களிடையே, சத்தியத்தின் குறுத்துப்போல் ஓர் உருவம் தெரிகிறது.

நினைவுக்குவியல்களில் மின்னல் அடித்தாற்போல் பாடலின் வரிகள் உயிர்க்கின்றன.

தாயே, தருநிழலே, குளிர் முகிலே...

இந்தப் பாட்டுக்குரியவர். அவள் பிஞ்சுப்பாதம் பதித்தோடும் ஐந்து வயசுச் சிறுமியாகிறாள்.

பாத சரங்கள் ஒலிக்க, படிகள் இறங்கி, கீழ்த்தளத்து முற்றத்துக்கு வருகையில், அந்த ஒற்றை நாண் இசைக்கருவிக்குரியவர் செய்குளம் தாண்டி வருகிறார்.

உச்சியில் முடிந்த முடி; அடர்த்தி தெரியாத தாடி. எலும்பு தெரியும் வெற்று மேனி. வற்றி மெலிந்த முகத்தின் கண்களில் எத்தகைய அமைதியொளி! மகிழ்ச்சிப்பெருக்கு அவளை ஆட்கொள்கிறது.

அவர் கண்களை மூடியிருக்கிறார். சொற்கள் வரவில்லை. விரல் மட்டும் அந்த ஒற்றை நாணை மீட்டுகிறது.

“நீ தந்தையின் மகள்தான்; என் தாய் உன் தாயல்ல. உன் தாய் பூமிதான். அதனால்தான் நீ பூமை, பூமகள் என்று பெயர் பெற்றாய்... கணவர் கானேறியதும், அவள் தாய்வீடு சென்றாள். ஆனால் உன் தந்தை உனக்குக் கூறிய அறிவுரை... உன் நாயகர் இருக்கும் இடம்தானம்மா, உனக்குத் தலை நகரம், மாளிகை, எல்லாம்....! உனக்கு இனி அவர்தாம் சகலமும்...” தந்தையின் சொற்கள் காரணம் தெரியாமல் செவிகளில் மோதுகின்றன. அவள் “சுவாமி!” என்று கண்ணீர்மல்க அவர் பாதங்களில் பணிகிறாள். “குழந்தாய், எழுந்திரம்மா, நலமாக இருக்கிறாயா?...”

அவர் காலடித்துகளைச் சிரத்தில் அணிந்தவாறே, மகிழ்ச்சி பொங்கும் குரலில் “அவந்திகா, தெரியவில்லை? நந்தசுவாமி, நந்த பிரும்மசாரி... என் தாய் இவர்... நீ ஒரு தாய், இவர் ஒரு தாய்... இன்னும், சுவாமி, பெரியம்மா, அம்மம்மா... அவர் சுகமாக இருக்கிறாரா?.. ஊர்மிக்கு ஒரு தாய்தான். எனக்கோ எத்தனை பேர் என்று விரல் மடக்குவேனே?... குழந்தை, பூதலம் உனக்குத் தாய்... நீ பூமிக்குத் தாய் என்பீர்களே?.” என்றெல்லாம் மடைதிறக்கிறாள். அவந்திகா அருகில் வந்து அவரைப்பணிகிறாள். “சுவாமி, உள்ளே வரவேண்டும். இந்த சமயத்தில் தாங்கள் தெய்வத்திருவருளே போல் வந்திருக்கிறீர்கள். குழந்தையை ஆசீர்வதியுங்கள் சுவாமி..” “சுவாமி, எத்தனை நாட்கள்! தாங்கள் அன்று கண்ட வடிவமாகவே இருக்கிறீர்கள். என் மனம் சஞ்சலப்படும் நேரத்தில் சஞ்சீவியாக வந்தீர்கள். இந்த இடம் பேறு பெற்றது சுவாமி!... ஓ, கங்கைக்கரையிலும், தண்டகாரணியத்திலும், சிறையிருந்த அரக்கர் மாளிகையை ஒட்டிய சோலைகளிலும், எத்தனை முறைகள் தாங்கள் வந்துவிடமாட்டீர்களா என்று நெஞ்சு ஏங்கியது!... சுவாமி, வாருங்கள்...”

தன்னை மறந்து, பூம்பந்தலின் பக்கம் இருக்கும் நீர்க்கலத்தில் இருந்து நீர் மொண்டு வருகிறாள். பூம்பந்தரின் மேடையில் சருகுகளை அகற்றி இருக்கையைச் சித்தமாக்குகிறாள் அவந்திகா. நடந்து நடந்து மெலிந்து புழுதி படிந்த பாதங்களைக் கழுவ, பொற்றாலம் வருகிறது. பூமகள் அந்தப்பாதங்களைக் கழுவும் போது, அவர் கண்கள் கசிகின்றன. புன்னகையுடன் அவள் உச்சியில் கை வைத்து ஆசி மொழிகிறார். “தாயே, என் பாவங்கள் கழுவப் படுகின்றன, என் அன்னையால்... நீ பூமகள், பூதலத்தின் அன்னை ...”

“இமயத்தின் மடியில், கங்கை பெருகிவரும் சரிவுகளில் பனிபடர்ந்த சூழலில் பலகாலம் இருந்துவிட்டேன். இந்த மகளின் நினைவு, இந்த அன்னையின் நினைவு, என்னை உந்தித்தள்ளிக் கொண்டு வந்துவிட்டது. பல செய்திகள் கேள்விப்பட்டேன் அம்மா!”

அவர் குரல் கரகரக்கிறது.

அவள் துணுக்குறுகிறாள்.

‘அரண்மனை வாயிலில் மன்னரின் காவலர் தடுத்தனரோ? அதனால் தான், பின்புறம் கானகத்து வழியில் அந்தப்புரச் சோலையினூடே வருகிறாரோ?’ பேதை இப்படியே நினைத்துக் குறுகி நிற்கிறாள்.

“நான் மன்னரையோ, அரசியையோ பார்க்க வரவில்லையே? எனக்கு அயோத்தியின் மாமன்னர் அவையில் வந்து நிற்பதற்குத் தகுதியான புலமையோ, ஆன்மிக - வேதாந்தங்களில் வல்லமையோ, இல்லையம்மா! வேதபுரி அரண்மனைத் தோட்டத்தில், பறவைகளுடனும், மான்-பசு-முயல், அணில் என்ற உயிரினங் களுடனும் தோழமை கொண்டு உலகை அன்பால் ஆளவந்த தொரு சிறுமியை நினைத்துக் கொண்டு வந்தேன். அந்தச் சிறுமி, அரண்மனையின் பெருந்தோளர்களினால் தூக்க இயலாத மூதாதையர் வில்லை, அனாயசமாகத் தூக்கி, அடிபட்டு விழுந்த தொரு கிளிக் குஞ்சைக் கையிலெடுத்து, தன் அன்பு வருடலாலேயே உயிர்ப்பித்த அதிசயம் கண்டிருக்கிறேன். தாய்தந்தை தெரியாத இந்தக் குழந்தைக்குரிய மணாளனை எப்படித் தேடுவேன் என்று உன்னை வளர்த்த தந்தையின் கவலையை நீ எப்படித் தீர்த்து வைத்தாய்!..”

“சுவாமி, நான் பேதையாக இங்கேயே அமரவைத்தேனே? உள்ளே வாருங்கள்!” இன்ன செய்வதென்றறியாதவர் போல் தன் பட்டு மேலாடைத் துகிலால் அவர் பாதங்களைத் துடைக்கிறாள் பூமகள். மலர்த்தட்டை ஏந்தி விரைந்து வருகிறாள் விமலை...

மணமிகுந்த சம்பங்கி, பன்னீர் மலர்கள்.

“உள்ளே வரவேண்டும், சுவாமி!...”

அந்த இசைக்கருவியை, கையில் எடுத்துக் கொள்கிறாள்.

“குழந்தாய், இந்த இடமே நன்றாக இருக்கிறது. இதுவே என் அன்னையின் இடம்....எத்துணை அழகான வேலைகள்! செய்குளங்கள்...! உன் மன்னரின் வீரச் செயல்கள் பற்றிக் கேட்டேன். கடல்கடந்து அரக்கர் குலத்தை அழித்து, உன்னை மீட்ட பெருமை - புகழ் எட்டுத் திக்கிலும் பரவி இருக்கிறது தாயே !...”

அவள் மலர் முகம் முள் தைத்தாற் போன்று சோர்ந்து வாடுகிறது.

“நான் கண்டு அறிந்த செல்வி, மாசு மறு ஒட்டாத நெருப்பு, ஈரேழ் உலகும் போற்றக்கூடிய ஒரு மனிதரின் நாயகி. இந்த மனிதர், அந்த மாமணியை நெருப்புக் குண்டத்தில் இட்டுப் பரிசோதித்தார் என்ற செய்தி பொய்யாகத்தானிருக்கும் என்று கருதினேன்.

இந்த மக்கள் தாம் எப்படி மணலைக் கயிறாகத் திரிக்கிறார்கள்! கொடிய நஞ்சுப் பாம்பு என்று அச்சுறுத்துகிறார்கள்!... அவள் இதயத்தை முறுக்கிப் பிழிவது போல் இருக்கிறது. அவள் ஏற்றிவைத்திருந்த திரி அணைந்து போனதை எப்படிச் சொல்வாள்?

“அவந்திகா! உள்ளே எல்லாத்திரிகளையும் ஏற்றச் சொல் வாய்! சுவாமி, அமுதுகொள்ள உள்ளே வரவேண்டும்.”

அவந்திகா, ‘இந்நேரத்தில் திரிகளை ஏற்றச்சொல்’ என்ற ஆணையை ஏற்கத் திகைப்பது புரியவுமில்லை; புரியாமலுமில்லை.

“குழந்தாய், எனக்கு உள்ளே வருவதைக் காட்டிலும் இந்த இருக்கையே மனம் நிறைந்த ஆறுதலைத்தருகிறது. உன் முகம் பார்த்த மகிழ்ச்சியே போதும். நீ படைக்கும் அமுது எனக்கு கிடைத்தற்கரிய இன்னமுது. இங்கேயே அதைக் கொள்கிறேன் மகளே!”

மாதுளை, கொய்யா, வாழை ஆகிய கனிகள் திருத்தப்பட்டு உணவுக் கலத்தில் கொண்டுவரப்படுகின்றன. தேன், பால், பருகுநீர் வருகின்றன. சுவைமிகுந்த வெண்ணெய்க்கனி பிளந்தாற் போன்று விரித்து வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே கறுப்பு விதைகள். இடை முழுதும் வெண்ணெயில் தேன் பெய்த சுவையுள்ள சதை.

அவள் ஒவ்வொன்றாக அவர் கையில் எடுத்து வைக்கு முன் அவர், தன் சுருதி மீட்டும் குடுவையில் இருந்து ஒரு புதையல் போன்ற பொருளை எடுக்கிறார். சிவப்பும் கறுப்புமாகக் கல்லிழைத்த குணுக்குப் போன்ற கனிக்கொத்து.

“மகளே? உனக்கு நான் எப்போதும் கொண்டுவரும் பரிசு...” அவள் ஆவலோடு அதை நாவில் வைத்து ருசிக்கிறாள். கண்ணீர் இனிப்பும் கரிப்புமாக வழிகிறது.

“தந்தையே, தாயே, எத்தனையோ இடங்களில் அலைந்து விட்டோம். இந்தச் சுவையை நான் உணர்ந்ததில்லை. பெரியம்மா, கைநிறையக் கொண்டு வருவார்கள். தம் ஆடை மடியில் புதையலாக வைத்துத் தருவார்கள். அவர் கழுத்தைக்கட்டிக் கொண்டு முத்தம் வைப்பேன். ஊர்மி கேட்டால் ஒன்று கூடக் கொடுக்கமாட்டேன். ஆடையை விரித்து அதில் அந்த பழங்களைச் சித்திரம் போல் வைத்து ஒவ்வொன்றாக ருசிப்பேன்.... “சுவாமி, என்னைக் குஞ்சம்மை என்று கூப்பிடும் அந்தத் தாயை எப்படிப் பார்ப்பேன்? நான் மணமாகி மன்னருடன் இரதத்தில் புறப்படும் நேரத்தில் இந்தக் கனியுடன் ஓடோடி வந்தார். எனக்கு இறங்கி ஓடிச்சென்று, அறியாப்பருவத்தில் ஆடையை விரித்துச் சித்திரமாக வைத்து அக்கனிகளை, அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கொண்டே உண்ண வேண்டும் என்று தோன்றிற்று. ‘ம்... நேரமாகிறது, இரதத்தை ஓட்டப்பா!’ என்று மாமன்னர் ஆணையிட, குதிரைகள் பறந்து சென்றன.”

அவளுடைய ஆற்றாமை பொல பொலவென்ற சொற்களாகக் கொட்டுகிறது “மகளே, பெரியம்மை, உன்னை எப்போதும் நினைவு கூருகிறாள். “அவள் சக்கரவர்த்தி மருமகள், திருமகள், இப்போது, இந்தப் பஞ்சை யார்?” என்பாள். ஆனாலும் மிகுந்த மகிழ்ச்சிதான் உள்ளூர. இப்போது நானும் யாவாலி ஆசிரமம் விட்டு வெகுகாலமாகிவிட்டது. நான் அங்குதான் போகிறேன். உன் செய்தி எல்லாம் சொல்வேன்!”

“சுவாமி... நான் பெரியன்னையை எப்போதும் நினைத்துக் கொள்வேன். அவர் அப்படி ஓர் உயர்ந்த தோற்றம் உடையவர். அசோக வனத்தில், எனக்குத் துணைபோல் வந்த பெண்களில் ஒருவர் அப்படிப் பெரியன்னை போலவே இருப்பார். அவர் என்னிடம் வாய்திறந்து மற்றவர் போல் அரக்க மன்னனின் புகழ்பாடமாட்டார். என்னை எட்ட இருந்து பார்த்துக் கொண்டே இருப்பார்.

வயதானதால் கூந்தல் நரைத்திருக்கும். விரித்துக் கொண்டிருப்பார். கைகளில் காப்புகளும் மார்பில் மணிமாலைகளும் அணிந்திருப்பார்.

ஒருநாள் அவரே அருகில் வந்து, “பெண்ணே , மன்னர் ஆணைக்காக மட்டும் நான் இங்கு காவல் இருக்கவில்லை, உன்னைப் போல் ஒரு மகள் வேண்டும் என்று நான் பல காலமாக விரும்பி இருந்தேன். நீ எங்கேனும் உயிரை மாய்த்துக் கொண்டுவிடுவாயோ என்ற அச்சமே என்னை இங்கே இருத்தி வைக்கிறது. உன் கூந்தலை வாரி முடித்து மலர் அலங்காரம் செய்து நல்ல உடை உடுத்தி, உணவு கொடுத்து நான் மகிழவேண்டும்... நீயோ தவமிருக்கிறாய். ஒரு பெண்ணின் தூய்மை, அவளால் குலைக்கப்படுவதில்லை. ஆணே அதற்குக் காரணம். இந்த மன்னனைச் சேர எத்தனை பெண்களோ விரும்பி வந்திருக்கிறார்கள். ஆனால் மன்னனோ, உன்னை அடைய ஆசைப் படுகிறான். உன்னை அணுகிவிடாதபடி நெருப்பு வளையம் தடுக்கிறது” என்று சொன்னாள். எனக்கு அவள் பெரியம்மைதானோ, ஏதோ ஓர் அசாதாரண சக்தி அவளை என்னிடம் கொண்டு வந்து விட்டிருக்கிறதோ என்று தோன்றும்...

“ஓ! அவள்தான் தம்பி வீடணன் மகளா, குழந்தாய்?”

“இல்லை சுவாமி. அவள் இளையவள். திரிசடை மூன்று பின்னல்கள் போட்டு அழகாக முடிந்திருப்பாள். என் அருகில் வளையம் தாண்டி வரும் ஒரே பெண். அந்த அரக்கர் குலப் பெண்கள் எல்லோருமே அழகானவர்கள்.....” என்று சொல்லி வரும் போது, தாடகை நினைவு வர, வெண்ணெய்க் கனியை அவள் அவருக்கு உண்ணக் கொடுக்க, அவர், வெண்ணெய்க் கனியைப் பிட்டு அங்கையில் வைக்கிறார்.

உணவு கொள்ளல் நீளும் பொழுதில், பணிப் பெண்கள் ஆங்காங்கு கொத்துக் கொத்தாக நிற்பதை அவள் கருத்தில் கொள்ளவில்லை.

“குழந்தாய், பெரியம்மையை நான் கண்டு இந்தச் செய்தியைச் சொன்னால் பேரானந்தமடைவாள்..”

“சுவாமி, நீங்கள் சொல்வீர்கள், குரு சத்திய முனிவர்பற்றி, அவர்தாம் என் தந்தையை அந்த வனத்தில் உழவு செய்ய அழைத்தார், ஏரோட்டுகையில் நான் கிடைத்தேன் என்று. எனக்கு அந்த இடம், அந்த முனிவரின் ஆசிரமம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசை. எங்கெங்கோ கானகங்களில் சென்று வாழ்ந்தோம். கடல் கடந்தும் பாவியானேன். ஆனால் எனக்குப் பிறவி கொடுத்த தாய் மண்ணை இன்னமும் தரிசிக்கவில்லையே?..” அவள் முகம் மின்னுகிறது! அந்த ஒளியில் உணர்ச்சியின் நிழல்கள் ஆடுவதை அவர் கவனிக்கிறாரோ என்று தலை குனிந்து கொள்கிறாள். அவந்திகா முன் வருகிறாள்.

“சுவாமி, இந்த மாதிரியான பருவத்தில் தாய்வீடு செல்ல ஆசைப்படுவது இயல்பு என்று சொல்வார்கள். தேவியின் விருப்பம் நிறைவேற வேண்டும்; ஆசி மொழியுங்கள்!..”

பூமகளுக்கு ஆசுவாசமாக இருக்கிறது. அவந்திகாவின் அன்பில் நெகிழ்ந்து போகிறாள்.

“குழந்தாய்! மாமன்னரும், உன் அத்தை மாராகிய தாயரும், இந்த அரண்மனையின் அநுகூலங்களையும் வழிகளையும் விட்டுவிட்டு, காட்டுக்கு அனுப்பச் சம்மதிப்பார்களா... சத்திய முனிவர் இன்னும், காட்டு மக்களுக்கு நலம் கருதும் பயன் செய்யும் நல்ல நல்ல வேள்விகளை மேற் கொண்டிருக்கிறார், தாயே, நீ கட்டாயமாக வந்து பார்க்கத்தான் வேண்டும். யாவாலி ஆசிரமத்தின் எல்லையில் அக்காலத்தில் நான் சிறுவனாக இருந்த நாட்களில் பூச்சிக்காடு என்ற வனம் இருந்தது. அங்கு மிகுதியாகப் பட்டுப் பூச்சிகள் கூடுகட்டும். அதை எடுக்க, நகரங்களில் இருந்து சாலியர் கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஆனால், பூச்சிக்காட்டு மக்கள் அக்காலத்தில் ‘நரமாமிசம்’ கொள்பவர்களாக இருந் தார்கள். பூச்சிக்கூடுகள் அறுந்து அறுந்து காற்றிலே பறந்து எங்கள் எல்லைக்குள்ளும் வரும். இங்கும் ஒரு காலத்தில் எத்தனையோ வன்முறைகள் இருந்தன. அக்கரை முனி குமாரர்கள், அரச குலத்தோர் இங்கு வந்து பசுக்கூட்டங்களைக் கவர்ந்து செல்வர். வியாபாரிகளை மடக்கி இவர்கள் கொலை கொள்ளை என்று ஈடுபடுவார்கள். அதெல்லாம் பழங்கதை. வாழை வனத்தை யானைக்கூட்டம் கூட அழிப்பதில்லை. முறை வைத்துக்கொண்டு உண்டுவிட்டுப் போகும். ஒரு மரத்தின் நிழலில் வாழும் எத்தனையோ ஜீவராசிகளைப் போல் வாழப் பயிற்றுவிக்கிறார் சத்தியமுனி. பயிர்த்தொழில் பயிற்றுவித்தார். பிறகும் எத்தனையோ சிக்கல்கள். எனக்கு உனக்கு, என் நிலம், உன் நிலம் என்ற சண்டைகள் வரும். ஆனால், எப்படியும் மக்களை நல்வழிப் படுத்தும் அமைதி முறையில் அவருக்கு அளவில்லாத நம்பிக்கை... மகளே, நான் முன்பே தீர்த்த யாத்திரை என்று கிளம்பி இமயத்தின் அடிவரையிலே தங்கிவிட்டேன்... இப்போது எனக்கு விடை கொடு, நான் சென்று செய்தி சொல்வேன். உன்னையும் மன்னரையும் அழைத்துச் செல்ல வருவேன்... இதைவிட எங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி... பணி என்ன இருக்கிறது?”

“சுவாமி! நீங்கள் இப்படித் தோட்டத்தில் வந்துவிட்டு மன்னரைக் காணாமல் மரியாதைக்குரியவரை வரவேற்கும் பண்பை எனக்கு மறுத்து விட்டுப் போகலாமா? அந்நாட்களில் நான் விவரம் புரியாத சிறுமி; தந்தை என்னிடம் தங்களை உள்ளே அவைக்கு அழைத்து வரச் சொல்வார். எனக்கு அந்த அவை நாகரிகம் எதுவும் பிடிக்காது. தங்களுடன் அணில்களைத் தொட்டுப் பார்ப்பதும் கிளிகளுடன் கொஞ்சிப் பேசவும், புறாக்கள் வரும் அழகைப் பார்த்து ரசிக்கவும் கற்றேன். ஒரு சமயம் பெரிய பாம்பைத் தொட்டுத் தடவிக் கொடுக்கச் சொன்னீர்கள். மகளே, அச்சம் கூடாது. அதற்கும் அச்சம், உன்னிடம் வராது... என்றீர்கள். தடவிக் கொடுத்தேன். குளிர்ந்திருந்தது. பிறகு கூட ஓடிப் போகாமல் நாம் பேசுவதை, பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு அதனால்தானோ போலும் வனவாசம் என்ற அச்சமே இல்லை.”

“உன் நண்பரை உள்ளே அழைத்து வர வேண்டாமா மகளே? உள்ளே அழைத்து உபசரிக்க வேண்டாம்?” என்று தந்தை நம் இருவரையும் கண்டபோது மொழிந்தார். நீங்கள் சிரித்துக் கொண்டே, உபசாரமா? இவளே இந்தக் குழந்தையே என் தாய். இதைவிட என்ன உபசாரம் என்றீர்கள், நினைவு இருக்கிறதா, சுவாமி?”

“குழந்தாய், நான் கற்ற அறிவாளி அல்ல... கவிபாடும் குரவரும் அல்ல. எனக்கு எந்த நாகரிகமும் தெரியாது. ஒரு காட்டு மனிதன். இந்த வாழ்வுப் பிச்சையே எனக்கு ஒரு தாயின் அருளால் வாய்த்தது. அந்த வடிவத்தை இந்தத் தாய் குழந்தை உருவில் “சுவாமி, மன்னர் உங்களைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார். வனவாசத்தில் அவர்கள் பலரைக் கண்டிருக்கிறார்கள். சபரி என்ற மூதாட்டி அவர்களை உபசரித்ததைச் சொல்வார். அப்போதுகூடத் தங்களையோ பெரியன்னையையோ காணவில்லை என்று ஆறுதலடைந்தேன். ஏனெனில் எனக்கு நேர்ந்த விபத்தைத் தாங்கள் அறிந்திராதது எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் இப்போது, என் இளவயதுத் தோழர், என் குரு, என் காப்பாளர் என்று கூறி மகிழ்ச்சி கொள்வேன். திருமணத் தின்போதுகூடத் தங்களை மன்னருக்குக் காட்டி மகிழ, வாய்க்கவில்லை ...”

அவர் அன்பு நிறைந்த விழிகளால் அவளை நோக்கியவாறு வாளா விருக்கிறார். அவள் மனப்பரப்பில் தலை தூக்கும் ஆசை இதுதான்.

வனத்துக்கு இவருடன் அனுப்பி வைக்க மாட்டாரா? மூன்று நாட்களாக இங்கே வர நேரமில்லாத மன்னர், இவளை அழைத்துக் கொண்டு அவர்களை எல்லாம் காண வனத்துக்குச் செல்வாரோ?.... ஆனால்... இப்போது இப்படிக் கேட்டால்... தாய்வீட்டுக்கு... தாய்வீடுதானே அந்த வனம்?

“குழந்தாய், என்னம்மா தயக்கம்? எனக்கு விடைகொடு! நான் பெரியம்மையிடம் சொல்வேன். குஞ்சுப் பெண் மகாராணியாக வளர்ந்துவிட்டாள், நம்மை அழைத்திருக்கிறாள். போகலாம் என்று கூட்டி வருவேன்...”

“... சுவாமி, மன்னரிடம் அநுமதி பெற்று நான் இப்போதே உங்களுடன் வரலாமல்லவா? மன்னர், அரசாங்க அலுவல்களால் ஓய்வாக நேரம் ஒதுக்கவே முடியாதவராக இருக்கிறார். இன்று உணவு மண்டபத்துக்கும்கூட வரவில்லை.” அவர் புன்னகை செய்கிறார்.

“அப்படித்தானம்மா இருக்கும். நாடாளும் மன்னர் என்றால் எத்தனை பொறுப்புகள், கடமைகள்? தவிர, இந்த ஆண்டி, சக்கரவர்த்தித் திருமகளின் தேவியை, தாயாக இருக்கும் திருமகளை நான் அழைத்துச் செல்வதா? மன்னரே, எல்லாப் பரிவாரங்களுடன் தேவியை அழைத்து வந்து அவள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார். நாங்கள் எதிர்பார்த்து இருப்போம். விடை கொடு, தாயே?”

அவருடைய கரம், அவள் உச்சியில் பதிகிறது. வாழ்த்தி விடை பெறுகிறார்.

அடுத்த கணம் அவர் திரும்பிச் செல்கிறார். ரீம் ரீம் ரீம்... என்ற சுருதி ஒலிக்கிறது. அந்த சுருதியில் எழும் கீதம்... அது என்ன கீதம்? பறவைகளின் இன்னொலி, அணிலின் குரல். வண்டின் ரீங்காரம். பாம்பின் சீறல், யானையின் பிளிறல், நாயின் செல்லக் குலைப்பு... எல்லாம்... எல்லாம் புவியின் இசை. பூமகளின் சுவா சமாகிய சுருதியில் எழும் கீதங்கள்... யாரோ குழலூதுகிறார்கள். யார்..?

சூரியனின் வெப்பம் தணிந்த கதிர் அவள்மீது விழுகிறது.

அவந்திகா தோட்டத்துக்குள் ஆடுகளை ஓட்டி வந்து விட்ட பையனை விரட்ட ஓடுகிறாள். அவன்தான் குழல் ஊதியிருப்பான்.

அவன் ஆடுகளை விரட்ட, அவை மே, மே என்று கத்துகின்றன.

அபசுரம்...

“அவந்திகா!”

“தேவி!.”

“வாயில்லாப் பிராணிகள். ஏன் விரட்டி அடிக்கிறீர்? பையன் குழலூதினானா? அவனை அழைத்து வா?”

“அத்துணை பூஞ்செடிகளையும் மேய்ந்துவிட்டன, தேவி. பையன் குழலூதுவதில் கவனிக்கவில்லை. வேண்டாம், தேவி. அவன் அப்போதே அஞ்சி ஓடிவிட்டான்!”

அப்போது சாமளி ஓடி வருகிறாள்.

“மூத்த மகாராணியார், தங்களைக் காண ஒரு பட்டு வணிகரை அனுப்பியுள்ளார்?..”

அவள் திரும்புகிறாள். ஆனால் ஏனோ உள்ளம் கனக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=வனதேவியின்_மைந்தர்கள்/2&oldid=1304390" இலிருந்து மீள்விக்கப்பட்டது